கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!

1

                                                                                                                             

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!

 மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவரும்  வாழ்க்கையில் இன்பத்தைத்  தேடி ஓடுகிறார்கள்.   வேண்டிய அளவு பொன், பொருள், புகழ் என்று பலவற்றைத் தேடுவதோடு மட்டுமல்லாமல், அவற்றைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் பாடுபடுகின்றனர். . ஆனால் இவை யாவும் மனிதனுக்கு  முழு நிறைவைத் தருவதில்லை. மேலும் தன்  வாழ்க்கையில் பல பிரச்னைகள், துன்பங்கள் ஆகிய  எல்லாவற்றையும் சந்திக்கும் மனிதன் மனம் துவண்டு போகிறான்.  இவற்றிலிருந்து விடுபட்டு மன நிம்மதியைப் பெற மனிதன் ஆலயத்திற்குச் செல்கிறான், இறைவழிபாட்டில் ஈடுபடுகின்றான்.அவன் விரும்பிய மன நிம்மதியோடு, துன்பங்களை வெல்ல  வேண்டிய  இறை அருளும் ஒரு சேரக் கிடைத்துவிடுகிறது. மனிதனுக்கு வேண்டிய ஆத்ம சக்தியைத் தரும் நிலைக்களனாக விளங்குகிறது கோவில். அதனால்தான் “கோவில்லா  ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற பழமொழியும் வந்தது போலும்!   இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலை, ஆன்றோர்கள் சாதாரணமாக கட்டி வைக்கவில்லை. மனிதன் எங்கிருந்து பார்த்தாலும் அவன் கண்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவும், அவனுக்கு நினைவு படுத்தும் விதமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகவுமே   வானுயர்ந்த கோவில் கோபுரங்களைக் கட்டினர்.

எந்த ஊராயினும், மனிதன்  கோவிலைத் தேடிச் செல்கையில்,  கோவிலை நெருங்கும் முன்னே கோபுரம் அவன் கண்ணில் பட்டு விடும். ஏனெனில், இறைவன் அங்கு குடி கொண்டுள்ளான் என்பதை கோபுரங்கள் எப்போதும் அறிவித்துக் கொண்டிருக்கிருக்கின்றன ! அத்துடன் மட்டுமல்லாமல், உலகில் எல்லா ஜீவ ராசிகளுக்கும் இடம் உண்டு என்பதையும், எல்லா உயிரினங்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை நமக்கு உணர்த்தும் விதமாக கோவில் கோபுரங்களில் எல்லா வகையான ஜீவராசிகளின் உருவங்களும்  அடங்கியிருக்கும்.   பல கோவிகளில், கோபுரத்தின் மேலே உள்ள மாடங்கள்  ஐந்து என்ற ஒற்றைப்படை எண்ணில் அமைந்திக்கும்.  இதில்தான் மானுடப் பிறப்பின் அறிவுத் தத்துவம் அடங்கியிருக்கிறது. படைப்பில் உயர்ந்தவனாக விளங்குபவன் ஆறறிவு படைத்த மனிதனே. எவ்வளவோ பிறப்புக்களில் செய்த புண்ணியம்தான் நமக்கு இந்த மானுட உடல் கிடைத்திருக்கிறது. இந்தக் கருத்தை

“நாலுவகை யோனியிலும் எழுவகை தோற்றத்திலும் ஈளினமாக

மேலுகந்த மானிடந்தா னெடுப்பவே அருமையாய் மெய்யனாகிப்

பாலுபோல் மனமுடைத்தாய்ப் புண்ணியமே மிகுந்துபவங்கீழாய்த் தள்ளி

நூலணர்வ தருமை நெஞ்சே ! இருவினையிலொருவினையை நொறுக்கித் தானே”

என்ற ஞானசரநூலின் வரிகள்.  அழகாக எடுத்துரைக்கிறது. மனிதன் ஆறறிவு படைத்தவன். இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டே அவன் இறைவனை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் ஐந்து அறிவு என்ற நிலையைத் தாண்டித்தான் 6-ம் அறிவு வருகிறது. இதில், ஓரறிவுடையவை என்ற பட்டியலில்  புல், மரம், செடி இவை அடங்கும்.அடுத்துவரும் ஈரறிவு என்ற பிரிவில் சிப்பி, சங்கு, நத்தை முதலியவை உள்ளன.  மூவறிவில் கறையான், எறும்பு இவையும், நாலறிவில் தும்பி, வண்டு ஆகியவையும்,ஐந்தறிவு என்ற பட்டியலில் பறவை, மிருகங்களும் அடங்கும். இந்த ஐந்தறிவின் பிரதிபலிப்பாகத்தான்  கோபுரத்தில் 5 மாடங்கள். உள்ளன. ஒவ்வொரு மாடமும் தாண்டி வரும் போது, இறைவனுக்கும் நமக்கும் உள்ள நெருக்கம் அதிகரிக்கிறது. அறிவின் நிலை அதிகரிக்க அதிகரிக்க, மாடத்தின் அளவும் பெரிதாகிறது. ஆறாம் அறிவின் துணை கொண்டு மனிதன் இறைவனை அடைய முயற்சிக்க வேண்டும். ஆறாம் அறிவு உள்ள மனிதனாகப் பிறந்திருப்பது எவ்வளவு பெருமை? எவ்வளவு புண்ணியம்? இதை மனிதன் ஒவ்வொரு தடவையும் நினவில் வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ,  நம் முன்னோர்கள், உயர்வான கோவில் கோபுரத்தையும், அதன் மாடங்களையும் இணைத்து வைத்துள்ளனர் .

 கோபுர தரிசனத்தில் மற்றொரு ரகசியமும் அடங்கியிருக்கிறது. கோபுரத்தின் மேல் புறத்தில் தங்கம் அல்லது செம்பினால் ஆன கலசங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆகம விதிப்படி அபிஷேகம், ஆராதனை மற்றும் கும்பாபிஷேகம் ஆகியவை செய்யப்படும் கோவில்களில் உள்ள கலசங்கள்,  ஆகாயத்தில் உள்ள பிராண சக்தியை ஈர்த்து அதனை வெளிவிடுவதோடு, அந்த சக்தியை கலசத்தின் கீழ் உள்ள இறை பீடத்திற்கும் அனுப்பி வைத்துக் கொண்டே இருக்கிறது. நாம் கோவிலுக்கு செல்லும் போது இந்த சக்தியைப் பெறுகிறோம். அதனால்தான் இறைவனை தினமும் தரிசனம் செய்ய வேண்டும் என்பதை ஒரு நியதியாகவே எல்லா மதங்களும்  வலியுறுத்தி வருகின்றன.  கோபுரம் வழியாக இந்த சக்தி வருகிறது.  கோபுர தரிசனம் கோடி புண்ணியம்! எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தை?

எனவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுங்கள். உங்கள் ஆன்ம பலம் பெருகும்! 

 

 படத்து ந்ன்றி
http://www.panoramio.com/photo/45601448
 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!

  1. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
    கட்டுரை அருமை…!

    கோடி புண்ணியம் ஏன் தெரியுமா-
    கோபுர தரிசனம், அந்தந்த 
    கோவில் இறைவனின்(இறைவியின்)
    பாத தரிசனம்தான்…!

          -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *