எஸ்,வி.வேணுகோபாலன்

என்னைப் பற்றி என்ன சொல்ல.... ஓர் எளிமையான வாசகர். உணர்ச்சி ஜீவி. தாம் இன்புறும் வாசிப்பை இதர வாசக உலகு இன்புற வைத்து அதன் பின்னூட்டம் கிடைக்கப் பெறாவிட்டாலும் நெகிழ்ச்சியுற தொடர்ந்து பகிர்ந்து கொள்ளத் துடிக்கும் ஓர் உணர்ச்சி ஜீவி. வங்கி ஊழியர். கவிதைகளில்தான் புறப்பட்டது எனது படைப்புலகமும். எழுதுவதை விடவும் வாசிப்பது, கேட்பது, பார்ப்பது, பகிர்வது பிடித்திருக்கிறது. ஆனாலும் எழுதுவதை விடாமல் பிடித்து வைத்திருக்கிறது இந்தக் கணினி எழுதுகோல். அற்புதமான போராளி எனது வாழ்க்கை இணை தோழர் ராஜேஸ்வரி. சுவாரசியமிக்க குழந்தைகளில் மூத்தவர் கட்டிடவியல் மூன்றாமாண்டு மாணவி. இளையவர் ஏழாம் வகுப்பில். இந்து, நந்தா இருவருக்குமே ஓவியம், கவிதை,பாடல்கள் ரசிப்பது மிகவும் பிடிக்கும். இந்து எழுதிய முதல் ஆங்கிலக் கவிதை அவள் நான்காம் வகுப்பில் இருக்கையில் ஹிந்து யங் வேர்ல்ட் இணைப்பில் இடம் பெற்றது. நந்தாவின் முதல் தமிழ் கவிதை அவன் மூன்றாம் வகுப்பில் இருக்கும்போது அவன் சொல்லச் சொல்ல நான் எழுதியது, துளிர் இதழில் வெளியானது. படைப்புலகம் இருக்கட்டும். அவர்களுக்கான நேரம் மறுக்கப்படும்போது அவர்கள் என்னை ஈவிரக்கமின்றித் தாக்கும்போது என்னைவிட அதிகம் காயம் சுமப்பது எனது எழுத்துக்கள்தான்....அது தான் என்னை எழுதவும் தூண்டுவது. என்னை மனிதனாகத் தகவும் அமைப்பது...