– விமலா ரமணி
(2010 ஜூன் 23 முதல் 27 வரை கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் படிக்கப்பெற்ற ஆய்வுக் கட்டுரை)


பெண்ணியம் (Feminism) என்பது, நம் இந்திய தேசத்தைப் பொறுத்தவரை மிகப் பெருமைக்குரிய சொல். பெண்மைக்கு நமது வரலாற்றிலும், இலக்கியத்திலும் தனிச் சிறப்பு உண்டு.

ஓடி வருகையிலே கண்ணம்மாவின் மழலையை ரசித்த பாரதி, கன்னிப் பருவத்திலே அந்த இளவயதின் அழகை ரசித்தவன், தன் பாட்டில் கலந்து கொள்ளும் பத்தினிப் பெண்ணாக அவளுக்கு ஏற்றம் தந்தவன், உலக முழுவதிலும் பராசக்தி வடிவமாக அவளைத் தரிசித்தான்.

Feminism என்கிற ஆங்கிலச் சொல் Femina என்கிற இலத்தின் சொல்லைத் தழுவி வந்தது. 1894இல் வெளிவந்த ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில்தான் முதன் முதலில் இந்தச் சொல் இடம் பெற்றது. இனி இந்திய வரலாற்றில் பெண்மையின் காலக் கட்டங்களை மூன்று காலங்களாகப் பிரிக்கலாம்.

(1) வேத காலம், (2) இடைப்பட்ட காலம், (3) தற்காலம் இதனை மூன்று அலைவரிசைகளாகப் பிரிக்கிறார்கள். முதல் அலைவரிசை 19ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது.இரண்டாம் அலைவரிசை 1960க்கும் 70க்கும் இடைப்பட்ட காலம். மூன்றாம் அலைவரிசை 1970 முதல் தற்காலம் வரை.

வேத காலம்:

பெண்ணியம் என்பது சமூக கலாசார, பொருளாதார வளர்ச்சியில் எழுந்த பெண்மை பற்றிய சமுதாய விழிப்புணர்வு. இந்த உணர்வு ஆதி காலத்தில், வேத காலத்தில் முழுமையாக இருந்தது.

பெண்மை தனிச் சிறப்பு பெற்றிருந்த காலம். மைத்திரேயி, கார்க்கி போன்ற பெண் தத்துவ ஞானிகள் இருந்த காலம். ஆணுக்கு இணையாகத் தர்க்க வாதத்தில் பங்கு பெற்றுப் பெண்கள் சிறந்து விளங்கிய காலம். சங்க காலத்தில் ஔவை, அங்கவை, சங்கவை, காக்கைப் பாடினியார் போன்ற பெண்பாற் புலவர்கள் பெருமைப்படுத்தப்பட்ட காலம். பாணினி, விறலி போன்ற பெண் இசைக் கலைஞர்கள் வாழ்ந்த காலம்.

ஆதிசங்கரருக்கும், மண்டல மிஸ்ரருக்கும் நடந்த விவாதத்தில் மண்டல மிஸ்ரரின் மனைவி நடுவராக இருந்து தீர்ப்பு வழக்கினார். என்ன தீர்ப்பு தெரியுமா? ஆதிசங்கரரின் வாதம்தான் சரியானது என்று! முதலாவது ஆண்கள் சபையில் ஒரு பெண் நடுவர் பொறுப்பு ஏற்றது. இரண்டாவது தன் கணவரை எதிர்த்துத் தீர்ப்பு வழங்கப்பட உரிமை கொடுக்கப்பட்டது.

ருக்வேதம் சொல்கிறது – பெண்களுக்கு வயது வந்தபின் தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்தது. ருக்வேதமும், உபநிஷத்துக்களும் கல்வி அறிவு பெற்ற பெண்களின் பெயர்களை வலியுறுத்துகிறது. (மைத்ரேயி, கார்க்கி) மனுஸ்மிருதி தோன்றிய பிறகுதான் பெண்மையின் பெருமை கீழிறங்கியது. முகலாய படையெடுப்பு, பிறகு வந்த கிருஸ்துவ ஊடுருவல் பெண்மையின் தரத்தை சேதப்படுத்தியது. ஜைன மதத்தில் பெண்களுக்கு மதச் சார்பான உரிமைகளும் சுதந்திரங்களும் இருந்தன என்றாலும் இந்தியப் பெண்கள் பல தடைகளையும், பல மனச் சிறைகளையும் அனுபவித்தார்கள். 6ஆம் நூற்றாண்டில் பால்ய விவாகம் ஆரம்பமானது. பெண்மை வீழ்ச்சியடைந்த கால கட்டங்கள் இவை.

இடைக்காலம்:

கௌதமர் காலத்தில் நியோகம் என்று சொல்லப்படுகிற விதி தடை செய்யப்பட்டது. அதாவது ஒரு பெண், தன் கணவன் அல்லாது அந்நிய ஆடவனுடன் இணைந்து குழந்தை பெற்றுக்கொள்வதாகும். (இன்றும் சில ஆதிவாசிகள் தம் சகோதரரின் மனைவியைத் தன் மனைவியாக ஏற்கின்றனர். பஞ்ச பாண்டவர்கள் கதையும் இத்தகையதே. மஹாபாரதத்தில் பாண்டு இறந்த பிறகு அரச வாரிசுக்காகக் குந்தி ஐவரிடம் பிள்ளை பெற்றுக்கொண்ட புராணக் கதை உண்டு. கௌடில்யர் என்கிற சாணக்கியர், அரசியல் நிபுணர். தந்தை வழி சொத்தில் பெண்ணுக்கு உரிமை இல்லை என்றாலும் ஸ்திரிதனா என்கிற ஒன்றை ஆரம்பித்து வைத்தார். இது திருமணத்திற்குப் பெண்களுக்குக் கொடுக்கப்படும் சொத்தாகும். இதுதான் இன்று வரதட்சிணை என்ற பெயரில் ஆட்சி செலுத்துகிறது. வாய்க்காலில் வருகிற வரதட்சிணை நீருக்காகப் பொய்த் தாகத்தோடு பொலிக் காளைகளாகக் காத்திருக்கும் பல இளைஞர்களையும் அவன் பெற்றோர்களையும் உருவாக்கிவிட்டது.

அதன்பின் மனுஸ்மிருதி. இது கி.மு.500 முதல் கி.பி. 500க்குள் எழுதப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பெண் ஆணுக்கு எந்நிலையிலும் அடிமையே என்று மனு நீதி கூறியது. குழந்தைப் பருவத்தில் தந்தைக்கும், மங்கைப் பருவத்தில் கணவனுக்கும், கணவன் இறந்த பிறகு மகனுக்கும் அடிமை என்கிறது மனுநீதி.

உடன்கட்டை ஏறும் சதிப்ரதா, பால்ய விவாகம் போன்றவை சமுதாயச் சட்டங்களாக மாறிய காலம் அது. அந்தக் காலக்கட்டத்தில்கூட குந்தி, திரௌபதி, மண்டோதரி, தாரா போன்றோர் உடன்கட்டை ஏறவில்லை. முகலாயப் படையெடுப்பால் பர்தா அணியும் வழக்கம் இந்திய சமூகத்திலும் பரவியது. ராஜபுத்திரர்களிடையே இது அதிகமாகக் காணப்பட்டது. இந்தியாவில் சில இடங்களில் கோவிலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தேவதாசிகள் பிறகு பாலியல் பலாத்காரத்திற்கும் உட்படுத்தப்பட்டனர்.

பலதார பழக்கங்களும் ஏற்பட்டு, பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர். இந்து க்ஷத்திரிய அரச பரம்பரையில் இது, அரச கௌரவமாக அங்கீகரிக்கப்பட்டது. அர்ஜுனன், தசரதன் போன்றவர்களுக்கு இருந்த மனைவிமார்கள் எண்ணிக்கை மிக அதிகம்.

ரஸியா சுல்தான் என்கிற பெண்மணி டெல்லியை அரசாண்ட ஒரே பெண்மணி. துர்க்காவதி என்ற பெண் தன் உயிரையும் போர்க்களத்தில் பறிகொடுத்து, வீர மரணம் அடைந்த பெண் அக்பரை அகமத் நகரில் 1590இல் எதிர்த்தாள். சாந்த் பீபீ, ஷாஜகானின் மனைவி மும்தாஜ், அரேபியா பாரசீக இலக்கியங்களைக் கற்று அறிந்தவர். ஜஹாங்கீரின் மனைவி நூர்ஜஹான் முகலாய சக்கரவர்த்தினியாக இருந்தார். அக்பரின் மனைவியருள் ஒருவரான ரீமா சுல்தான் பாரசீகக் கவிஞராக இருந்தார். முகலாய இளவரசிகள் ஜஹானாரா, ஜுவுன்னிசா சிறந்த கவிதாயினிகள். ஔரங்கசீப் மகள் ஜெபுன்னிசா கல்வி கற்றவள். சிவாஜியின் தாய் ஜிஜிபாய் இந்தியாவில் சிறந்த அரசியாகக் கருதப்பட்டார். பக்த மீரா போன்ற பக்தைகள் அவதரித்தது இந்தக் காலக்கட்டத்தில்தான். குருநானக் போன்ற மகான்களால் பக்தியில் ஆண், பெண் பேதமின்றி வலிமை பெற்றார்கள். பெண்களுக்கு எதிரான தடைகளைப் போக்கி, பஜன்களைப் பாட பெண்களுக்கும் ஆண்களுக்கு இணையான தகுதி உண்டென்பதை நிரூபித்த காலக்கட்டம் இது. அசோகனின் மகள் சங்கமித்ரா, இலங்கை சென்று, பௌத்த கருத்துகளைப் பரப்பினாள்.

அந்நிய அரசனால் சிறைப்பிடிக்கப்படுவதைத் தடுக்கத் தீக்குளித்தல், கணவன் இறந்த பிறகு உடன்கட்டை ஏறுதல் போன்ற பல சமுதாயக் கொடுமைகள் பெண்களைக் கீழ்மைப்படுத்திய காலக்கட்டம் இது. ரூப்கன்வர் என்கிற ராஜஸ்தானிய பெண், இறந்த தன் கணவனோடு எரிக்கவேண்டி நடுவீதியில் கொடூரமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நம் காலக்கட்டத்தில் நிகழ்ந்த கொடுமை, தேவதாசி முறையால் (10ஆம் நூற்றாண்டில்) ஏற்பட்டது… கோவிலின் கர்ப்பக் கிரஹச் சிலை வடிவத்தில் இருக்கும் கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் நடனப் பெண்களைப் பற்றியது. இது. கல்கி அவர்களின் சிவகாமியின் சபதத்திலும் இந்தச் சம்பவம் இடம்பெறுகிறது. மாறிக்கொண்டே இருப்பதுதான் சமுதாய வளர்ச்சி. ஆனால் அந்த வளர்ச்சி எதன் அடிப்படையில் என்பதைப் பார்க்க வேண்டும்.

பல படையெடுப்புகளைச் சந்தித்த நமது பாரத தேசம், பல நாகரீகங்களை ஏற்றுக்கொண்டதில் வியப்பில்லை. அலெக்ஸாண்டர் படையெடுப்பால் கிரேக்க நாகரீகம் பரவியது. முகலாயர்கள் படையெடுப்பால் பாரசீக நாகரீகம் பரவியது. ஆங்கிலேயர்களால் ஆங்கில கலாசாரம் பரவியது. இத்தனை இருந்தும் இன்னமும் நமது பண்பாடும், கலாசாரமும் முற்றிலும் அழிக்கப்படாமல் உயிரோடு இருக்கிறது என்றால் அது நமது பாரதத்தின் தனி மதிப்பு.

பெண்மைக்கு மெல்ல மெல்ல முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தது இடைக்காலத்தின் பிற்பகுதி. பெண்ணைப் பெண்ணாக மதிக்கச் சமுதாயம் மெல்ல மெல்ல கற்றுக்கொண்ட காலகட்டம். English Common Law 12ஆம் நூற்றாண்டில் வந்தது. ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு கணவனைச் சார்ந்து விடுகிறாள். மனைவியின் அனுமதியின்றி அவனால் அவள் சொத்துகளை விற்க முடியாது. இந்தச் சட்டத்தால் பெண்ணுரிமைக்கு மெல்ல விதை ஊன்றப்பட்டது. பெண்கள் தங்கள் குரலை உயர்த்த வேண்டிய காலக்கட்டம் வந்தது. நமது சட்டங்கள் ஆங்கிலேயர்களின் பரிசு. எனவே, 18ஆம் நூற்றாண்டில் பெண்கள் உரிமைகள் மற்றும் சமுதாயச் சட்டம் பற்றி விழிப்புணர்வுகள் பிரான்சிலும் பிரிட்டனிலும் முக்கிய நிகழ்ச்சியானது.
1791ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாவலாசிரியரும் நாடக எழுத்தாளருமான Olemped de Gonges எழுதிய De Clarification of the Hig of women & Female Citizen என்ற புத்தகத்தில் பிரான்ஸ் புரட்சி பற்றி குறிப்பிட்டபோது, இந்தப் புரட்சி தோல்வி அடைந்தபோதும் பெண்களுக்கு தங்களின் இழி நிலைமையும், தாங்கள் பெறவேண்டிய சமுதாய அங்கீகாரத்தையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்கிறார்.

மூன்று E-க்கள் தங்களுக்குத் தேவை என்பதை பெண்கள் உணரத் தலைப்பட்ட காலம் இது.

1. கல்விச் சுதந்திரம் (Education)

2. கருத்துச் சுதந்திரம் (Emotion)

3. பொருளாதாரச் சுதந்திரம் (Economy)

18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயரின் பிரிவினைக் கொள்கைகளால் இந்திய சமஸ்தான அரசர்கள் இடையே அடிக்கடி போர் மூண்டது. திப்புசுல்தான் கிட்டூர் சமஸ்தானத்தின் மீது போர் தொடுத்தபோது மல்லராசாவின் மனைவிகளான ருத்ரம்மா, சென்னம்மா ஆகியோர் ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கவசமணிந்து போரிட்டனர். பல ஆங்கில வீரர்களைக் கொன்றார்கள். 1857இல் சிப்பாய்க் கலகம் வெடித்தபோது நாடெங்கும் ஆங்கிலேயர்களுக்குப் பலத்த எதிர்ப்பு தோன்றிய போது ஜான்சியைச் சேர்ந்த லட்சுமிபாய் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினார். டெல்லி பகதூர்ஷாவின் மனைவி ஜுனத்மஹால், அயோத்திராணி அஸரத் மகால், சிவகங்கையைச் சேர்ந்த வேலுநாச்சியார் போன்றோர் ஆங்கிலேயர்களை எதிர்த்த வீராங்கனைகள்.

19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய கொள்கை, கிருஸ்து மத எழுச்சி இவற்றின் காரணமாக இந்துக்கள் தம் மதத்தைக் காக்கவேண்டி விழிப்புணர்வு பெற்றனர்.

வங்கத்தை சேர்ந்த ராஜாராம் மோகன்ராய் (1774 – 1855) பிரம்ம சமாஜத்தை நிறுவி, பெண்கள் சுதந்திரம், சம உரிமை, விதவை விவாஹம் போன்ற சீர்திருத்தக் கொள்கைகளை முன்வைத்தார். இவரின் ஆன்மீக வாரிசு கேசவசந்தர சென் (1838 – 1884) பெண் கல்வியை ஆதரித்து விக்டோரியா பெண்கள் பள்ளியைத் தொடங்கினார். 1872இல் சிவில் விவாகச் சட்டம் இயற்றப்பட்டு பெண்ணின் திருமண வயது 14 என்று நிர்ணயிக்கப்பட்டது. பலதார மணத்தைத் தண்டணைக்கு உரியதாக்கியவர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் (1820 – 1891) என்ற முற்போக்குச் சிந்தனையாளர். 1855-58க்கு இடையே 40 பெண்கள் பள்ளிகளைத் தொடக்கிவைத்தார். விதவை விவாஹச் சட்டம் இவரின் முயற்சியால் நிறைவேற்றப்பட்டது. சுவாமி தயானந்த சரஸ்வதி, ஆர்ய சமாஜத்தைத் தோற்றுவித்து ஆண், பெண் இருபாலருக்கும் சம வாய்ப்பு அளிக்கத் தீவிரமாக பாடுபட்டார்.

கோபால கிருஷ்ண கோகலே (1886 – 1915) இந்திய விடுதலைக்கும், பெண்கள் விடுதலைக்கும் பாடுபட்ட பெரும் தலைவர். மதச் சீர்திருத்தவாதியான இராமகிருஷ்ண பரமஹம்சரும் (1833 – 1886) அவரது சீடரான விவேகானந்தரும் (1862 – 1902) தம் பிரசாரங்களால் பெண்கள் பற்றிய ஒரு உயர்ந்த மதிப்பீட்டை மக்கள் முன் வைத்தனர். விவேகானந்தரின் சீடரில் ஒருவரான நிவேதிதா தேவி, விவேகானந்தர் உதவியுடன் வங்காளத்தில் பெண்கள் பள்ளிகள் பலவற்றைத் தொடங்கினார். ஆக, பெண்களிடையே இந்துமத உணர்வோடு சமுதாய விழிப்புணர்வும் கல்வி பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டன. ருக்மா தேவி என்ற பெண் மருத்துவர், படிப்புக்காக சமூக மரபுகளை எதிர்த்துப் போராடினார். சேவாசதன் என்ற அமைப்பு, இந்தியாவில் புகழ்பெற்ற கல்வி நிலையமாகும்.

நாடு தழுவிய ஒரு அமைப்பு தேவை என்று பாரத ஸ்திரி மகா மண்டல் என்ற ஒரு ஒருங்கிணைப்பு அமைப்பை ஏற்படுத்தினார். 1917இல் இந்தியப் பெண்கள் கூட்டமைப்பு (Women’s Indian Association (WIA)) என்றும், 1925இல் இந்திய தேசிய பெண்கள் குழு (National Council of women in India (NCWI)) என்றும் 1926இல் அகில இந்திய பெண்கள் மகாநாடு (All India Women’s Conference (AZWC)) என்றும் தோற்ற வளர்ச்சி அடைந்தன. 1917இல் இந்தியப் பெண்கள் கூட்டமைப்பின் முதல் தலைவராக ஐரிஷ் நாட்டைச் சார்ந்த அன்னிபெசண்ட் அம்மையார் இருந்தார். பெண்ணுரிமையை வற்புறுத்திய இந்த அமைப்பு, 33 கிளைகளாக வளர்ந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தியது. இவ்வமைப்பு 1930இல் மயிலாப்பூரில் அவ்வை இல்லம் என்கிற பெண்களுக்கான அனாதை இல்லத்தைத் தொடங்கியது. இது அனாதை இல்லமல்ல, பயிற்சி மையம். அன்னிபெசண்ட் அம்மையாரின் மறைவுக்குப் பிறகு டாக்டர் திருமதி முத்துலட்சுமி ரெட்டி, இதன் தலைவராகப் பணி புரிந்து, பல ஆண்டுகள் சேவை செய்தார் (இவர்தான் தேவதாசி முறையை ஒழித்தார்).

ஆங்கிலேயர் காலத்தில் 19ஆம் நூற்றாண்டில்:

ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர சந்திர வித்யா சாகர் போன்றவர்கள் பெண்மையின் பெருமைக்காகக் குரல் கொடுத்தவர்கள். 1829இல் கவர்னர் ஜெனரல் வில்லியம் Cavendish Bentinch காலத்தில் சதிப்பிரதாவை, கணவனுடன் உடன்கட்டை ஏறுதலை ஒழிக்கச் சட்டமியற்றினார். ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பெண்கள் மறுமணச் சட்டத்தை Remarraige Act 1856இல் அமல்படுத்த விதவைகளுக்கு மறுவாழ்வு கிடைக்க வழிவகுத்தார். பெண்களில் பண்டித ராமாபாய் போன்றவர்கள் இதற்கு உதவினார்கள். போபாலின் அரசிகளில் சிலரும் இதில் அடக்கம்..1917இல் பெண்களின் பங்களிப்பு பற்றி அரசியல் சமூகம் சார்ந்த அமைப்புகளில் பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்ட காலகட்டம்.

அகில இந்திய கல்வியறிவு பெற்ற பெண்களின் கூட்டத்தில் (All Inda Women’s Education Conference) 1927இல் புனாவில் நடந்த இந்த மகாநாட்டிற்கு Indian National Congress ஒத்துழைப்போடு பால்ய விவாஹத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு விவாஹ தடுப்புச் சட்டம் (சாரதா சட்டம்) நமது இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு கணிசமானது. டாக்டர் அன்னிபெசண்ட், ப்ரீதிலத்தா வாடிகர், விஜயலட்சுமி பண்டிட், ராஜகுமாரி அமித்கௌர், அஞ்சலி அம்மா, அருணா அசப்அலி, சுவேதா கிருபாளனி, தேஷ்முக் போன்றோர்.

சுபாஷ் சந்திர போஸின் தேசிய ராணுவப் படையில் பெண்கள் பிரிவில் National Army கேப்டன் லக்ஷ்மி படைத் தலைவராக இருந்தது பெருமைக்குரியது. சரோஜினி நாயுடு சுதந்திரப் போராட்ட வீரர், கவிதாயினி, இந்திய நேஷனல் காங்கிரசின் முதல் பெண் தலைவர். பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமையை அடைந்தார்.

தற்காலம் என்கிற மூன்றாவது அலைவரிசை:

சுதந்திர இந்தியாவில் எல்லாத் துறைகளிலும் பெண்கள் பங்கேற்கத் தொடங்கிய புதிய காலகட்டம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் (Article 14 & 15) இல் சம உரிமை, சம ஊதியம் போன்ற பலவற்றில் ஆண்களுக்கு இணையான இடத்தைப் பெண்களுக்கு அளித்துள்ளது. 1970இல் நடந்த சிறுமி மதுராவின் கற்பழிப்பால் குற்றப் பிரிவு, சாட்சியம் பற்றிய புதிய பிரிவுகள் இந்திய பீனல் கோடில் இணைக்கப்பட்டன. மது, பெண்களுக்கு எதிரான ஒரு சக்தியாக இருந்தது. பெண்கள் தனித் தனி பிரிவுகளாகப் பிரிந்து மது ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுவின் காரணமாக பல பாலியல் வன்முறைகள் நிகழ்வதால் அதனை எதிர்த்துத் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஹிமாசலம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ஒரிசா போன்ற பல மாநிலங்களில் மது ஒழிப்புப் போராட்டம் நிகழ்ந்தது. 1990இல் NGO க்கள் இணைந்து மகளிர் சுயஉதவிக் குழு அமைப்புக்கள் தோன்றின (SEWA – Self Employed Women Association). இவை பெண்களின் பல அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் இயக்கங்களாகச் செயல்பட்டன. மேதா பட்கர் நடத்திய நர்மதா பசோல் (நர்மதாவைக் காப்பாற்றுங்கள்) என்ற இயக்கமும் இதன் வழி பிறந்ததுதான். 2001இல் இந்திய அரசாங்கம் பெண்களின் சுயசக்தி (Women’s Empowerment) பற்றி ஒரு சிந்தனை ஏற்பட்டது.

2001இல் தேசீய பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் பெண்மையின் சுய சக்தி விழிப்புணர்வு ஏற்பட்டது. இருப்பினும் 1997இல் UNICEFஇன் அறிக்கை, வரதட்சிணைக் கொடுமையால் 5000 பெண்கள் இறக்கிறார்கள் என்கிறது. பால்ய விவாக மறுப்புச் சட்டம் 1860இல் அமுல்படுத்தப்பட்டது. இன்னமும் 40 சதவீதம் இந்தியப் பெண்கள் கிராமங்களில் இந்தக் கொடுமைக்கு ஆளாகிறார்கள். பாலியல் பலாத்காரங்கள் படித்தவர்கள், பாமரர்களிடையே தினசரி நிகழும் நிகழ்வுகளாகின்றன. பத்திரிகைச் செய்திகள் மூலம் இவைகளை நாம் அறிகிறோம்.

மகிழ்ச்சியான நிகழ்வுகளில் சில:

நியூசிலாந்து தான் பெண்களுக்கு முதன் முதலில் வாக்குரிமை வழங்கியது (1893). ஆனால் 1902இல் முதல் உலகப் போர் முடிந்த பின்தான் அமெரிக்கா, லண்டன், கனடா போன்ற நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கின. கற்பழிப்பு என்பது தனி மனித நிகழ்வல்ல அது ஒரு சமூகக் குற்றம் என்ற உணர்வினை ஜட்ஜ் நவநீதம்பிள்ளை அவர்கள் வலியுறுத்தினார். கற்பழிப்பு என்பது யுத்தம் தந்த பரிசல்ல! இதை நாம் இந்திய வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரம், வன்முறைகளால் வெடித்த கலவரம், இனவெறியினால் ஏற்பட்ட கலவரம் இப்படிப் பல சமூகக் காரணங்களுக்காகப் பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டனர். இந்நிலையில்தான் காந்திஜி ஒரு அறிக்கை வெளியிட்டார். கலவரங்களால் பாதிக்கப்பட்டு கற்பிழந்த பெண்ணை அவரவர் கணவன்மார்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

எந்த ஒரு தீய சக்தி சமுதாயத்தில் தோன்றினாலும் முதலில் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். பெண்களுக்குச் சட்டப் பாதுகாப்பு இருந்தாலும்  சமூகப் பாதுகாப்பு முழுமையாக இல்லை. சட்டத்தின் மூலம் சமூகக் குற்றங்களை ஓரளவுதான் திருத்த முடியும். சமுதாயம் திருந்த வேண்டும். இதற்கு அடிப்படைக் கல்வி அறிவு, பண்பாட்டுப் பிரசாரம், கலாசார விழிப்புணர்வு, நமது பாரம்பரியத்தின் பெருமை, சமுதாயம் வளர வளர விழிப்புணர்வு ஏற்பட்டாலும் குறுக்கு வழியில்  செல்லும் குணமும், பணம் சம்பாதிக்கும் பேராசையும் இருக்கும் வரை சமூகக் குற்றங்கள் முற்றிலும திருந்த வாய்ப்பில்லை. பெண்மை கொடி படர பொனன்னாலான தேர் தேவை இல்லை. பண்பு உரமும், அன்பு மழையும் போதும் என்பதைப் பெண்மை மற்றவர்களுக்கு உணர்த்திய காலம்.

அழுவதற்கும், தொழுவதற்கும் ஆளாகிப் போன பெண்கள் எழுவதற்கும் விழிப்பதற்கும் எப்போதும் மறந்த பெண்கள் இந்த காலகட்டத்தில்தான் மெல்ல மெல்ல கல்வி அறிவு பெற ஆரம்பித்தார்கள். தான் பெற்ற குழந்தைக்கே பெயர் வைக்கும் உரிமை மறுக்கப்பட்ட பெண், தன் உரிமைகளுக்காகப் போராட ஆரம்பித்த காலம். சமுதாயம் பெண்களை மதிக்க ஆரம்பித்த காலம்.

பெண்களின் முதன்மை இடங்கள்:

இந்திராகாந்தி முதல் பிரதமரான காலம் (1966);

கமல்ஜித் சாந்து ஆசிய பந்தயங்களில் முதலில் தங்க மெடலைப் பெற்ற பெண் (1970);

கிரண் பேடி இந்திய காவல் துறையில் முதன் முதலில் உயர்பதவி வகித்த பெண்மணி. திஹார் ஜெயிலை யோகா ஜெயிலாக மாற்றிய பெருமைக்கு உரியவர் (1972);

மதர் தெரசா நோபல் பரிசை உலக அமைதிக்காக பெற்ற முதல் இந்தியக் குடியுரிமைப் பெண் (1979);

1989இல் பாத்திமா பீபி சுப்ரீம் கோர்ட்டில் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்றார்.

கல்பனா சாவ்லா இந்தியாவில் பிறந்த முதல் பெண் விண்வெளி வீராங்கனை (1997);

முதல் பெண் கவர்னர் பதவி வகித்தவர் – கவிக்குயில் சரோஜினி நாயுடு;

முதல் பெண்  அமைச்சர் சுதேச கிருபளானி;

மகாராணி எலிசபெத் அவர்களால் பகுதி நேர நீதிபதியாக நேரடியாக நியமகிக்கப்பட்டவர் கல்யாணி கௌல் என்கிற இந்தியப் பெண்மணி என்பது பெருமைக்குரிய செய்தி;

முதல் சட்டமன்ற பெண் உறுப்பினர், துணை சபாநாயகராக பதவி வகித்த பெண் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்.

1994இல் ஹரிதா கௌர் இந்திய விமானப் படையின் முதல் பெண் விமான ஓட்டி.

2000 கர்ணம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பித்தளை மெடலை பெற்ற முதல் இந்திய பளுதூக்கும் சாம்பியன்.

மீரா குமார் இநதிய லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகர்/

2007இல் பிரதீபா படேல் முதல் பெண் ஜனாதிபதி.

பி.டி.உஷா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்க மங்கை.

இந்திரா நூயி. பெப்சி தலைவர்.

2010இல் கொடுக்கப்பட்ட கல்பனா சாவ்லா விருதைப் பெற்றவர்கள் சமூக அர்வலர் நபீஸா அலியும் உயர் காவல் துறை அதிகாரி கிரண்பேடியும்.

முதல் பெண் டி ஜி பி லத்திகா சரண்.

முயற்சிகள் தொடர்ந்தாலும் படிப்பறிவு இல்லாதவர்கள் இந்தியாவில்தான் அதிகம் என்று யுனெஸ்கோ தகவல் தருகிறது. 1956இல் திருமணச் சட்டம், 1956இல் தற்காப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம், 1956இல் வரதட்சணை சட்டம், மதம்சாரா திருமணம் புரிந்து கொண்டவர்களுக்கு 1869இல் விவாகரத்துச் சட்டமும், சிறப்புத் திருமணச் சட்டமும் 1954இல் வந்தன.

1961இல் 5000 பெண்கள் வரதட்சணை கொடுமையால் ஸ்டவ் வெடித்துச் சாகும் அபாயம் போன்றவை நிறைந்ததாகக் குறிப்புகள் கூறுகின்றன.  அமெரிக்காவில் National Organization for Women (NOW) 1966இல் ஆண் – பெண்களுக்கு இடையே சம உரிமை கொண்டு வரப் பாடுபட்டது. ERAC – Equal Rights Amendment மூலம் சம உரிமை கோரினார்கள். 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் பெண் மருத்துவர்கள் 5 சதவீதம், 2006இல் பெண் மருத்துவர்கள் 38 சதவீதம், இன்று 50 சதவீதம் மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவிகள் உள்ளனர். அமெரிக்க செனட் அங்கத்தினர்கள் கேபினட் பதவி வகிக்கும் உரிமையும் 20ஆம் நூற்றாண்டில் பெண்களுக்கு கிடைத்த வரங்கள்.

இந்தியப் பெண்களின் நிலை:

பெண் உரிமை என்ற வாசகம் ஒன்றாக இருந்தாலும் கலாசாரம், பண்பாடு போன்றவற்றால் இந்தியப் பெண் வேறுபடுகிறாள். இங்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை என்ற நிலை இன்னமும் ஓரளவு அழியாமல்தான் இருக்கிறது. அலுவலகம் போகும் பெண்களின் நிலை, வெளி உலகத் தொடர்பின் காரணமாக மேலை நாகரீகத்தின் தாக்கத்தின் காரணமாக அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பெண்ணைத் தாய் என்று சொன்னோம். ஜடமாக்கினோம். பெண்ணை மனைவி என்று சொன்னோம். அடிமை ஆக்கினோம். இனி பெண்ணை பெண் என்றே சொல்வோம் என்றான் ஒரு கவிஞன்.

உலக மகளிர் தினம்:

ஆலையில் பணிபுரியும் பெணிகள் மூலம் 1857இல் நியூயார்க் நகரில் ஆரம்பிக்கப்ப்டட பெண்கள் புரட்சி, மகளிர் தினமாக மலர்ந்தது. மார்ச் 8ஆம் தேதி, உலக அளவில் பெண்களின் முக்கிய நாளாக வலியுறுத்தப்பட்டது. உலகெங்கும் இதனைக் கொண்டாட வழி வகை செய்யப்பட்டது.
அனைவருக்கும் மூன்று வித ஆதிக்கங்களின் பாதிப்பு உண்டு.அரசியல், பொருளாதாரம், சமூகம். ஆனால் பெண்களுக்கு இந்த ஆதிக்கங்களுடன் ஆணாதிக்கமும் உடன் வருகிறது. செஞசிலுவைச் சங்க்ம், UNICEF போன்ற உலக அமைப்புகள் பெண்களின் சுகாதார, பொருளாதார மேம்பாட்டிற்குப் பெரிதும் பாடுபட்டன. பெண்கள், ஆண்களுக்கு இணையாகக் கல்வி அறிவு பெற்றதால் வேலை வாய்ப்புகளைத் தேடிப் போக வேண்டிய சூழ்நிலை.

கல்வியில் இந்தியப் பெண்களின் நிலை:

கல்வி பெறும் அமைப்பு இந்தியப் பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் இந்த நிலையில் இந்தியப் பெண்ணின் கல்வி வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முன்னேறுகிறது. National Sample Survey 1997இல் வெளியிட்ட அறிக்கைப்படி கேரளாவும், மிஸோராமும்தான் பெண்கள் கல்வி வளர்ச்சியில் உலகத் தரத்துக்கு இணையாக வளர்ந்துள்ளன.

உலக அளவில் பெண்ணியம்:

இந்த உலக அளவிலான பெண்ணியத்தை பல வகைகளில் பிரித்தனர். தாராளப் பெண்ணியம் (Liberal Feminism), சம தர்ம பெண்ணியம், தீவிர வாதப் பெண்ணியம்(Radical Feminism), சமதர்மப் பெண்ணியத்தில் (Social Feminism) தந்தை வழி சமூகத்தைப் புறக்கணித்து பெண் உரிமைகளை நிலைநாட்டினர். ஆணின் மேலாண்மைகளைப் புறக்கணிப்பது இந்தப் பிரிவின் நோக்கம்.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? – என்ற நிலை மாறி வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தவர்கள் பெண்கள் என்ற பாரதியின் கூற்றுகள் மெய்ப்பட ஆரம்பித்த காலம் இது. தீவிரவாதப் பெண்ணியம் சற்றே ஆவேசமானது. பாரம்பரிய திருமண முறையை எதிர்த்து லெஸ்பியன் உறவுகள் அவரவர் விருப்பம் என்கிற நிலையைப் பிரகடனப்படுத்தியது. இவர்கள் மரபு நெறியினை ஒப்புக்கொள்ளாத காரணத்தால் பண்பாட்டை எதிர்க்கும் குழுக்களாகவே அறியப்பட்டனர். தந்தை வழி சமுதாயம் வன்முறையில் காக்கப்பட்டது என்று ஆண்கள் தங்கள் சக்திகளையும் மேலாண்மையும் நிலைநிறுத்திக் கொள்ள பெண்களை வன்முறைக்கு ஆளாக்கினார்கள் என்றும் கூறப்பட்டது. (ஆதாரம் பெண்ணியம் புத்தகம்)

புதிய பெண்ணிய கோட்பாளர்கள்:

1931இல் நடந்த முதல் ஆசியப் பெண்கள் மகாநாட்டில் திருமதி. சரோஜினி நாயுடு, திருமதி முத்துலட்சுமி ரெட்டி உட்பட்ட 15 இந்தியப் பெண்கள் கலந்து கொண்டனர். 1934இல் சிகாகோ நகரில் நடந்த உலகப் பெண்கள் ஒருங்கிணைப்பில் (World Congress of Women) இந்தியப் பெண்களின் சார்பாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலந்துகொண்டு உரையாற்றினார். திருமதி சரோஜினி நாயுடு, கமலாதேவி சட்டோபாத்தியா, ராஜ்குமாரி அமிர்தகௌர், விஜயலட்சுமி பண்டிட், பேகம் ஹமித் அலி, திருமதி. எஸ்.என். ராய் போன்றோர் உலகப் பெண்கள் அமைப்பில் பங்கு வகித்தவர்கள்.

1907இல் சுதேசி இயக்கத்தில் பெண்கள் பங்கு கொண்டது இந்தியாவில் பெண்கள் நுழைந்த முதல் அரசியல் பிரவேசம்.1920இல் பெரியார் தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். பெண்கள் ஆணுக்கு இணையாகக் கல்வி பயில வேண்டும் என்றார். ஆண்கள் பள்ளியில் சேர்ந்து படிக்கும் கூட்டுக் கல்வி முறையில் பெண்களுக்குத் தங்களைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை விலகிடும் என்றார். விதவை மறுமணத்தை ஆதரித்தார். பிள்ளை பேற்றைக் கட்டுப்படுத்தும் உரிமை பெண்களுக்குத் தேவை என்றார். காந்திஜி அவர்களும் எந்த ஒரு நாட்டில் பெண்கள் கீழ்மைப்படுத்தப்படுகிறார்களோ, அந்த நாடு முன்னேறாது என்றார்.

வை.மு.கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி ஆசிரியராக இருந்த முதல் பெண் பத்திரிகை ஆசிரியர் ஆவார். இவர் தன் கட்டுரைகளில் பெண்களின் இழிவு நிலைகளுக்கு காரணம் அவர்களின் அறியாமையே என்றும் சுட்டிக் காட்டினார். எஸ்.அம்புஜம்மாள், ஜானம்மாள் கள்ளுக் கடை மறியலில் ஈடுபட்ட நாகம்மை, கண்ணம்மாள், உப்பு சத்தியாகிரஹத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற ருக்மணி லட்சுமிபதி, அம்மு சுவாமிநாதன், துர்க்கா போன்றோர் காந்தீய வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

விபசாரமும் வறுமையும்:

விபசாரம் என்பது பெண்களாக விருப்பப்பட்டு எடுத்த முடிவல்ல. வறுமையும், குடும்பச் சூழ்நிலை சுமையும் ஒரு பெண்ணை விபசாரம் செய்யத் தூண்டுகிறது. சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் கீழ்மைப்படுத்தப்பட்டவர்கள், பால்ய வயதில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் வேறு வழியின்றி இந்த முறைக்கு வருகிறார்கள் என்று Kathleen Barry, Melissa Farles, Julue Bindel, Sheila Jeffreys, Laura Ledear, Catherina Mackinnon போன்றோர் கருதுகிறார்கள். 1999இல் சுவீடன்தான் முதன் முதலில் இதைச் சட்ட விரோதமென்று கூறியது.

பணியிடங்களில் பெண்கள் நிலை:

நடக்கும் குற்றங்களில் 50 சதவீதம் பணியிடங்கள் சம்பந்தப்பட்டவை என்று 1990இல் அறிக்கை வெளியானது. அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள் (1987) காரணமாக Women Prohibition Act இயற்றப்பட்டது. விளம்பரங்களில், புத்தக வெளியீட்டுகளில், எழுத்துகளில், திரைப்படங்களில் என்று பல்வேறு துறைகளிலும் அவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியது. 1997இல் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் பணியிடங்களில் பெண்கள் துன்பப்படுத்தப்படுவது பற்றி அறிக்கை தாக்கல் செய்தது. வரதட்சணை தடுப்புச் சட்டம் 1985இல் அமலாக்கப்பட்டது. ஆனாலும் 1997இல் ஒவ்வொரு வருடமும் 5000 பெண்கள வரதட்சணை காரணமாக எரிக்கப்படுகின்றனர் அல்லது கொலை செய்யப்படுகிற கொடுமையை அறிக்கை வெளியிட்டது. குடும்ப வன்முறைகள், தற்கொலைகள், பால்ய விவாஹம், பெண் சிசுக் கொலை போனற் பல பெண்களின் கொடுமைகள் இன்னமும் இந்திய கிராமங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

UNICEFஇன் State of the World Children (2009) அறிக்கையின்படி பால்ய விவாகம் 56 சதவீதம் கிராமங்களில் நடப்பவை. மேலும் 40 சதவீதம் உலகப் பெண்களின் பால்ய விவாகம் இந்தியாவில் நடப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே தற்கால பெண்ணியவாதிகளின் சில கோரிக்கைகள். அவை

1. தன் விருப்பத் திருமணம்
2. விரும்பினால் கருக்கலைப்பு
3. இணைந்து வாழும் முறை
4. ஓரினச் சேர்க்கை.
விடுதலைக்குப் பின் 1953இல் இந்திய அரசாங்கத்தின் மத்திய சமூக நல வாரியம் (Central Social Welfare Board) ஒன்றின் மூலம் நாடெங்கும் கிராமப்புறங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகிளா மண்டல்களைத் தோற்றுவித்தது. 1959இல் ரேணுகாராய் என்ற பெண்ணின் தலைமையில் WCC மகளிர் கூட்டுக் குழு (Women’s Co-ordinatary Council) உருவாக்கப்பட்டு, 1975இல் சட்ட உதவி மையம் தொடங்கியது. 1972இல் சுயவேலை வாய்ப்புகளில் பெண்கள் சங்கம் (Self Employment Women’s Association – SEWA) சேவா என்ற பெயரில் தோன்றியது. இதன் முக்கிய அம்சம் சிப்ஹோ இயக்கம் (Chipho). இவ்வாறு நாடெங்கும் பெண்கள் அமைப்புகள் வலுப்பெற ஆரம்பித்தன. சட்ட உதவி, நல்வாழ்வுத் திட்டங்கள், ஆலோசனை என்று பற்பல செயல்பாடுகள் வந்தன. பம்பாய், டெல்லி, புனா, பாட்னா போன்ற நகரங்களில் தன்னார்வக் குழு அமைப்புகள் வலுவடைந்தன. மாநில மற்றும் மக்கள் சபையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. பஞ்சாயத்துகளிலும் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது. கீதா முகர்ஜி, நஜ்மா ஹெப்துல்லா, பாரதிரே, ஜெயந்தி நடராஜன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மகளிர் குழுவும், பெண்களின் சொத்துரிமையும்:

முதல் மகளிர் குழு, பாத்திமா பீவியால் 1996இல் ஆரம்பிக்கப்பட்டு பெண்களின் திறமைகளை வெளிக்கொணரும் இயக்கமாக மாறியது. வங்கிக் கடனுதவி பெற்று, பெண்கள் குழுக்களாக அமைந்து சிறு தொழில்கள் செய்து பொருளீட்டி, கடன்களையும் அடைக்க வழி வகுத்துத் தந்தது. பெண்களின் திறமைகளை வெளிக் கொணர்ந்து அவர்களுக்கு ஊதியம் பெற வகை செய்தது இந்தக் குழு. வங்கியின் உதவியோடு காளான் வளர்த்தல், துணி தைத்தல், உணவு விடுதி நடத்துதல் போன்றவை இதில் அடக்கம். TCC Tamilnadu Chistian Council பெண்களுக்கு உதவி மையங்களை அமைத்து, பால் பண்ணை, காளான் வளர்ப்பு, கணினிக் கல்வி, எச்.ஐ.வி. பாதுகாப்பு போன்ற பல பயிற்சிகளை அளித்துள்ளது.

இந்திய கிராமங்களில் விவசாயம் சார்ந்த பல தொழில்களில் 89.5 சதவீதம் பேர் இடம் பெற்றுள்ளனர். 1991இல் உலக வங்கியின் அறிக்கைப்படி 94 சதவீதம் பால் பண்ணையில் பணிபுரிபவர்கள் பெண்களே. சிறு தொழில் வளர்ச்சியில் 51 சதவீதம் இடம் பெறுபவர்கள் பெண்களே. இவர்கள் அனைவரும் குறைவூதியம் பெறுவதும் பெண்களின் இழிநிலைக்கு ஒரு காரணம். பெண் தொழிலதிபர்கள் பலர், இத்துறையில் வெற்றி பெற்றுள்ளனர். Biocon என்ற Biotech Company ஆரம்பித்த (2006) கிரண் மஜூம்தார் ஷா, இந்தியாவின் சீமாட்டிகளில் ஒருவர். லலிதா குப்தா, கல்பனா மோர்பாரியா போன்ற பெண்கள், தலைசிறந்த பெண் தொழிலதிபர்கள். இந்தியாவின் மிகச் சிறந்த இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள ஐசிஐசிஐ வங்கியைத் திறம்பட நடத்தும் பெண் சாந்தா கோகர்.

சொத்துரிமையும் பெண் உரிமையும்:

1956இல் வந்த Hindu Personel Law சொத்தின் வாரிசு உரிமையை பெண்களுக்கு அளித்தது. கூலியில் சம உரிமை பற்றிய கருத்துகளும், கிராமப்புறங்களில் பெண்கள் நிலை பற்றியும் ஆய்வுகள் வெளிவந்துள்ளன. ஆண்களைவிடப் பெண்கள் 20 சதவீதம் அதிகமாகவே தன் உழைப்பை வெளிப்படுத்தியும் குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர்.

OECD நாடுகளின் ஆய்வின்படி ஒரு நாளைக்கு 102 நிமிடங்கள் அதிகமாக உழைக்கின்றனர். PAN Pacific South East Asian Women’s Association ஆய்வில் 21 வது உலக மகாநாட்டில் (2001) பெண்கள் உலக அளவில் 50 சதவீதம் பேர் வேலையில் இடம் பெற்றிருந்தாலும் 10 சதவீதம் குறைவாக ஊதியம் பெறுவதாகக் கூறுகிறது இந்த ஆய்வு.

இத்தனைக்கும் இடையில் நாடாளுமன்ற, சட்டப் பேரவையில் 09-03-2010 அன்று பெண்களுக்கான இடஒதுக்கீடு 33 சதவீதம் என்ற மசோதா பலத்த எதிர்ப்புகளின் இடையில் நிறைவேற்றப்பட்டது, மகிழ்ச்சியான பெண்களின் முன்னேற்ற மைல்கல்.

இந்தியத் திரைப்படங்களும் பெண்களும்:

1930இல் வந்த திரைப்படங்கள் அநேகமாக புராணப் படங்கள். ஆனால் சிற்சில படங்கள் தேசிய விழிப்புணர்ச்சியை ஊட்டுவதாக இருந்தன. ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை மறைமுகமாகச் சாடி, சுதந்திர இந்திய வேள்விக்கு வலுவூட்டின. அந்த வகையில் கல்கி எழுதி, டைரக்டர் கே. சுப்ரமணியம் இயக்கிய தியாக பூமியும் ஒன்று. வடக்கே சத்தியஜித்ரேயின் பல படங்கள், ஷ்யாம் பெனகலின் படங்கள் பெண்களின் இழிநிலையை வெளிப்படுத்தியன. அங்கு தற்சமயம் வெளிவந்த லஜ்ஜா போன்றவை. ஏவி.எம். படமான பெண் அதன்பின் வந்த நாம் இருவரில் (இந்திய சுதந்திரத்தின் பின் வந்தது) ஆடுவோமே, வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே – என்ற பாரதியின் பாடல்கள் இடம் பெற்றன. கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார் போன்ற படங்கள் தேசிய உணர்வைத் தூண்டிய படங்கள். வரதட்சணை கொடுமையை எதிர்த்து டைரக்டர் சாந்தாராம் (1950இல் வெளிவந்தது) தயாரித்த ஹிந்தி திரைப்படம் தஹேஜ் மிகச் சிறப்பானது.

தற்போது வெளிவந்த பழசிராஜா போன்ற மலையாளப் படம் தேசீய உணர்வுகளை வெளிப்படுத்தும் படம். கதாநாயகியின் தொப்புள்களில் பம்பரம் விடுவதைத் தவிர்த்து, தேசீய கண்ணோட்டமாகச் சிந்திக்கிற படங்கள் இப்போது மிகக் குறைவு. ஆணி முத்தைப் போல் அறிவு முத்து என்றான் பாரதி. இந்த அறிவு முத்துகள், சொத்தை முத்துகளாக்கி விட்ட கொடுமை, மேலை நாட்டுப் படங்களைப் பார்த்து ஆடை அணியும் கலாசாரம், வன்முறை கலாசாரம், காதல் என்ற புனிதச் சொல் பொழுது போக்காகி விட்ட கலாச்சாரம் இவை நம்மிடையே பரவி விட்டன. திரைப்படத்தை முதலில் டைரக்ட் செய்த பெண் இயக்குநர் டி.பி. ராஜலட்சுமி, முதன் முதலில் ஹிந்தியில் நடித்த திரைப்பட நடிகை டி.ஆர்.ராஜகுமாரி. அதிகமான ஊதியம் பெற்ற முதல் தமிழ்ப் பெண் நடிகை கே.பி. சுந்தராம்பாள். தமிழில் பிரியங்கா ஹிந்தியில் தாமினி என்று வெளிவந்த படம் (தமிழில் ரேவதியும், ஹிந்தியில் மீனாட்சி சேஷாத்திரியும் கதாநாயகிகளாக நடித்த படம்) பெண்களின் தற்போதைய நிலையை வேறு வழியின்றி வன்முறைக்குப் பெண்கள் ஆளாக்கப்பட்ட நிலையை வலியுறுத்துகிறது. மகளிர் மட்டும் என்ற திரைப்படம் பெண்கள் பிரச்சனையை முன் வைத்தாலும் காளை மாடு ஒண்ணு கறவை மாடு மூணு போன்ற பாடல்கள், பெண்மைக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.

குஷ்புவின் கருத்தும், ஜெயராமின் பேட்டியும்:

பெண் என்றால் செக்ஸ் என்ற உணர்வுக்கு முக்கியத்துவம் தரப்படுகிற காலக்கட்டம் இது. திரைப்படத் துறையை சார்ந்த திருமதி குஷ்பு கற்பைப் பற்றி, விரோதமான கருத்தை வெளிப்படுத்தி பேட்டி கொடுத்ததற்காகத் தமிழ்நாட்டுப் பெண்கள் பொங்கி எழுந்த சம்பவம் தொலைக்காட்சியையும், பத்திரிகைப் பக்கங்களையும் ஆக்ரமித்தது. இதே போல் நடிகர் ஜெயராமும் எருமைபோல் கறுத்த தமிழச்சி என்று தன் வீட்டில் பணிபுரியும் பெண்ணைப் பற்றிப் பேட்டி கொடுத்ததன் விளைவு, அவருக்கு எதிர்ப்பு கிளம்பி, அவர் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு விளைவு ஏற்பட்டது. ஆக நம்மிடையே பெண்மை பற்றி உயர்ந்த கண்ணோட்டங்கள் இன்னமும் மறைந்து விடவில்லை என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகள். விளம்பரங்களில் பெண்மை பலவீனப்படுத்துப்படுகிறது. அரை குறை ஆடைகள் ஒருபுறமிருக்க, விளம்பரம் என்ற பெயரில் பேக்கரியில் பணிபுரியும் பெண் ஊழியர் தன் அலைபேசி எண்ணை வாடிக்கையாளருக்கு எழுதிக் காட்டுவதும், குறிப்பிட்ட பற்பசையில் பல்தேய்த்தால் அந்த வாசனைக்கு மயங்கியே பெண் டிக்கெட் பரிசோதகர் அவருடன் நடை பயிலுவதாகவும் காட்டப்படும் விளம்பரமும்… இன்னும் இதுபோன்ற பல விளம்பரங்கள்  பெண்களைக் கொச்சைப்படுத்துகின்றன.

இலக்கியத்தில் பெண்கள்:

தமிழ் இலக்கியத்தில் பெண்களைப் பெருமைப்படுத்திய பெண் எழுத்தாளர்கள் பலர் உண்டு. ராஜம் கிருஷ்ணன் எழுதிய – சேற்றில் மனிதர்கள் வேலைக்குப் போகும் பெண்கள் பிரச்சனை பற்றியது. துன்பப்படும் குழந்தைத் தொழிலாளர் பற்றிய நாவல், ஆதிவாசிகளை பற்றியது குறிஞ்சித் தேன், லக்ஷ்மியின் மிதிலா விலாஸ், பெண்மனம், பவானி, காஞ்சனையின் கனவு போன்றவற்றில் பெண்மையின் அவல நிலை வர்ணிக்கப்படுகிறது. அம்பையின் பல கதைகள் (சிறகுகள் முறியும், அம்மா ஒரு கொலை செய்துவிட்டாள்) போன்றவை மகாதேவிவர்மனின் (ஹிந்தியில்) பல படைப்புகள், வங்க எழுத்தாளர் ஆஷா பூர்ணிமா தேவி, திலகவதியின் பத்தினிப் பெண், சிவகாமியின் பழையன கழிதல், ஆனந்தாயி. பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண்களின் அவல நிலை பற்றிக் கூறும் நாவல். கிருத்திகா எழுதிய வாசவேஸ்வரம் என்ற ஊர் பற்றிய நாவலில் அந்தக் கிராமத்தில் வக்கிர மனம் படைத்த ஆண்களைப் பற்றி அப்படியே விவரித்துள்ளார். மூங்கில் காட்டில் தீ பிடித்தால் அழிவது காடு மட்டுமல்ல சங்கீதமும்தான். பெண்மை தீப்பற்றிக் கொண்டால் அழிவது பெண் இனம் மட்டுமல்ல – அன்பு, பண்பு, கலாசாரம் அத்தனையும்தான்.

அனிதா தேசாய், சகிதேஷ் பாண்டே, கமலா மார்க்கத்தியா போன்றோர் ஆணாதிக்க சமுதாயத்தின் பல்வேறு கோணங்களைப் படம் பிடித்துக் காட்டியுள்ளனர். ஷோபாடே, அருந்ததிராய் எழுத்துகள் வலிமை படைத்தவை. ஜெயா அருணாசலம் போன்ற சமூக நல ஆர்வலர்கள், பேனியன் அமைப்பின் மூலம் தொண்டாற்றி வரும் நடிகை ரேவதி, ரோகிணி போன்றோர், எழுத்தாளர்களில் சிவசங்கரி, அக்னி அமைப்பின் மூலம் சமுதாயப் பணி செய்து வருகிறார்கள்.

செம்மொழி மகாநாடு நடக்கும் இந்தக் கோவையின் பெண்மணிகளும் பெருமைக்குரியவர்களே. சிறுதுளி அமைப்பின் நிர்வாகி வனிதா மோகன், திருமதி நந்தினி ரங்கசாமி, ஆதரவற்ற பெண் குழந்தைகளின் அமைப்பை நடத்திவந்த மறைந்த தில்லையம்மாள், மறைந்த சாவித்திரி சண்முகம் ஆகியோர் .ஆன்மீகத்திலும் பெண்களின் பங்களிப்பு நிறையவே உண்டு.

பக்த மீராவிலிருந்து, காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசி, திலகவதியார், அன்னை சாரதாதேவி, இன்றைய அமிர்தானந்தமயி உள்பட பக்தைகள் பலர், ஆன்மீகத்தில் ஈடுபட்டு இறை உணர்வை மக்களுக்கு ஊட்டுகின்றனர். முடிவாகஇன்றைய பெண்கள் சீதைகளாக வாழ்ந்தாலும், அகலிகை போல சாப விமோசனத்திற்காகக் காத்திருப்பவர்கள் அல்லர். ஏனெனில் அவள் எதிரில் வரும் பாதங்கள் ராமர் பாதங்கள் அல்ல. ராவணன் பாதங்கள். இன்றைய பெண்கள் நளாயினியாக இருந்தாலும் தன் கணவனை கூடையில் சுமந்து தாசி வீட்டுக்குக் கூட்டிச் செல்லமாட்டார்கள். ஆண், பெண் இணைந்தால்தான் சமுதாயம். இந்தச் சமுதாயம் பெண்ணை ஒரு தனி நபராக மதித்துப் பெருமை தரவேண்டும். பத்திரிகையில் பெண்களை நகைச்சுவை என்ற பெயரில் தரக் குறைவாகச் சித்திரிக்கப்படுவதும், ஓவியங்கள் பெண்களை இழிவு நிலைக்கு தள்ளுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
பெண்ணுக்கு ஆண் என்பது எதிர்ப்பதமே தவிர, எதிரி அல்ல. இதை அனைவரும் உணர்ந்துகொண்டால் பெண்கள் தங்களுக்காகப் போராட வேண்டிய அவசியம் இல்லை. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் வசதி, விஞ்ஞானம் நமக்குத் தந்தாலும் இன்னமும் இந்தப் பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு மளிகை சாமான்கள் எழுதும்போது வீட்டில் உள்ளோர்களிள் தேவைகளை, எழுதிவிட்டுத் தான் பிறகு தன் தேவைகளை எழுதுவாள். ஏனெனில் அவள் இந்தியத் தாய். பெண்ணியத்தின் உள்மூச்சு இங்குதான் இன்னமும் சுவாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதைத்தான் கற்கண்டு சொற்கொண்டு கவிதை வடித்த பாரதி, மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய் என்றான்.

சமையல் செய்யும் பெண்ணால் சரித்திரம் படைக்க முடியும். இமயம் தன்னை இடுப்பில் ஏந்தி இலக்கணம் உடைக்க முடியும்- என்று இந்தக் காலப் பெண்கள் நிரூபித்துள்ளனர். பெண்கள் பிரசவங்களை மட்டுமல்ல, பிரளயங்களையும் உருவாக்கியவர்கள் என்பது புரியும். நேசிக்கத் தெரிந்தால் – காணும் காட்சியெல்லாம் கவிதை. யோசிக்கத் தெரிந்தால் – மௌனம் கூட ஒரு கவிதை. வாசிக்கத் தெரிந்தால் – பெண் மனம் ஒரு கவிதை. நாம் அனைவரும் பெண் மனத்தை யாசித்து, அது பற்றி யோசித்து, சமுதாய நன்மைகளை நேசித்து வாழ முற்பட்டால் பெண்ணியம் என்பது உரிமைப் போராட்டமல்ல. உண்மை வாழ்வியல் என்பது புரியும்.

பெண்மை வாழ்கவென்று கூத்திட்டு, துன்பமில்லாத நிலையே சக்தி, தூக்கமிலா கண் விழிப்பே சக்தி, அன்பு கனிந்த கனிவே சக்தி, ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி, ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – எனப் பாடி, போற்றி விடை பெறுகிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “பெண்ணியம்

  1. Excellent article by the writer…shows the deep research done by her…This writer’s writing skills are well known…so it doesnt come as a surprise when we see the points put through…its a great honour fr her & fr all of us too for being selected to read her paper…

    Fantastic work & keep going…

  2. Very good article.The author has given an in depth analysis about feminism.Highly commendable effort by the author. Well done.

  3. very nice article.very good research done by the author.

    should read everybody to know ab womanhood

    her struggles ,fighting with the society to establish herself were well said.

    congrats on behalf of womenkind

  4. Read the article writen by vimala Ramani Really worth reading.

    Authors deep knowledge ab feminism is quite admiable.

    Thanks to Vallamai for such a beautiful article

  5. Dear Admin,
    You Are Posting Really Great Articles… Keep It Up…We recently have enhanced our website, “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…

    To add “Nam Kural – External Vote Button” to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/ 

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல…
    நம் குரல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *