சக்திதாசன்சக்தி சக்திதாசன்


என்ன இது புதுவிதமான தலைப்பு? எதைப் பற்றிய அலசலாக இருக்கும் என்னும் எண்ணம் உங்கள் மனங்களில் ஓடுவது இயற்கை.

ஆமாம். இது, புதுவிதமான தலைப்புத்தான். ஏனெனில் எனது விழிகளினூடக நான் பார்த்த ஒரு காட்சியின் புதிய பரிணாமம் என் மனத்தினுள் ஏற்படுத்திய உணர்ச்சிப் பிரவாகங்களின் வடிப்பு இது எனலாம்.

சில தினங்களுக்கு முன்னால் எமது இல்லத்திலுள்ள கன்சர்வேட்டரி (conservatory) அதாவது சூரிய ஒளியின் வெப்பத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் அறையினை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன்.

அந்த அறையினுள் பொதுவாக வீட்டினுள் அதாவது வெப்பத்தை விரும்பும் சிறிய செடிகளை வைத்து வளர்ப்பது வழக்கம். அப்படியான செடிகளில் ஒன்றின் மீது என் பார்வை பட்டது. அதன் பெயர் ஆங்கிலத்தில், போகொனியா டைகர் (Bogonia Tiger) என்பதாகும்.

அந்தச் செடியில் அப்படி என்ன பிரமாதத்தைக் கண்டுவிட்டாய் என்று நீங்கள் புதிராக என்னை நோக்குவது தெரிகிறது.

ஆத்திரப்படாதீங்க, அவசரப்படாதீங்க சொல்றேன் கொஞ்சம் பொறுங்க…..

மனித வாழ்க்கையின் சுழற்சியை, காலத்தின் வேக ஓட்டத்தை அச்செடியின் உருவம் ஏனோ என் மனத்தில் உருட்ட ஆரம்பித்தது. அந்தச் செடியை அதே இடத்தில் இதன் முன்னால் எத்தனையோ தடவைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் முன்பொருபோதும் இல்லாதவாறு என் மனத்தின் சிந்தனைச் சக்கரத்தை புதுவிதமான திசையில் உருட்ட ஆரம்பித்தது.

சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் அப்போது எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்களிருக்கும். என் மகனுக்கு வயது ஒன்று கூட ஆகவில்லை ( ஓ. . . இப்போது நான் அவனை அண்ணாந்து பார்க்கும்படி வளர்ந்துவிட்டானோ?). இரும்பையே கடித்து ஜீரணமாக்கிவிடுவேன் என்னும் மூடத்தனமான தைரியம் அறிவுத் திறனை மறைத்து நிற்கும் இளரத்தம் துடித்து நிற்கும் வேளை.

எனக்கு நானே முதலாளியாக இருப்பதே உலகத்தில் அதிசிறந்த பணி என்னும் ஒரு பிடிவாதம் மனத்தில் ஓங்கி வளர்ந்ததனால் சொந்தத் தொழில் நடத்துவதாக எண்ணி, பணத்தை விரயம் பண்ணிக்கொண்டிருந்த நேரம்.

ஒருநாள் காரில் சென்று கொண்டிருந்தபோது, வீட்டினுள் வளர்க்கும் செடிகள் விற்பனையாகும் கடை ஒன்றின் முன் நிற்கும் போது, அங்கிருந்த ஒரு தாவரத்தின் மீது என் பார்வை பதிந்தது. ஏனோ அதை வாங்கி விட வேண்டும் என்னும் அவாவில் அதை வீடு கொண்டு வந்து சேர்த்துவிட்டேன்.

எதற்காக இந்தக் கஷ்டமான நிலையில் இந்த அனாவசியச் செலவு என்று என் மனைவி கடிந்துகொண்டாலும் அதை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தாள்.

அதே “போகோனியா டைகர்” என்னும் அந்தச் செடிதான் ஏறத்தாழ 25 வருடங்களின் பின்னர் என் பார்வையில் பட்டது.

25 வருட காலம் என்பது மனித வாழ்க்கையைப் பொறுத்தவரை பல மாற்றங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அந்தச் செடியின் பார்வையில் எனது வாழ்க்கையில் இந்த 25 வருட கால வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் எப்படி இருந்திருக்கும் என்று நான் எண்ணத் தலைப்பட்டமையே என்னெஞ்சில் ஏற்பட்ட உணர்ச்சிப் பிரவாகங்கள்.

ஒரு குழந்தையின் தந்தையாக, ஒரு பதின்ம வயதுக் குழந்தையின் தந்தையாக, இன்று ஒரு இளம் டாக்டரின் தந்தையாக மாற்றமடைந்த என்னைப் பற்றிய அச்செடியின் பார்வை எத்தகையதாக இருந்திருக்கும்?

அதே சூழலில் எனது மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து, முழுநேர வேலை பார்த்துக்கொண்டு என் மகனின் அன்புத் தாயாக தனது பணியையும் கவனித்துக்கொண்டு, மாலைநேர வகுப்புகளில் தனது பட்டப் படிப்பை முடித்துக் கொண்ட என் மனைவியின் மீதான அச்செடியின் பார்வை எவ்வாறு இருந்திருக்கும்?

அதுமட்டுமா? ஒரு இருபத்தைந்து வருட காலம் மனிதன் வாழ்வதென்பதே கடினமாக இருக்கையில் அச்செடி எவ்வாறு இந்த 25 வருடகாலம் உயிர்தப்பி வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதே அதிசயம்தான்.

அச்செடி தனது வாழ்வின் அந்திம காலத்தை அடைகின்றது போலத் தெரிந்தவுடன் அதன் ஒரு கிளையைக் கிள்ளி, வேறொரு சிறு தொட்டியில் நாட்டி அதன் அதன் வாழ்வை நீட்டி வைத்த என் மனைவியின் விடாமுயற்சி என்னைத் திகைப்பினுள் ஆழ்த்துகிறது.

என் வாழ்க்கையில் பொறுப்புகளின் கனத்தைப் புரியாதவனாக கண்மூடித்தனமாகச் செலவு செய்து, காணும் புதுவிதமான சாதனங்களை எனதுடையதாக்கிக் கொள்ளவேண்டும் என்ற நப்பாசை கொண்டு அலைந்த என்னுள் நிகழ்ந்த மாற்றங்களை அச்செடியின் பார்வையின் கோணத்திலிருந்து நோக்கினால் எவ்வாறு இருக்கும் என்று எண்ணிப் பார்க்கையில் மனமே ஒரு முறை சிலிர்த்துப் போகிறது.

அன்றிலிருந்து இன்றுவரை மூன்று இல்லங்களை மாறி, மாறி வந்த அந்தச் செடியின் மனத்தில் வித்தியாசமான இல்லங்களில் வித்தியாசமான இடங்களில் தான் தரித்திருந்த நினைவுகள் பதிந்திருக்குமா?

அதன் பாணியில் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போமா ?

“இந்தக் குடும்பத்துடன் நானும் எத்தனை வருடங்கள் வாழ்ந்துவிட்டேன்? அப்பப்பா ! எத்தனை மாற்றங்கள் தான் இவர்கள் வாழ்விலே நிகழ்ந்து விட்டன?

ஓ யாரிது? பனை மரம் போன்று வளர்ந்திருக்கிறானே! ஓ இவன் தான் நான் இவர்களுடைய இல்லத்தில் முதன் முறை நுழைந்தபோது தவழக்கூட ஆரம்பிக்காத பச்சைக் குழந்தையாக இருந்தானோ?

உம், இதோ வருகிறானே இவன் தான் இந்த குடும்பத்தின் தலைவன். அப்படி அவன் எண்ணிக்கொண்டிருக்கிறான்.

இத்தனை வருடங்களுக்குப் பின்னால் இப்போதுதான் என் இலைகள் மீது அதிகம் சூரியளி படக் கூடாது என்றும், நீருற்றும்போது என் இலைகள் அதிகம் நனைந்து விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை இணையத்தளத்தில் படித்து அறிந்திருக்கிறானாம் . . . .

எப்படி இருக்கிறது? உம் . . . எத்தனை தடைவகள் என் மீது செடிக்குத் தண்ணீர் வார்க்கிறேன் என்று நீரை வாரி இறைத்திருக்கிறான். அப்போதெல்லாம் கூக்குரலிட்ட என் குரல் இவன் செவிகளுக்கு கேட்கவில்லையாம். பாருங்களேன் !

அங்கு ஓடியாடி வீட்டை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கும் அந்தப் பெண் தான் குடும்பத் தலைவி. அவளும் இல்லையென்றால் அவன் பாடு அந்தோ கதிதான் . . . .

மாணவன் என்னும் அந்தஸ்திலிருந்து ஐம்பதுகளின் நடுப் பகுதி என்னும் அந்தஸ்தை வந்தடையும் இம்மனிதனது வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நான் உன்னிப்பாக அனைத்தையும் அவதானித்து வந்திருக்கிறேன்.

அது மட்டுமா?

இந்தக்குடும்பத்தின் மாற்றங்களோடு, இந்த நாட்டின் அரசியல் மாற்றங்கள், சமுதாய மாற்றங்கள் அனைத்தையும் ஒரு வீட்டுச் செடியின் பார்வையின் கோணத்தில் அளந்திருக்கிறேன்.

அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களில் நிகழ்ந்த மாற்றங்கள், இவர்களின் வாழ்க்கை ரயிலில் ஏறி , இறங்கிய சக பயணர்களின் எண்ணிக்கை அனைத்துமே என் பார்வையில் படாமல் போகவில்லை.

என்னை இந்த வீட்டுத் தலைவன் கடையில் இருந்து வாங்கியபோது என்னோடு அதுவரை அக்கடையில் இருந்த நண்பர்களில் எத்தனை பேர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ எனக்குத் தெரியாது. அவர்களில் பலர் வாடி, வதங்கி இன்று சுவடேயில்லாமல் மறைந்து போயிருப்பார்கள்.

இந்த வீட்டுத் தலைவியின் உன்னதமான பராமரிப்பினால் நான் இன்னமும் பலவேறு நிலைகளில் வாழ்ந்துகொண்டே இருக்கிறேன்.

அத்தோடு என்விழிகளுக்கூடான பார்வையில் இவ்வுலக நிலைகளை பார்த்தும், பாராமல் இருக்கிறேன்.

என் உணர்ச்சிகளை அறிந்தோர் இல்லை. என் மன நிகழ்வுகளில் பங்கெடுப்போர் இல்லை. இருந்தாலும் சுற்றியுளோரின் மாறுதல்களைக் கணிக்கும் நான் கண்காணித்துக்கொண்டே இருக்கிறேன்.

எனக்கு ஒரு இருப்பிடத்தைக் கொடுத்த இவர்களின் காலத்தின் பின்னும் நான் வாழ்ந்துகொண்டே இருப்பேனா? காலம் தான் இதற்கு விடையளிக்க வேண்டும்?”

என்ன ஒரு செடியின் பார்வையின் கோணம் சுவையாக இருந்ததா?

“போகோனியா டைகரின்” மீது விழுந்த என் பார்வையின் அர்த்தம் கொடுத்த ஆக்கமே இது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *