ஹலோ டாக்டர்!

ஹலோ டாக்டர்,

1.உணவில் உப்பைக் குறைத்துக் கொள்வதால் இருதயத்திற்கு நல்லதா?

உப்பு ஊறுகாய் அப்பளம் வடகம் போன்றவற்றை சாப்பிடுவது தவறா? – திருமதி .உமா சண்முகம் (ஈரோடு)

 

டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம்

புதுவருடப் பிறப்பு, பொங்கல் என்று பல விடுமுறைகளும் விழாக்களும் நிறைந்துள்ள நேரத்திற்கு பொருத்தமான கேள்வி. நாம் உண்ணும உணவானது நமக்குத் தேவையான சத்துக்களைத் தருவதோடு, உடலுக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்களையும் (மினரல்ஸ்) அளிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மினரல் தான் நாம் தினமும் எல்லாவற்றிலும் உபயோகப்படுத்தும் உப்பு. சோடியம் க்ளோரைட் (Sodium Chloride) எனப்படும் உப்பு, சுவைமட்டும் அளிக்கும் ஒரு பொருள் அல்ல. அது நமது உடலில் பல்வேறு பகுதியின் செயல்பாடுகளை நடத்தும், பாதிக்கும் ஒரு தாதுப்பொருள்.

உப்பில் உள்ள சோடியம் நமது நரம்புகளின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்று, இருதயத்தின் மின்சார நரம்புகளின் (conduction system) இயக்கத்திற்கும் இவை இன்றிமையாதது. சரியான அளவுகளிலான சோடியம் நமது உடலில் நீர் நிலை சரிசமமாக (water balance) இருக்கச் செய்யும் ஒரு வஸ்துவாக செயல்படக்கூடியதாகும். நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிலும் மென்மையான தடுப்புகள் உண்டு அவற்றை மெம்ப்ரனேஸ் (membranes) என்று கூறுவோம். அவற்றை எந்தப் பொருளும் கடப்பதற்கு சோடியம் மிகவும் முக்கியம்.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பார்கள். உப்பு மட்டும் இதற்கு விதிவிலக்கன்று. ஊறுகாய் அப்பளம் போன்ற பொருட்கள் உப்பு அதிகம் உள்ளவை. அவை பண்டை நாட்களில் பலகாலம் கெடாது இருக்க பதப்படுத்த உபயோகப்படுத்தப்பட்டது.  

அதிகமாக உப்பை உட்கொள்வதினால் இரத்தக்கொதிப்பு அதிகமாகும், சிறுநீரகம் பாதிக்கப்படும். உப்பானது நமது உடலில் தண்ணீர் சேர்ந்து உடல் உப்ப செய்யும் தன்மையும் உடையது. அதிக உப்பினால் நீர்சேர்ந்து உடல் பெருக்கும். இரத்தநாளங்கள் அதிகமான நீர் மற்றும் இரத்த ஓட்டத்தினால் தடித்து இரத்தக்கொதிப்பு உண்டாகும். இரத்தநாளங்கள் தடிப்பதினாலும் இரத்தக் கொதிப்பினாலும் நமது இருதயம் உடலுக்கு ரத்தம் செலுத்த அதிகமாக உழைக்கவேண்டும். இதனால் இருதயம் பழுதடையும் வாய்ப்பும் உண்டாகும். (Heart failure).

வடாம், ஊறுகாய் சாப்பிடுவது தவறில்லை ஆனால் அளவோடு சாப்பிடவேண்டும், அப்படிச் சாப்பிடும்போது மற்ற உணவில் உப்பை குறைத்துக் கொள்வது நல்லது. ஏற்கனவே, இரத்தக்கொதிப்பு, சிறுநீரக பாதிப்பு, பலவீன இருதயம் உடையவர்கள் வடாம், ஊறுகாய் போன்றவற்றை தவிர்ப்பது நன்று.

ஆக ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது சான்றோர் வாக்கு, இன்று ‘உப்பிடும் போது உன் உடலினை நினை’ என்ற எண்ணத்தோடு அளவாக உப்பிட்டு வளமாக வாழ்வோம்.

About the Author

has written 5 stories on this site.

டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம் FRCSEd FRCSEd(CTh), Consultant Thoracic Surgeon, University Hospitals of Leicester, United Kingdom. டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் தம் இளநிலை மருத்துவம் பயின்று, பின்னர் சென்னை பொது மருத்துவமனையில் , முதுநிலை அறுவை சிகிச்சை மருத்துவம் பயின்றார்.பிரிட்டிஷ் கவுன்சில் பெல்லோஷிப் பெற்று இங்கிலாந்தில் மேல் பயிற்சிக்குச் சென்றார். எடின்பரோவில் FRCS பட்டம் பெற்று இருதய மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை பயிற்சியை மான்செஸ்டர், கிளாஸ்கோ மற்றும் பர்மின்காமில் பயின்று FRCS (CTh ) பட்டம் பெற்றார். நெஞ்சக புற்று நோய் அறுவை சிகிச்சையில் சிறப்பு பயிற்சி முடித்து தற்போது, லெஸ்டர் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறார். தனது ஆய்வுக் கட்டுரைகளை பல மருத்துவ இதழ்களில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. தமிழ் இலக்கியம் , மொழிபெயர்ப்பு, கல்வி மற்றும் பயிற்சியில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். வாசகர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய கேள்விகளை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி மருத்துவர் ஸ்ரீதர் ரத்தினம் அவர்களின் மேலான பதிலைப் பெறலாம்.

One Comment on “ஹலோ டாக்டர்!”

 • Rishi wrote on 5 January, 2012, 16:52

  நாம் உப்பின்றியே உணவு உட்கொள்ளலாமே. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு சராசரியாகத் தேவைப்படும் உப்பின் அளவு 3 கிராம் என AHA (American Heart Association) குறிப்பிடுகின்றது. இந்த அளவினை நாம் உண்ணும் காய்கறிகளிலேயே இயல்பாய் கிடைத்துவிடுகின்றது. எனவே சமையலில் உப்பே தேவையில்லை என்பது என் நிலை.
  கீரையில் சோடியம் அதிகம். உப்பிற்குப் பதிலாகக் கீரையைப் பயன்படுத்தலாம். அதுவும் அளவாய் இருக்கட்டும்.
  நம் உணவு சமைப்பது MOSS Free வகையாய் இருக்கட்டும்

  MOSS Free

  M –> No Masala
  O –> No Oil / Ghee
  S –> No Salt
  S –> No Sugar

Write a Comment [மறுமொழி இடவும்]


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.