தமிழில் சிறந்த மென்பொருள் தயாரிப்பு: கணியன் பூங்குன்றனார் பரிசு

0

mobilevedaதமிழில் சிறந்த மென்பொருள்களைத் தயாரித்த கணேஷ்ராம் தலைமையிலான இமகத்வா நிறுவனமும் பத்ரி சேஷாத்ரி தலைமையிலான நியூ ஹொரைசன் மீடியா நிறுவனமும் கணியன் பூங்குன்றனார் பரிசுக்குத் தேர்வு பெற்றுள்ளன.

இது தொடர்பாகத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

கணினி யுகத்திற்கேற்பத் தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் வெளிவரும் தமிழ் மென்பொருள்களுள் சிறந்த மென்பொருள் ஒன்றைத் தெரிவு செய்து அதனை உருவாக்கியவருக்குக் கணியன் பூங்குன்றனார் பெயரில் பரிசுத் தொகை வழங்கும் திட்டத்தில் 2007-08ஆம் ஆண்டுக்கான பரிசாக ரூ.1 இலட்சம், கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் “பனேசியா டீரீம்ஸ் வீவர்ஸ் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்” நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

அப்பொழுது கணியன் பூங்குன்றனார் பரிசு, இனி ஆண்டுதோறும் வழங்கப்படும் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.  இதன்படி தமிழ் வளர்ச்சித் துறை, போட்டிகள் நடத்தி, சிறந்த தமிழ் மென்பொருள்களைத் தெரிவு செய்தது.

“தமிழ் நூல்கள்: செல்பேசி மென்பொருள்” எனும் மென்பொருள் 2008-09ஆம் ஆண்டிற்குச் சிறந்ததாகத் தெரிவு செய்யப்பட்டு அம்மென்பொருளைத் தயாரித்த இமகத்வா டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட், வேலூர் எனும் நிறுவனத்திற்குப் பரிசுத் தொகை ரூ.1 இலட்சமும், பாராட்டிதழும் வழங்கப்பெறுகிறது.

“என்.எச்.எம். ரைட்டர் 1.5.1.1” எனும் மென்பொருள், 2009-10ஆம் ஆண்டிற்குச் சிறந்ததாகத் தெரிவு செய்யப்பட்டு, அம்மென்பொருளைத் தயாரித்த நியூ ஹொரைசன் மீடியா, சென்னை-18 நிறுவனத்திற்கு பரிசுத் தொகை ரூ. 1 இலட்சமும் பாராட்டிதழும் வழங்கப்பெறுகிறது.
nhmwriter
2009-10ஆம் ஆண்டிற்குச் சிறப்பு நேர்வாக “மொபைல் திருக்குறள்” மென்பொருளைத் தயாரித்த மாணவன் செல்வன் ஜே.பிரான்சிஸ் ஸ்டாலின், திருச்சிராப்பள்ளி அவர்களுக்கு பாராட்டிதழ் மட்டும் வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

16.01.2011 அன்று நடைபெறவுள்ள திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு முதலமைச்சர், மேற்காணும் நிறுவனங்களுக்குப் பரிசும் பாராட்டிதழும் செல்வன் ஜே.பிரான்சிஸ் ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டிதழும் வழங்குவார்கள்.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பரிசும் பாராட்டும் பெறுவோருக்கு வாழ்த்துகள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *