பெருவை பார்த்தசாரதி

நந்தன வருஷம் சித்திரை 12 (24-04-2012) அட்சய திரிதியை என்று குறிப்பிட்டு, அந்த நாளும் பண்டிகை நாளில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இந்த அட்சய திரிதியை அன்று கொண்டாடப்படும் நியதிகளை விமரிசிப்பவர்கள் அனேகர். இது விஷயமாகப் பல புத்தகங்களை அலசியபோது, குறிப்பாக இதிகாசங்களிலும், புராணங்களிலும் “அட்சய திரிதியை” அன்று என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

“அட்சய” என்ற சொல்லுக்கு ‘வளருதல்’, ‘குறையாத’ என்று பொருள்பட, முதலில் அட்சய திரிதியை அன்று என்னவெல்லாம் நடந்தது என்று எல்லா நூல்களிலும் பொதுவாகக் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சிகளை ஓரிரு வார்த்தைகளில் இங்கே காண்போம்.

மும்மூர்த்திகளில் ஒருவருவரான பிரம்மா, தனது படைப்புத் தொழிலைத் தொடங்கி, அத்தொழில் அன்றிலிருந்து மேன்மேலும் வளர ஆரம்பித்த நன்னாள்.

அன்னபூரணித் தாய், உலகுக்கே அன்னமிட்ட திருநாளும் அட்சய திரிதியை நாளன்றுதான்.

பாண்டவர்கள் வனவாசம் இருந்த போது, அவர்களுக்கு உணவுப் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக அள்ள அள்ளக் குறையாத “அட்சய பாத்திரத்தை” சூரிய பகவான் அவர்களுக்கு வழங்கிய நாள்.

அவதாரங்கள் பத்து எடுத்த விஷ்ணு பரமாத்மா, பலராமர், பரசுராமர் போன்ற அவதாரங்கள் எடுத்தது திரிதியைத் திதியில்.

செல்வக் கடவுள் இலக்குமியை வேண்டி, குபேரன் செல்வத்துக்கு அதிபதி என்ற பதவியைப் பெற்ற தினம் அட்சய திரிதியை தினத்தன்று.

துரியோதனன் சபையில், தன்னைத் துகிலுரியும் போது பாசாலி தன் மானம் காக்க கண்ணனை வேண்ட, அவனின் அருளால் ஆடை வளர்ந்த அந்நாள் அட்சய திரிதியை.

மேலே சொன்ன அனைத்து விஷயங்களிலும் ஒரு குறிப்பிட்ட நாளில் (அட்சய திரிதியை), ஒரு காரணம் சொல்லி, அந்தக் காரியத்தை ஆரம்பித்து, அது தடைப்படாமல் வளர்ந்து கொண்டே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக அந்த ராசியான நன்னாள், சித்திரை மாதம் அமாவாசையை அடுத்து வரும் திரிதியை நாள். இந்த நாளில் நடந்த இன்னும் பல அற்புத நிகழ்ச்சிகளை மற்றும் ஆதாரங்களை எடுத்துரைக்கிறது இதிகாசங்கள் மற்றும் புராணங்கள். பொதுவாக இந்த நாளில் தான, தருமங்களுக்கும், விரதம் இருந்து இறைவனை வழிபடுவதற்கும்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் தங்கத்தையோ, மற்ற விலை மதிக்க முடியாத பொருளையோ சேர்த்து வைத்துக் கொள்ளுமாறு எங்கும் வலியுறுத்தப் படவில்லை.

குருகுல வாசத்தின் போது, கண்ணனுடன் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த சுதாமா என்கிற குசேலர் வறுமையில் வாடிய போது, மாயக்கண்ணன் அவரது ஏழ்மையைப் போக்கி, செல்வம் வளர வழிவகுத்தார். ஒரு அட்சய திரிதியை நன்னாளின் போது, ஏழ்மையில் வாடிய குசேலரின் வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் கண்ணனின் அருளால் தங்கமாக மாறியது என்பதற்காக, அன்று தானத்துக்கும் தருமத்துக்கும் இடம் தராமல், ஒரு குண்டுமணித் தங்கமாவது வாங்கி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்கள் இன்று ஏராளம். இதற்கு ஆதாரம் சென்னை தி,நகர் நகைக்கடைகளில் அட்சய திரிதியை அன்று அலைமோதும் மக்கள் கூட்டம்.

‘தங்கம்’ என்ற சொல்லுக்கே ஒரு தனி மரியாதை உண்டு. ஒருவனைப் பற்றி உயர்வாகக் குறிப்பிட விரும்பும் போது “அவன் ஒரு சொக்கத்தங்கம்” “புடம் போட்ட தங்கம்” என்றெல்லாம் சொல்கிறோம் அல்லவா, அது போல, எந்த ஒரு பொருளின் மதிப்பைக் கூட்டுகின்ற போதும், அதை தங்கத்தோடு ஒப்பிடுவது நம் வழக்கம். அது போல இந்த அட்சயதிரிதியை நாளையும் “தங்கத்திரிதியை” என்றே அழைப்போம்.

 

படத்திற்கு நன்றி:http://city-blogger.com/tag/akshaya-tritiya-2012-offers

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *