பர்வதவர்தினி

“அழாதே கீதா! என்னாச்சுன்னு சொன்னாத்தானே தெரியும்? இந்தா கொஞ்சம் தண்ணி குடி!. குடிச்சுட்டு என்ன நடந்ததுன்னு சொல்லு” என்றாள் கல்யாணி.

கீதாவும் கல்யாணியும் கல்லூரித் தோழிகள். இருவரும் மாலைக் கல்லூரியில் படித்து வந்தார்கள். இவர்கள் முதன்முறை சந்தித்ததே தியாகராய நகர் பஸ்நிலையத்தில் தான்; அதுவும் கல்லூரிக்குச் செல்ல பேருந்துக்காகக் காத்திருக்கும் போதுதான். கீதா பி.ஏ வும், கல்யாணி பி.காமும் படித்துக் கொண்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு பாடங்கள் படித்தாலும், கல்லூரிக்குச் செல்லும் போதும் திரும்பும் போதும் ஒன்றாகவே பயணிக்கும் ஒத்த கருத்துடையவர்கள்தான். பெண்கள் அரட்டை அடிக்கக்கூடிய பல விஷயங்களிலும் இவர்கள் இருவரின் எண்ணங்களும் ஒரே விதமாக இருந்தன. சாதாரணமாக எல்லா இளம் பெண்களைப் போலவே இவர்களுக்கும் ஷாரூக்கான் தான் மிகவும் பிடித்தமான நாயகன். இளம்பெண்களுக்குப் பேசிக் கொள்ள விஷயங்களுக்காப் பஞ்சம்?

இவர்களது நட்பு கல்லூரிப் படிப்புக்கு பிறகும் தொடர்ந்தது. கீதா ஒரு தனியார் கம்பெனியில் ரிசப்ஷனிஸ்டாக வேலை பார்த்து வந்தாள். கல்யாணியோ ஒரு ஆடிட்டரிடம் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். அடிக்கடி சந்திக்க முடியாத போதும் அவ்வப்போது தொலைபேசியில் அவர்கள் பேசிக்கொள்வது வழக்கம்.அன்று மாலை, கீதா தொலைபேசியில் அழைத்துக் கல்யாணியைப் பார்க்க அவள்வீ ட்டுக்கு வருவதாகக் கூறியிருந்தாள். அப்படி வந்தவள் வந்ததும் வராததுமாகத் திடீரென விம்மி வெடித்து அழத் துவங்கினதால்தான் கல்யாணி காரணத்தைக் கேட்டாள். கல்யாணியின் மனதிலும் குழப்பம் வர ஆரம்பித்தது. அவள் கவலைப்பட ஆரம்பித்தாள்.

‘என்ன நேர்ந்தது இந்தப் பெண்ணுக்கு? எப்போதும் சிரித்த முகமாய் இருப்பவளாயிற்றே! எங்கள் இரண்டு குடும்பங்களும் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவைதான். இருப்பினும் இருப்பதைக் கொண்டு சந்தோஷமாகத்தானே வாழ்கின்றோம்.. ஒருவேளை தன் அலுவலகத்தில் யாரையோ காதலிப்பதாகச் சொல்லியிருந்தாளே, அது சம்பந்தமாக ஏதாவது பிரச்சினையோ? ஒருவேளை இவளது பெற்றோருக்குத் தெரிந்து விட்டதோ?’ கல்யாணி கலங்கித்தான் போனாள்.

“கீதா, உன் அழுகையை நிறுத்து. என்ன விஷயம் சொல்லு” மறுபடியும் கேட்டாள் கல்யாணி.

 “கல்யாணி, உன்கிட்டே நான் ஏற்கனவே சொன்னேன்ல, என் அலுவலகத்தில சிவான்னு ஒரு சேல்ஸ் ரெப்ரெஸண்டேடிவ் வேலை செய்யறாருன்னு, அவரும் நானும் காதலிக்கேறாம்னு” என்று கவலையுடன் கூடவே பீடிகையுடன் துவங்கினாள் கீதா.

கல்யாணிக்கு முன்பு கீதா சொன்ன விஷயங்கள் எல்லாம் அப்படியே அலை அலையாய் மனதில் வலம் வந்தன. கீதா வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. கீதா சற்று அழகாகவே காணப்படுவாள்..வட்ட வடிவமான முகம், எப்பொழுதும் சிரிக்கும் கண்கள்,புன்னகைக்கும் இதழ்கள் என்று அவளுக்கு ஏகப்பட்ட க்வாலிடிகள் உண்டு. அவளுடைய அலுவலகத்தில் சிவராம் என்கிற ஒரு சேல்ஸ் ரெப்ரசன்டேடிவ் வேலை செய்வதாகவும், ”வயசு இருபத்தஞ்சுதான் இருக்கும். ஆனா கருகருவென்ற மீசையுடன் நல்ல பளிச் என்ற முகத் தோற்றம். அழகாக இஸ்திரி செய்த மடிப்பு கலையாத உடையுடன் காலையில் அனைவருக்கும் குட்மார்னிங் சொல்லிக் கொண்டே உள்ளே வருவான். அதன் பிறகு வெளியில் சென்றான் என்றால் மாலை 5 மணிக்குத்தான் மீண்டும் வருவான். எப்பொழுது என்னைக் கண்டாலும் அதிகப் பரிவுடன் என்னிடம் வந்து பேசுவான்’ என்று ஏகப்பட்ட புகழுரையுடன் அவனைப் பற்றி கீதா சொல்லியிருந்ததும், அப்படிப்பட்டவன் திடீரென அவள் மனதைக் கலைத்த கதையும் கீதாவின் ஞாபகத்துக்கு வந்தன. அவளே சொன்னதுதான் இந்த காதல் உருவான கதையும் கூட.

ஒரு நாள் மாலை அவன் அலுவலகம் திரும்பிய போது,கீதா கிளம்புவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள். பியூன் தவிர மற்ற அனைவரும் கிளம்பி விட்டிருந்தனர். சிவா பியூனிடம் ஒரு காபி வாங்கி வரும்படி சொல்லி அனுப்பி விட்டுக் கீதாவைப் பார்த்து “உன்கிட்டே கொஞ்சம் பேசணும்” என்றான்.சொன்னவன் அவளது பதிலைக் கூட எதிர்பாராமல், சட்டென்று அவள் கையைப் பிடித்து, “எனக்கு எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. எனக்கு எப்போதும் உன் நினைப்பாகவேயிருக்கு. நான் உன்னை மனசாரக் காதலிக்கிறேன். உன் பதிலை எதிர்பாக்கறேன்” என்று கூறி அவள் முகத்தையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது பேச்சும் செய்கையும் அவளை ஒரு நிமிடம் திகைக்க வைத்தன.அதைச் சமாளித்துக் கொண்டு “இதென்ன வேலை. இப்படில்லாம் நீங்க பேசறது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கலை.நான் உங்ககிட்ட அப்படி எந்த எண்ணத்தோடயும் பழகலை. ஐ யாம் சாரி. குட் பை” என்று கூறி விட்டு வெளியேறி விட்டாள் கீதா.

ஆனாலும் இந்தப் பாழாய் போன மனம் இருக்கிறதே, அது ஒரு நிலையில் இருப்பதில்லை. வீடு செல்லும் வழி முழுவதும், அவன் சொன்னதையே அசை போட்டு கொண்டிருந்தது கீதாவின் மனது. நினைத்து நினைத்து ஆனந்தித்தது. ஒரு வேளை தானும் தன்னையறியாமல் அவனை ரசித்திருப்போமோ. அதனால் அவன் கூறிய போது கோபம் வராமல் மகிழ்ச்சியாக இருந்ததோ? வீட்டை அடைந்த பின்னும் அவள் மனம் மாலை நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தது. இருப்பினும் பெருமுயற்சி செய்து தன் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன் இஷ்டத்திற்கு இப்படியெல்லாம் யோசிக்கலாமா. அதிலும் கீதா மூத்த பெண். அவளுக்குப் பிறகு இரு தங்கைகள் இருந்தனர். ஒருத்தி கல்லூரியிலும் மற்றவள் பள்ளியிலும் படித்துக் கொண்டிருந்தார்கள். 

மறுநாள் காலை சிவாவின் முகத்தை நேரடியாக பார்க்காமல் ஏதோ மும்முரமாக வேலை செய்வது போல் பாசாங்கு செய்தாள். மாலையில் அவன் வருமுன்பே இடத்தைக் காலி செய்தாள். இப்படியே ஒரு வாரம் போனது. ஆனால் வர வர சிவாவின் முகம் அவளது மனக் கண்ணாடியில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது.

ஒருநாள் காலை சீக்கிரமே சிவா அலுவலகம் வந்து சேர்ந்தான். நேராகக் கீதாவிடம் வந்து, சற்று மெல்லிய குரலில், “கீதா, இன்னைக்கு நான் உன்கூட அவசியமா பேசணும். ஆபீஸ் முடிஞ்சபிறகு பக்கத்திலே இருக்கிற ரெஸ்டாரண்ட்டுக்கு வந்துடு” என்று கண்டிப்பான குரலில் கூறிவிட்டு விரைந்து சென்றான். ‘நீ வான்னு சொன்னா நான் வரணுமா, நான் என்ன உன் மனைவியா, என்கிட்ட உன் அதிகாரத்தைக் காமிக்க’ என்று அவள் மனம் கறுவிக் கொண்டதுதான். இருப்பினும், என்னதான் சொல்கிறான் என்று பார்ப்போமே என்று மனதின் ஒரு ஓரம் ஒரு எண்ணம் தோன்றியது.பிறகு அந்த எண்ணமே முழு மனதையும் ஆக்கிரமித்தது.ஒரு வேளை அவனைக் காணவும் பேசவும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்த தனக்குத் தானே ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொள்வதாகவும் தோன்றியது. அப்படி நினைத்தவுடன் அவள் இதழ்களில் ஒரு புன்னகை தோன்றியது.

மாலையில் உணவகத்தில் அவனுக்காகக் கீதா காத்திருந்தாள். அவன் சற்று நேரத்தில் எதிரில் வந்து அமர்ந்தான். “என்ன பேசணும் உங்களுக்கு? நான் தான் ஏற்கனவே என் பதிலை சொல்லிட்டேனே” என்றாள் கோபத்துடன். “நீ பொய் சொல்றேன்னு எனக்குத் தோணுது. என் முகத்தை நேருக்கு நேர் பார்க்கப் பயப்படறே, ஒரு வேளை உன் மனசில இருக்கறதை நான் கண்டுபிடிச்சிடுவேன்னு உனக்குப் பயம். நான் வரும்போதெல்லாம் நீ என்னைக் கவனிக்கறதை நானும் கவனிச்சிட்டுத்தான் இருக்கேன். ஆனால் அதை நீ ஏத்துக்கத் தான் மாட்டேன்கறே. உன்னை நான் எந்த அளவுக்கு விரும்பறேன்னு உனக்கு தெரியாது. ஆனால் நீயும் என்னை விரும்பறே, எனக்கு நிச்சயமாத் தெரியும். அது மட்டுமில்லை, அதை நீ மறைக்கவும் நினைக்கறே, அதுவும் எனக்குத் தெரியும். தயவு செய்து உன் மனசைத் திறந்து பேசிடு. இதுக்கு மேலேயும் நீ உண்மையைச் சொல்ல விரும்பலைன்னா, பரவாயில்லை; நாளைலேர்ந்து நான் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன், உன் கண்ணிலே கூடப் படமாட்டேன்” என்றான் கனிவுடன்.

இதைக் கேட்டதும் அவள் மனம் பாகாய் உருகியது. கண்களில் நீர் பெருகியது. “ஏய், ஏன் அழுகிறாய்?” என்று கேட்டபடியே அவளது கரங்களைப் பற்றி அழுத்தினான். அவனது இந்தச் செய்கை அவளது மனதைச் சாந்தப்படுத்தியது. பிறகு அவளும் தன் காதலை அவனிடம் வெளிப்படுத்தினாள். “நானும் உங்களை விரும்பறது உண்மைதான். ஆனாலும் என் குடும்பத்தை நினைச்சுப் பார்க்கும் போது தயக்கமா இருக்கு. என் பெற்றோர் மனசைப் புண்படுத்தி நான் எதையும் செய்ய விரும்பலை” என்றாள். “அட பைத்தியமே! இது தானா உன் பிரச்சினை. நீ ஏன் கவலைப்படறே. நேரம் வரும்போது நானே உன் வீட்டுக்கு வந்து பேசறேன்” என்றான்.

அதன்பிறகு அடிக்கடி அவர்கள் அந்த உணவகத்திலோ அல்லது கடற்கரையிலோ சந்தித்துப் பேசுவது வழக்கமானது. இதையெல்லாம் நினைத்துப் பார்த்தாள் கல்யாணி.

கல்யாணிக்குக் கீதாவின் மீது கரிசனம் தோன்றியது. “ஆமாம் கீதா. உன் காதல்தான் எனக்குத் தெரிந்த விஷயம்தானே… ஒரு வேளை உன் வீட்டில் தெரிந்து விட்டதா? ஏதாவது பிரச்சினையாகிவிட்டதா?” என்று அந்தக் கரிசனம் குரலில் தெரியக் கேட்டாள் கல்யாணி.

“இல்லைடி. இப்போ பிரச்சினை பண்றதே சிவா தான்” என்று கூறி மறுபடி தேம்பித் தேம்பி அழுதாள். “என்னடி சொல்றே, எனக்கு ஒன்றும் புரியலையே”  பதறினாள் கல்யாணி.

“சிவாவுக்கு ஒரு தோழி இருக்கிறாள். அவள் பெயர் ஷபீரா. இருவரும் கல்லூரியிலிருந்தே நண்பர்களாம். அந்த ஷபீரா யாரையோ காதலித்து வீட்டை விட்டே ஓடிப் போயிருக்கிறாள்.ஆனால் அவள் காதலனோ அவளிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு அவளை ஏமாற்றி விட்டானாம். இவரிடம் சொல்லிச் சொல்லி அழுதிருக்கிறாள். இவரும் அவளுக்கு ஆறுதல் கூறித் தேற்றியிருக்கிறார். ‘இனி நான் யார் முகத்திலும் விழிக்க முடியாது. என் பெற்றோர் முன் தலைநிமிர்ந்து வாழ்ந்து காட்ட நினைத்தேனே, இனி அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கக் கூட அருகதையற்றவளாகிவிட்டேனே’ என்று அழுதிருக்கிறாள். இதைக் கேட்டு இவர் மனம் இளகி, ‘கவலைப்படாதே, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று வாக்குக் கொடுத்துவிட்டார்”

என்று சொல்லி விட்டுத் தலையைக் குனிந்துகொண்டு வருத்தம் குரலில் தெரிய “அத்தோடு இனி நாம் பிரிந்து விடுவது நல்லது கீதா’ என்று என்னிடம் சொல்லி விட்டார்” என்று தேம்பினாள்.

“இது எந்த ஊர் நியாயம்டி. இப்போ அந்த ஷபீராவின் காதலனுக்கும் இந்தச் சிவாவுக்கும் என்ன பெரிய வித்தியாசம். இதுவே சிவா ஏற்கனவே உன்னைத் திருமணம் செய்திருந்தால் அப்போதும் இப்படியே உன்னை அம்போன்னு விட்டுவிட்டு அவளைத் திருமணம் செய்து கொள்வாரா? அவளுக்கு நல்லவிதமாகப் புத்திமதி சொல்லி, அவளது பெற்றோரிடம் சேர்த்திருந்தால் அது நியாயம். அதை விட்டுட்டு உன்னை ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம்?”

கல்யாணிக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

பிறகு அவள் கீதாவை தேற்றும் பாவனையில், “சரி இதுவும் நல்லதுக்கு தான்னு நினைத்துக்கொள் கீதா!. சிவாவைப் பற்றி உனக்குச் சரியான சந்தர்ப்பத்தில் தெரிந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பென்று நினைத்துக் கொள். எல்லாம் நன்மைக்கே நடக்கும் கவலைப்படாதே. வா, நாம் கோவிலுக்குச் சென்று வரலாம். மனதிற்கும் ஆறுதலாக இருக்கும்” என்று கூறினாள். பிறகு இருவரும் கோவிலுக்குச் சென்றனர். அங்கிருந்தே கீதா விடைபெற்றுச் சென்றாள்.

கல்யாணி அதன் பின் பலமுறை கீதாவைத் தொடர்பு கொள்ள முயன்றாள். ஆனால் அவளது வீட்டின் தொலைபேசி செயலற்று இருந்தது. ஒருமுறை அவள் வீட்டுக்கு நேரிலும் சென்றாள். ஆனால் அவர்கள் வேறெங்கோ வீட்டை மாற்றிச் சென்று விட்டதாகக் கூறினார்கள்.

ஒரு வருடம் சென்றுவிட்டது. ஒரு நாள் திடீரென்று கீதாவிடம் இருந்து போன் வந்தது. “ஹே கல்யாணி!. எப்படி இருக்கே. எனக்குக் கல்யாணம் முடிவாகியிருக்கு. பத்திரிகை அனுப்பறேன். நீ கண்டிப்பாக வரணும்” என்றாள் கீதா.

கல்யாணிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. “மாப்பிள்ளை யாருடி. என்ன பண்றாரு. எங்கே இருக்காரு. எப்போ கல்யாணம்?” என்று சரமாரியாகக் கேள்வி கேட்டாள்.

“அவர்கள் மும்பையில் இருக்கிறார்கள். மாப்பிள்ளை சாஃப்ட்வேரில்தான் இருக்கிறார். அடுத்த மாதம் திருமணம். எந்தச் சாக்குப்போக்கும் சொல்லாமல் கண்டிப்பாக வந்து விடு” என்று கூறிப் போனை வைத்தாள்.

கல்யாணியும் வடபழனியில் நடந்த திருமணத்திற்குச் சென்றாள். நல்ல சிவப்பாக, அவளுக்கு ஏற்ற உயரத்தில் மாப்பிள்ளை நன்றாக இருந்தார். மேட் ஃபார் ஈச் அதர் என்று சொல்லும்படி இருந்தது அவர்களது ஜோடிப் பொருத்தம். கீதாவைக் கொஞ்சம் கிண்டல் கேலி செய்து விட்டு, பிறகு அவளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டு, மறக்காமல் சாப்பிட்டும் விட்டு, தோழியிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டுதான் கல்யாணி கிளம்பினாள்.

இரண்டு ஆண்டுகள் சென்றன. கல்யாணிக்குத் திருமணம் முடிவானது. ஆனால் கீதாவைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஊருக்குச் சென்று கடிதம் போடுவதாகச் சொல்லியிருந்த கீதா, திருமணம் ஆன சந்தோஷத்தில் தன்னை மறந்தே போய் விட்டாள் என்று நினைத்துக் கொண்டாள் கல்யாணி, எப்படியோ அவள் சந்தோஷமாக இருந்தாலே போதும். அதிர்ந்து கூடப் பேசத் தெரியாத பெண்.

கல்யாணியின் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு தன் தோழி ஒருத்தியுடன் தியாகராய நகர் கடை வீதிகளில் சுற்றிக் கொண்டிருந்த கல்யாணிக்குச் சட்டென்று தனக்கு மிகத் தெரிந்த ஒருவர் தன்னைத் தாண்டிச் செல்வதாகத் தோன்றியது. திரும்பிப் பார்த்த கல்யாணி, செல்வது கீதா தான் என்பதைக் கண்டு, ஓடிச் சென்று அவளை நிறுத்தினாள். மகிழ்ச்சியில் அவளால் பேசக் கூட இயலவில்லை. “கீதா!!!” என்ற வார்த்தை மட்டும் வெளிவந்தது. கீதாவும் இவளைக் கண்டதும் முகம் மலர்ந்தாள்.

“கீதா, எனக்கு அடுத்த வாரம் திருமணம். உனக்குத் தான் பத்திரிக்கை அனுப்ப முடியவில்லையே என்று மனம் வருந்திக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக உன்னைப் பார்த்து விட்டேன். நீ எப்படி இருக்கிறாய். உன் பெற்றோருடன் சில நாள் தங்கியிருக்க வந்தாயா? உன் கணவரும் வந்திருக்கிறாரா? எங்கே அவர்?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தாள் கல்யாணி.

கீதா ஒரு சோகச் சிரிப்பு சிரித்தாள். “கல்யாணி,நான் என் பெற்றோருடன் தங்கத்தான் வந்தேன்.ஆனால் நிரந்தரமாகத் தங்க. நான் என் கணவரைப் பிரிந்து விட்டேன்” என்றாள்.

கல்யாணிக்கு அதிர்ச்சி. “என்னடி சொல்றே? என்னாச்சு. நீ சந்தோஷமாகத் தானே கல்யாணத்துக்குச் சம்மதிச்சே?”

“ஆமாம்.சந்தோஷமாகத்தான் சம்மதிச்சேன். கல்யாணத்துப் பிறகு முதல் சில மாதங்கள் இனிமையாகத்தான் இருந்தது. இப்படியொரு வாழ்க்கை அமைஞ்சதை நினைச்சு நினைச்சுச் சந்தோஷத்துல பறந்தேன். ஆனால் போகப் போகத்தான் தெரிஞ்சுது; என் நினைப்பெல்லாம் எவ்ளோ தப்புன்னு. அந்த மனுஷனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருக்குன்னு தெரிஞ்சப்போ நான் அடைஞ்ச அதிர்ச்சிக்கு அளவேயில்லைடி” என்று கூறினாள் கீதா. “அது மட்டுமில்லை. அவருடைய பொழுதுபோக்கே இது தான். இது வரைக்கும் மூன்று திருமணங்கள் செய்திருக்கிறார் என்னையும் சேர்த்து. பல பெண்களைக் காதலிப்பதாகச் சொல்லியும் ஏமாற்றியிருக்கிறார்” என்று சொன்னவள் சட்டென்று,  “உனக்குச் சிவாவை ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள்.

“ஆமாம் ஞாபகம் இருக்கு. சிவாவுக்கு என்ன?” “ஹூம். அந்த சிவா தன்னுடைய தோழி ஷபீராவுக்காக என்னை விட்டுட்டு போனாரே. அந்த ஷபீராவை ஏமாற்றியதே இந்த ஆள்தான் தான். மூன்று வருஷங்களுக்கு முன்னாடி அவர் சென்னையிலே இருக்கும்போது ஷபீராவைக் காதலிப்பதாகச் சொல்லி அவளை வீட்டை விட்டு ஓடி வர வெச்சு, பிறகு அவகிட்டேர்ந்து பணம் நகைகளை பறித்துக் கொண்டு போன மாபாதகன் தான் என்னுடைய புருஷன். இதெல்லாம் தெரிஞ்ச பிறகும் அவன் கூட எப்படி வாழ முடியும்? அதனாலே தான் அவனைப் பிரிஞ்சு வந்துட்டேன். ஆனால் வரும்போது சாதாரணமா வரல்லேடி.. அவனைப் போலீஸ்ல பிடிச்சுக் குடுத்துட்டு தான் வந்தேன், இனிமேலும் யாரையும் ஏமாத்தக் கூடாது பாரு, அதுக்காக. நான் அவனுடன் வாழ்ந்த வாழ்க்கையின் பலனாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை அழைத்துக் கொண்டு என் வீட்டிற்கே வந்து விட்டேன். இங்கே உஸ்மான் ரோட்டில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்க்கிறேன்” என்றாள். பிறகு,  “சரி, என் கதையை விடு. உன் பத்திரிக்கையைக் கொடு. நான் நிச்சயம் உன் திருமணத்திற்கு வருகிறேன்” என்று சொல்லி பத்திரிக்கையைப் பெற்று கொண்டாள்.

கல்யாணி சிலையாக நின்றாள். கஷ்டங்களை அனுபவிப்பதற்காகவே பிறந்தவளோ இவள்..என்றைக்குத்தான் இவளது துன்பங்கள் தீருமோ என்று நினைத்தவாறே சிவ விஷ்ணு ஆலயத்தை நோக்கினாள்.அங்கிருந்து கணீர் கணீர் என்று ஆலய மணி ஒலித்தது.

 

படத்திற்கு நன்றி: http://www.shutterstock.com/pic-19913215/stock-photo-a-rear-view-of-a-beautiful-indian-girl-sitting-alone-on-a-beach-and-looking-out-to-sea.html

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “இவளும் ஒரு தொடர்கதை

  1. இவை முற்றிலும் உண்மை சம்பவம் என்றே நினைக்கிறேன்.
    உங்கள் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துகிறேன்
    நன்றி
    கலை

  2. உண்மையோ, கற்பனையோ இது போன்றதொரு சூழ்நிலை எந்த ஒரு பெண்மணிக்கும் வரக்கூடாது. திருமணத்திற்கு முன் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உணர்த்துவதாக அமைந்துள்ளது இந்த படைப்பு…

    தொடரட்டும் தங்களது எழுத்துப்பணி,  வாழ்த்துகள்.

  3. Sad ..kadavul sila perkku ipdi thaan vaazhkkaiya thanthudrar..!!!Looking forward for more of ur writings PV..:):)

  4. மிகவும் அருமை பர்வத வர்த்தினி உங்கள் எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்
    டாக்டர் எல். கைலாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *