அமெரிக்காவில் பனிப் புயல்

2

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

ஜனாதிபதி கிளிண்டனுக்கு உதவி ஜனாதிபதியாக இருந்த ஆல் கோர், உலகம் இப்போது வெப்பமாகிக்கொண்டிருக்கிறது என்பதை வலியுறுத்த ஒரு ஆவணப் படம் எடுத்து, நோபல் பரிசைப் பெற்றார். ஆனால் எல்லோரும் அந்தக் கருத்தை ஒப்புக்கொள்ளவில்லை. பூமி என்னும் கோள் அவ்வப்போது வெப்பமடையும், அவ்வப்போது குளிர்ச்சி அடையும் என்று சில விஞ்ஞானிகளே கூற, பூமி இப்போது வெப்பமடைய ஆரம்பித்திருக்கிறது என்பதைப் பலர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது உலகின் பல பாகங்களிலும் இயற்கை அன்னை செய்துவரும் செயல்களைப் பார்த்தால் பூமியில் சில விபரீத மாற்றங்கள் நடந்து வருவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

snow storm in US

ஆஸ்திரேலியாவில் பெரிய வெள்ளம் ஏற்பட்ட சிறிது காலத்திற்குள்ளேயே பெரிய புயல் வீசியிருக்கிறது. மணிக்கு 180 மைல் வேகத்தில் வீசிய இந்தப் புயல், நிறைய சேதத்தை விளைவித்திருக்கிறது. ஹைத்தி உட்பட பல இடங்களில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.  இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்திருக்கிறது. இவை எல்லாம் சென்ற ஒரு வருடத்தில் நடந்தவை.

அமெரிக்காவில் பல இடங்கள், வரலாறு காணாத அளவு குளிர்ந்திருக்கின்றன. இந்த இடங்கள் குளிரத்தானே செய்கின்றன, அந்த இடங்களின் வெப்பம் கூடவில்லையே என்று உலகம் வெப்பமாகிக்கொண்டிருக்கிறது என்னும் கொள்கையை நம்பாதவர்கள் நையாண்டி செய்கிறார்கள். இதுவும் தட்பவெப்ப நிலை மாற்றத்தில் (climate change) ஒரு பகுதி என்பதை இவர்கள் எப்போது உணரப் போகிறார்கள்?

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் இதுவரை காணாத அளவிற்குப் பனி பெய்திருக்கிறது. அங்கு 2011 வருடம் பிறந்ததிலிருந்து ஏழு தடவை பனிப் புயல் வீசியிருக்கிறது. இப்போது 2011 பிப்ரவரி ஒன்றாம் தேதி ஆரம்பித்து நாட்டின் பல மாநிலங்களில் பனிப் புயல் வீசியிருக்கிறது.  டெக்ஸாஸ் மாநிலத்தில் ஆரம்பித்து  மிஸௌரி, ஒஹையோ, இல்லினாய் என்று அமெரிக்காவின் மத்தியப் பகுதி மாநிலங்களிலிருந்து வடகிழக்கு மாநிலங்களான கனெட்டிகட், மாசசூசெட்ஸ், நியுஹேம்ஷையர், வெர்மாண்ட் ஆகிய மாநிலங்களிலும் பனிப் புயல் தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறது.

snow storm in US
இந்தப் புயலினால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் அமெரிக்காவின் நடுமேற்குப் பகுதி (Midwest) என்று அழைக்கப்படும் (இந்தப் பகுதியில் குடியேறிகள் குடியேறியபோது இதுதான் நாட்டின் கடைசி நிலப்பரப்பு என்று நினைத்து இதற்கு மேற்குப் பகுதி என்று பெயரிட்டனர். அதற்குப் பிறகும் நிலப்பரப்பு இருக்கிறது என்று அறிந்த பிறகு இதை நடுமேற்குப் பகுதி என்று அழைத்தனர்.) ஒஹையோ, இல்லினாய் என்ற மாநிலங்கள்தான். நாங்கள் வசிக்கும் சிகாகோ, இல்லினாய் மாநிலத்தில் மிக்சிகன் ஏரிக் கரையில் இருக்கிறது. ஏரியின் கரையில் இருப்பதால் குளிர்காலத்தில் எப்போதுமே அதிகக் குளிரும் பனியும் இருக்கும்.

சிகாகோவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பனிப் புயல் வீசப் போகிறது என்று ஜனவரி ஒன்றாம் தேதியே வானொலியிலும் தொலைக்காட்சியிலும் அறிவித்துவிட்டார்கள். பெருங்காற்று நகரம் (windy city) என்று அழைக்கப்படும் சிகாகோவில் நிறையப் பனியோடு பலத்த காற்றும் வீசும் என்றும் தேவையென்றாலொழிய யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துகொண்டே இருந்தார்கள். பிப்ரவரி ஒன்றாம் தேதி செவ்வாக்கிழமை பகல் மூன்று மணிக்குப் புயல் ஆரம்பிக்கும் என்று சொல்லியிருந்தும் அன்று பகல் ஒரு மணிக்கே பனி பெய்ய ஆரம்பித்துவிட்டது.

snow storm in US
தேவையில்லாமல் வெளியே போக வேண்டாம் என்று எச்சரித்திருந்தும் எல்லாக் கம்பெனிகளும் எல்லா டிபார்ட்மெண்ட் கடைகளும் தங்கள் அலுவலர்களை வேலைக்கு வரும்படி கூறியிருந்தன. அமெரிக்காவில் ஒரு நாள் வேலை நடக்காவிட்டாலும் பல கோடி டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுவிடுமாம்! அமெரிக்கப் பொருளாதாரம் தேங்கிவிடுமாம்! 45 மைல் தூரம் கார் ஓட்டிக்கொண்டு போய் பக்கத்து ஊரில் வேலை பார்த்துவரும் ஒரு பெண், பனிப்புயல் வரும் என்ற அறிவிப்பைக் கேட்டு அன்று வீடு திரும்பாமல் அவளுடைய அலுவலகத்திற்கு அருகிலேயே ஒரு ஓட்டலில் தங்கிவிட்டு மறு நாள் வேலைக்குப் போய்விட்டு அதன் பிறகு வீடு திரும்பியிருக்கிறாள். முந்தைய நாள் வீடு திரும்பியிருந்தால் பனிப் புயலால் வேலைக்குப் போக முடியாமல் போய்விடுமோ என்பதால் இம்மாதிரிச் செய்திருக்கிறாள். ஒரு நாள் வேலைக்கு வராவிட்டாலும் வேலையை இழந்துவிடும் வாய்ப்பு அமெரிக்காவில் இருக்கிறது. அமெரிக்காவிற்கு என்ன அவசரமோ! இப்படி அவசரமாக எங்கே போய்க்கொண்டிருக்கிறதோ!

சிகாகோவிலும் நகரின் முக்கிய கடை வீதிகளில் உள்ள பெரிய கடைகளிலும் அலுவலகங்களிலும் வேலை பார்ப்பவர்கள் வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை அன்றும் வேலைக்குப் போயிருக்கிறார்கள். பகல் ஒரு மணியிலிருந்தே பனி பெய்ய ஆரம்பித்ததால் சில கம்பெனிகள் அலுவலர்களைச் சீக்கிரமே வீட்டிற்குப் போக அனுமதித்திருக்கின்றன. இவர்கள் எல்லாம் ஊரின் பல மூலைகளிலிருந்து வந்தவர்கள். ஏரியை ஒட்டியிருக்கும் லேக் ஷோர் ட்ரைவ் (Lake shore drive) என்னும் நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பியிருக்கிறார்கள்.

snow storm in US

இந்த சாலையில் சிறிய சாலைகளை விட வேகமாகப் போகலாம். வேகமாகப் போவதற்காக அமைக்கப்பட்ட இந்தச் சாலையில் அன்று பனி பெய்துகொண்டிருந்ததாலும் அதிக எண்ணிக்கையில் கார்கள் போய்க்கொண்டிருந்ததாலும் வழக்கத்தை விட குறைந்த வேகத்தில்தான் கார்கள் போக முடிந்தது. ஆனால் எப்படியாவது வீட்டை அடைந்துவிடலாம் என்று நினைத்த கார்ப் பயணிகளுக்கு சாலையின் ஒரு இடத்தில் கார் ஒன்று விபத்தில் மாட்டிக்கொண்ட செய்தி கிடைத்திருக்கிறது. பின்னாலும் போக முடியாமல் முன்னாலும்போக முடியாமல் இவர்கள் அங்கேயே மாட்டிக்கொண்டார்கள். சுமார் ஆயிரம் கார்கள் இப்படி மாட்டிக்கொண்டனவாம்.

எல்லோரையும் அங்கங்கே தங்கள் கார்களை விட்டுவிட்டு தங்களோடு வரும்படி, பனியை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நகர் ஊழியர்கள் அழைத்திருக்கிறார்கள். கார்களை அங்கேயே விட்டுவிட்டு வரச் சம்மதித்தவர்கள் நகர ஊழியர்கள் மூலம் வீடுவந்து சேர்ந்தார்கள். தங்கள் கார்களை அப்படியே ’அம்போ’ என்று விட்டுவர விரும்பாதவர்கள் பல மணி நேரங்கள் – சிலர் பத்து மணி வரை கூட – தங்கள் கார்களிலேயே இருந்திருக்கிறார்கள். வெளியே பனி குவிய ஆரம்பித்திருக்கிறது. உஷ்ணநிலை சைபர் டிகிரிக்கும் கீழே. சிலர் கார்களில் பெட்ரோல் தீர்ந்ததும் (காரின் எஞ்சினை ஓட விட்டால்தான் காரருக்குள் வெப்பம் இருக்கும்) ஊழியர்களோடு வீடு திரும்ப இசைந்திருக்கிறார்கள்.

snow storm in US

ஆட்கள் எல்லோரையும் காப்பாற்றிய பிறகு, கார்களைப் பனி நிரம்பிய சாலையிலிருந்து பெரிய லாரிகளின் மூலம் இழுத்துவந்து, ஆறு பெரிய மைதானங்களில் நிறுத்தியிருக்கிறார்கள். எந்தக் கார் எங்கே இருக்கிறது என்பதற்கு எந்த விளக்கமும் நகர ஊழியர்கள் வைத்துக்கொள்ளவில்லை.  கார்ச் சொந்தக்காரர்கள், அந்த இடங்கள் ஒவ்வொன்றுக்கும் போய் தங்கள் கார் அங்கு இருக்கிறதா என்று பார்த்துத் தங்கள் காரைக் கொண்டுவர வேண்டியதாயிற்று. ஆயிரம் கார்கள் இந்த நெடுஞ்சாலையில் தேங்கிவிட்ட பிறகுதான் இந்த நெடுஞ்சாலையை மூடினார்களாம். புதன்கிழமை அதிகாலை மூடிய இந்த நெடுஞ்சாலையைப் பனியை முழுவதுமாக அகற்றிய பிறகு, வியாழன் காலை நான்கு மணிக்குத்தான் மறுபடி போக்குவரத்திற்குத் திறந்துவிட்டிருக்கிறார்கள்.

இப்படி இந்த நெடுஞ்சாலையைக் கவனித்துக்கொண்டிருந்ததால் நகரின் மற்ற சிறிய சாலைகளைக் கவனிக்க முடியாமல் போனதால் பலரால் எங்கும் போக முடியவில்லை. இரண்டு அடி பனி, பல தெருக்களில் இருந்ததால் யாராலும் காரை, அவை நிறுத்தியிருந்த சாலையோரத்திலிருந்து எடுக்க முடியவில்லை. இப்படி நிறையப் பனி பெய்தபோது அதைச் சமாளிக்க, சிகாகோ நகர மேயர் வேகமாகக் காரியம் செய்யவில்லை என்று யாரும் அவரைக் குறை சொல்லமுடியாது. ஏனெனில் அவருடைய பதவிக் காலம் இந்த மாதம் 22ஆம் தேதியோடு முடிகிறது. மீண்டும் மேயர் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். மேயர் பதவிக்குப் போட்டியிடுவதாகத் திட்டம் வைத்திருந்தால் இன்னும் நன்றாககத் தன் கடமையைச் செய்திருப்பாரோ என்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள்.

இவர் இதை விடச் சிறப்பாக இதைக் கையாண்டிருக்கலாம் என்பது ஒரு புறம் இருக்கட்டும். 1967இல் இதே மாதிரி ஒரு பெரிய பனிப் புயல், சிகாகோவில் ஏற்பட்டது. அப்போது இந்த அளவு வானிலை ஆராய்ச்சி வளர்ந்திருக்கவில்லை. அதனால் பெரிய பனிப் புயல் வரும் என்று எதிர்பார்க்கவுமில்லை. ஆனால் இப்போது அப்படியில்லை. வானிலை ஆராய்ச்சி எவ்வளவோ முன்னேறியிருப்பதால் ஓரளவு துல்லியமாகப் பனிப் புயல் பற்றிக் கணித்திருந்தார்கள். பெரிய பனிப் புயலாக இருக்கும் என்று தெரிந்திருந்தது. அப்படி இருக்கும்போது அமெரிக்கா இந்த இரண்டு நாட்களும் வேலை செய்துதான் ஆக வேண்டுமா?

snow storm in US

எல்லோரையும் – நிறுத்த முடியாத சேவைகளில் (essential services) இருப்பவர்களை விடுத்து – வெளியில் செல்ல வேண்டாம் என்று எச்சரித்திருந்தால் அத்தனை கார்களில் மாட்டிக்கொண்டவர்களையும் அவர்களுடைய கார்களையும் காப்பாற்றிய நேரத்தில் மற்ற சாலைகளில் கவனம் செலுத்தியிருக்கலாம். டிபார்ட்மெண்ட் கடைகளும் கம்பெனிகளும் தங்கள் அலுவலர்களையும் வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லியிருந்தால் எத்தனையோ பேர்களுடைய நேரமும் உழைப்பும் மிஞ்சியிருக்கும்.

எப்போதோ படித்த, அமெரிக்கா பற்றிய ஒரு நகைச்சுவைத் துணுக்கு ஞாபகத்திற்கு வருகிறது. “முதலிடத்தைப் பிடிக்க அமெரிக்கா வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எதில் முதலிடம் என்றுதான் அமெரிக்காவுக்கே தெரியவில்லை”.

================================

படங்களுக்கு நன்றி – http://news.yahoo.com

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அமெரிக்காவில் பனிப் புயல்

  1. படிக்கவே கஷ்டமா இருக்கு ?? போற போக்கை பார்த்தால் வட இந்தியாவிலும் இந்நிலை வருமோ ??

  2. எங்கள் மகளும் சிகாகோ, நேப்பர்வில்லில் தான் இருக்கிறாள்.
    நல்ல வேளையாக மருமகன் அன்று டவுன் டவுனுக்கு வேலைக்குப் போகவில்லை.
    வியாழன் அன்று பள்ளியிருந்தும் பேரனால் போக முடியவில்லை. ஃப்ளூ வந்துவிட்டது.
    இதே போல எத்தனை குடும்பங்களோ.:(

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *