முகில் தினகரன்

விஞ்ஞான வயலில்
எலக்ட்ரானிக் விதை தூவிக்
கம்ப்யூட்டர் பயிர்களைக்
கணக்கின்றிப் பிரசவித்தோம்
ஆனாலும்
அடிவயிற்று அல்சராய்…
நடு முதுகுத் தேமலாய்
மூட நம்பிக்கைகள்
முன்னை விட உக்கிரமாய்…

ஐம்பது வீடுகளை
இடித்துத் தனக்கோர்
அற்புத மாளிகை கட்ட
ஆஸ்தி சேர்ககிறான் வாஸ்து நிபுணன்!
பிரம்மாவின் பினாமி போல்
பிலாக்கணம் பாடும் இவனால்
உடல் வீட்டுக்கு வாஸ்து கூறி
உயிர்ப்பறவையின் ஆயுள் கூட்ட முடியமா?

நம்பிக்கை வாளும் முயற்சிக் கேடயமும்
பறித்துத் தராத வெற்றிக்கனியை
ராசிக்கல் மோதிரம் பெற்றுத் தருமாம்
தொலைக்காட்சி தோறும் தொல்லைக் காட்சிகள்
கம்ப்யூட்டர் மனிதன் பின்னோக்கிச் சென்று
கற்கால மனிதனாய் நிறம் மாறுகிறானே

எண் கணித ஏமாற்று வித்தையில்
வரதராஜன் வருத்தராஜனாக..
நாகராஜன் நாக்குராஜனாக..
நியூமராலஜி சூத்திரத்தை
நிர்வாணப் படுத்தி விட்டு
உழைப்பு வஸ்திரத்தை
உடுத்தியிருந்தால் இவர்களின்
வெறுமை வறுமையடைந்திருக்கும்

சிந்தனையில் சீழ் பிடித்த
சிதறுகாய் மனிதனுக்கு
மூடநம்பிக்கை முடக்கு வாதத்தால்
மூளைச் செல்களின் சேற்றுப்புண் நாற்றம்

மனிதா…..
வான் மழை வாஸ்து பார்த்ததில்லை
சூரிய சந்திரன் சகுனம் சந்தித்ததில்லை
மண் மகள் விளைய
எண் கணிதம் வாசித்ததில்லை
இயற்கையின் இயல்புக்கு இனியாகிலும்
செயற்கைச் சாஸ்திரம் இயற்றாதே!

 

படத்திற்கு நன்றி:http://naturalwellbeingmission.com/numrology.htm

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *