சக்தி சக்திதாசன்


உலகில் பெரும்பான்மையாக சராசரி ஆசைகளை மனதில் தேக்கி வைத்து அதன்பால் எழும் சராசரி கனவுகளுக்குள் தம்மைப் புதைத்து வாழ்வோரே எம்மில் பலராக இருக்கிறோம்.

எம் கனவுகளின் அடிப்படையில் எமது வாழ்க்கையின் லட்சியங்கள் எனச் சிலவற்றை வரையறுத்துக் கொண்டு அவற்றை அடைய எம்மாலான முயற்சிகளை எடுத்துக் கொள்கிறோம்.

இதுவே உலகில் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கைப் பயணமாகிறது.

எம்முடைய வாழ்க்கை வெற்றியானதொன்று என்றோ அன்றி விரக்தியான தோல்வியுற்றதொன்று என்றோ வகையறுத்துக் கொள்வது அவரவர் மனங்களைப் பொறுத்தே அமைந்துள்ளது.

ஆசைகள் எவ்வளவோ இருக்கலாம் ஆனால் அவற்றில் எம்மால் அடையக்கூடியது எவ்வளவு. எமது இலட்சியம் என்னும் எல்லைக் கோட்டை மட்டும் தான் வரித்துக் கொள்கிறோம் ஆனால் அவற்றை நோக்கிப் பயணிக்கக்கூடிய சக்தியும் மனோதிடமும் எமக்கிருக்கிறதா? என்று எண்ணிப்பார்க்கத் தவறி விடுகிறோம். விளைவாக மனதில் விரக்தி குடி கொள்கிறது. வாழ்க்கை கசந்து விடுகிறது. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுகின்றோம். மற்றவர்களுடன் புன்னகை ததும்பப் பேசும் வல்லமையை இழந்து விடுகிறோம்.

ஆமாம் அதனால் தான் செய்ய முடிந்தவைக்காகச் செயற்படு என்கிறார்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை காண்பது எப்படி என்று பயிற்றுவிக்கும் நிபுணர்கள். எமது இலட்சியங்கள் மட்டுமல்ல எந்தவொரு செயற்பாட்டை செய்ய முற்படும் போதும் செய்யக்கூடியவற்றிற்காகச் செயற்படும்போது நாம் செலவிடும் நேரம் பயனுள்ளதாகிறது.

இத்தகைய வகையில் ஆராயத் தலைப்படும்போது நாம் ஒரு புதுவகையான மனப்பான்மையை எமதாக்கிக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

அது என்ன என்கிறீர்களா?

நாம் எமது திறமைகளின் எல்லைக்கோட்டை நிர்ணயிக்கக்கூடிய தன்மையை அடைகிறோம். ஒரு செயலைச் செய்ய முற்படும்போது இது நம்மால் செய்யக் கூடியதுதானா? என்று எண்ணத் தலைப்படும் போது எம்மையறியாமலே எமது செயற்பாடுகளின் எல்லைக் கோடு எமக்குப் புரிகிறது.

அதேநேரம் எமக்குத் தெரிந்தவர்களில் அதைச் செய்யக்கூடிய இன்னுமொருவர் இருப்பாரானால் அவரது திறமையை நாம் மதிக்கும் தன்மையை அடைந்து விடுகிறோம்.

மற்றவர்கள் சில செயல்களில் எம்மை விடத் திறமைசாலிகள் என்பதை ஏற்றுக்கொள்வது எம்மைக் குறைத்துக் கொள்வதாக ஆகாது என்னும் உண்மை எமக்குப் புரிகிறது.

எனது இளமைக்காலத்தில் வீண் விதண்டாவாதமாக என்னால் செய்ய முடியாதவற்றைச் செய்யத் தலைப்பட்டு நேரத்தை வீணாக்கிய அனுபவங்கள் பல இருப்பதனால்தான் இது எனக்கு இப்போது நன்றாகப் புரிகிறது.

சுயகவுரவத்திற்கும், தற்பெருமைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள முடியாததினால் பாராட்டப்பட வேண்டிய பலருக்கு அப்பாராட்டைத் தகுந்த நேரத்திலே செய்ய முடியாமல் போன சம்பவங்கள் பல என் மனதில் இன்றும் நிழலாடுகின்றன.

திறமைகளுக்கான சாவி திறந்த மனங்களிலேதான் துல்லியமாகத் தெரியும் என்னும் உண்மை புரியாமல் முக்கியமான காலம் பல விரயமாகி இருக்கின்றன.

எம்மைவிட அடுத்திருவருக்கு இருக்கும் சில செயல்களைத் திறமையாக முடித்துவிடும் செயற்திறனை அறிந்து அவரிடம் உதவி கேட்டு நாம் செய்யும் செயல்களினால் எமது அறிவு விஸ்தீரணமாகிறது.

எல்லோராலும் வாழ்க்கையில் எலலவற்றையும் அடைந்து விட முடியாது. இந்த யதார்த்தத்தின் அடிப்படையில் நாம் வரித்துக் கொள்ளும் எல்லைக்கோடுகள் எமது செயற்திறனுக்குள் அடங்கியதாக இருந்தால் அதற்காக நாம் செலவிடும் திறனும், நேரமும் மிகவும் பயனுள்ளதாகவும், மனதுக்குத் திருப்தி அளிப்பதாகவும் இருக்கும்.

ஆக மொத்தம் “செய்ய முடிந்தவைக்காகச் செயற்படு” என்னும் வாக்கியத்தின் உண்மைப்பொருளை உணர்ந்து நடந்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

படத்திற்கு நன்றி:http://www.cosmosmagazine.com/node/980

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *