விசாலம்

இசை, கலாச்சாரம், மொழி, நாடு அனைத்தையும் கடந்த ஒன்று. இனிய இசை நம்மையறியாமலேயே நம் தலையை ஆட்ட வைக்கும். உருக்கமான இசை நம் மனதைத்தொடும். மனமுருகிப்பாடும் இசைக்கு இறைவனும் செவி சாய்க்கிறான்.

நாதோபாசனையினால் பக்த மீரா, சந்த் துக்காராம், சந்த் ஞானேஸ்வர், ஸ்ரீபுரந்தரதாசர், ஸ்ரீஅன்னமாசார்யா, கர்நாடக இசையில் புகழ் பெற்ற மும்மூர்த்திகள் எனப் பலர் இறைவனுடன் ஐக்கியமாகியதை நாம் பார்க்கிறோம்.

சக்ரவர்த்தி அக்பரின் தர்பாரில் தான்சென் தனது இசையினால் பெரிய ஐஸ்கட்டியை விரிய வைத்து பின் அது உடைந்ததைப் பற்றிப் படித்திருக்கிறோம். ஆன்மாவுக்குள் ஊடுருவிச்செல்லும் சக்தி நல்ல இசைக்கு உண்டு.

இசையினால் தாவரங்களும் செழிப்பாக வளருகின்றன என்று விஞ்ஞானமும் ஒப்புக்கொண்டுள்ளது. இது சரியா என பார்க்க நானும் இரண்டு துளசிச் செடிகளைத் தனித்தனி இடங்களில் நட்டேன். ஒரு செடிக்குத் தண்ணீருடன் இசையும் சேர்த்து வளர்த்தேன். மற்றொன்றில் தண்ணீர் மட்டும் விட்டு வந்தேன். இரண்டுமே வளர்ந்தன. ஆனால் இசை கேட்ட செடியின் வளர்த்தி அபாரமாக இருந்தது. இலைகளும் பெரிய அளவாக வளர்ந்து பூக்களும் விட்டுவிட்டது.

இசை நோய்களையும் போக்க வல்லது. இதைப்பற்றிப் பல இசை மேதைகள் ரிசர்ச் செய்து வருகின்றனர்.

ஒரு தடவை ஸ்ரீசச்சிதாநந்த சுவாமிகள் ‘ம்யூசிக் தெரபி” பாரதீய வித்யாபவனில் செய்யப்போவதை அறிந்து மிகுந்த ஆர்வத்துடன் நானும் அங்கு போயிருந்தேன். சாந்தமாகப் புன்னகையுடன் அமர்ந்திருந்தார் பூஜ்யஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள். நல்ல கூட்டம். மக்கள் திரளாக வந்திருந்தனர்.

கொஞ்சம் தியானம், பின் நாத சிகிச்சை என்று ஆரம்பமாகியது அன்றைய விழா. புகழ் பெற்ற இசை மேதைகள் இவர் இசைக்குப் பக்க வாத்தியம் வாசித்தனர். புல்லாங்குழல் சங்கரன் அவர்கள், மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் அவர்கள் என்று பலரை அங்கு காண முடிந்தது.

குருஜியும் ஒவ்வொரு ராகமும் சொல்லி அதன் பலனையும் அது எந்த விதமான நோயைக்குணமாக்கும் என விவரித்தார்.

“இசை ஒரு உபாசனை. பக்தி சிரத்தையுடன் அதைக்கொண்டாட வேண்டும். “ராக ராகினி வித்யா” என்பதில் ராகம் நம் உடலில் ஒரு மருந்து போல் செயற்பட்டுப் பரம்பொருளுடன் தொடர்பு ஏற்படுத்துகிறது. நான் இதில் ரிசர்ச் செய்து பல நோய்களைக் குணப்படுத்தி வருகிறேன்”.

எங்கும் நிசப்தம். திடீரென்று அவரது கீபோர்டில் அருமையான நாதம் பிறந்தது. அவர் தானே வாசிக்க பல இசை மேதைகளும் வாத்தியங்களைத் தொடர, உண்மையாகவே அந்த ஹாலில் ஒருவிதமான வைப்ரேஷன் பரவுவதை என்னால் உணர முடிந்தது.

நம் உடல் பஞ்ச பூதத் தத்துவங்களால் ஆனது. நம் சரீரத்தில் பஞ்சபூதத்தில் ஏதாவது ஒன்று கூடியோ குறைந்தோ இருந்தால் அங்கு நோய் வருகிறது.

 

படத்திற்கு நன்றி:http://forums.mynetresearch.com/yaf_postst100_How-effective-is-Music-therapy-as-Complementary-and-Integrated-Medicine.aspx

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *