அவ்வை மகள்

சென்ற பகுதியில் இரண்டு முக்கிய வினாக்களை எழுப்பினோம். அவையாவன:

நூற்றுக்கு நூறு வாங்குகிற மாணவர் உண்மையிலேயே , அறிவாளியா? நூற்றுக்கு நூறு வாங்காத மாணவர் அறிவிலியா?

இவ்வினாக்களுக்கான விடையின் விவாதத்திற்கு மீண்டும் வருவோம்.

உலக இயக்கத்திற்கு உந்து சக்தியாய் அமைய ஆலைகளும், தொழிலும், வணிகமும், கலைகளும், நூலும், ஆன்மீகமும், இலக்கியமும், அரசியலும், ஜோசியமும், காவலும், இராணுவமும், கப்பலும், வானூர்திகளும், சட்டமும் தேவை. இவை யாவும் சாதாரணத் தேவைகள் அல்ல. இன்றியமையாத் தேவைகள்!

ஆனால், கல்விக் கூடத்து உருவாகும் நூற்றுக்கு நூறுகள் இந்த இயங்கு துறைகள் எதனிலும் நாட்டம் கொள்வதில்லை எனக் கண்டோம். அப்படியென்றால், கல்வியில் நூற்றுக்கு நூறு எடுக்காத நபர்களால் மட்டுமே ஒரு நாட்டின் இயக்கமே நிகழ்கிறது. என்பது வெளிப்படையாய்த் தெரிகின்றது அல்லவா?

நடைமுறை உண்மை இவ்வாறாக இருக்கின்ற காரணத்தால், நூற்றுக்கு நூறு பெறுபவர்களை அறிவாளிகள் என்பது சரியல்ல என்று கொள்ளலாமில்லையா?

அறிவாளிகள் என்று பட்டம் அளித்து, மேடை எடுத்து, விழா எடுத்து, பரிசுகள் ஏராளம் வழங்கி, சமுதாயத்துக்கு நாம் அனுப்பி வைத்த நூற்றுக்கு நூறுகள் சமுதாயத்தின் இயங்கு சக்தியாக விளங்க இலாயக்கற்றவர்களாக இருக்கிறார்கள் என்று வெளிப்படையாய்த் தெரிகின்றது எனும் பட்சத்தில், நூற்றுக்கு நூறு எடுக்காத மாணவர்களின் மீது நாம் கொண்டுள்ள இப்போதைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது புரிகின்றது அல்லவா? நூற்றுக்கு நூறு எடுக்காதவர்கள் அறிவாளிகள் அல்லர் என்று நாம் கொள்ளக் கூடாது என்பதும் தெற்றென விளங்குகின்றதல்லவா?

நூற்றுக்கு நூறு எடுக்காதவர்கள், அறிவிலிகள் அல்லர் என்பது தெரிகின்றதல்லவா?

ஆக, கல்வி வழக்கில் “இன்னாது அம்ம இவ்வுலகம்” எனும் படியாக நம் நடைமுறை நிலவுகிறது.

நூற்றுக்கு நூறுகளின் பால் வைக்கிற மதிப்பு இன்னாதது என்பதையும் – உலகின் மதிப்பு நூற்றுக்கு நூறுகளின் புறத்தே நிற்கிற கோடானு கோடி யதார்த்தப் பிரஜைகளின் உளமார்ந்த இனிய பங்கேற்பால் மட்டுமே குன்றாமல் காக்கப்படுகிறது என்பதையும் நாம் உணர்பவர்களாகிறோம்.

சென்ற பகுதிகளில் நாம் பேசிய விஷயங்களை ஒரு மீள் பார்வையாகப் பார்க்கின்ற போது, நாம் கண்ட முக்கியமான மூன்று விஷயங்கள் பின்வருவன:

(1) நமது கல்விக்கூடங்களில் நாம் கற்றலில் ஈடுபடுவோரைக் கவனக்குறைவாகவே நடத்தி வருகிறோம்.

(2) குறைபாடுகளும் பற்றாக்குறையும் உள்ள கல்வி நடைமுறைகள் சராசரித்தனத்திற்கு அப்பாற்பட்ட நடைமுறைகளின் கட்டுக்குள் அடங்காத, அடக்கவியலாத, தீட்சண்யம் கொண்ட மனிதர்களை உதாசீனம் செய்கின்றன.

(3) தமது வகுப்புக்களில் கல்வி பயில வரும், வந்திருக்கும் மாணாக்கர்களின் தன்மையதாவன என்பதை அறிய மாட்டாதவர்களாக, அறிய முயற்சிக்காதவர்களாக, அறிய விரும்பாதவர்களாக ஆசிரியர்கள் கற்பித்து வருகின்ற சூழல் நிலவுகிறது.

மேலும், முந்தைய பகுதிகளில் மொத்தம் மூன்று தனி மனிதர்களின் அற்புதக் கணித ஆற்றலையும் அவர்களது சிறப்பு குணாதிசயங்களையும் அலசினோம். அவர்கள்:

(1) பாயின் கேர்

(2) ஸ்ரீனிவாசன் இராமானுஜன்

(3) ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படக் கதாநாயகன், சிறுவன்.

இந்த மூன்று தனித்தனி Case Studyகளை வைத்துக் கொண்டு பார்க்கிறபோது நாம் அறிந்து கொள்வது யாதெனின், காலம் காலமாகக் கற்றல், அறிவு, விவேகம், ஆகியன உண்மையில் இயற்கையில் தனி மனிதருக்குள் ஒரு தனிப்பட்ட விதமாக அமைந்து வளர்ந்து வரும் போது, தனிமனிதர்களுக்குக் கல்வி போதிப்பதான கல்விக் கூடங்கள், தனி மனிதர்களது விவேகத்தையும், அறிவையும், கற்றலையும், வேறு விதமாக, தமக்கு வசதியான வகையில் உப்புச் சப்பில்லாமல் அணுகுகின்றன என்பதே!

இங்கு நாம் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கற்பிக்கும் பணியிலுள்ள ஆசிரியர்கள், கற்றறிந்த சான்றோரின் வாழ்க்கை வரலாறுகளை ஒரு பொருட்டாகக் கொள்வதில்லை!

பிரபல மேதைகளின் மாணவப் பருவ வாழ்க்கைக் குறிப்புக்களை, ஆசிரியர்கள அறிந்து கொள்வதில்லை என்று நாம் அச்சப்படாமல் கூற வேண்டியிருக்கிறது!

Text Book என்று சொல்லப்படுகிற பாடப் புத்தகம் ஒரு வழி காட்டியே தவிர அதை ஒன்று மட்டுமே வைத்துப் பாடம் நடத்த வேண்டும் என்பதில்லை.

கற்பித்தல் என்பது ஒரு அலாதியான பணி, எந்த ஒரு ஆசிரியருக்கும் பல்நிலைத் திறன் இருப்பது அவசியம். ஆசிரியர் எனபவர் எவராகினும் அவருக்கு அவரது பாடத்திலே பாண்டித்யம் வேண்டும், அவருக்கு நிறைய ஞானம் வேண்டும், பொது அறிவு வேண்டும், கலை இலக்கியங்களில் ஆர்வம் வேண்டும், சமுதாய இயக்கங்களை அறிந்தவர்களாக அவர்கள் தாம் நடத்துகின்ற பாடத்தைத் தகவமைத்து, ருசிகரமான வகையில், வெளிப்புற (Out ,of- Box) எடுத்துக் காட்டுக்களைக் கையாண்டு அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கிற ஒவ்வொரு பாடத்தையும் நடத்த வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் பாடங்களை வகுப்பின் சுவர், கூரை, தரைக்கு நடத்தவில்லை. அங்கு அமர்ந்து கொண்டிருக்கிற உயிரோட்டமான மனிதப் பிஞ்சுகளுக்கு, மானுட இளசுகளுக்குப் போதிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கல்வியில் பல பிரச்சினைகளுக்கு மையமாய் இருப்பது கணிதமே! கணிதப் பாடம் தொடர்பான பல பிரச்சினைகள் பிற பாடங்களிலும் உள்ளன என்றாலும், பிற பாடங்களில் இல்லாத பல பிரச்சினைகள் கணிதத்தில் உள்ளன. மேலும் கணிதத்தை ஒரு மையப் பாடம் (Central Subject) எனலாம். கணிதம் என்பது ஒரு பயன்பாட்டுப் பாடம் (Applied Subject) . இது ஒரு தனிப்பாடம் அன்று. இன்ன பிற பாடங்களுக்காக, வாழ்க்கைப் பயன்பாட்டிற்காகவெனவே உருவாக்கப்பட்டது கணிதம்.

எனவே இதில் ஏற்படக்கூடிய பற்றாக்குறை இன்னபிற யாவற்றிலும் எதிரொலிக்கும்-எதிரொளிக்கும். அதோடு மட்டுமல்லாது மனித குலம் தோன்றிய நாள் முதல் நாகரிக வளர்ச்சி நிலையில் கணிதம் படிப்படியாய் வளர்ந்து வந்தது, அது இவ்வாறு வளர்ந்து வந்த பாங்கு அலாதியானது. உலகின் பல்வேறு மதங்களை, பல்வேறு கலாச்சாரங்களை, பல்வேறு மொழிகளைச் சேர்ந்தவர்கள், பல்வேறு கால கட்டத்தில், தமது சொந்தச் சூழல்களில் அவரவர்களுக்குத் தேவையான பயன்பாட்டிற்காக, பல்வேறு கணித வழக்குமுறைகளை உருவாக்கினார்கள். இவை காலப் போக்கில் காலம் கடந்து, நிலம் கடந்து, கடல் கடந்து, மதமாச்சரியங்கள் கடந்து, உலக முழுமைக்கும் சொந்தமாகின. இதில், உலகின் மூத்த குடிகளில் சிறப்பு மிக்கக் குடிகளான இந்தியர்களுக்கு நிறையவே பங்குண்டு.

எடுத்துக் காட்டாகச் சமகாலக் கணித மேதைகளான பாயின் கேர், இராமானுஜன் ஆகிய இருவரும் நிகழ்த்தியுள்ள கணிதக் கண்டுபிடிப்புகள் வேறானவை. வெவ்வேறு நாடு, வெவ்வேறு பாஷை, இவர்கள் என்றும் சந்தித்தது கூட இல்லை. ஆயினும் இருவரது கண்டுபிடிப்புக்களும் அவசியமானவை. கணிதப் பயன்பாட்டில் இருவரது கண்டுபிடிப்புகளுமே அதி முக்கியமானவை.

கணிதத்தின் வரலாறும் வளர்ச்சியும் இவ்வாறானதாக இருக்க, பாடம் என்ற வகையில் கணிதம் என்பது ஒரு வறட்சியான பாடம், இதனை “Abstract” என்பார்கள்! கதை, கவிதை, அறிவியல், புவியியல், வரலாறு போல சுவாரசியமான தன்மை இல்லாமல், கணிதம் என்பது, மூளைக்கு வேலை கொடுத்துச் செய்ய வேண்டிய ஒரு அக்கறைப் படிப்பாகும். “Fact” எனப்படுகிற சாராம்சங்கள் மட்டுமே கணக்கில் எடுபடும். பிற பாடங்களிலோ சுற்றி வளைக்கும் மொழி வழக்குகள் மிகுதியாக இருக்கும்.

மூளைக்கு முக்கிய வேலை என்பதாவதால், கணக்கு ஒன்றைப் புரிந்து கொள்வதிலும், கணக்கு ஒன்றைப் போடுவதிலும் ஏகப்பட்ட, தனி மனித வேறுபாடுகள் எழுகின்றன. ஒவ்வொரு தனி மனித மூளையும் தனித்துவ வழியில் இயங்குகின்ற காரணத்தால் அனைவருமே ஆசிரியர் விரும்பும் வகையில் கணிதச் செயல்பாட்டை நிகழ்த்த முடிவதில்லை. ஆனால் ஆசிரியர்களோ ஒவ்வொரு மாணவன் அல்லது மாணவியின் மூளைக்குள்ளே கணக்கு நிகழ்த்துகிற இரசாயன மாற்றங்களை உளப்பாங்குப் பேதங்களை உணர்ச்சி நிலைகளை எண்ணிப் பார்ப்பதில்லை!

இந்த நூற்றுக்கு நூறு அபத்தத்தை என்னென்பது?

மேலும் பேசுவோம்..

 

படத்திற்கு நன்றி:http://cutcaster.com/photo/100593423-100-percent-passed-stamp

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *