கிருஷ்ணாவின் தீர்வுப் பேச்சு தமிழர்களை ஏமாற்றும் திட்டமிட்ட நாடகம்: சீமான் கருத்து – செய்திகள்

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வுகாண இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சமீபத்தில் இலங்கை சென்று திரும்பினார்.  அதைத் தொடர்ந்து அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உறுதியளித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.  இந்த அறிக்கை பற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு. சீமான் அவர்கள் வெளியிட்டிருக்கும் கருத்து பின்வருமாறு:

”இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வுகாண இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சமீபத்தில் இலங்கை சென்று திரும்பினார். அதைத் தொடர்ந்து அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உறுதியளித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கை பற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு. சீமான் அவர்கள் வெளியிட்டிருக்கும் கருத்து பின்வருமாறு:

இலங்கை அரசமைப்பில் திருத்தம் செய்து தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே உறுதியளித்துள்ளார் என்று கொழும்பு பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளது, ஈழத் தமிழர்களை ஏமாற்றும், திசை திருப்பும் நாடகமாகும்.

தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போரை நிகழ்த்தி ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள பெளத்த இனவாத அரசின் தலைவர் ராஜபக்சேவிடமே, தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க இந்திய அயலுறவு அமைச்சர் வலியுறுத்துவதும், அதற்கு செவிசாய்ப்பதுபோல் ராஜபக்சவும், இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் 13வது திருத்தத்திற்கும் அதிகமாகச் சென்று தீர்வுத் திட்டத்தை அளிக்கப் போகிறேன் என்று கூறுவதும் தமிழர்களை மட்டுமல்ல, உலக நாடுகளையும் ஏமாற்ற இந்திய மத்திய அரசும், இனவாத சிங்கள அரசும் இணைந்து அரங்கேற்றிவரும் கபட நாடகமாகும்.

மிகச் சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கையின் மீது பேசிய அந்நாட்டு அதிபர் ராஜபக்சே, நிலம், நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் மீதான எந்த அதிகாரமும் மாகாண சபைகளுக்கு அளிக்கப்போவதில்லை என்பதை உறுதியுடன் கூறியிருந்தார். அதேபோல், தமிழர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது என்றும்
கூறியிருந்தார். இவை யாவும் அந்நாட்டு நாளிதழ்களிலும், இணையத்
தளங்களிலும் தெளிவாக வெளியிடப்பட்ட செய்திகளாகும்.

அதுமட்டுமல்ல, அதிகாரப் பகிர்வுத் தொடர்பாக அரசின் திட்டம் என்ன என்பதை விளக்கிடுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேட்டதற்கு, அதைப்பற்றியெல்லாம் அறுதியிட்டுக் கூற முடியாது என்று மறுத்தது ராஜபக்சே அரசு. இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று பேசிய இனவெறியன் கோத்தபய ராஜபக்ச, விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம், இதற்கு மேல் தமிழர்களுக்கு தீர்வு என்று கூறுவதற்கு ஏதுமில்லை என்று பட்டவர்த்தனமாகத் தெரிவித்துள்ளார்.

இன்றைக்கு வெளிவந்த கொழும்புச் செய்திகளில் கூட, 13வது திருத்தம் பிளஸ் என்றால் என்னவென்று கேட்டதற்கு, நாடாளுமன்ற மேலவையை அமைத்து தமிழர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிப்பதே என்று இலங்கை அரசின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல்லா கூறியுள்ளார். தமிழர்கள் கேட்பது சம உரிமை, முழுமையான அதிகாரப் பகிர்வு. ஆனால் இலங்கை அரசு பேசுவது வெற்று பிரதிநிதித்துவம்! அதுமட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியும் இன்றைய மத்திய அரசும் வலியுறுத்தும் 13வது திருத்தத்தின் அடிப்படையிலான தமிழர் மாகாணங்கள் இணைப்பு என்பது ஏற்கனவே அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட ஒன்று என்பதை நன்கு அறிந்த பின்னரும், திரும்பத் திரும்ப அதைப் பற்றியே மத்திய அரசு வலியுறுத்துவது ஏன்? அது இலங்கைத் தமிழர்களை மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் அனைவரையும் ஏமாற்றவும், உலக
நாடுகளை திசை திருப்பவுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சவையும், இலங்கை அரசையும் சர்வதேச மனித உரிமை நீதிமன்றத்தில் நிறுத்த, பன்னாட்டு விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கைக்கு உலக நாடுகளின் ஆதரவு பெருகி வரும் நிலையில், இரண்டு அரசுகளும் சேர்ந்து இப்படிப்பட்ட ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றுகின்றன என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். உள்நாட்டுப் போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள்
ஆகிவிட்ட நிலையிலும் நம் சொந்தங்களுக்கு எதிரான இனப் படுகொலையும், கடத்தல்களும், கற்பழிப்புகளும் இன்றும் நமது மற்றொரு தாய் மண்ணில் தொடர்ந்து நடந்து வருகிறது. அவர்களின் துயரை உலகின் பார்வைக்குக் கொண்டு வரவே ஒரு பன்னாட்டு பார்வையாளர்கள் குழுவை ஐ.நா. இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். எனவே, இலங்கைத் தீவில் சம
உரிமையுடனும், முழுச் சுதந்திரத்துடன் தமிழர்கள் வாழ வேண்டுமெனில் அதற்கு
தனித் தமிழ் ஈழம் அமைப்பதே ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்ற உறுதியான இலக்கை நோக்கி நாம் தொடர்ந்து போராட வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் சுதந்திர வேட்கையை முடக்க முயற்சிப்பது மட்டுமின்றி, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையையும் இந்திய அரசு விட்டுத் தந்துவிட்டதாக அந்நாட்டு அரசு அலுவலர் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பகுதி முழுவதிலும் மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமை என்கிற வாதத்தை இந்திய அரசு விட்டுவிட வேண்டும் என்று தாங்கள் கோரிக்கை வைத்ததாகவும், அதனை இந்தியத் தரப்பு ஏற்றுக்கொண்டதாகவும் இலங்கை அரசு அதிகாரி கூறியுள்ளதாக இலங்கை செய்திகள் கூறுகின்றன. அது உண்மையானால், பாரம்பரிய மீன் உரிமை என்ற சட்ட ரீதியிலான அடிப்படையை தமிழக மீனவர்களும், நமது ஈழத் தமிழ் சொந்தங்களும் இழக்கும் அபாயம் உள்ளது. இதனை தமிழக மீனவர்கள் முழுமையாக அறிந்துகொண்டு, தங்களது உரிமையை நிலைநாட்ட போராட வேண்டும்.

இன்றைக்குள்ள மத்திய அரசு தமிழினத்தின் நலன்களையும், உரிமைகளையும் முழுமையாக விட்டுத் தந்து இலங்கையுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது. எனவே இந்த அரசை நம்பி தமிழர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று நாம் தமிழர் கட்சி எச்சரிக்கிறது.”

குணசீலன்

குணசீலன்

செய்தியாளர்

Share

About the Author

குணசீலன்

has written 7 stories on this site.

செய்தியாளர்

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.