பாஸ்கர பாரதி

ஒரு கணம். கண்களை இறுக மூடினேன். கண்களுக்கு எதுவும், எதுவும் புலப்படவில்லை.

இப்போது என் முன் இருப்பவை யாவும் ஒன்றே. வடிவங்கள் வேறாய், வண்ணங்கள் வேறாய், அளவுகளில் வேறாய், அழகழகாய், அழகற்றதாய்.. எதுவும் இல்லை.

கண்களைத் திறந்து பார்த்தால்..? கண்கவர் காட்சிகள்! காடுகள், மலைகள், கவின்மிகு சோலைகள், மரங்கள், செடிகள், கொடிகள், பூக்கள், காய்கள், கனிகள், சிறியதாய், பெரியதாய்க் கட்டிடங்கள், ஊர்திகள், ஆபரணங்கள், ஆரணங்குகள்..

இரு கண்களில் சிறைபடும் காசினி, என் இரு கரங்களில் அடங்கிடக் காண்பேனோ? காற்று, கருமுகில், பால் நிலவு, பகலவன், ஓய்வின்றிக் கண்சிமிட்டும் விண்மீன் கூட்டங்கள்.

துணையாய், தோழமையாய் உறவு சொல்லி உரக்கக் கூவும் புள்ளினங்கள் அனைத்தையும் தன்னுள் கொண்டு மனிதனின் கருத்துக்கப்பால், கற்பனைக்கப்பால் அகன்று விரியும் வானம், வெகு உயரத்தில் இருந்து, அதோ.. வெகு தொலைவில் கீழிறங்கி வந்து மண்ணைத் தொடுகிறதே.. அந்த வானம் முழுதாய் என் வசம் வரக் கூடுமோ?

இதையே சிந்தையில் தோய்த்துச் செயல் வடிவாக்கிட முயன்று முயன்று பின் சோர்வைச் சேர்வேனோ? கூடும் கைவரக் கூடும். விண்ணும் மண்ணும் கைகளில் அடங்கிடக் கூடும்.

இறை தரு வரங்கள், பெறற்கரிய பேறுகள், வென்று ஈட்டும் வெற்றிகள்; முயற்சியின் மேன்மைகள்; இவை யாவும் நிஜங்களாய் நிதர்சனங்களாய்க் கை மேல் கிட்டும் – என்னை நான் வென்றால் போதும்.

எனக்குள் உறங்கும், என்னையே விழுங்கும் என்னை நான் போரிட்டு வெல்வேனா?அன்றியும், என்னை வீழ்த்திடத் துடிக்கும் என்னில் நான் மடிவேனா?

என்னை வெல்லும் திறமையில் என்னை மிஞ்சி நடப்பேனா?

என்னிடம் என்னை முற்றும் இழந்து தோல்வியில் உழல்வேனா?

உலகம் சிறிதாகி, உள்ளம் விரிந்து, விஸ்வரூபமெடுத்து வியாபிப்பதாய் மனதில் ஏற்றிப் பாரதியின் பாடல் வரிகளைப் படித்துப் பாருங்கள் – வானத்தை வசப்படுத்துகிற வசிய மருந்து கண்களில் தெரிகிறதா..? கைகளில் வருகிறதா..?

இதோ அப்பாடல்..

 

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்

கவர்ந்திட மாட்டாவோ?-அட

மண்ணில் தெரியுது வானம்,அதுநம்

வசப்பட லாகாதோ?

எண்ணி யெண்ணிப் பல நாளு முயன்றிங்

கிறுதியிற் சோர்வோமோ,

விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்

மேவு பராசக்தியே!

என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்

எத்தனை மேன்மைகளோ!

தன்னை வென்றா லவை யாவும் பெறுவது

சத்திய மாகுமென்றே

முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்

முற்றுமுணர்ந்த பின்னும்

தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு

தாழ்வுற்று நிற்போமோ?  

 

படத்திற்கு நன்றி:http://www.srilankaguardian.org/2008/05/bharathiar-avant-garde-poet-and-prophet.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *