சீதாம்மா

 

காதல் உலகம் ஓர் மாய உலகம் மயக்கும் உலகம். உணர்வைச் சுழற்றும் உலகம் இந்த உலகிற்குள் நுழைந்து விட்டால் அறிவு வேலை செய்யாது. எண்ணம், பேச்சு , எழுத்து எல்லாம் புலம்பல் மயம். அபூர்வ சக்தி படைத்தது காதல். இரு உயிர்களின் இணைப்பு – பிணைப்பு!

ஓர் நந்தவனம். வித விதமான வண்ணமலர்கள் பூத்துக் குலுங்கும் பூங்கா. அதற்குள் ஓர் கவிஞன் நுழைகின்றான். ரோசாப்பூ அவனை ஈர்க்கின்றது. பூவில் மங்கையின் முகமும், பூவின் இதழ்களில் அவளின் இதழ்களையும் நினைக்க, சிந்தனை சிறகடித்துப் பறக்கின்றது. மல்லிகையின் மணத்தில் கவிதை பிறக்கின்றது.

அடுத்து ஓர் பூ வியாபாரி நுழைகின்றான். பூக்களின் தரம் பிரிக்கின்றான். எங்கே எங்கு அனுப்பினால் காசு அதிகம் வரும் என்று கணக்கில் எண்ணம் புகுந்து கொள்கின்றது.

ஓர் தாவர வல்லுனர் நுழைகின்றார். பூவைப் பிடுங்கி இதழ்களைப் பிரித்து மேலும் பூவைச் சிதைத்து நரம்புகள் உடபட ஆய்வு செய்கின்றார். அழகுப் பூக்களின் அலங்கோலம்

அடுத்து வேதாந்தி நுழைகின்றான். பூக்களைப் பார்க்கவும் மனம் வாடுகின்றது. இத்தனை அழகும் இரவில் உதிரிந்துவிடும். அதன் அற்ப வாழ்வு அவனை மிரட்டுகின்றது. ஓர் பக்தன் நுழைகின்றான். மலர்களைப் பார்க்கவும். இதுவரை நேரில் காணாத கடவுளை நேரில் காண்பது போல் மகிழ்ச்சி. பூக்கள் எடுத்துக் கொண்டு கோயிலுக்குச் செல்ல வேண்டும்,. இறைவனுக்கு மாலையாச் சூட்டி மகிழ வேண்டும் என்ற எண்ணத்தில் மெய் சிலிர்க்கின்றான்.

காதலன் வருகின்றான். அத்தனை மலர்களை ஒரே இடத்தில் காணவும் ஓர் தவிப்பு. காதலே தவிப்புதானே. அவளுக்கு எந்தப் பூ பிடிக்கும்? மலர்களை மாலையாகத் தொடுத்து அவளுக்குச் சூட்ட வேண்டும். மல்லிகைப் பூக்களால் அவளைக் குளிப்பாட்ட வேண்டும். மலர்கள் அனைத்தும் எடுத்து அவளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். எல்லாம் இன்பமயம் அங்கே இருப்பது ஓர் நந்தவனம்தான். ஆனால் போகின்றவர்களுக்கேற்ப எண்ணங்கள் குவிகின்றன. காதலைக் காண்பவர்களின் எண்ணாங்களும் பலவகை.

இயற்கைக்குப் பருவங்கள் உண்டு. அது போல மனிதனுக்கும் பருவங்கள் உண்டு. விடலைப் பருவம், காளைப் பருவம். உடலில் ஹார்மோன்கள் மாறும் காலம். இது இயற்கையாக உடலில் நிகழ்வது. யாரும் ஊசி போட்டு உடலுக்குள் நுழைக்கவில்லை. டீன் ஏஜ் பருவத்தே பயிர்செய் என்பது விவசாயத்தில் மட்டுமல்ல. படிக்கற வயசுலே புத்தி போறதைப் பாரு இது பெற்றவர்களின் புலம்பல் கல்லூரிக்கு வந்தால் படிப்பதை விட்டு காதல் செய்கிறானே இது பேராசிரியர் சொல்லும் குறை

ஆண், பெண் என்ற இரு இனங்களூக்கிடையில் ஏற்படும் ஈர்ப்பு சக்தி இயற்கையின் நியதி. பூச்சி முதல் எல்லா உயிரினங்களுக்கும் உணடான பொது உணர்வு. பெண்ணினத்தை ஈர்க்க பறவைகளும் மிருகங்களும் செய்யும் மாய வித்தைகளை விஞ்ஞான யுகத்தில் நேரிலேயே படங்கள் பிடித்திருக்கின்றார்களே, அதில் இந்த அற்புத காட்சிகளைக் காணலாம்

இதை ஒரு இளைஞன் எப்படி ஒத்திப் போடுவான். இளமையில் துள்ளல் இயற்கையின் தூண்டல். அதனை மாற்ற அவனால் முடியாது. படிக்க வேண்டியதும் அதே வயதில். அதனைத் தள்ளிப் போட்டால் 25 வயதுக்கு மேல் படித்து, முடித்து எப்பொழுது வேலைக்குப் போவது, எப்பொழுது திருமணம் செய்து கொள்வது? படிப்பையும் தள்ளிப் போட முடியாது. ஒரு காலத்தில் கணவனும் மனைவியும் உறவு கொள்வது கூட வீட்டின் கொல்லைப் புறத்தில் அல்லது தட்டு முட்டு சாமான்கள் போட்டு வைத்திருக்கும் ஸ்டோர் ரூம் இவைகளில் தான் கலவை. அப்பொழுது கூட்டுக் குடும்பம். கட்டுப்பாடுகள். அவசர இணைப்புகள். இதனை எழுதும் பொழுது சட்டென்று ஓர் நினைவு குறுக்கே வந்தது. இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ? ஆண் வசதிக்கேற்ப இன்பம் அனுபவிக்க வெளியில் சென்றதற்கு இந்தத்தடைகளும் காரணமாக இருந்திருக்குமோ? இது என் கற்பனைதான்.

இப்பொழுதோ புலம் பெயர்ந்த வாழ்க்கையில் குடியிருக்கும் இடம் சிறியது. எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டிய அறை. குழந்தை தூங்கிவிட்டது என்று நினைத்து செய்யும் சல்லாபங்களை என்னவென்று புரியாமல் எத்தனை குழந்தைகள் இரவிலே விழித்துப் பார்த்து மிரண்டிருப்பார்கள் ?

ஊடகங்களைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை. தூங்கும் உணர்ச்சிகளைக் கூட கொத்திப் பிடுங்கி வெளியே கொண்டு வந்துவிடும் கொடுமைகள் நிகழும் காலம் இது

பாவம் இளைஞர்கள்! சோதனைக் குழாயில் தத்தளிப்பவர்கள் அவர்கள். அவர்களை எப்படி வழி நடத்துவது? செக்ஸ் கல்வி என்று கூறிக்கொண்டு எழுதுபவை, பேசுபவை இன்னும் அவர்கள் நிலையை மோசமாக்கும் நிலைமைதான். இன்னும் அந்தக் கல்வியை முறையாக நாம் வகுக்கவில்லை. பெற்றோர்கள், ஆசிரியர்கள். பெரியவர்கள், ஊடகங்கள் என்று பல முனைகளையும் நோக்கி இக்கல்வி வகுக்கப்பட வேண்டும். உளவியல் வல்லுனரையும் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்தல் வேண்டும்.

காதல் என்று சொல்லவும் நினைவிற்கு வரும் கதைகள் எல்லாம் சோக்க் கதைகள் !
லைலாமஜ்னு, அனார்கலி சலீம் அம்பிகாபதி அமராவதி தேவதாஸ் அதுசரி, ஏன் துன்பியலையே காட்டுகின்றார்கள். கல்யாணத்துடன் காதலுக்கு முற்றுப் புள்ளியா? காதலித்தவர்கள் கல்யாணம் செய்து கொண்ட பின் மற்றவர்கைவிட அவர்கள் வாழ்க்கை எந்த வகைகளில் சிறந்திருக்கும் என்று எழுதலாமே அப்படி ஒன்றும் இல்லையா அல்லது திருமணத்திற்குப் பிறகு காதல்பற்றி பேச வேண்டியதில்லை என்று நினைத்து விட்டார்களோ?

காதல் என்ற சொல்லுக்குத்தான் சரியான அர்த்தம் என்ன? காதலில் காமம் உண்டென்றும் காமத்தில் காதல் இல்லாமல் இருப்பதுவும் எல்லோரும் கூறிவருவதும் தெரிந்ததுவே. காதலிலும் அன்பின் ஐந்திணையும் கைக்கிளை, பெரும் திணையும் உண்டா? ஊடல் உண்டு என்று தெரியும்.

கட்டையில் போகிற வயசில் இந்தக் கிழவி போயும் போயும் காதல்பற்றி எழுத ஆரம்பித்திருக்கின்றதே, கிழவிக்கு மூளை கோளாறோ? ராமா, கிருஷ்ணான்னு சொல்லி ஜபம் செய்ய வேண்டிய வயசுலே இதென்ன புலம்பல் ?

அய்யாமார்களே, அம்மாமார்களே என்னை எழுதச் சொன்னதே இளைஞர்கள்தான். நீங்க நினைப்பதை நானும் நினைத்து கேட்டேன். போயும் போயும் இந்தப்பாட்டியைப் போய் காதலைப் பற்றி எழுதச் சொல்றீங்களே என்று. அவர்கள் விடவில்லை. பாவம் சிறிசுகள் கேட்டுட்டாங்கன்னு எழுத வந்துட்டேன். சுமார் இருபத்தைந்து பேர்களின் காதல் அனுபவங்களை எழுத இருக்கின்றேன். அந்த சம்பவங்கள் கூறப்படும் பொழுது சிறிது அலசல் இருக்கும். இலக்கியம் பற்றிப் பேசும் பொழுது சங்க காலம், இடைக்காலம், தற்காலம் போல் இக்கதைகளின் களங்களும் முக்காலம் கொண்டவை.

வாழ்க்கையில் பல பருவங்கள். அவைகளில் அதிகப் பிரச்சனைகள் தரும் மூன்று நிலைகளைப் பிரித்து எழுத நினைத்திருக்கின்றேன். காளைப்பருவம், தாம்பத்தியம், முதுமைக்காலம்

முதலில் இளமையில் தொடர் தொடங்குகின்றது. இதற்கு வித்திட்டதும் ஓர் நிகழ்வே. ஓராண்டுக்கு முன் சென்னைக்கு வந்திருந்த பொழுது சென்னைக் கடற்கரையில் நிலா முற்றத்தில் ஓர் அரிய விருந்து கிடைத்தது. ஒன்பது பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு. பரீட்ஷா நடத்திய நாடகம். மேலை நாட்டில் தனியாகப் பேசி நடக்கும் ஓரங்க நாடகம் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். அதுபோல் ஓர் நாடகம். முதலில் நான் சென்ற பொழுது பல்லக்கு தூக்கி என்று ஓர் நாடகம். எனக்குப் புரியவில்லை. இதனை எழுதி அரங்கேற்றுபவர் ஓ பக்கங்கள் புகழ் ஞானியாகும். அவரிடம் “புரியவில்லை. எழுந்து போய்விட்டேன் “ என்று சொன்னேன். அதனைத் தொடர்ந்து ஒரு நாடகம் வருமாம் ’நாங்க’ – இது நாடகத்தின் பெயர் அதனை நான் பார்த்திருக்க வேண்டுமாம். அது புரியவில்லை என்று நான் சொன்னால் என் மூளைத் திறனையே சந்தேகப்பட வேண்டியிருக்கும் என்று சொல்லிவிட்டார்.

ஆஹா, என் திறனைக் குறைத்து மதிப்பிடுவதா என்ற ஆணவம் தலை தூக்கியது. மின்தமிழ் சுபா வந்த பொழுது அவர்களையும் கூட்டிக் கொண்டு நாடகம் பார்க்கச் சென்றேன். ஒன்பது பிரச்சனைகள் . ஒவ்வொன்றும் ஒருவரால் எடுத்துக் காட்டப்பட்டது. மேடை அலங்காரம் கிடையாது. குறைந்த விளக்குகள். ஒருவர்தான் பேசுவார். அந்தப் பிரச்சனைகளை உணர வைத்ததில்தான் சிறப்பு. ஒவ்வொன்றும் அருமையாகச் செதுக்கப்பட்டிருந்த்து. அவர்களின் உரையாடல்கள் நம்மை ஒவ்வொரு காட்சியையும் காண வைத்தது. வசன்ங்கள் எழுதுவது பெரிதல்ல. அது சிறக்க பேசுகின்றவர் குரலில் கொடுத்த ஏற்ற இறக்கங்கள்தான் சொல்லுக்கு சக்தி கொடுத்த்து. கூத்துப் பட்டறையின் சிறப்பு அது..கலைஞரின் வசன்ங்கள் சிவாஜியின் குரலில்தான் அதிகச் சிறப்பைப் பெற்றது.

இப்பொழுது நாம் நாடக மேடயைக் காண்போம்.
பிரச்சனைகளில் ஒன்று ஓர் இளைஞனுக்குக் காதலி கிடைக்கவில்லை என்பது. அவன் மனக் குறைகளைக் கேட்டவுடன் சிரிப்பதா அல்லது வேதனைப்படுவதா என்ற தவிப்பு பார்வையாளர்கள் எல்லோருக்கும் வருவதைத் தவிர்க்க முடியாது. ஒன்பதும் ஒன்பது சிறுகதைகள். அர்த்தமுள்ள கதைகள். அந்தக் காதலின் தவிப்பில் பிறந்ததுதான் இந்தத் தொடர். முடிந்தவரை நாம் சிந்திப்போம். முயற்சிகள் செய்வோம். இன்று நம்மிடையே இருக்கும் சில வாழ்க்கைப் பிரச்சனைகளில் இன்றியமையாததும் கூட. கதை வடிவில் வருவதால் படிக்க எளிமையாக இருக்கும். சிந்தனையும் தானாக ஓடிவரும். இது ஒர் கன்னி முயற்சி. பார்க்கலாம்.

நான் கணினி கற்றுக் கொண்டதே ஒரு கதை. எனக்கு 67 வயதில் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். இப்பொழுதும் கொஞ்சம்தான் தெரியும்.ஐந்து வருடங்களுக்கு முன்னால் தமிழில் எழுதக் கற்றது மட்டுமே கூடுதல். தமிழ் கற்கவும் முதன் முதலில் முத்தமிழ் குழுமத்தில் சேர்ந்தேன். என்னைத் தமிழ் படிக்கச் சொன்னது, முத்தமிழில் சேர்ந்து எழுதச் சொன்னது எல்லாவற்றிற்கும் செல்வன்தான் காரணம். நானும் செல்வனும் பொன்னியின் செல்வன் குழுமத்தில் சந்தித்தவர்கள். எழுதுவதை நிறுத்தி நாட்களாகிவிட்ட்து என்று அவனிடம் புலம்பினேன். முதலில் குழுமத்தில் எழுத ஆரம்பித்தால் சீக்கிரம் எழுத வந்துவிடும் என்று அந்தப் பிள்ளை சொன்னான். அவனால்தான் கணினியில் என் எழுத்துப் பணி தொடகியது.

ஆரம்பத்திலேயே ஓர் அனுபவம். கூகிள் அரட்டை அரங்கம் சேர்த்துக் கொண்டேன். ஆரம்பத்தில் முத்தமிழ் உறுப்பினர்கள் யாரென்று தெரியாத காலம். ஒருவன் வந்து தன் பெயரைச் சேர்த்துக் கொள்ளச் சொன்னான். நானும் சேர்த்துக் கொண்டேன். உடனே அரட்டைக்கு அவன் வந்துவிட்டான். அந்தக் காட்சியை நீங்களும் கண்டு ரசிக்கவும்

ஹை
ஹை, நீ யார்
நானா, உன் பூர்வ ஜென்மத்து காதலன்
உன் வயது என்ன?
ஏன் வயசை கேட்கறே. எனக்கு 27 வயது
அய்யோ, நீ ஏன் ரொம்ப லேட்டா செத்தே?

அடுத்த சந்திப்பில் தொடர்வோம். நீங்களும் கற்பனை செய்து கொண்டிருங்கள்.

தொடரும்

படத்திற்கு நன்றி :

http://www.greencheekconure.net/love-birds/

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காதல் உலகம்

  1. திருமதி. சீதாலட்சுமி அருமையான தொடர் ஒன்றை துவக்கியுள்ளார். ஒரு கேள்விக்கு பதில் நற்றிணையிலிருந்து:காதல் என்ற சொல்லுக்குத்தான் சரியான அர்த்தம் என்ன? காதலில் காமம் உண்டென்றும் காமத்தில் காதல் இல்லாமல் இருப்பதுவும் எல்லோரும் கூறிவருவதும் தெரிந்ததுவே. காதலிலும் அன்பின் ஐந்திணையும் கைக்கிளை, பெரும் திணையும் உண்டா? ஊடல் உண்டு என்று தெரியும்.ஊடலின் பரிசு கூடல். திருவள்ளுவர் சொன்னது.நற்றிணை: 97 வது பாடல்: முல்லை திணை:பாடியவர்: மாறன் வழுதி:அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா     எவ்வ நெஞ்சத்து எஃகெறிந் தாங்குப்     பிரிவில புலம்பி நுவலுங் குயிலினுந்     தேறுநீர் கெழீஇய யாறுநனி கொடிதே 5அதனினுங் கொடியள் தானே மதனின்      துய்த்தலை இதழ பைங்குருக் கத்தியொடு     பித்திகை விரவுமலர் கொள்ளீ ரோவென     வண்டுசூழ் வட்டியள் திரிதரும்     தண்டலை உழவர் தனிமட மகளே.
    என் உரை: விரகதாபம் கொடிது. காதலன் திரவியம் தேட விரைந்து சென்றான். கார்காலத்தில் திரும்ப வேண்டும். ஆளைக்காணோம். தலைவி தவிக்கிறாள். குயில் கூவுகிறது. நதியில் பிரவாஹம். சண்பக மலரை எடுத்துக்கொண்டு பூக்காரி வருகிறாள். காமம் பெருகி, அதன் வெப்பத்தில் கருகும் காதலி, சீதம்மா முன்னால் நின்று நியாயம் கேட்கிறாள். ஏனெனில், சீதாலட்சுமி தான் பாங்கி.இன்னம்பூரான்04 04 2012 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *