இலக்கியம்கவிதைகள்

ஐந்தறிவு

தமிழ்த்தேனீ  

உச்சி வெய்யில் பாறைதனை உருக்கி ஊத்துது

மச்சு வீடு மாடி வீடு குடிசை வீடு கோபுரங்கள்

அனலில் இட்ட மெழுகு போல உருகிப் போகுது

பூமி கூட சூரியனாய் அனலைக் கக்குது

 

மங்குகின்ற பார்வையுடன் மயக்கம் கூடுது

பொங்குகின்ற தார்க்கடலாய்ச் சாலை மாறுது

சிங்கம் கூட குகையினிலே மயங்கிப் பதுங்குது

வங்கக் கடல் நீரெல்லாம் ஆவியாகுது

 

செங்கழுநீர்ப் பறவையெல்லாம் நீரில் மூழ்குது

செங்கால் நாரையெல்லாம் சிறகை உதறுது 

எறும்புகளும் பூமியின்மேல் ஊறத் தொடங்குது

உணவுதனைக் கவ்விக்கொண்டு வேகம் எடுக்குது

ஈசல்களும் புற்றை விட்டுச் சிதறித் தெறிக்குது

எங்கிருந்தோ ஓரினிய குரல் குயிலு கூவுது

செங்கரும்புத் தேன் போலக் காதில் பாயுது

வானமெங்கும் மேகக் கூட்டம் தானே திரளுது

நீலமயில் கூட அங்கே நடனம் தொடங்குது

 

மீண்டும் மீண்டும் அந்தக் குயில் கூவி அழைக்குது

மாறுபட்ட மண்ணின் மணம் நுகர்ந்து கூவுது

மழை வரப்போகுதென்று தெரிந்து கூவுது

மாறுகின்ற இயற்கைதனை அறிந்து கூவுது

 

தென்றல் காற்று சுகமாக வீசத் தொடங்குது

அன்றலர்ந்த ரோசாவாய் வானம் சிவக்குது

அடுத்த கணம் காரிருளாய்க் காற்று சுழலுது

கடுத்துவிட்ட காற்றினிலே மேகம் கனக்குது

அடுத்தடுத்து மாரிக் காற்று அடித்துப் பெய்யுது

ஐந்தறிவு ஜீவனெல்லாம் முன்பே அறியுது

ஆறறிவு மனிதக் கூட்டம் மழையில் நனையுது

கூவுகின்ற குயில்களையே நாடி ஓடியே

ஆடுகின்ற மயில்களிடம் பாடம் கேட்கவே

தீண்டுகின்ற தென்றலினால் உடம்பு குளிருது

கூடிக் கூடி அவைகளுடன் நாமும் கூவுவோம்

கூடிக் கூடி அவைகளுடன் நாமுமாடுவோம்

வேண்டி வேண்டிக் கரைந்துருகி மனிதம் தேடுவோம்

தோண்டித் தோண்டித் துருவுகின்ற ஞானம் நாடுவோம்

Share

Comments (3)

  1. அருமை.

  2. அழகா, எளிமையாச் சொல்லிட்டீங்க.

  3. ‘தோண்டித் தோண்டித் துருவுகின்ற ஞானம்’ ஓரறிவின் நுண்ணிய வழிநடையிலக்கணத்திலிருந்து, ஏழாவது அறிவு வரை உள்ள படிநிலைகளில் முற்றி வருகிறது. அவற்றில், இந்த ‘பாவப்பட்ட’, ‘மனிதக் கூட்டத்தை மழையில் நனைக்கும்’ ஆறாவது படி மிகவும் வழுக்கும்.ஐயா! கவிதையும் சிறப்பாக அமைந்துள்ளது. உமது பாதையும் பரவாயில்லை. கருத்தும் சிந்தனைக்கு உணவு.இன்னம்பூரான்04 04 2012

Comment here