அவ்வை மகள்

சேதாரமாகும் நுண்மான் நுழைபுலம்

சென்ற பகுதியில் நாம் கண்டது: கணக்கு போடும்போது ஒவ்வொரு தனி மனித மூளையும் தனித்துவ வழியில் இயங்குகின்ற இயற்கையைப் புரிந்து கொள்ளாமல் ஆசிரியர்கள் தாம் விரும்பும் வகையில் கணிதச் செயல்பாட்டை தமது மாணவர்கள் நிகழ்த்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இதில் ஒவ்வொரு மாணவன் அல்லது மாணவியின் மூளைக்குள்ளே கணக்கு நிகழ்த்துகிற இரசாயன மாற்றங்களை – உளப்பாங்கு பேதங்களை – உணர்ச்சி நிலைகளை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை!

எனது மகன் எல்கேஜி வகுப்பில் படித்தபோது நடந்த நிகழ்ச்சி இது. சென்னையில் ஒரு பள்ளி. அவ்வப்போது பள்ளியிலிருந்து குழந்தை கொண்டு வரும் பிராக்ரஸ் ரிப்போர்ட் அட்டையை வாங்கி கையெழுத்துப் போட்டு அனுப்பிவிடுவேன் – அதில் உள்ள மதிப்பெண்களைப் பற்றி நான் கவலைப்பட வேண்டிய வயது இல்லை (வயது மூன்று மட்டுமே) என்பதால் அவ்வாறு இருந்தேன் – ஆனால், ஒரு முறை தன்னை வந்து பார்க்கச் சொல்லி டீச்சர் நாள்குறிப்பு ஏட்டில் எழுதி அனுப்பியிருந்தார். அன்று காலை தான் வெளியூர்ப் பணியிலிருந்துத் திரும்பியிருந்தேன். முதல் நாள் மாலை குழந்தை நாட்குறிப்பேட்டில், இதைக் கொண்டு வந்திருந்தான்.

பயணப் பையை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு – மடமடவெனக் குளித்து, வீட்டுக்குக் கட்டிக்கொள்ளும் எளிய சேலையில் சமையல் – வேலை மற்ற வேலை – குழந்தையைக் கிளப்பும் வேலை என பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தபடியே குழந்தையின் புத்த்தகப் பையைச் சரி பண்ண எடுத்த போது இந்தக் குறிப்பைப் பார்த்தேன். எதையும் தாமதிக்கப் பிடிக்காதவள். கடிகாரத்தைப் பார்த்தேன்!

நேரமாகி விட்டது- துணியை மாற்றிக் கொள்ளலாமல், அதே பழைய சேலையோடு – எவ்வித அலங்காரமுமின்றி குழந்தையை டூவீலரில் கூட்டிக்கொண்டு பள்ளி சென்றேன்.

“டீச்சரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டு, குழந்தை எப்படிப் படிக்கிறான் எனக் கேட்டேன்.

நான் கேட்ட மாத்திரம் அந்த டீச்சர் தாளிதக் கடுகாய் வெடித்தார்

உங்க பையன் என்னாத்தப் படிக்கிறான்? அஞ்சக் கூட ஒழுங்கா எழுதத் தெரியல! பிராக்ரஸ் ரிபோர்ட் அட்டையைக் கூட நீங்க ஒழுங்காப் பாக்கறதில்ல இல்லையா? வீட்டில நீங்க என்னா பண்றீங்க? பார்க்கக் கூடாதா ப்ராக்டிஸ் கொடுக்கக் கூடாதா? உங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க முடியலேன்னா டியூஷன் அனுப்பலாமே! ஆப்டர் ஸ்கூல் நாங்களே கூட டியூஷன் ஆபர் பண்றோமே!”

சரி, நான் உங்களிடம் சிலவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமா? என்றேன்.

ம்ம் – ஒரு நிமிஷம் – இதோ டியூஷன் டீடெய்லஸ் என்று ஒரு ரோஸ் கலர் தாளைப் படக்கென நீட்டினார் – இதிலேயே நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம்! என்றார்.

நான் என்ன சொல்ல வருகிறேன் – கேட்க வருகிறேன் என்பதைக் கூடக் கேட்க விருப்பமில்லாமல் – நான் ஏதோ அவர் சொன்ன டியூஷன் யோசனையை ஏற்றுக்கொண்டு, என் பிள்ளையை – டியூஷன் சேர்க்க முடிவு பண்ணி அதன் விவரத்தைக் கேட்பதாக எண்ணி அவர் மேலே போய்க் கொண்டிருந்தார்.

கொஞ்சம் பொறுங்கள் நான் கேட்க வந்ததே வேறு என்றேன்.

எரிச்சலுடன் என்னைப் பார்த்தார்!

மட மடன்னு சொல்லுங்க எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. இன்னும் ரெண்டு பேரன்ட்ஸ் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க! பெல் அடிக்க டயம் ஆகுது.

என் எரிச்சலைக் காட்டிக் கொள்ளாமல் அவரைப் பார்த்துப் புன்னகைத்தபடியே, “என் குழந்தைக்கு அஞ்சு போடத் தெரியவில்லை என்றீர்களே அதைப்பற்றிய விவரம் வேண்டும்!” என்றேன்

அஞ்ச நேராப்போடாம எதிர்ப் பக்கமாகப் போடறான், நான் எத்தனையோ முறை போட்டுக் காட்டிட்டேன். தப்பாத்தான் எழுதறான்! சொல் பேச்சைக் கேக்கறதே இல்ல! நீ என்ன சொல்றது நான் என்ன கேக்கறதுன்னு அவன் செய்யறதைத்தான் செய்யறான்!

சரி, அவன் எவ்வாறு ஐந்தைப் போடுகிறான் என்று போட்டுக் காட்டுங்கள்! என்றேன்.

மீண்டும் பொரிந்தார் –

அவன் நோட்புக்கை நீங்க பாக்கறதே இல்ல! வெறுமனே வரீங்க?

இப்படிப் போடறான் உங்கப் பையன் அஞ்ச!

தாளில் அவர் போட்ட அந்த ஐந்தைக் கண்டு எனக்கு சிரிப்பு வந்தது – சிரித்து விட்டேன்

என் சிரிப்பைக் கண்டு அவர் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

நான் சீரியஸாகப் பேசறேன் – சிரிக்கறீங்க – நல்ல பேரன்ட்டு தான்!

என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்:

என் கையில் அரைகுறையாக மாவு வேறு ஒட்டிக் கொண்டிருந்தது – காலையில் அவசர அவசரமாக இயங்கியதன் உபயம் – குழந்தையுடன் பள்ளிக்கு அவசரமாய்ப் புறப்பட்டதன் விளைவு.

“அந்த ரோட்டுத் திருப்பத்தில டிபன் கடை போட்ருக்கறது நீங்க தானே!” “பாக்க அப்பாவி மாதிரி இருக்கீங்க – சிரிக்கறதைப் பாரு! நாங்க என்ன இங்க பொழுது போகாம ஸ்கூல் கட்டிவெச்சிட்டு உக்காந்திருக்கறோமா?” “இப்பப் புரியுது ஒங்க புள்ள ஏன் இப்படி அலட்சியமாக இருக்கான்னு – நான் பேசறேன் இவ்ளோ அலட்சியமா சிரிக்கிறீங்க!” — இரைந்தார்

அதை விடுங்கள் விஷயத்துக்கு வருவோம்! அவரை இடைமறித்தேன்

குழந்தை இவ்வாறு ஐந்தைப் போடுகிறான் என்கிறீர்கள் — இதைப் பெற்றோர்கள் பார்க்க வேண்டுமா ஆசிரியர் பார்க்க வேண்டுமா? பெற்றோர் ப்ராக்டிஸ் கொடுக்க வேண்டுமா ஆசிரியர் கொடுக்க வேண்டுமா? – எனக்குக் குழப்பமாய் இருக்கிறது.

“விட்டால் பேசிக்கொண்டே இருப்பீங்க போல் இருக்கே!” “உங்கப் பிரச்சினைக்குத்தான் சொல்லிட்டேனே பையனை டியூஷன்ல போடுங்கன்னு!” மேலும் இரைந்தார் அந்தப் பெண் ஆசிரியை,

இதப் பாருங்க மிஸ் – எனக்குப் புரியல அதனாலத் தான் கேக்கறேன் இதைச்சொல்லுங்க – இப்ப கிளாஸ்ல இப்படி அஞ்சப் போடறதா சொல்றீங்க இல்லையா – டியூஷன் வர்றதால இது மாறிடுமா? ட்யூஷன்ல வேற ஏதாவது மாடல்ல சொல்லித்தரப் போறீங்களா? – குழைந்தேன்

அவர் முகத்தில் கொஞ்சம் கருப்பு தட்டியது – இருப்பினும் தொடர்ந்தார் – டியூஷனே ப்ராக்டீசுக்குத்தான்! ஒங்களைப் போல பேரன்ட்சுக்கு நாலட்ஜ் போதாது சொல்லிக்கொடுக்க – நாங்க டியூஷன்ல கான்சண்ட்ரேட் பண்ணி எழுதவைப்போம், வெரல் படியறமாதிரி ரிபீடட் ஆக எழுத வச்சி ப்ராக்டீஸ் குடுக்கணும் – நீங்க அதச் செய்ய வெக்க மாட்டேங்க – எங்க கிட்ட தான் பசங்க அடங்குவாங்க!

அப்ப அடக்கி வெக்கிறதுக்குத்தான் டியூஷன்! சரிதானே!

மேலே என்ன சொல்வது எனப் புரியாமல் அவர் தடுமாறினார்! இருப்பினும் கடுமையாய்த் தொடர்ந்தார் – “இது தாங்க இங்க ரூல்ஸ் – இங்கப் படிக்க வற்ற கொழந்த படிப்புல வீக்னா நாங்க ஒடனே பேரன்ட்டைக் கூப்பிட்ருவோம் – டியூஷன்ல போடுவோம்!”

ஒரு எண்ணை வேறு மாதிரியாக எழுதுவது எப்படி படிப்பில் வீக் என்று ஆகும்?

“உங்களுக்கெல்லாம் நல்லது சொன்னாப் பிடிக்காது – இங்க யூகேஜிக்குப் பின்னாடி – பர்ஸ்ட் ஸ்டாண்டர்டுக்கு — ரிட்டன் டெஸ்ட் வெச்சி தான் அட்மிஷன் குடுப்பாங்க – அப்ப அவதிப் படுங்களேன்!”

மிஸ் ப்ளீஸ் கொஞ்சம் என்னைப் பேச விடுங்களேன்! – நான்

“ஒங்களோட விதண்டாவாதம் செய்ய நான் தயாரில்லை! எங்க ரூல்சை சொல்லிட்டேன்! விருப்பப்பட்டு செய்யறதுனா செய்யுங்க! நீங்க போகலாம்!” சார் நீங்க வாங்க! – அடுத்த பெற்றோரைக் கூப்பிட்டார் அந்த ஆசிரியை.

இல்லை! நான் உங்களிடம் பேசணும்! என் பிள்ளை படிப்பில் வீக் இல்லை!

டிஸ்லெக்சியா, டிஸ்க்ராபியா, டிஸ்கேல்குலியா – இவற்றைப் பற்றிக் கேள்வி பட்டிருப்பீர்களே! என்றேன். அவருக்கு மேலும் கோபம் வந்தது – ஏதோ ஏசினார். அப்போது பள்ளி மணிஅடிக்க – அந்த சத்தத்தில் சரியாய்க் கேட்கவில்லை – படிப்பு சொல்லிக் கொடுக்கறது இட்லி சட்னி வேலையா என்று சொன்னது கேட்டது மற்றவை விளங்கவில்லை!”

மணியடித்ததால் நான் வெளியேறினேன். ஆனால் மனம் அங்கேயே நிலைத்தது! அங்குள்ள பிஞ்சுக் குழந்தைகளுக்காக மனம் மிகவும் வேதனைப்பட்டது.

கல்வி எனும் பெயரில் கூடாரங்களில் அடைக்கப்பட்டு – சேதாரப் படுத்தப்படும் குழந்தைகளின் நுண்மான்நுழைபுலம் கண்டு நெஞ்சம் கலங்கினேன்!

வாசகர்களே! நாம் அடுத்த பகுதிக்குச் செல்வதற்கு முன் உங்களுக்கு ஒரு சிறு வேலை கொடுக்க விழைகிறேன். தயவு செய்து, கீழ்க்காணும் வலைத்தள முகவரிகளுக்குச்சென்று, அங்குள்ள வீடியோக்களைப் பாருங்கள்:

 

http://www.youtube.com/watch?v=dtmrXsWRKZE&feature=related

http://www.youtube.com/watch?v=IEpBujdee8M&feature=related

http://www.youtube.com/watch?v=0XsJXyJWuzY&feature=related

http://www.youtube.com/watch?v=rhygmurIgG0&feature=related

 

மேலும் பேசுவோம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “செரியாத கல்வியின் சுமை (10)

  1. இது மிகவும் தேவையான அலசல். நான் பாலகனாக இருந்தபோது முதல் ஆசிரியை திருமதி. லீலா  ஷண்முகம். அவருக்கு இருந்த பொறுமை, இக்காலத்தில் இருப்பதில்லை. எனினும், எனக்கு மறுபக்கமும் தெரியும். ஏனெனில், குடும்பத்தில் ஆசிரியர்கள் உண்டு. பிரச்னை யாதெனில், ஆசிரியருக்கு பயிற்சி போதாது. அநேக பெற்றோர்களுக்கு டிஸ்லெக்சியா போன்ற மாற்றுத்திறனை கையாளும் முரை தெரியாது. இது பற்றி விழுப்புணர்ச்சியுள்ள இங்கிலந்திலேயே, சில வருடங்கள் முன்னால், இந்த விஷயம் உச்ச நீதி மன்றம் (House of Lords) வரை போய், சிறுவர்களுக்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்தது. அத்தகைய மூன்று தீர்வுகளை ஆய்வு செய்து ஒரு வியாசம் எழுதினேன், ஐந்து வருடங்கள் முன்னால், இருக்கிறதா என்று தேடிப்பார்க்கிறேன்.இன்னம்பூரான் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *