தமிழ்த்தேனீ

விலங்கு பூட்டிய கையோடு ஒரு விலங்கைப் போலிருந்த அந்தத் தீவிர வாதியிடம் ஒரு நிருபர் கேட்டார். “இந்தச் சின்ன வயசுலே அது எப்பிடி இத்தனை மக்களை வெடிகுண்டால் சாகடிச்சுட்டுச் சட்டத்தோட பிடியிலே மாட்டிகிட்ட அப்புறமும் சிரித்துக்கொண்டே ஏதோ விண்வெளிப் பயணம் போறா மாதிரிக் கையை ஆட்டிகிட்டே போக உங்களாலே எப்பிடி முடியுது?”

“நாங்க மட்டுமா இப்பிடி இருக்கோம்? நம்ம நாட்டைச் சுரண்டற அத்தனை பேரும் மாட்டிக்கிட்டா இப்பிடித்தான் கையை அசைக்கிறாங்க, தொலைக் காட்சிச் செய்தியிலெ அவங்களைப் போட்டுக் காட்றாங்க, ஏதோ கதாநாயகன் மாதிரி ஆக்கறாங்க. அவங்களைப் பாத்துப் பாத்து எங்களுக்கும் பழகிப் போச்சு. ஓ! குற்றம் செஞ்சுட்டு மாட்டிகிட்டா இப்பிடித்தான் இருக்கணும் போல இருக்குன்னு நாங்களும் பழகிட்டோம்.

ஆனா அரசியல்வாதிங்க, பெரிய பணக்காரங்க, மாட்டிகிட்டா அவுங்களை எப்பிடியும் வெளிலே கொண்டாந்துடுவாங்க வக்கீலுங்க அப்பிடீங்கற நம்பிக்கையிலே சந்தோஷமாக் கையை ஆட்டிட்டுப் போறாங்க, எல்லாமே பணம். நாட்டுலே பணம் இருந்தா எது வேணுமானாலும் செய்யலாம், மாட்டிக்காம தப்பிக்கலாம், மாட்டிகிட்டாலும் தப்பிக்கலாம்.

அப்பிடீங்கற நிலைமை இருக்கிற வரைக்கும் உங்கள் கேள்விக்கு அர்த்தமே இல்லே, அவுங்களை அதாவது குற்றம் செஞ்சவங்களை நிச்சயமாச் சட்டம் தண்டிக்கும் அப்பிடீங்கற உத்திரவாதம் இல்லே. இந்த நிலைமையினாலேதான் குற்றவாளிகள் அதிகமாயிட்டாங்க.

இன்னிக்கு எத்தனை பேரு செத்தாங்க, நேத்து எத்தனை பேரு செத்தாங்க? நாளைக்கு எத்தனை பேரு சாவப் போறாங்க? இதெல்லாம் எனக்குத் தேவையில்லாத செய்தி, எங்களை அப்பிடிப் பழக்கி இருக்காங்க. இதெல்லாம் பாத்துப் பாத்தே மரத்துப் போனவங்க நாங்க, என்னா பாக்கறீங்க புரியலையா! மரத்துப் போனவங்கன்னு சொன்னேன். யாரு காரணம் இதுக்கெல்லாம்? எனக்கு எத்தனை மொழி தெரியும்னு உங்களுக்குத் தெரியுமா? நான் எவ்ளோ படிச்சிருக்கேனு உங்களுக்குத் தெரியுமா? எவ்ளோ நாடு சுத்திப் பாத்திருக்கேன் தெரியுமா? மொத்தத்துலே நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா? எதுவும் தெரியாது, ஆனா என் தகுதியே உங்களுக்கு தெரியாது. எனக்கு ஒரு நல்ல வேலை கொடுக்க மாட்டீங்க, முன்னேற விடமாட்டீங்க.

ஆனா எங்களை யாரோ உபயோகப் படுத்திக்கிறாங்க, அவுங்க எங்களுக்கு எல்லா வசதியும் செஞ்சு தராங்க, எங்களை மதிக்கிறாங்களோ இல்லையோ மதிக்கிறா மாதிரி நடத்தறாங்க, எங்களை மாதிரி இருக்குறவங்களை நீங்க மதிச்சிருந்தா நாங்க இப்பிடி ஆயிருப்போமா..? நாங்க என்ன பொறக்கும் போதே தீவிரவாதியாவா பொறந்தோம்?
நேத்து ஒரு ஆளு அவன் குழந்தைக்குப் பொம்மை வாங்கித்தந்தான் பாத்தேன். என்னா பொம்மை வாங்கித்தந்தான் தெரியுமா? போலீஸ்காரன் பொம்மை. அந்தப் பொம்மையிலே ஒரு கை விலங்கு இருந்துது. அதை எடுத்து அந்தக் குழந்தை கையிலே போட்டு அழகு பாக்குது. அந்தக் குழந்தைக்குத் தெரியலை அது அவமானம்னு. குற்றம் செஞ்சவங்க கையிலெ போடற விலங்குன்னு தெரியலை.

அந்தக் குழந்தையோட அப்பனுக்குத் தெரியும் இல்லே, அவனுக்கு அறிவில்லே..? அவன் இல்ல சொல்லிக் கொடுக்கணும் இதெல்லாம் போடக்கூடாதுன்னு, அவன் வேடிக்கை பாத்துச் சிரிச்சிகிட்டு இருக்கான், பிஞ்சுக் குழந்தைங்க மனசிலேயே தீவிர வாதத்தை விதைக்கிறாங்க இப்போல்லாம், விளையாட்டிலேருந்து படிப்பு வரைக்கும்.

எங்க பக்கத்து வீட்டிலேருந்து, ‘என்னக் கொல்லுடா, என்னை ஷூட் பண்ணுடா’ அப்பிடின்னு சத்தம் கேட்டுப் பதறிப் போயிப் பாத்தா, அங்கே கம்ப்யூட்டர்லே விளையாடிக்கிட்டு இருக்காங்க. எக்ஸ் பாக்ஸ்னு ஒரு விளையாட்டு, அதுலே ஒருத்தனை ஒருத்தன் சுட்டுக்கொல்றதுதான் விளையாட்டே.

எப்பிடி வரும் எங்களுக்கு அவமானம், எப்பிடி வரும் எங்களுக்கு இரக்கம்? எப்பிடி வரும் எங்களுக்குப் பரிதாபம், எப்பிடி வரும் எங்களுக்குப் பாசம், நேசம் அன்பு இதெல்லாம்? வராது.. நாங்க இப்பிடித்தா இருப்போம், காரணம் நாங்க இல்லே நீங்கதான், ஆமாம் நீங்கதான். உங்க வளப்புதான் சரியில்லே.

நீங்க தொலைக்காட்சியிலே வர நிகழ்ச்சியைப் பாக்கும்போது, நீங்க மகிழ்ச்சியா இருக்கும் போது, நீங்க தூங்கும் போது, உங்களைத் தொந்தரவு செய்யாம இருந்தா அது போதும், அவ்ளோதான். பசங்க எப்பிடிப் போனா உங்களுக்கு என்ன கவலை?

நீங்க என்னைக் கேள்வி கேக்கறீங்க, வெதை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணு முளைக்குமா,,? எல்லாருக்குமே குற்றம், குற்றவாளிங்க தீவிரவாதம், தீவிரவாதிங்க எல்லாமே பழகிப் போச்சு, மக்களுக்கே மனசு மரத்துப் போச்சு.
எங்களுக்கு மரத்துப் போகாம என்னா ஆகும், நாங்க வளக்கப்பட்ட விதமே அப்பிடி. சின்ன வயசுலெ பலவிதமான கனவுகளை வளத்துகிட்,டு படிக்கணும்.. படிச்சுப் பெரிய ஆளா வரணும், நம்ம நாட்டைக் காப்பாத்தற வீர சாகசங்கள் எல்லாம் செய்யணும், காவல் படையிலே சேரணும், விமானி ஆகணும், அப்பிடியெல்லாம் கனவு கண்டேன், எதாவது நடந்திச்சா? இல்லே நடக்கலே .. எதுவுமே நடக்கல. இந்த நாட்டுலே படிக்கக் காசு வேணும். காசு இருந்தாத்தான் படிக்கவே முடியும், அப்புறம் எப்பிடி ஏழைங்க படிக்கறது, நேர்மையான குடிமகனா வாழறது?”

அந்த நிருபர் தலை குனிந்தார். தலைகுனிந்தது அவர் மட்டுமல்ல!

 

படத்திற்கு நன்றி:http://www.shutterstock.com/pic-72050623/stock-photo-close-up-of-hands-handcuffed-arrested-for-questioning.html

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “விலங்கு

  1. யதார்த்தைதை அப்பட்டமாய் வார்ப்படம் செய்திருக்கிறீர்கள்!
    திரை அணியாது –

    நிறைமெய் என்றே பொய்க்கும்
    திரைகளின் நூலறுத்து
    நித்திரைகளின் முகபடாம் கிழித்து
    முத்திரையாய்!!

    வாழ்த்துக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *