வாழ்ந்து படிக்கும் பாடங்கள்- 24

என்.கணேசன்

மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்! 

பெரும்பாலான மனிதர்கள் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் நம்புவதும், எதிர்பார்ப்பதும் பெரும்பாலும் யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக இருப்பதில்லை. நிஜமாக முடியாத ஒரு நேர்கோடான, சீரான  வாழ்க்கைக்காக ஆசைப்படுகிறார்கள். அப்படி ஒரு வாழ்க்கை யாருக்குமே என்றுமே இது வரை அமைந்ததில்லை. இனி அமையப் போவதுமில்லை. அதனால் அவர்கள் எதிர்பார்ப்புகளும், நடைமுறை நிஜங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருக்க, அவர்கள் வாழ்க்கை முழுவதையும் பிரச்சினைகளாகவே காண்கிறார்கள். அதன் காரணமாக தினசரி வாழ்வில் சீக்கிரமாகவே அமைதியை இழந்து தவிக்கிறார்கள். 

உலகம் தன்னிஷ்டப்படியே இயங்குகிறது. நிகழ்வுகள் பலதும் நம் கருத்துக்களை அனுசரித்துப் போவதில்லை. நம்மால் முழுவதும் உணர முடியாத ஏதோ ஒரு விதியின்படியே பலதும் நடக்கின்றன. அதை ஏற்றுக் கொள்கிறீர்களா, இல்லையா என்று உலகம் உங்களிடம் கேள்வி கேட்டு எதையும் நடத்துவதில்லை. பல சமயங்களில் உங்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை தரப்படுவதில்லை. அப்படி இருக்கையில் நம் கட்டுப்பாட்டில் இல்லாத, நம்மால் மாற்றியமைக்க முடியாதவற்றை எண்ணி வருந்துவதும், புலம்புவதும், கலங்குவதும் அந்த நிலைமையை எள்ளளவும் மாற்றி விடப் போவதில்லை. 

ஒரு மரணம் நிகழ்கிறது. இறந்தவர் நம்மால் மிகவும் நேசிக்கப்பட்டவர், அவர் மரணம் நாம் சிறிதும் எதிர்பாராதது என்று வைத்துக் கொள்வோம். அந்த மரணம் நமக்குக் கண்டிப்பாக பெரும் துக்கத்தைத் தரும் தான். அதுவும் இறந்தவர், கணவனாகவோ, மனைவியாகவோ, பிள்ளைகளாகவோ, தாயாகவோ, தந்தையாகவோ இருந்தால் அந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. அதுவும் அவரால் ஆக வேண்டிய காரியங்கள் நிறைய இருந்தால் மனரீதியாக மட்டுமல்லாமல் எல்லா வகையிலும் நாம் பாதிக்கப்படுவதால் சிரமங்களும் மிக அதிகமாகத் தான் இருக்கும். அதனால் அந்த துக்கம் இயற்கையானது. நியாயமானதும் கூட. 

ஆனால் மரணம் ஒவ்வொருவரும் சந்தித்தாக வேண்டிய ஒரு நிகழ்வு. மரண காலத்தைத் தீர்மானிக்கும் சக்தி நம்மிடம் இல்லை என்கிற போது அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். உடனே தோன்றுகிற இயல்பான துக்கத்தில் இருந்து விரைவாக நாம் மீண்டு எழத்தான் வேண்டும். நடக்க வேண்டிய காரியங்களை சரியாகக் கவனித்துச் செயல்பட்டே தீர வேண்டும். இறந்தவர்களுக்காக இருக்கிறவர்களை புறக்கணித்து விடக் கூடாது. அது நியாயமும் அல்ல, விவேகமும் அல்ல. ஆனால் பலர் இந்த துக்கத்தில் இருந்து மீள்வதில்லை. ‘இந்த மரணம் நியாயமா? சரியான காலத்தில் தான் வந்திருக்கிறதா? சாவுக்காக எத்தனையோ பேர் காத்திருக்கையில் இவருக்கு ஏன் வரவேண்டும்?’ என்பது போன்ற கேள்விகளிலேயே தங்கி விடுகிறார்கள். இந்தக் கேள்விகளுக்கு உலகம் பதிலளிப்பதில்லை. 

மரணம் போன்ற இன்னும் எத்தனையோ பெரிய விஷயங்கள் இருக்கின்றன. விபத்துகள், நோய்கள், பெரும் நஷ்டங்கள், மோசமான மாற்றங்கள் எல்லாம் நம் சீரான வாழ்க்கையைச் சீர் குலைக்கக் கூடும். வந்ததை மறுப்பதால் பிரச்சினைகள் கூடுமே ஒழிய குறையாது. உண்மை நிலையை உணர்ந்து ஏற்றுக் கொண்டால் மட்டுமே தெளிவாகச் சிந்திக்கவும், செயல்படவும் முடியும். அந்த வகையில் மட்டுமே ஓரளவாவது பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள முடியும். யார் காரணம் என்று ஆராய்வதிலும், குற்றப்பத்திரிக்கை தயார் செய்வதிலும், எனக்குப் போய் இப்படி ஆகி விட்டதே என்று சுயபச்சாதாபத்தில் மூழ்குவதிலும் எந்த விதத்திலும் ஒருவருக்குப் பயன் கிடைக்காது. 

பெரிய விஷயங்களைப் பார்த்தோம். இனி சின்ன விஷயங்களைப் பார்ப்போம். முக்கிய வேலையாகப் போகிறோம். வழியில் ட்ராஃபிக் ஜாம் ஆகி விடுகிறது. வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. இது சந்தோஷப்பட வேண்டிய சூழ்நிலை அல்ல தான். ஆனால் சிலர் அந்த நேரத்தில் படும் அவசரமும், அவஸ்தையும் கொஞ்ச நஞ்சமல்ல. புலம்பித் தீர்ப்பதும், குடியே மூழ்கிப் போய் விட்டது போல மன அமைதி இழப்பதும் பலரிடம் நாம் பார்க்க முடிந்த தன்மைகள். 

அந்தப் புலம்பலாலும், அவசரத்தாலும் அந்த நிலைமையை மாற்றி விட முடியுமா? சில நிமிடத் தாமதங்களால் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிற நிகழ்வுகள் நிகழ்ந்து விடுமா? சரி செய்யவே முடியாத பேரிழப்பா அது? சில நிமிட சில்லறை அசௌகரியத்திற்குப் பலரும் அமைதியிழந்து தவிப்பதும், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதும் என்னவொரு அறியாமை? மன அமைதியை இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் இழக்க ஆரம்பித்தால் மனம் அந்த அளவு பலவீனம் என்றல்லவா அர்த்தம். எது வேண்டுமானாலும் எவ்வளவு சீக்கிரமும் அதைப் பதட்டமடையச் செய்து விடும் என்றும், சுலபமாக அசைத்து விடும் என்றல்லவா பொருள். 

அதே போல் நிறையச் சின்ன விஷயங்கள் பலரையும் தேவைக்கும் அதிகமாக மன அமைதி இழக்கச் செய்கின்றன. மழை விடாது பெய்தால் மன சங்கடம் வந்து விடுகிறது. அலுவலகத்திலும், அக்கம் பக்கத்திலும் ஒரு சிலருடைய குணாதிசயங்கள் எரிச்சலைக் கிளப்புவதாக இருந்தால் மன அமைதி பறி போகிறது. எதிர்பார்த்தபடி அடுத்தவர்கள் நடக்கா விட்டால் மனம் குமுறுகிறது. இது போன்ற சின்னச் சின்ன இயற்கையான, நம்மால் மாற்ற முடியாத விஷயங்களில் மன அமைதியை இழப்பது அதிகம் நடக்கிறது. தினசரி வாழ்க்கையில் ஒவ்வொருவரையும் சீண்டிப் பார்க்கக் கூடிய இது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் அதிகம் வருவது இயல்பே. இதைப் பற்றி அதிகம் நினைத்து, இதைப் பற்றியே அதிகம் புலம்பி தானும் வருந்தி சுற்றியுள்ளவர்களுக்கு அந்த மனநிலையை பரப்பி அமைதியை அந்த வட்டாரத்திலேயே இல்லாமல் செய்கிறவர்கள் நிறைய இருக்கிறார்கள்.   

இந்தக் கூட்டத்தில் நீங்களும் இருக்கிறீர்களா என்று பாருங்கள். வாழ்க்கையில் சகிக்க முடியாதவற்றில் மாற்றக் கூடியவை நிறைய உண்டு. அதை மாற்றும் முயற்சியில் மனிதன் ஈடுபட்டதால் மட்டுமே உலகம் இந்த அளவு முன்னேறி இருக்கிறது. மனித சமுதாயம் வளர்ந்துள்ளதற்கும் காரணம் அதுவே. ஆனால் அதே போல மாற்ற முடியாத விஷயங்களும் நிறைய உண்டு. உதாரணத்திற்கு ஒரு சிலவற்றை நாம் இங்கு பார்த்தோம். இவை நாம் முகம் சுளிப்பதால் தவிர்க்க முடிந்தவை அல்ல. இவை நாம் புலம்பினால் வராமல் இருப்பவையும் அல்ல. இது போன்றவற்றை ஏற்றுக் கொள்ளும் போது மட்டுமே வாழ்க்கையை நாம் லகுவாக்கிக் கொள்கிறோம். ஏற்றுக் கொள்ளும் போது நம் சக்தி வீணாவதைத் தடுக்கிறோம். மன அமைதியும் பெறுகிறோம். 

அப்போது ‘ஐயோ இப்படி ஆகி விட்டதே’ என்ற ஒப்பாரிக்கு பதிலாக ‘இனி என்ன செய்வது?’ என்ற ஆக்கபூர்வமான சிந்தனை பிறக்கிறது. இப்படிப்பட்ட ஆக்கபூர்வமான சிந்தனையால் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் இருந்தும் விடுபடும் வழியோ, அல்லது அந்தச் சூழ்நிலையைத் தாக்குப் பிடிக்கும் வழியோ பிறக்கிறது. இப்படி மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் போது உலகத்துடன் போராடுவதை விட்டு விட்டு, உலகத்துடன் ஒத்துப் போய்ச் சமாளித்து வெற்றி பெறுகிறோம். 

(அடுத்த வாரத்துடன் பாடங்கள் முடிகின்றன)

 

படத்திற்கு நன்றி: http://positive-place.com/positive-thinking-for-success

என்.கணேசன்

என்.கணேசன்

எழுத்தாளர்

Share

About the Author

என்.கணேசன்

has written 27 stories on this site.

எழுத்தாளர்

Write a Comment [மறுமொழி இடவும்]


9 × seven =


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.