காந்தியமும் வள்ளுவமும்!

2

Vvs_aiyar(பேராசிரியர் இல. ஜானகிராமன் எழுதியதிலிருந்து ஒரு பகுதி)

வ.வே.சு. ஐயரின் நூற்றாண்டு விழா, சேரன்மாதேவி ஆசிரமத்தில் நடைபெற்றது. கவியோகி சுத்தானந்த பாரதியும் வவேசு ஐயரின் புதல்வர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் கலந்துகொண்டார்கள். அந்த விழாவில் வ.வே.சு. ஐயரின் உடைமைகளைக் கண்காட்சியாக வைத்திருந்தார்கள். அதில் ஐயர் வைத்திருந்த துப்பாக்கி, பெரிய வெட்டரிவாள் முதலியன இருந்தன. அவற்றை எடுத்து வைத்துக்கொண்டிருந்த கவியோகி, ஒரு விஷயத்தைச் சொன்னார்.

மகாத்மா காந்தி, கண்ணன் காட்டிய வழியில் நடந்து வெற்றி கண்டவர். ‘எனக்கு மனக் கலக்கம் ஏற்பட்ட போதெல்லாம் நான் கீதையை நாடுவேன் உடனே தெளிவு ஏற்படும்’ என்று மகாத்மா கூறுவார்.

மகாத்மா, அரவிந்தரைச் சந்திப்பதற்காக ஒருநாள் மாலை, பாண்டிச்சேரி ஆசிரமத்துக்கு வந்தார். ஆனால் அரவிந்தர், வெளியூர் சென்றிருந்தார். ஆசிரமத்தில் இருந்த வ.வே.சு. ஐயரும் கவியோகி சுத்தானந்த பாரதியும் காந்திஜியை வரவேற்று, அரவிந்தர் வெளியூர் சென்றிருக்கும் விஷயத்தையும் அடுத்த நாள் வரவிருப்பதையும் கூறி, மாகத்மா ஆசிரமத்தில் தங்கியிருந்து, அரவிந்தரைக் கண்டுச் செல்லலாம் என்றும் தெரிவித்தனர். காந்திஜி அதற்கு உடன்பட்டார். அப்போது வ.வே.சு. ஐயர், தான் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இருப்பதைக் கூறி, மொழிபெயர்ப்பின் ஒரு பிரதியைக் காந்திஜியிடம் கொடுத்தார். மறுநாள் காலை வந்து சந்திப்பதாக இருவரும் மகாத்மாவிடம் விடைபெற்றுச் என்றனர்.

மறுநாள் வ.வே.சு. ஐயரும் கவியோகியும் காந்திஜியைச் சந்தித்தனர். அவர்கள் பேச்சு, அரசியல் பக்கம் திரும்பியது.

ஐயர்……….. ‘காந்திஜீ! காங்கிரஸ் இயக்க நடவடிக்கைகளிலும் சுதந்திரப் போராட்டத்திலும் ஒரு தொய்வு இப்போது இருக்கிறது. நீங்கள் அஹிம்சா முறையைப் போதிக்கிறீர்கள். ஆங்கில சாம்ராஜ்யத்தை அசைக்கக்கூட முடியாது. எனவே நமது தேசம் சுதந்திரம் பெற, வன்முறையே  சிறந்தது. அதன்மூலம்தான் வெற்றி பெற முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.’

MKGandhகாந்திஜி……. ‘வ.வே.சு. ஐயர் அவர்களே! நீங்கள் கொடுத்த திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பினை நேற்று இரவு முழுதும் படித்துப்  பார்த்தேன். குறளில் கூறப்படாத அஹிம்சா வழியையா நான் கூறுகிறேன்? கண்ணன் காட்டிய வழியும் வள்ளுவன் காட்டிய வழியும் அஹிம்சை வழி எனக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்! வள்ளுவரை மொழி பெயர்த்த நீங்கள், வள்ளுவன் காட்டிய நெறிக்குப் புறம்பாகப் பேசலாமோ? வள்ளுவர் வழிக்கே வாருங்கள்!’

இப்படி காந்திஜி அழுத்தமாய்க் கூறியதும் அங்கு ஆழ்ந்த அமைதி நிலவியது.

வ.வே.சு. ஐயரும் கவியோகியும் காந்திஜியிடம் தங்கள் வன்முறையைக் கைவிட்டு, அஹிம்சா நெறிக்கு மாறுவதாக உறுதி அளித்தனர். அன்று இரவு தங்களிடம் அப்போது கைவசம் இருந்த ஆயுதங்களை வங்கக் கடலில் எறிந்துவிட்டு, வன்முறைக்கும் ஒரு முழுக்குப் போட்டனர்.

========================================
தட்டச்சு செய்து அனுப்பியர் : ஷைலஜா, பெங்களுரு

படங்களுக்கு நன்றி – விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “காந்தியமும் வள்ளுவமும்!

  1. .காந்திஜி தென்னாப்ரிக்காவில் உறுவாக்கிய பண்ணைக்கு
    டால்ஸ்டாய் பெயரை வைக்க டால்ஸ்டாய் அவர்களிடம்
    அனுமதி கேட்டு கடிதம் எழுதினார். அதற்கு டால்ஸ்டாய்
    அவர்கள் ” நீங்கள் கடைப்பிடிக்கும் உண்மைக்கும்
    அஹிம்சைக்கும் முன்னோடி உங்கள் நாட்டு அறிஞர்
    திருவள்ளுவர் தாம்!அவர் பெயரையே வைக்கவும்” என்று
    கடிதம் எழுதினாராம். ஆனால் காந்திஜி டால்ஸ்டாய்
    பெயரை பண்ணைக்கு வைத்துவிட்டு அங்குள்ள தமிழ்
    மாணவர்களுக்கு திருக்குறள் சொல்லிக் கொடுத்துள்ளார்.
    இரா. தீத்தாரப்பன், இராஜபாளையம்.

  2. வாழ்க்கையில் திருப்புமுனைகள் அமைவது, ஒரு பாக்கியமே எனலாம். வ.வே.சு. ஐயர் அவர்கள் திருக்குறளை காந்திஜியிடம் கொடுப்பானேன்? அதன் உட்கருத்தை, அவரிடமிருந்து கற்பானேன்? இது தான் திருப்புமுனை. வரலாற்றில் பற்பல நிகழ்வுகள், நல்லதொரு ஆய்வுக்கு பிறகு பதிவு ஆக வேண்டும். திரு.இரா. தீத்தாரப்பன் சான்றுகள் அளித்தால், நலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *