வை.கோபாலகிருஷ்ணன்

அந்தக் கிராமமே விழாக்கோலம் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் அந்தக் கிராமத்துக்காரராக இருந்த ஒருவர் இன்று மந்திரியாகி அந்தக் கிராமத்திற்கு விஜயம் செய்ய உள்ளார். பல்வேறு நலத் திட்டங்களுக்கு நிதி வாரி வழங்க உள்ளார். ‘சுற்றுச்சூழலை பாதுகாப்பது எப்படி?’ என்பதைப் பற்றிச் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றப் போகிறார்.

எங்கும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. கட்சிக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. சுவரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மரக்கிளைகளில் மின் விளக்குகள் கலர்கலராக தோரணம் போல் தொங்க விடப்பட்டு ஜொலிக்கின்றன.

துப்புரவுத் தொழிலாளி பூபாலனுக்குக் கடந்த நான்கு நாட்களாகவே சரியான வேலை. குனிந்து நிமிர்ந்து வீட்டைக் கூட்டுவதே நமக்கெல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கும் போது, ரோட்டையும் ஊரையும் கூட்டி சுத்தப்படுத்துவது என்றால் கேட்கவா வேண்டும்?

இருப்பினும் பூபாலனுக்கு இந்த அமைச்சர் ஐயாவுடன் சிறு வயது முதற் கொண்டே நல்ல அறிமுகமும் பழக்கமும் உண்டு. இன்று மாண்புமிகு மந்திரியாகியுள்ள அவரின் வருகை அவனுக்கே மனதில் ஒருவித மகிழ்ச்சியையும், செயலில் ஒரு வித எழுச்சியையும் உண்டாக்கி இருந்தது.

“செய்யும் தொழிலே தெய்வம், அதில் நாம் காட்டும் திறமையே செல்வம்” என்று இயற்கையாகவே உணர்ந்திருந்த பூபாலன் கிராமத்தின் பிரதான நுழை வாயிலிலிருந்து ஆரம்பித்து விழா நடைபெறும் மேடை வரை உள்ள, மண் சாலையை வழி நெடுக குப்பை ஏதும் இல்லாமல் சுத்தமாகக் கூட்டி, வெகு அழகாக வைத்திருந்தான்.

”மாண்புமிகு மந்திரி அவர்கள் வருகிறார். வந்து கொண்டே இருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் இங்கு வந்து விடுவார்” என ஒலிபெருக்கியில் இரண்டு மணி நேரமாகக் கூறிக் கொண்டே இருந்தனர். வழியெங்கும் இருபுறமும் காவலர்கள் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தனர்.

போலீஸ் ஜீப்புகள் புடை சூழ, முன்னும் பின்னும் பலவித கார்கள் பவனி வர, அமைச்சர் விழா மேடையை நெருங்கி விட, வேட்டுச் சத்தங்கள் முழங்கின. பத்தாயிரம் வாலா பட்டாசுகள் பல தொடர்ச்சியாகக் கொளுத்தப்பட்டன. அக்கம் பக்கத்துக் கிராம மக்களும், இந்தக் கிராம மக்களுமாகக் கூட்டம் முண்டியடித்து விழா மேடையை நெருங்கி விட்டனர். விழா மேடை மிகவும் சுறுசுறுப்பானது.

கட்சியின் முக்கியப் பிரமுகர்களும், தொண்டர்களும், கிராமத்துப் பெரியவர்களுமாக மேடையேறி, மாலைகள் அணிவித்து, பொன்னாடைகள் பல போர்த்தி, அமைச்சருக்கு மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்தனர்.

அமைச்சர் பேசும் போது, சுற்றுச்சூழலை பேணிப் பாதுகாப்பது எப்படி என்பது பற்றி விரிவாக விளக்கமாக எடுத்துரைத்தார். தனது வருகைக்காகக் கிராமத்தின் பிரதானச் சாலை, அழகு படுத்தப்பட்டிருந்ததை நினைவு கூர்ந்து, அதற்காக உழைத்த துப்புரவுப் பணியாளர்களை மேடைக்கு வருமாறு அழைத்தார். அவர்கள் அனைவருக்கும் பரிசுகள் கொடுத்து கெளரவித்தார்.

நீண்ட நாட்களுக்குப் பின் தனது பால்ய நண்பனான பூபாலனைக் கண்ட அமைச்சர், அவனிடம் அன்புடன் நலம் விசாரித்து விட்டு, அவனுக்குத் தன் கையால் ஒரு பொன்னாடையைப் போர்த்தி விட்டு, தங்க மோதிரம் ஒன்று அவன் விரலில் மாட்டி விட்டு, அவனைக் கட்டிப் பிடித்தவாறு, புகைப்படக்காரர்களுக்குப் போஸ் கொடுத்தார்.

தனது கடின உழைப்புக்கு இன்று கிடைத்த பாராட்டு, அங்கீகாரத்தினாலும், தன்னை அமைச்சர் அவர்கள் இன்றும் மறக்காமல் நினைவில் வைத்துள்ளார் என்பதாலும் பூபாலன் மனம் நெகிழ்ந்து போனான்.

அமைச்சர் தனது சிறப்புரையில். “பூபாலன் போன்ற பொதுநல நோக்குள்ள கடின உழைப்பாளிகளைக் காண்பது அரிது. துப்புரவுத் தொழிலாளிகள், சமுதாயத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்தவர்கள். அவர்கள் பணி என்றுமே அத்யாவசியமானது. அவர்கள் மட்டும் இல்லாவிட்டாலோ, வேலை நிறுத்தம் செய்தாலோ, நம் தெருவே, ஊரே, நாடே, உலகமே நாறி விடும். எங்குமே சுத்தமும் சுகாதாரமும் இல்லாவிட்டால் பல்வேறு நோய்கள் பரவி விடும். இந்தத் துப்புரவுத் தொழிலாளர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான் என்றும், அவர்கள் சேவை எப்போதும் நமக்கு அத்யாவசியத் தேவை என்றும், பொது மக்கள் உணர்ந்து, அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தி, அவர்களுக்குத் தங்களால் முடிந்த வரை, அன்பும் ஆதரவும் அளித்திட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

”இன்று இந்த விழாவுக்காகச் செய்யப்பட்டுள்ள சுத்தமும் சுகாதாரமும் எங்கும் என்றும் எப்போதுமே இருக்குமாறு துப்புரவுத் தொழிலாளர்கள் தொடர்ந்து பொறுப்புடன் பணியாற்றிட வேண்டும். பொதுமக்களும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் தந்து உதவிட வேண்டும். அனைவருக்குமே சுற்றுப்புறச் சூழல் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்” என்று அமைச்சர் விளக்கினார்.

விழா இனிதே நடைபெற்று முடிய, அமைச்சர் புறப்பட்டுச் சென்றதும், மக்கள் கூட்டம் கலைய ஆரம்பித்தது. துப்புரவுத் தொழிலாளி பூபாலனை ஒரு சிலர் பாராட்டினர். அவனுக்கு ஏற்பட்ட அதிர்ஷ்டத்தை நினைத்து சிலர் வியந்தனர். ஒரு சிலர் பொறாமை கூடப் பட்டனர்.

மறுநாள் செய்தித்தாள்களில் அமைச்சருடன் பூபாலன் படங்களும், பாராட்டுக்களும் தலைப்புச் செய்தியாக வெளியிடப் பட்டிருந்தன. படங்களை அவனிடம் சுட்டிக் காட்டிய ஒருசிலரிடம் வெட்கத்துடன் ஒரு சிரிப்புச் சிரித்துக் கொண்டே, கைகட்டி ஒதுங்கி நின்று தன் கண்களால் நன்றி கூறினான்.

எழுதப் படிக்கத் தெரியாத பூபாலன், வழக்கம்போல் தன் கடமையே கண்ணாயிரமாக, விழா நடந்த மேடையைச் சுற்றிலும், தெருக்களிலும், மாலையிலிருந்து விழுந்திருந்த உதிரிப்பூக்களையும், பட்டாசுக் குப்பைகளையும், பாடுபட்டுத் தேடித்தேடிக் கூட்டிக் குவித்துக் கொண்டிருந்தான்.

என்றாவது ஒரு நாள் தன்னைப் புகழ்ந்து வந்த செய்திகளும் படங்களும் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களும் கூடப் பழசாகி, பலராலும் பலவிதமாகப் பயன்படுத்தப்பட்டு, கசக்கியும் கிழித்தெறிந்தும், தெருவுக்கு வந்துவிடும் என்பதும், அதைத் தானே தன் கையால் கூட்டி, கடைசியில் குப்பைத் தொட்டியில் போட்டு, குப்பை லாரியில் ஏற்ற வேண்டிய நிலை வரும் என்பதும், தன் அனுபவத்தில் மிகவும் நன்றாகத் தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தான், பூபாலன்.

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பூபாலன்

  1. நல்ல கதை. நல்ல மாரல். திருமணப்பத்திரிகை, காலெண்டர், புகையிலை விளம்பரம், அரசியல் தண்டோரா ஆகியவற்றில் இறைவன் படம் போடுவது எனக்கு பிடிக்கவில்லை. ஆண்டவனையும் கசக்கியும் கிழித்தெறிந்தும்,  குப்பையில் போட்டு….

Comments are closed.