நாகேஸ்வரி அண்ணாமலை

ஆங்கில மோகம் இந்தியாவில் போல் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு டாக்ஸி டிரைவர் (இவரைத் தவிர மற்ற எந்த டாக்ஸி டிரைவர்களும் ஆங்கிலம் பேசவில்லை), அர்ஜெண்டைனாவின் சரித்திரம் பற்றியும் பேனஸ் ஐரஸ் பற்றியும் எங்களுக்கு விளக்கிச் சொல்ல நாங்கள் அமர்த்திக் கொண்ட வழிகாட்டி, அமெரிக்காவில் படித்த ஒரு பெண், ஓட்டல் வரவேற்புப் பகுதியில் இருந்தவர்கள் ஆகியோர் தவிர மற்ற யாரும் ஆங்கிலத்தில் பேசவில்லை.   ஆங்கிலம் தெரிந்த டாக்ஸி டிரைவர் ஸ்பெயினிலும் ஜெர்மனியிலும் சில வருடங்கள் இருந்திருக்கிறார்.  இந்தத் தொழில் ஓரளவு நல்ல வருமானம் தரும் தொழிலாக இருப்பதால் இதற்கு வந்திருப்பதாகத் தெரிகிறது.  பக்கத்து ஊரில் வசிக்கிறார்.  ரயிலில் பேனஸ் ஐரஸுக்கு வந்து  குறிப்பிட்ட மணிநேரங்கள் டாக்ஸி ஓட்டிவிட்டு தன் ஊருக்குத் திரும்பிச் சென்று விடுவாராம்.  இந்தியாவில் போல் ராத்திரி, பகல் என்று டாக்ஸி ஓட்டுவதில்லை.  மனைவி பக்கத்து ஊரில் ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிறாராம்.

இங்கு ஆண்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களையோ அல்லது நண்பர்களையோ கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்கிறார்கள், வழியனுப்புகிறார்கள்.  எங்களுக்கு, அர்ஜெண்டைனாவின் சரித்திரம் பற்றி எடுத்துச் சொல்ல வந்திருந்தவர் முதலில் தனியாக ஓட்டலுக்கு வந்து எங்களை அறிமுகம் செய்து கொண்டார்.  பின் எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டாக்ஸி வந்ததும் டாக்ஸியில் ஏறுவதற்கு முன் டாக்ஸி டிரைவரோடு கைகுலுக்கித் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.  எல்லாம் முடிந்து அவர் புறப்படத் தயாரானதும் டாக்ஸி டிரைவரைக் கன்னத்தில் முத்தமிட்டு அவரிடம் விடைபெற்றுக் கொண்டார்.  கொஞ்சம் அறிமுகமானதும் ஒருவருக்கொருவர் கன்னத்தில் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்.

ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து இங்கு குடிபெயர்ந்தவர்கள் தனித் தனிக் குழுக்களாக பேனஸ் ஐரஸில் வாழ்ந்து வருகிறார்கள்.  இவர்கள் கட்டிக் கொடுத்த நினைவகங்கள் ஆங்காங்கே இருக்கின்றன.

அமெரிக்காவைப் பற்றி அர்ஜெண்டைனா மக்கள் பொருட்படுத்தவில்லை என்றாலும் அமெரிக்க துரித உணவுக் கடைகளான மெக்டானல்ட்ஸ் (McDonald’s), கெண்டக்கி ஃப்ரைட் சிக்கன் (Kentucky Fried Chicken), பர்கர் கிங் (Burger King) ஆகியவை நிறையவே இருக்கின்றன.  அமெரிக்கப் பானமான கொக்கோ கோலாவும் (Coca Cola) அளவிற்கு அதிகமாகவே கிடைக்கிறது.  (கொக்கோ கோலா உலகின் எல்லா மூலைகளிலும் கிடைக்கிறது என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்).  பிட்ஸா (pizza) என்ற இத்தாலிய உணவும் மற்ற இத்தாலிய பாஸ்தா உணவு வகைகளும் வழங்கும் உணவகங்கள் இருக்கின்றன.  எல்லாக் கடைகளிலும் அர்ஜெண்டைனாவிற்கே உரிய மாட்டிறைச்சி கிடைக்கிறது.  உல்லாசப் பயணிகள் செய்யக் கூடாத ஒன்றாக பயணப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் இன்னொன்று அமெரிக்க பிட்ஸா அர்ஜெண்டை பிட்ஸாவை விட நன்றாக இருக்கும் என்று கூறக் கூடாதாம்.  அர்ஜெண்டைனா பிட்ஸா இத்தாலிய பிட்ஸாவை ஒத்திருக்கிறது.  பேனஸ் ஐரஸில் நாங்கள் தங்கியிருந்த ஓட்டல் இருந்த பகுதியில் ஒரு இந்திய உணவகமும் இருந்தது.  அதில் சுத்த சைவ உணவு பரிமாறப்படுவதாகக் கூறப்படுகிறது.  சீன உணவகங்கள் ஆங்காங்கே இருந்தாலும் அங்கு பரிமாறப்படும்உணவு வகைகள் அர்ஜெண்டைனா மக்களின் சுவைக்கேற்றவாறு தயாரிக்கப்பட்டவை.

பேனஸ் ஐரஸை அடைந்த அன்று ஒரு உணவகத்தில் சைவச் சாப்பாடு எதுவும் கிடைக்குமா என்று தேடிய போது ஒரு கடைக்காரர் கொஞ்சம் ஆங்கிலம் பேசினார். அவருக்கு இந்தியா மேல் பிரியம் இருக்கிறது.  எப்படியாவது இந்தியாவிற்குச் சென்று பாண்டிச்சேரிக்குப் போக வேண்டுமாம்.  அங்குள்ள ஆஸ்ரமத்திற்குப் போக வேண்டுமென்று நீண்ட நாட்களாக இவருக்கு ஆசையாம்.

இகுவாஸு என்ற நீர்வீழ்ச்சி இருக்கும் ஊருக்குச் சென்ற போது உல்லாசப் பயணிகளில் ஒருவரான ஒரு பெண்ணைச் சந்தித்தோம்.  இவர் பேனஸ் ஐரஸ் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்துவிட்டு அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்திருக்கிறார்.  அமெரிக்காவில் தங்கியிருந்து படித்திருப்பதால் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்.  எங்களைப் பற்றி அவர் கேட்டபோது ’நாங்கள் இந்தியர்கள்.  இந்தியாவைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?’ என்று கேட்டதற்கு இந்துமதம், புத்தமதம், யோகா, காந்திஜி’ என்றார்.  ‘காந்திஜியைப் பிடிக்குமா?’ என்று கேட்டதற்கு ‘அவரைப் பிடிக்காதவர் யார்?’ என்றார்.  இந்தியாவில் பலர் தேசத்தந்தையை மறந்து விட்டாலும் அர்ஜெண்டைனாவில் ஒரு பெண் இப்படி அவரைப் பற்றிக் கூறுகிறாரே என்று மனதிற்கு இதமாக இருந்தது.  இவருக்கும் பாண்டிச்சேரி ஆஸ்ரமத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.

இகுஸுவா நீர்வீழ்ச்சி இருப்பது போர்ட்டே இகுஸுவா என்ற ஊரில்.  இந்தப் பகுதியில் குரானி (Guarani) என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்திருந்தனர்.  இவர்களுடைய மொழியிலிருந்துதான் இந்தப் பெயர் இந்த ஊருக்கும் அதன் பிறகு நீர்வீழ்ச்சிக்கும் வந்திருக்கிறது.  இது ஆப்பிரிக்காவிலுள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சிக்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சி.  நிறையத் தண்ணீர் (big water) என்று இதன் பெயரின் அர்த்தமாம்.  இது 275 நீர்வீழ்ச்சிகளைக் கொண்டது.  இகுஸுவா நதி இகுஸுவா நீர்வீழ்ச்சியாக விழுந்து பின் பரானா என்னும் நதியோடு கலக்கிறது.  இந்த நீர்வீழ்ச்சியை மிக அருகில் சென்று பல கோணங்களில் கண்டு களிக்க வசதிகள் செய்திருக்கிறார்கள்.  ‘புலி, காட்டெருமை, ஓநாய்கள் போன்ற காட்டு மிருகங்கள் பலவற்றை எதிர்நோக்க நேரிடும், பாம்புகளையும் சந்திக்கலாம், அதனால் ஜாக்கிரதையாக இருங்கள்’ என்று எச்சரித்திருந்தார்கள்.  ஆனால் ரக்கூன் (raccoon) என்ற சிறிய மிருகங்களைத் தவிர வேறு ஒன்றையும் நாங்கள் பார்க்கவில்லை.  அவையும் மனிதர்களைக் கண்டு பயப்படக் காணோம்.  இந்த நீர்வீழ்ச்சியின் மத்தியில்தான் அர்ஜெண்டைனா, பிரேஸில் எல்லை இருக்கிறது.

போர்ட்டோ இகுஸுவாவிலிருந்து இகுஸுவா நதியில் ஒரு சிறிய கப்பல் மூலம் அர்ஜெண்டைனா, பிரேஸில், பராகுவே ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.  இந்த நதி இந்த மூன்று நாடுகளையும் பிரிக்கிறது.  பராகுவே நாட்டின் எல்லைக்குக் கப்பல் வந்ததும் கப்பல் கரையோரமாக நிறுத்தப்பட்டது.  அங்கு அருகில் வாழும் குரானா பழங்குடிகள் கப்பலில் வந்தவர்களுக்காக நடனம் ஆடினர்.  அதன் பிறகு இரண்டு பையன்கள் கப்பலுக்கு வந்து பழங்குடி மக்கள் தங்கள் கைகளால் செய்த கைவினைப் பொருள்களை விற்பனைக்காக தாங்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு எதிரே இருந்த மேஜையின் மேல் பரப்பினர்.  கப்பலில் வந்த பலர் அந்தப் பொருள்களில் பலவற்றை வாங்கினர்.  பின்னால் பேனஸ் ஐரஸிற்குத் திரும்பி வந்த பிறகு எங்களுக்கு அர்ஜெண்டினாவின் சரித்திரத்தை எடுத்துச் சொல்ல வந்திருந்தவரிடம் இது பற்றிக் கேட்ட போது ‘நாங்கள் அவர்களை இப்படி நடனம் ஆடச் சொல்லி காட்சிப் பொருள்களாக ஆக்குவதில்லை’ என்றார்.  ஸ்பானியர்கள் அமெரிக்கக் கண்டத்திற்கு வருவதற்கு முன் குரானா வகுப்பைச் சேர்ந்த பழங்குடி மக்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள்.  ஸ்பானியர்கள் இந்த இடங்களைத் தங்களுக்குள் பல நாடுகளாகப் பிரித்துக் கொண்ட பிறகு குரானா மக்கள் இப்போது பலநாடுகளில் வாழ்கிறார்கள்.

மறுநாள் போர்ட்டோ இகுஸுவாவிலுள்ள ஒரு குரானி குடியிருப்பிற்குச் சென்றிருந்தோம். மெயின் ரோட்டிலிருந்து இவர்கள் குடியிருப்பிற்குச் செல்வதற்கு மண் சாலைகள்தான்.  போர்ட்டோ இகுஸுவா நாகரீகத்திலிருந்து இவர்கள் மிகவும் வேறுபட்டிருக்கிறார்கள்.  இவர்கள் வாழும் வீடுகளில் ஒரே அறைதான்.  வீடு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் ஒரே ஒரு அறைதான் இருக்குமாம்.  பக்கத்தில் சமையலறை தனியாக இருக்கிறது.  இவர்கள் தங்களுக்கு வேண்டிய தானியங்களையும் காய்கறிகளையும் தாங்களாகவே விளைவித்துக் கொள்கிறார்கள்.  கோழிகள் வளர்க்கிறார்கள்.  போர்ட்டோ ஊருக்கு வந்து கடைகளிலும் சாமான்கள் வாங்கிக் கொள்கிறார்கள்.  செல்லப் பிராணிகளாக நாய்களும் வளர்க்கிறார்கள்.  ஆனால் அவை செல்லப் பிராணிகள் போல் காணப்படவில்லை; ஒல்லியாக இருக்கின்றன.  அர்ஜெண்டைனா அரசு இவர்களுடைய ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிலம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறதாம்.  மானியமாக உதவித் தொகையும் கொடுக்கிறதாம்.  எங்களை அவர்கள் இடத்திற்குக் கூட்டிச் சென்றவர் ஒரு என்.ஜி.ஓ. ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்.  நல்ல வேலையில் இருந்த இவர் அந்த வேலையை விட்டுவிட்டு குரானி மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதற்காக இந்த என்.ஜி.ஓ.வில் சேர்ந்திருக்கிறார்.  இவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒரு பள்ளியும் நடத்துகிறார்கள்.  மிகச் சிறிய அறைகள் கொண்ட வகுப்புகள்; அங்கேயே மதிய உணவும் தயாரித்துக் கொடுக்கிறார்கள்.  அர்ஜெண்டைனா மக்கள் வாழும் வாழ்க்கைக்கும் இவர்களுடைய வாழ்க்கைக்கும் எவ்வளவு வித்தியாசம்!

இடையே ஒரு நாள் பிரேஸிலுக்கும் அர்ஜெண்டைனாவிற்கும் இடையில் இருக்கும் குட்டி நாடான உருகுவேவிற்கும் போய்வந்தோம்.  பேனஸ் ஐரஸிலிருந்து கப்பலில் ஒரு மணி நேரப் பயணம்.  ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு விமானத்தில் போவது போலவே கப்பலுக்குள் ஏறுவதற்கு முன் பாஸ்போர்ட், விசா போன்றவற்றைச் சரி பார்க்கிறார்கள்.  ரியோ டி ப்ளாட்டா (Rio De Plata) என்ற நதி உருகுவேவையும் அர்ஜெண்டினாவையும் பிரிக்கிறது.  இந்த நதியின் பெயரின் அர்த்தம் வெள்ளி நதி (River of Silver).  அர்ஜெண்டினாவில் நிறைய வெள்ளி கிடைக்கிறது என்று இதற்கு Argentina என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  (periodic table-இல் வெள்ளிக்குரிய symbol Ar.)  ஆனால் இந்தப் பகுதிக்கு வந்த பிறகுதான் அவ்வளவாக வெள்ளி கிடைக்கவில்லை என்று தெரிந்திருக்கிறது.  பெரு நாட்டில்தான் நிறைய வெள்ளி கிடைத்ததாம்.

உருகுவே நாட்டின் கொலொனியா என்னும் ஊருக்கு நாங்கள் சென்றிருந்தோம்.  இது மிகப் பழமை வாய்ந்தது.  ரியோ டி ப்ளாட்டா நதியின் கரையில் இருக்கிறது.  பதினெட்டாம் நூற்றாண்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் 100 வருடங்கள் போர்த்துகீஸியர்களும் ஸ்பானியர்களும் 7 முறை சண்டை போட்டதில் இருவரும் மாறி மாறி ஜெயித்திருக்கிறார்கள்.  அவர்கள் அப்போது கட்டிய கோட்டைகள், கட்டடங்கள் ஆகியவற்றை இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இந்தியர்கள் இப்போது பல நாடுகளில் குடியேறியிருக்கிறார்கள்.  இருந்தாலும் அர்ஜெண்டைனாவிற்கும் குடிபெயர்ந்திருப்பார்கள் என்றோ அங்கு கடை வைத்திருப்பார்கள் என்றோ கொஞ்சம் கூட நாங்கள் நினைக்கவில்லை.  ஒரு நாள் தெரு வழியே நடந்து கொண்டிருந்த போது ஒரு கடையில் விநாயகர் படம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது.  ‘அர்ஜெண்டைனாவில் விநாயகர் படமா?’ என்று வியந்தவாறே அந்தக் கடைக்குள் சென்றோம்.

அங்கு இரு இந்தியர்கள் கடையைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.  பேனஸ் ஐரஸின் இன்னொரு பகுதியில் தன் நண்பர் ஒருவர் நாலைந்து வருடங்களாகக் கடை வைத்திருப்பதாகவும் அந்தக் கடை நன்றாக நடப்பதால் இவர் ஒரு வருடத்திற்கு முன்னால் இங்குக் கடை வைத்ததாகவும் சுமாராக நடப்பதாகவும் கூறினார்.  அவர் கடையில் இந்துக் கடவுள்களின் சிற்பங்கள், படங்கள், இந்தியப் பாணி உடைகள் ஆகியவை இருந்தன.  உல்லாசப் பயணிகளில் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு சில இந்தியர்களைப் பார்த்தோம்.

ஆசிய நாடுகளான மலேஷியா, சிங்கப்பூரிலும் சரி, மேலைநாடான அர்ஜெண்டைனாவிலும் சரி இண்டெர்னெட், செல்போன்கள் உபயோகம் வெகுவாகக் கூடியிருக்கிறது.  தொழில்நுட்ப அறிவு நாடுகளுக்கிடையே வேகமாகப் பரவுவதும் உலகமயமாதலும் எவ்வளவு தூரம் கூடியிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

 

பேனஸ் ஐரஸ் படத்திற்கு நன்றி

குரானி படத்திற்கு நன்றி

கொலோனியா படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *