சக்திசக்திதாசன்

அன்பினியவர்களே !

பதிவுகள் என்பது காலத்தின் கண்ணாடியாகும். விஞ்ஞானம் காற்றுக் கதியில் வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கும் இக்கால கட்டத்திலே நிகழ்காலத்தின் பதிவுகள் பல வழிகளில் பதிவு செய்யப்படுகின்றன. நடப்பனவற்றை அப்படியே பதிவு செய்து சரித்திர உண்மைகளாகக் (Historical facts) காட்டும் வகை ஒருபுறம், கொஞ்சம் சாயத்தைப் பூசி தமக்குக் ஏற்ற வகையில் (Spining the facts) படம் பிடித்துக் காட்டும் வகை ஒருபுறம், நடந்த நிகழ்வினைக் கொஞ்சம் உண்மைகளைச் சுருக்கி (Economical with the truth) சொல்லும் வகை ஒரு புறம் என பலவகையில் இப்பதிவுகள் நிகழந்த வண்ணம் இருக்கின்றன.

இவ்வகையிலே நடக்கும் நிகழ்வுகளை அவற்றின் நிஜத்தன்மையை இழந்து விடாத வகையில் அந்நிகழ்வின் என் பார்வையின் நிழல் விழும் கோணத்தில் என் மனதைத் தாக்கிய சில நிகழ்வுகளை வாராவாரம் வல்ல‌மை மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இத்தொடரின் நோக்கம்.

இவ்வெழுத்துலகத்தின் சிகரத்தைத் தொட்டவர்கள் பலர் இவர்கள் மத்தியிலே நான் ஆழியில் விழும் ஒரு சிறு மழைத்துளியே 1 எவ்வாராயாகினும் அம்மழைத்துளி அவ்வாழியை நிரப்புவதில் தனக்கும் ஒரு சிறுதுளிப் பங்கிருந்தது என்று எண்ணிக் கொள்வது போல இக்காலத்தின் கண்ணாடி காட்டும் பிம்பத்தில் இப்புலம்பெயர் தமிழனின் ஒளித்துகளும் விழுகிறது என்னும் நம்பிக்கையில் உங்கள் முன்னே நான்.

மிகவும் பரபரப்பாக இங்கிலாந்து தொலைக்காட்சி, பத்திரிக்கைகள், வானொலிக் கருத்தரங்குகள் என அனைத்து ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருவது இங்கிலாந்து காவல்துறையின் மீது சுமத்தப்பட்டிருக்கும் நிறவேற்றுமைக் குற்றச்சாட்டாகும்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடந்த மூன்று நாள் தெருவோர வெறியாட்டம் பற்றி வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். இந்த மூன்றுநாள் கலவரத்தில் ஈடுபட்ட ஒருவரெனக் கருதப்பட்ட ஒருவரைக் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி பெக்டன் (Beckton) எனும் இடத்தில் வைத்து மூன்று போலீஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளார்கள்.

இச்சம்பவத்தின் போது அக்கைதுசெய்யப்பட்ட கறுப்பு இன மனிதரை இனத்துவேஷ நோக்கம் கொண்ட வார்த்தைகளால் ஒரூ போலீஸ் உத்தியோகத்தர் திட்டியதை தனது கையடக்கத் தொலைபேசியில் (Mobile phone) அக்குற்றம் சுமத்தப்பட்ட நபர் படமாக்கியுள்ளார். அப்படத்தின் அடிப்படையில் லண்டன் போலீஸார் மீது இனத்துவேஷக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இதன் எதிரொலியாக அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரிகளும் அவ‌ருடன் சென்ற மற்றும் இரு காவல்துறை அதிகாரிகளும் குற்றச்சாட்டுக்கு இலக்காயுள்ளதோடு அவர்களது பணிகளில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து இலண்டன் போலீசார் மீது பலதிசைகளிலும் இருந்து சரமாரியாகத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதன் மத்தியில் கடந்த இரு தினங்களுக்குள் இலண்டன் மெட்ரோபாலிட்டன் போலீஸ் உதவி அத்தியட்சகர் (Assistant commisionar of London Metropolitan Police) கிரேஹ் மஹ்கே (Craig Mackey ) இவர்கள் தவிர்ந்த ஏனைய ஏழு போலீஸ் உத்தியோகத்தர்கள் மீதும் இனத்துவேஷம் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என உத்தியோகப்பூர்வமான ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்றைய இலண்டன் மாநகரமானது பல இனங்களும் கலந்து வாழும் ஒரு சமூகமாகக் காட்சியளிக்கிறது. இங்கிலாந்து அதுவும் குறிப்பாக இலண்டன் மாநகரம் வெள்ளையர்களைப் பெரும்பான்மையாகவும், கிறித்துவ மதத்தை பின்பற்றுவோரைப் பெருவாரியாகவும் கொண்ட ஒரு நாடும், நகரமும் என்று கூறமுடியாத வகையில் இங்கு பல்வேறு இன, மத, மொழி பேசும் மக்கள் கலந்து வாழ்கிறார்கள்.

இந்நாட்டைச் சேர்ந்த பூர்வீக மக்கள் எனச் சொல்லப்படும் வெள்ளையர்கள் அனைவருமே நிறவேற்றுமை காட்டுபவர்களாக இருந்திருதால் இங்கு இத்தனை பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களும் மகிழ்ச்சியாக, கெளரவமாக வாழ்வது முடியாத காரியம்.

அதுமட்டுமின்றி இங்கிலாந்து பொலீஸ் படையைச் சேர்ந்த அனைவருமே நிறவெறி பிடித்தவர்களாயிருந்தால் நிச்சயம் எமது வாழ்க்கை இங்கே வேறுவிதமாகத்தான் அமைந்திருக்கும்.

உன்மையை மறைத்து விட்டு நாம் சார்ந்த சமூகத்தை மட்டும் தூக்கிப்பிடிப்பதற்கான வாதமாக மட்டும் போலிசாரின் நிறவேற்றுமைக் குணாம்சத்தைக் காட்ட முடியுமே ஒழிய அது நியாயமான. நீதியான ஒரு பார்வையாக இருக்க முடியாது.

நான் இந்த நாட்டினிலே 37 வருடங்கள் வாழ்ந்து விட்டேன். வாலிப வயது முதல் முதுமையின் ஆரம்பத்தில் அடிவைக்கும் பல்வேறு சூழல்களுக்கிடையில் எனது வாழ்வை ஓட்டி வந்திருக்கிறேன்.

இக்காலகட்டத்திலே இங்கிலாந்துப் போலீசாரைப் பல்வேறு கோணங்களில் பார்த்திருக்கிறேன்.

எப்படி என்கிறீர்களா?

எனக்கு இழைக்கப்பட்ட குற்றத்தை நான் கொடுத்த புகாரின் மேல் விசாரிக்க வந்தவர்களாக, சாலையில் வாகன ஓட்டும் விதிகளை ஓரிரு தடவைகள் மீறியமைக்காக என்னை விசாரித்தவர்களாக, தெருவோரம் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் போலீசார் சம்பந்தப்பட்டிருந்த போது அதை நான் வேடிக்கை பார்த்தவன் எனும் வகையில் என்று பல்வேறு கோணங்களினூடாக போலீசாருடன் சம்பந்தப்பட்டிருக்கிறேன்.

நான் சம்பந்தப்பட்ட அத்தனை நிகழ்வுகளிலும் அவர்கள் நீதியான, நியாயமான, கெளரவமான முறையில், மனிதன் எனும் வகையில் எனக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகளை மதிப்பவர்களாகத்தான் அவர்கள் என் கண்களில் பட்டிருக்கிறார்கள்.

அதுசரி அப்புறம் ஏனிந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன என்று கேட்கிறீர்களா?

நடைபெற்றதாகக் கூறப்படும் நிகழ்வுகள் நடைபெறவில்லை என்பதல்ல வாதம். அதுதவிர இனத்துவேஷமோ அன்றி நிறவெறிப் பாகுபாடோ தண்டிக்கப்படமுடியாமல் விட்டுவிடக்கூடிய குற்றங்களல்ல. அதைப்புரிந்தவர்கள் யாராயிருந்தாலும் பாகுபாடின்றி தண்டிக்கப்பட வேண்டியதுதான் நியாயம். ஆனால் சில போலீசாரின் தவறுகளினால் இங்கிலாந்து காவல்துறை மீது மிகைப்படுத்தப்பட்ட தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றனவா எனபதுவே கேள்வியாக இருக்கிறது.

இன்றைய இங்கிலாந்துப் போலீஸ் படையில் போலீஸ் இலாகாவின் கொள்கையாக சிறுபான்மை இனத்தவர் எனக் கருதப்படும் வேற்று இனத்தவர், நிறத்தவர்கள் அவரவர் விகிதாச்சாரங்களுக்கேற்ப அவர்களைப் பிரதிநிதிப்படுத்துவதற்காக இணைக்கப்பட்டு பணிபுரிகிறார்கள் என்பதுவே யதார்த்தம்.

இத்தகைய ஒரு விவாதம் இலண்டன் வானொலி ஒன்றிலே நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது செவிமடுக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அதிலே கலந்து கொண்ட ஒரு போலீஸ்காரர் ஆசிய இனத்தவர். அவர் பேசுகையில் எமது இங்கிலாந்துப் போலீஸ் படை உலகத்தாரேலேயே மிகவும் மதிக்கத்தக்க வகையில் கடமையாற்றி வருகிறது. அத்தகைய ஒரு உன்னதமான போலீஸ் அணியின் சிலரது முட்டாள்தனமான நடவடிக்கைள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமாகினும் அனைத்துப் போலீசார் மீதும் சேற்றை வாரி இறைக்கும் பணியை ஊடகத்துறையினர் செய்வது தகாது என்று கூறினார்.

அது மட்டுமின்றி போலீஸ் படையில் தான் புரிவது ஆசிய இனத்தவரான தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிகவும் பெருமையளிக்கும் ஒரு விடயம் என்றும் கூறினார்.

சிறுபான்மை இனத்தவர்களில் பெரும்பான்மையான கறுப்பு இனத்தவர் மற்றும் ஆசிய இனத்தவர் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளில் போலிசார் கடமையாற்றும் போது மிகவும் சிக்கலான சூழ்நிலைகளைப் போலீசார் சந்திக்க வேண்டியுள்ளது என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் தம்மீது சுமத்தப்படும் குற்றங்களில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காக பலசமயங்களில் இச்சிறுபான்மையினத்தவர்கள் போலீசாரைத் தூண்டும் வகையில் நடந்து கொள்வதுடன் மிகவும் இலகுவாக தமது நிறவேற்றுமையைக் காரணம் காட்டி குற்றங்களைப் போலீசார் பக்கம் திருப்பி விட முனைகிறார்கள் என்றார்.

என் பார்வையின் கோணம் கண்டு நான் இங்கிலாந்துப் போலீசாருக்காக வாதாடுகிறேன் என்று யாரும் தவறுதலாக நினைத்து விடக்கூடாது.

இங்கிலாந்து போன்ற பல்வேறு கலாச்சாரங்களை உள்ள‌டக்கிய சமுதாயத்தில் அனைத்து மக்களும் சட்டத்தின் மீதும், அதிகாரத்தின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டுமாயின் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள் அனைத்துத் தரப்பினரையும் கண்காணிக்க வேண்டியது அவசியமே.

ஆனால் இத்தகைய சட்டங்களின் உதவி கொண்டு சட்டத்திற்குப் புறம்பான குற்றவியல்களிலிருந்து தப்பிக்க முயன்றால் அதே சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டும் பணியை யாருமே செவ்வனே செய்ய முடியாது.

அதுதவிர போலீசார் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை அது எப்படி வெளிவந்தது என்னும் பாகுபாடின்றி நியாயமான முறையில் விசாரிக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிடும் அளவிற்கு இந்நாட்டில் நிலவும் ஜனநாயக அதிகாரம் எத்தனையோ நாடுகளில் எண்ணிப்பார்க்க முடியாத ஒன்று என்பதும், மேற்படி போலீசார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் பெரும்பான்மையான்வற்றை சுமத்தியவர்கள் அதே போலீஸ் படையணியில் பணிபுரியும் மற்றைய சக உத்தியோகத்தர்கள், தமது கண்முன்னே நடக்கும் தவறான செய்கைகளை அதைப் புரிபவர்கள் தமது சகாக்களாக இருந்தும் தட்டிக்கேட்க வேண்டும் என்னும் உன்னத நோக்கம் கொண்டவர்கள் என்பதையும் எண்னிப்பார்க்கையில் நாமும் இந்நாட்டில் ஒரு அங்கமாக இருக்கிறோம் என்பதில் பெருமை கொள்வதன்றி வேறு ஒரு உணர்வு கொள்ள‌ முடியாது

புலம் பெயர்ந்து வாழும் தமிழன் என்னும் பார்வையில் இந்நாட்டில் நான் வாழ்க்கையில் சட்டத்திற்குட்பட்ட முறையில் முன்னேறுவதற்கு எனது நிறமோ அன்றி எனது மதமோ அன்றி எனது மொழியோ என்றுமே தடையாக இருந்ததில்லை.

எனது மனதுக்குத் தெரிந்த உண்மைகளை உண்மையாக எழுதுவதே எனது லட்சியமாகும். அதன் வழியில் எனது பார்வையின் கோணத்தில் மிதக்கும் உண்மை நிலைகளை பகிர்ந்து கொண்டேன்.

பிறந்த நாடும், தாய்மொழியும் எமக்கு எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் எமக்கு வாழ்வாதாரத்தை அளித்துக் கருத்துச் சுதந்திரமும் கொடுத்த புலம்பெயர் நாடும் என்பதே யதார்த்தம். சமுதாய நீரோட்டத்திலே எம்மை முழுமையாக இணைத்துக் கொண்டாலொழிய வித்தியாசங்களின் வேகத்தை எம்மால் விவரிக்க முடியாது விவரிக்கும் அருகதையும் எமக்குக் கிடையாது.

பாகுபாட்டை எமது மனங்களில் பாராட்டிக் கொண்டு மற்றவர்கள் தமது பாகுபாட்டை மற‌ந்து விட வேண்டும் என்று எண்ணுவது எவ்வகையில் நியாயமாகும் ?

இது என் பார்வையின் ஒரு கோணமே ! இதுதான் சத்தியமல்ல இது என் மனதுக்கு தோன்றிய சத்தியம்

நாமும் வாழ்வோம், மற்றவரையும் வாழ விடுவோம். உண்மைகளை உண்மையாகப் பகிர்ந்து கொள்வோம்.

மீண்டும் அடுத்த மடலுடன்
சக்தி சக்திதாசன்
லண்டன்

படத்திற்கு நன்றி :

http://www.woodlands-junior.kent.sch.uk/customs/questions/london/crime.htm

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ….. 1

  1. மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் எழுதப்பட்ட இந்த கட்டுரையை வரவேற்கிறேன். சற்றும் மிகை இல்லை. நான் ஐந்தாறு வருடங்கள், இங்கிலாந்தின் மக்கள் ஆலோசனை மையத்தில் தன்னார்வப்பணி செய்த காலத்தில் அடுத்த அலுவலகம் போலீஸ் ஸ்டேஷன். இந்தியாவில் போலீஸ் சகவாசம் செய்ய அஞ்சுகிறோம். இங்கிலாந்தில், அவர்கள் தெருமுனை நண்பர்கள். ஒரு நிகழ்வு.*ஒருவர் குடித்து விட்டு கலாட்டா செய்ததற்கு, எச்சரிக்கப்பட்டார். ஆனால், போலீஸ் ஸ்டேஷன் வாசலில் தர்ணா. நான் பேச்சுக்கொடுத்தேன். உள்ளிருந்த வந்த போலீஸ்காரர், எங்கள் இருவருக்கும் தேநீர் வழங்கிவிட்டு, ஜாலியாக பேச்சில் கலந்து கொண்டார், சில நிமிடங்கள் மட்டும். சில வருடங்களுக்கு முன் இம்மாதிரி நான் எழுதிய கட்டுரை, ஹிந்து இதழில் வந்தது.இன்னம்பூரான்12 04 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *