முகில் தினகரன்

அரசு விருந்தினர் மாளிகையின் பால்கனியில் நின்று கொண்டு தனக்கு அளிக்கப் பட்டிருந்த காவல் துறை பந்தோபஸ்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் மத்திய மந்திரி தேவநாதன். கீழே பந்தோபஸ்துக் குழுவினருக்கு வெகு தீவிரமாய் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்த அந்த உயரதிகாரியைச் சில நிமிடங்கள் உற்று நோக்கினார். அவர் நினைவுகள் பின்னோக்கி ஓடின.

அப்போது… அதாவது பதினைந்து வருடங்களுக்கு முன்பு…இந்தத் தேவநாதன் ‘தேவா” என்கிற பெயரில் ஒரு ரவுடியாய்….பொறுக்கியாய்…சாராயச் சக்கரவர்த்தியாய் இருந்த போது தைரியமாய் அரெஸ்ட் செய்து அடித்துத் துவைத்து உள்ளே போட்ட அதே இன்ஸ்பெக்டர் இன்று உயரதிகாரியாகி அதே தேவநாதனுக்குக் காவல்காரனாய்.

நினைவுகளைத் திருப்பிய மந்திரி தன் பி.ஏ.வை அழைத்து அந்த அதிகாரியை மாற்றி வேறு அதிகாரியை அந்த இடத்திற்கு நியமிக்கச் சொல்லி ஆணையிட

“ஏன் சார்… உங்களுக்கும் அந்தாளுக்கும் ஏதாவது பிரச்சினையா,” பி.ஏ.கேட்டான்.

பழைய கதையை அவர் சொல்ல,

‘ஓ… அந்த ஆபிசர் உங்களை நேரில் பாத்தா மதிப்பானா.. மதிக்க மாட்டானான்னு சந்தேகமாயிருக்கு… அதானே சார்?…”

‘சேச்சே… அப்படியில்ல. ஒரு காலத்துல கிரிமினலாய் இருந்து தன் கிட்ட அடி வாங்கிய ஆளுக்கு இன்னிக்கு நாமே காவல் காக்க வேண்டி வந்திடுச்சே..ன்னு அந்த ஆபீசர் மனசு நொந்து தன் காவல் துறை பதவியையே கேவலமாய் நினைச்சுடக் கூடாது பாரு, அதுக்குத்தான்! போலீஸ்ல வேலை பாரக்கறவங்க எல்லோரும் ஒரு ஆர்வத்தோட, ஈடுபாட்டோட அந்த வேலையச் செய்யணும்! மாறா… அதை ஒரு சுமையா நெனச்சிட்டு… விருப்பமேயில்லாம விதியே!ன்னு செஞ்சாங்கன்னா… இந்த நாடு வௌங்காதுப்பா…”

தன் மனத்தில் ஒரு உயர்வுச் சிம்மாசனம் அமைத்து அதில் மந்திரியை அமர வைத்தான் பி.ஏ.

 

படத்திற்கு நன்றி:http://www.24x7bulletin.com/2012/03/exam-for-indian-police-2012

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *