முறையற்ற திடீர் உயர்வுகள்…!

0

சித்திரை சிங்கர்

மத்திய அரசு உயர்த்திய பெட்ரோல் விலையினை திடீரெனக் குறைத்ததால் கொஞ்சம் மகிழ்ச்சியுடன் இருந்த நேரத்தில், தன்னை அசுர பலத்துடன் ஆட்சியில் அமரவைத்த தமிழக மக்களுக்கு, உள்ளாட்சி மற்றும் இடைதேர்தலிலும் அறுதிபெரும்பான்மை பலத்துடன் வெற்றிக்கனியினை மீண்டும் அம்மாவின் கரத்தில் அன்புடன் கொடுத்த தமிழக மக்கள் மீது அம்மாவுக்கு என்ன கோபமோ தெரியவில்லை….! யாருடைய நிர்பந்தமோ தெரியவில்லை…! பஸ் கட்டணத்தை … பால் கட்டணத்தை உடனடியாக உயர்த்தி அம்மா அவர்கள் தனது நன்றிக்கடனை தமிழக மக்களுக்கு செலுத்தியவிதம் கண்டு அனைத்துத் தரப்பு பொதுமக்களும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்கள் எனபதே இன்றைய தமிழகத்தின் நிலை.  அடுத்ததாக “மின் கட்டண உயர்வு” நமது தலைக்கு மேலே கத்தி போன்று தொங்கிக் கொண்டிருப்பது வேறு விஷயம்.

இந்தப் பேருந்து கட்டண உயர்வு என்பது நீண்ட நெடுங்காலமாக போக்குவரத்து அலுவலக அதிகாரிகளினால் முடிவெடுக்கப்பட்டு, நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் காரணமாக கிடப்பில் போடப்பட்டு, இப்போது அனைத்து அமளி துமளிகள் அடங்கியபின் நடைமுறைப் படுத்தப்பட்டது என்றாலும், இத்தகு உயர்வு சாதாரண மக்களை மிகுந்த சோதனைக்குள்ளாக்கியுள்ளது என்பது இப்போதைய வேதனையான உண்மை.  கடந்த ஆட்சியாளர்கள் இந்த பஸ் கட்டண உயர்வினை நேரடியாகக் கொண்டு வராமல் எம் சர்வீஸ்/டிலக்ஸ்/சொகுசுப் பேருந்து மற்றும் சாதாரண வெள்ளை போர்டு பஸ் என தரம் வாரியாகப் பிரித்து இயக்கிய போதும் இதுவரையில் இந்த அளவுக்கு அதிகமாக எந்த ஒரு அரசும் தமிழகத்தில் மொத்தமாக கட்டணத்தை உயர்த்தி மக்களை முட்டாள் ஆக்கவில்லை என்பதும் உண்மை.  தென் மாவட்டங்களின் கிராமப்புறங்களில், கடந்த ஆட்சியாளர்கள் பெரும் தோல்விக்கு உள்ளாக இந்த வித்தியாசமான சர்வீஸ் களினால் உண்டான கட்டண உயர்வுகள் என்பது அந்தந்த பகுதி மக்கள் வாயிலாக வந்த செய்தி.  மேலும், இந்த புதிய அரசின் இமாலய வெற்றிக்கு முக்கிய காரணமே புரட்சித்தலைவர் கண்டெடுத்த “இரட்டை இலை” சின்னமும், இன்னமும் புரட்சிதலைவர் இறக்கவில்லை என்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் கிராமத்து அப்பாவிகளுந்தான் என்பது முப்பது சதவிகித உண்மை.  கடந்த ஆட்சியின் போது, ஓரளவுக்கு நடுத்தர மக்கள் அதிகமாக பாதிக்கப்படாவிட்டலும், ஆட்சியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அரசியலில் நுழைந்து செய்த ஆக்கிரமிப்புக்கள்தான் அதிருப்திக்குக் காரணம் என்பது நாடறிந்த உண்மை. அப்படிப்பட்ட நேரத்திலும், டீஸல் விலை உயர்ந்தபோதும், உடனடியாக பஸ் கட்டணத்தை அந்த அரசாங்கம் உயர்த்த முன் வரவில்லை என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. இது ஒருபுறம் என்றாலும் போக்குவரத்துத் துறையின் நிர்வாக செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பது தான் கேள்வி.  இதை, நாம் இப்போது பயணிக்கும் மாநகர பேருந்துககளை, மற்ற பேருந்துகளை, அதன் அவல நிலையினைக் காணும்போதே அறியலாம்! ஒரு நடத்துனரும், ஓட்டுனரும் அவர்கள் பணியில் இருக்கும் நேரத்தில் மழை வந்தால், தங்கள் பொறுப்பில் உள்ள பேருந்தின் இருக்கைகள் நனையாதவாறு பாதுகாக்கவேண்டியது அவர்களின் வேலையாகும். ஆனால், மழை நேரத்தில் பயணிக்கும் பயணிகள் யாவரும் ஈரமான இருக்கைகளில் அமர்ந்தபடி பயணிக்கும் நிலைதான் இன்று உள்ளது.  இந்த சின்ன பொறுப்பினைக் கூட தட்டிக்கழிக்கும் ஓட்டுனர்களையும் நடத்துனர்களையும் முறையாக வழி நடத்தாத மேலதிகாரிகள் போடும் திட்டங்கள் எப்படி போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை மேம்படுத்தும் என்பதும் கேள்விக்குறியே!  இந்த நிலையில், முதலில் நிர்வாகச் சீர்கேடுகளை சரி செய்யாமல், பேருந்துக் கட்டணங்களை உயர்த்தி மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கியது தேவைதானா? அதுவும் இப்போது ஒருமுறை பாண்டிச்சேரி சென்று திரும்பி வரும் மொத்தத் தொகையினையும், இங்கிருந்து பாண்டிச்சேரி செல்வதற்கே கொடுக்கவேண்டிய அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.  ஏன் இந்த அவலநிலை? இதற்கு போக்குவரத்துக் கழகம் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.  ’கோமா’ நிலைக்குப் போய் கொண்டிருந்த அரசுப் போக்குவரத்து நிறுவனத்தை, இந்த கட்டண உயர்வுகள் காப்பாற்றியுள்ளதாக தொழிலார்கள் மகிழ்சியடைவதாக செய்தி வேறு வெளியாகி உள்ளது!  அவர்களுக்கென்ன கவலை! அவர்கள் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வாய்ப்புக்கள் உள்ளன! டிக்கெட் எடுத்துச் செல்லும் பொது மக்கள்தானே சிரமப்படுகிறார்கள்.  மேலும் ஒரு நிர்வாகம் ’கோமா’ நிலைக்கு சென்று கொண்டிருக்கும் போது, நிர்வாகச் சீர்திருத்தம்தான் தேவை.  அதற்காக இந்த போக்குவரத்து கழகங்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? அரசுப் போக்குவரத்துக் கழகத்தில், விபத்து நஷ்ட ஈட்டுத் தொகை வழங்குவதால், ஆண்டுக்கு முன்னூற்று ஐம்பது கோடி ரூபாய் வரை நஷ்டம் என்று சொல்வதைவிட, கர்நாடக மாநிலத்தில் இருப்பது போல், பயணிகள் கட்டணத்துடன் ஒரு ரூபாய் கூடுதலாகப் பெற்றுக்கொண்டு இன்சூரன்ஸ் செலுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த போக்குவரத்துக் கழக நிர்வாகம் இன்று வரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று யாருக்கும் புரியவில்லை.  ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அதிகரித்தால் கூடப் பரவாயில்லை! இப்படி ஓரேயடியாக அதிகரித்து, அதையும் உரிய அவகாசம் கொடுக்காமல், உடனடியாக அரசு ஆணை இல்லாமலேயே, பொதுமக்களிடம் வசூலிக்கத் துவங்கியுள்ளது புதிய அரசு.  ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்கு புதிய அரசு செய்யும் கைம்மாறு இது தானா? சாதுர்யமாகப் பேசி, மக்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ள, இந்த விலை உயர்வில் எழுபத்தி ஐந்து சதவிகிதமாவது உடனடியாக குறைக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லை, போக்குவரத்து கழகங்கள், அனைத்து மாநகர பேருந்துகள் மற்றும் இதர பேருந்துகளில், ’குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகள், பயணம் செய்ய அனுமதிக்கபடமாட்டார்கள்’ என்ற உறுதிமொழி கொடுக்குமா இந்த போக்குவரத்து கழக நிர்வாகம்? மொத்தத்தில், போக்குவரத்து கழகத்தில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் முறையாகச் செயல்பட்டாலே, கட்டண உயர்வு இல்லாமலேயே பேருந்துகளை இயக்கலாம்.  இயலாத நிலையில், ஒரு ஆறு மாதங்களுக்கு மட்டும் இந்த நிர்வாக பொறுப்பினை, திறமை வாய்ந்த தனியார் நிறுவனத்திடம் கொடுத்து செயல்பட வைக்கலாம்.  நிச்சயம் லாபமே கிட்டும் என்பதும் உண்மை!

அடுத்ததாக பால் விலை உயர்வு.  இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் கொஞ்சமும் நம்பும்படியாக இல்லை.  உள்ளாட்சி தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, புதிய அரசு பதவிக்கு வந்தும் இத்தனை நாட்களாக விலையினைக் கூட்டாமல், தேர்தல்கள் முடிந்தவுடன் விலையை உயர்த்தி இருப்பது, அதுவும் ஒரேயடியாக லிட்டருக்கு ஒன்பது ரூபாய் வரை உயர்த்தி இருப்பது அதிர்ச்சிகரமானது.  இந்த உயர்வுக்காக முந்தய அரசுகளை மட்டுமே குறை கூறி வசை பாடுவது எல்லா புதிய அரசுகளும் செய்யும் தொடர்கதையாகவே உள்ளது நம் நாட்டில், தமிழகம் என்ன விதிவிலக்கா? இந்த பால்விலை உயர்வினையும் உடனடியாக பாதியாவது திரும்பப் பெற வேண்டும் என்பதே ஒட்டு போட்ட மக்களின் ஆசை.  இங்கும் நிர்வாகச் சீர்கேடுகளைத் திருத்த வேண்டும்.  இல்லை என்றால் மொத்தமாக தனியாரிடமே கொடுத்துவிடலாம்! அவர்களாவது விலையை உயர்த்தாமலே லாபகரமாக நிறுவனத்தை நடத்துவார்கள்.  உண்மையிலேயே நஷ்டத்தில் இயங்கினால், இத்தனை நாட்கள் எதற்காக காத்திருந்தது இந்த ஆவின் நிர்வாகம் என்பது “சிதம்பர ரகசியம்தான்”!  மேலும், இந்த உயர்வுக்கான கூடுதல் கட்டணங்களை ஒரு குறிப்பிட கால அவகாசம் கூட கொடுக்காமல் ஒரு ஈட்டிக்கடைக்காரர் போல நின்ற நிலையில் வசூலிப்பதும் ஒரு திறமையான நிர்வாகத்துக்கு அழகல்ல!

அடுத்து விரைவில் உயர்தபடவிருக்கும் மின் கட்டணங்கள்! விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்படும் மின்சாரத்தை, மினிமம் கட்டணத்துடன் வழங்கலாம்.  கட்சி பேதமில்லாமல் அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த ஆகும் மின் கட்டணத்தை முறையாக ரீடிங் எடுத்து அதிகபட்ச கட்டணம் வசூலிக்கலாம்.  வீடுகளுக்கான மின் கட்டணத்தை அவரவர்களே ரீடிங் எடுத்து ரீடிங் இலக்கங்களுடன் மாத மாதம் மின்சார வசூல் மையங்களுக்கு சென்று தாங்கள் உபயோகித்த மின்சாரத்துக்கு உள்ள நியாமான கட்டணங்களை செலுத்த வழிவகை செய்யலாம்.  இதனால் மின்சார ரீடிங் எடுக்க வரும் பணியாளர்களின் வேலை மிச்சமாகிறது.  தேதி குறிப்பட்டு விட்டால் பொது மக்களுக்கும் சிலாப் காரணமாக மின் கட்டணம் அதிகமாக செலுத்துவது தவிர்க்கப்படும்.  ரயில்வேக்கு கொடுக்கப்படும் மின்சாரத்துக்கு, நிர்ணயம் செய்த மின் கட்டண ஒப்பந்தம் எப்போதோ போடப்பட்டதாக கேள்வி! இதை கொஞ்சம் தெளிவாக விசாரித்து, இந்த ஒப்பந்தத்தை முறையாக மாற்றி அமைத்து, மின்சார கட்டணங்களை கொஞ்சம் உயர்த்தி வசூலிக்கலாம்.  மின்சாரத்துறையில் இருக்கும் நிர்வாக சீர்கேடுகள் ஊரரிந்த ரகசியம்தான்.  இங்கும் நிர்வாக சீர்திருத்தம் தேவைபடுகிறது.

மொத்தத்தில் எந்த ஒரு நிறுவனமும் தங்களின் சரிவுகளை மேம்படுத்த முதலில் நிர்வாகத்தைதான் சீர்செய்வார்கள்.  விலை உயர்த்துவது போன்ற செயல்களை கடைசியில்தான் செய்வார்கள். புதியதாக வரும் அரசுகள் எப்போதும் முந்தய அரசுகளை குறை கூறிக்கொண்டுதான் விலை உயர்வுகளை அமல் படுத்துவார்கள் இது வாடிக்கையானதுதான்.  இப்படி ஓரயடியாக விலை உயர்வுக்கு, அரசு வழங்கும் “இலவசங்கள்” முதற்காரணமாக இருக்கிறது என்பதை உண்மை என்றாலும் அதை ஒப்புகொள்ள எந்த அரசும் இன்று வரை முன்வருவதில்லை.  இப்போது கூட ஒன்றும் கால தாமதமாகவில்லை.  தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் மிக்சி/கிரைன்டர்/மின்விசிறி ஆகியவை கண்டிப்பாக இருக்கும்.  இது போன்ற இலவசங்களுக்காக செலவிடப்படும் தொகையினை, மேற்கூறிய போக்குவரத்துக் கழகங்கள்/ஆவின் மற்றும் மின்சாரத்துறையின் நிர்வாகச் செலவுகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டு, இந்த தீடீர் விலையுயர்வினை உடனடியாக ரத்து செய்து, ஆட்சிப் பொறுப்பினை அள்ளிக் கொடுத்த மக்களுக்கு மகிழ்சியைக் கொடுக்கலாம்.  இல்லை இதன் விளைவுகள் அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தல்களிலும், பின் வரும் சட்டமன்றத் தேர்தல்களிலும் கண்டிப்பாக எதிரொலிக்கும் என்பது மட்டும் உண்மை.  இது ஒருபுறம் என்றாலும், ஓட்டுப் போடும் மக்கள், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தங்களின் ஆட்சிப் பொறுப்பினை திறமையாகச் செயல் படுத்த முடியாத நிலையில் அந்த அரசை திரும்ப அழைக்கும் உரிமை ஓட்டு போட்ட மக்களுக்கு கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும்.  இந்த சட்டத்தினை தேர்தல் ஆணையம் உடனடியாக விரைந்து செயல்படுத்த புதிய அரசானை வெளிவர ஆவன செய்ய வேண்டும் என்பது மக்களின் ஆசை.  கடந்த பல வருடங்களாக இந்த போக்குவரத்து கழகம், ஆவின் நிர்வாகம் மற்றும் மின்சார நிர்வாகம் நஷ்டத்தில் இயங்கிய நிலையில் கடந்த அரசு அதுவும் மைனாரிட்டி அரசு கட்டணங்களை உயர்த்தாமல் எப்படி செயல்பட்டது எனபது ஆச்சர்யம் தான்!  பதவிக்கு வந்த சில நாட்களிலேயே இப்படி என்றால் இன்னும் வரவிருக்கின்ற நாட்கள் கண்டிப்பாக தமிழகத்துக்கு “இருண்ட நாட்களாக”வே இருக்கும் எனபது மட்டும் திண்ணம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *