விசாலம்

குரு பக்திக்கு ஒரு மிகச்   சிறந்த உதாரணம் காட்ட வேண்டுமென்றால்  திரு. வேம்பு  ஐயர் தான் என் கண் முன் நிற்கிறார். ஆம்  மறைந்த இசை மேதை கானகலாதர திரு. மதுரை மணி ஐயரின் சீடர்  தான் இவர். இவர்களை  நான் நேரில் பார்க்கும்  பாக்கியம்  பலமுறை   கிட்டியது. 

மும்பையில் ஷண்முகானந்த சபா, பாரதீய சபா நடத்தும் கச்சேரிகளுக்கு வருடத்திற்கு இரு முறையேனும் இவர்கள் வருவார்கள். திரு. மதுரை மணி அவர்கள் தன் ஒன்று விட்ட சகோதரியின் வீட்டில் தான் தங்குவார். சபாக்காரர்கள் இவருக்கு நல்ல உயர்ந்த ஹோட்டலில் இடம் தந்தாலும் அதை நிராகரித்து விட்டுத் தன் சகோதரி வீட்டில்தான் இருப்பார். குடும்ப அங்கத்தினர்களிடம் அத்தனைப் பாசம் .அன்பு.

அந்தச் சகோதரி  இருந்த பில்டிங்கில் தான் நானும் இருந்தேன். எப்போது இந்த இசை மேதை வந்தாலும் நான் அங்கு ஆஜராகி விடுவேன். அங்கேயே பழி கிடப்பேன். என் வீட்டு ஞாபகமே வராது.

இதோ டாக்ஸி வந்து நிற்கிறது. திரு. வேம்பு ஐயர் இறங்கித் தன் குருவின் கையைப் பிடித்து அழைத்து  வருகிறார். மெள்ள ஒரு இருக்கையில் அவரை அமர வைக்கிறார். பின் தம்புராவையும் ஒரு இடத்தில் சாய்த்து வைக்கிறார், பின் காப்பியுடன் வரும் சகோதரியின்  கையிலிருந்து  காப்பியை வாங்கி அதை மிகப் பக்குவமாக  ஆற்றி அவர் தொண்டைக்கேற்ற  சூடில் அவரிடம் கொடுக்கிறார். பின் இசைச் சங்க நிர்வாகிகள்  வந்து இவரைப் பார்க்கும்  போது  மிகப்   பவ்யமாக  அவர் அருகில் நிற்கிறார். தன் குரு நாதர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாரே  தவிர அவர் நடு நடுவே பேசியதில்லை.

பிரேக் பாஸ்ட் நேரம்,   சாப்பாடு நேரம் எல்லாம் மிகவும்  கவனிப்புடன்  இருந்து  தன் குருவிற்குப் பணிவிடை செய்ததை  நான்  நேரில் பார்த்திருக்கிறேன். இதனால்தான் அவருக்குக் குரு பக்த சிரோமணி என்ற பட்டமும் கிடைத்திருக்கிறது. இதை அளித்தவர்  இசையில் ஜாம்பவானாக இருந்த மறைந்த இசை மேதை திரு. செம்மங்குடி சீனிவாச ஐயர் அவர்கள். 

திரு. வேம்பு ஐயர் ஓர் கர்மயோகி. அவர் குருவே  அவருக்கு உலகம். தன் தனிப்புகழுக்கு அவர் ஆசைப்பட்டதேயில்லை. மதுரை மணி  அவர்களின் நிழலென்றே   இவரைச் சொல்லலாம்.   அவர் கச்சேரியில் பாடும் போது இவர் பின்னால் தம்பூரா  போட்டபடி இவர், முகத்தையே பார்த்தபடிப் பாடுவார். இவரின் குரு உடல்  நலமில்லாமல் போன போது சாதத்தைக் குழையப் பிசைந்து  குழந்தைக்குக் கொடுப்பது போல்  அவர் கையில்  சின்ன உருண்டையாக்கி   வைப்பார். வாய் துடைத்து விடுவது, பின்னர் ஒரு டவலுடன்   அவர் கையைத் துடைத்து மிகவும் பாசத்துடன் அவரைச் சாய்ந்தாற் போல் ஒரு இருக்கையில் அமர்த்துவதை  நான் கண்டு மனம்  நெகிழ்ந்திருக்கிறேன். பின் அவருக்கு ரெஸ்ட் தேவை என்பதால் சிறிது நேரம் தூங்கவும்  ஏற்பாடு செய்வார்.

குருகுலம் என்பது இவருக்கு மிகப் பொருந்தும். அவர் உடைகளைத் தோய்த்துப் போடுவது,  அவருக்குத் தேவையான உடைகளை எடுத்துக் கொடுப்பது, கச்சேரியின் போது பளீரென்ற வேஷ்டியைக் கட்டி விடுவது. பின் தம்பூராவில் சுருதி சேர்ப்பது. கச்சேரியின் போது தம்பூரா போட்டபடியே அவருடன் கீர்த்தனைகளைப் பாடுவது   என்று  எல்லாவற்றிலும் குருவின் பக்தி நமக்கு வெளிப்படும்.

ஒரு சமயம்  மதுரை  மணி அவர்கள்  கச்சேரி செய்து கொண்டிருந்தார். ஆலாபனையின் போது ஒரு சின்னப் பூச்சி  அவர் வாயில் போய் விட்டது. பாவம் அதை  முழுங்கவும் முடியாமல்  துப்பவம் முடியாமல் தவிப்பதைப் பார்த்த  திரு. வேம்பு மாமா  மெள்ளத் தன் உள்ளங்கையை நீட்டி  அதிலே அவர் எச்சிலை உமிழச் சொன்னார். பின் மெள்ள எழுந்து போய்க் கைகள் கழுவி  வந்தாராம்.     இந்த நிகழ்ச்சியை அவரது மருமான் திரு. டி.வி. சங்கர நாராயணன் அவர்கள் ஒரு சமயம் அவரைப் பற்றிப்  பேசுகையில் தெரிவித்தார். இதிலிருந்தே அவர் குரு பக்தியை எடை போட்டு விடலாம். 

இவர் மயிலாப்பூரில் இருந்ததால் தவறாமல் கபாலீஸ்வரர் கோயில் போய் வருவார், தினமும் சுந்தர காண்டமும் படிப்பார், காயத்ரி ஜபமும் தவறாமல் செய்வார். புகழுக்கோ, பணத்திற்கோ,  பட்டத்திற்கோ ஆசைப்பட்டதில்லை. தன் குருவுக்குச் சேவை  செய்ய வேண்டும். அவருடன் பாட வேண்டும் என்ற ஆசையைத் தவிர வேறு ஆசையே இல்லை. தன் மகன் சங்கர நாராயணனைத் தன் செல்வாக்கோ அல்லது மதுரை மணி அவர்கள் செல்வாக்கோ உபயோகித்து முன்னுக்குக் கொண்டு வர அவருக்கு விருப்பமில்லை, திறமையும்  உழைப்பும் இருந்தால் தானாகவே முன்னுக்கு வர முடியும். அதற்குச் சிபாரிசு தேவையில்லை  என்பதே அவர் கருத்து.

இவர் தியாகராஜருடைய  பக்தரும் கூட. தியாகராஜ ஆராதனையின் போதும் தன் குருவுடன்  திருவையாறு போயிருக்கிறார். ஒரு சமயம்  மஹா பெரியவாள் முன் பாட இவருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இவர் பாட்டைக் கேட்டுக் கண் மூடி அமர்ந்த ஜகத்குரு  பாட்டு முடிந்ததும்  கண்களைத் திறந்தார். 

“அவன் வேம்பு இல்லை  கரும்பு” என்று கூறி ஆசி கூறினாராம். தன் குருவின் மறைவுக்குப் பிறகு அவர் மேடையில் பாடுவதை நிறுத்திக் கொண்டார். குணத்தில் அவர் தங்கம். ஒருவரையும் புண் படுத்திப் பேச மாட்டார். மதுரை மணி ஐயர் அவர்களை மதுரை மணி மாமா என்றே நாங்கள் அழைப்போம். அவர் மும்பை  தாதரில்  எப்போதெல்லாம் வருவாரோ, அப்போதெல்லாம் ஒரு சில கீர்த்தனைகளை  நாங்கள் அவரிடம் கற்றுக் கொள்வோம். அவரிடம் தான்  நான் நவகிரஹக் கிருதிகளில் சில கற்றுக் கொண்டேன். கற்றுக் கொண்ட பின்   சந்தேகம் இருந்தால் நான் திரு. வேம்பு  ஐயரிடம் தான் கேட்பேன். மிகப் பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பார். அவருடன் திருவெண்காடு ஜயராமன் என்ற சீடரும் இருப்பார்.

என்னுடன் திருமதி. அருணா சாயிராமின் அன்னை திருமதி. ராஜலட்சுமி, என் சகோதரி கல்யாணி   உடன் இருந்து “அங்காரக மாஸ்ரயாமி ” சந்திரம் பஜ’ புதமாஸ்ரயாமி  ஸததம்’ என்ற பாடல்களைத் திரு. மதுரை மணி ஐயரிடமிருந்தும் திரு. வேம்பு ஐயரிடமிருந்தும்  கற்றுக் கொண்டதை  நான் மிகப் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். ஏப்ரல் மாதம்  21  ந்தேதி  1921-ல் பிறந்த இவர்   போன வருடம்  நவம்பர் மூன்றாம் தேதி மைலாப்பூரில்  தன்    வீட்டில் சிவ பதம் அடைந்தார். இவரைப் போல் சீடர் கிடைப்பது மிக அரிதென்றே  நினைக்கிறேன்.   

 

படத்திற்கு நன்றி: http://www.sawf.org/bin/tips.dll/gettip?user=Sawf+Archives&class=EZine&subclass=Music&tipid=4411&co=0&arch=1&pn=Music

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “உயர்ந்த சீடர்

  1. இத்தகைய நினைவலைகள் தான் ‘வல்லமைக்கு’ கீர்த்தி சேர்க்கும். நான் இது வரை குரு பக்த சிரோமணி வேம்பு ஐயர் போன்ற தன்னலத்தை அறவே துறந்த புருஷோத்தமரை போல் கண்டதில்லை;கேட்டதில்லை. எங்கிருந்து அவருக்கு அப்படியொரு சுகபிரம்மஞானம் கிடைத்தது? நான் ‘மின் தமிழ்’ குழுமத்தில் ‘பாமரகீர்த்தி ~இன்னம்பூரான் தொகுப்பு’ என்று ஒரு இழை துவக்கி இருக்கிறேன். திருமதி விசாலமும், வல்லமை ஆசிரியரும் சம்மதித்தால், இக்கட்டுரையை, உரிய அறிமுகத்துடன், அங்கு இணைக்க விரும்புகிறேன்.
    இன்னம்பூரான்
    28 01 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *