பாஸ்கர பாரதி

‘என்னங்க.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி, வாடகை வீட்டுலயே காலத்தை கழிக்கப் போறோம்?’ – மனைவியின் குரல்.

‘ஏன்டா.. இப்பத்தான் அப்பாவோட ரிடையர்மென்ட் பணம் இருக்கே.. அது அப்படியே செலவாறதுக்குள்ளே ஏதாவது நெலமோ ஃப்ளாட்டோ வாங்கிப் போட்டா நல்லா இருக்கும் இல்லே..?
– இது அம்மாவின் ஆதங்கம்.

‘இதோ பாருடா.., ‘ஹிண்டு’வுல இன்னைக்கி ஒரு ‘அட்வர்டைஸ்மென்ட்’ வந்திருக்கு, ‘ஸ்டேஷன்’ல இருந்து அரை கி. மீ. தானாம். எப்படியும் அம்பதாயிரத்துக்கு உள்ளேதான் இருக்கும்னு நினைக்கிறேன்’ – இது அப்பாவின் அன்றாட அலுவல்.

‘சொந்தமா நிலம், சொந்தமா வீடு..’

நடுத்தர வர்க்கத்தின் (நடுத்தர வர்க்கம் / நடுத்தெரு வர்க்கம்?) வாழ்நாள் வேட்கை; தீராத தாகம்; நெடுநாள் வாஞ்சை; தொலைதூரக் கானல். பேசிப்பேசி, திட்டமிட்டு திட்டமிட்டு, கணக்கு போட்டுப் போட்டுப் போட்டு, நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர், தெரியாதவர் எல்லாரோடும் ‘தகவல்கள்’ சேகரித்து, ‘டெவலப்மென்ட்’ எப்படி இருக்கும்?’, ‘ஸேஃப்டி’ எப்படி?’, ‘தண்ணி வசதி பரவாயில்லையா?’, ‘கிரௌன்ட் வாட்டர்’ நல்லாருக்கா?’ இப்படியாக கேள்வி மேல் கேள்வி கேட்டு ஒரு வழியாய் ஒரு முடிவுக்கு வருகிறபோதுதான் ‘அந்த’ பிரசினை முளைக்கும். ‘பணத்துக்கு எங்கே போறது?’
‘பேங்க் பேலன்ஸ்’ எவ்வளவு? நண்பர்கள், உறவினர்களிடம் எவ்வளவு கடன் வாங்கலாம்?

(ஏன்னா.. ஏகாம்பரத்தோட பொண்ணு கல்யானத்துக்கு அவசரமா அஞ்சாயிரம் வேணும்னு வாங்கிண்டு போனாரே.. குடுத்தாரோ..? கேட்கும்போது, பத்தாயிரமோ கேளுங்கோ.. இப்பத்தான் அவரோட பையன் அமெரிக்காவுல நெறைய சம்பாரிச்சு அனுப்பறானாமே..) ஆபீஸ்ல இருந்து எவ்வளவு கிடைக்கும்? ஜி.பி. எஃப் ல எவ்வளவு இருக்கு?

எல். ஐ. சி., எச்.டி.எஃப்.சி.யில எவ்வளவு லோன் கிடைக்கும்? ‘இன்ட்ரஸ்ட்’ கொஞ்சம் கம்மியா இருந்தா பரவாயில்லை. (என்னங்க, நம்ம பரமுவோட வூட்டுக்காரருக்கு, அவரு வேலை செய்யற ‘பாங்க்’ல ஆறு லட்ச ரூபாய் வட்டியில்லாம குடுத்தாங்களாம். அப்படி ஏதாவது உங்க ‘டிபார்ட்மென்ட்’லேயும் இருக்கும். கேட்டுப் பாருங்க. உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. உங்க ‘ஃப்ரெண்ட்’ ஜான்சன் வரட்டும். அவருக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கும். என்னது..அதெல்லாம் ஒண்ணும் கிடையாதா..? என்னமோ பெருசா ‘………….’ டிபார்ட்மென்ட்’னு பேருதான். ஒண்ணுத்துக்கும் பிரயோசனம் இல்லை. இதுக்கு எங்கேயேனும் முனிசிபாலிடியில வேலை பார்க்கலாம்’)

‘அய்யய்யோ.. என்னங்க, நியூஸ் கேட்டீங்களா? என்ன பண்றீங்க உள்ளே..? இதோ பாருங்க, பெரம்பூர்ல ஒரு ‘பில்டிங்’ அப்படியே உள்ளே போயிருச்சாம். ‘கன்ஸ்ட்ரக்க்ஷன்’ சரியில்லையாம். நம்ம ‘பில்டர்’ எப்படிங்க? எதுக்கும் நாம ‘க்ரௌன்ட் ஃப்ளோர்’ வேணாம்னுட்டு, ‘ஃபர்ஸ்ட் ஃப்ளோருக்கு’ மாத்திக்குவோம். கூட கொஞ்சம், அஞ்சோ, பத்தோ எப்படியாவது ‘அட்ஜஸ்ட்’ பண்ணி குடுத்துடுவோம். என்ன புரிஞ்சுதா? சும்மா மசமசன்னு நிக்காதீங்க.சீக்கிரம் கிளம்புங்க. வேற யாராவது முந்திக்கப் போறாங்க. ஆமா.. நீங்க கிளம்பிப் போறதுக்குள்ள வீடு கட்டி முடிச்சி கிரஹப்பிரவேசம் கூட ஆயிரும்..’ வீடு. அதுவும் தனி வீடு. சுற்றியும் சிறிது இடம். அங்கே ஓரிரு மரங்கள்., பூச்செடிகள்.. ஹூம்.. நினைத்துப் பார்க்க நன்றாய்த்தான் இருக்கிறது. ‘ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் என்னவோ கழுதை மேய்க்க’ என்கிற நிலையில், மகாகவியின் இந்தக் கவிதை மத்திய வர்க்கத்தார் மனனம் செய்யும்,
மனதுக்குப் பிடித்த பாடலாய் இருப்பதில் வியப்பென்ன..?

இதோ இதயத்துக்கு இதமான அந்த பாடல்…

 

காணி நிலம்

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும்; அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் – அந்தக்
காணி நிலத்திடையே – ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்குக்
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிள நீரும்,
பத்துப் பனிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும்; அங்குக்
கத்துங் குயிலொசை – சற்றே வந்து
காதிற் படவேணும்; – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்
பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் – அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா நின்றன்
காவலுற வேணும்; – என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்..

படத்திற்கு நன்றி :

http://movies.ndtv.com/PhotoDetail.aspx?Page=3&ID=7164  

http://www.karnatik.com/co1072.shtml

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *