மோகன் குமார்

கேள்வி: கோபி ராமமூர்த்தி, பெங்களூர்

ஒரு சொத்து வாங்கும் போது அது சம்பந்தமாக வழக்குகள ஏதேனும் நிலுவையில் உள்ளனவா என்று தெரிந்து கொள்ள முடியுமா?

பதில் : நல்ல கேள்வி. Encumbrance Certificate மூலம் சொத்து மீது ஏதும் கடன் உள்ளதா என அறிய முடியுமே ஒழிய, அந்த சொத்து சம்பந்தமாய் வழக்கு ஏதும் நிலுவையில் உள்ளதா என்பதை அது காட்டாது.

சொத்தை விற்கும் யாரும், அதன் மீது வழக்கு நிலுவையில் இருந்தால் அதைப் பற்றி மூச்சு விட மாட்டார்கள்…. அது தெரிந்தால் யாரும் சொத்தை வாங்க முன் வர மாட்டார்கள் என்பதால்!

இந்நிலையில் சொத்து மீது வழக்கு ஏதும் உண்டா என்பதை அறிய ஒரே வழி ரகசியமாக (Discreet) அக்கம் பக்கம் விசாரித்து பார்ப்பது தான்! அநேகமாய் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சொத்து மீது வழக்கு இருந்தால் தெரிய வாய்ப்புண்டு. அவர் மூலம் இதை தெரிந்து கொண்டு, பின் சொன்னவர் பெயரை சொல்லாமல் சொத்து உரிமையாளரிடம் ” இப்படி ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாமே?” என கேட்காலாம். விஷயம் உங்களுக்கு தெரிந்து விட்டது என்ற பின், அவர் முழு விஷயமும் பகிர வாய்ப்புண்டு!

உண்மையில் கடன்கள் எப்படி Encumbrance Certificate-ல் தெரிகிறதோ, அதே போல் வழக்குகளும் தெரிந்தால் நன்றாயிருக்கும் தான்! அரசு ஏதேனும் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுத்தால் நன்றாயிருக்கும் !

ஆங்கிலத்தில் ” Caveat Emptor ” என்பார்கள். இதற்கு அர்த்தம் “Let the buyer be aware ” – எந்த பொருளையும் வாங்குபவர் தான் ஜாக்கிரதை உணர்வோடு இருக்க வேண்டும். விற்பவர் சிறு சிறு குறைகள் இருந்தாலும் அவற்றை மறைத்து விற்கக் கூடும்தான் ! நாம் தான் தீர விசாரித்து அறிய வேண்டும் !

*******

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “சட்டம் ஆலோசனைகள் (4)

  1. சொத்தின் மீது உரிமை கோரி ஒருவர் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம், தற்போதைய உரிமையாளர் அந்த சொத்தை விற்பதற்கு, இடைக்காலத்தடை விதித்தால், அது வில்லங்க சான்றிதழில் வர வாய்ப்பு உள்ளதா? அதையும் மீறி, அந்த சொத்து விற்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா?

  2. இல்லை திரு. இளங்கோவன். வில்லங்க சான்றிதழில் கடன் விபரங்கள் மட்டும் தான் வரும். வழக்கு விபரங்கள் வராது.

    நீதி மன்றத்தின் இடைக் காலதடையையும் மீறி விற்க முயலுவார்களா எனில்.. நீதி மன்றத்தை மதிப்பவர்கள் அப்படி விற்க மாட்டார்கள். எதற்கும் துணிந்தோர் இடை கால தடை இருந்தும் கூட விற்க முயல கூடும். இது போன்ற காரணிகளை கருத்தில் கொண்டே எந்த ஒரு கிரைய பத்திரமும் (Sale deed) எழுதும் போது, அந்த சொத்தில் எந்த வழக்கும் (Dispute ) இல்லை என்றும், அந்த சொத்தை விற்க அவருக்கு எல்லா உரிமையும் உண்டு என்றும் ஒரு வேளை சொத்தில் வழக்கோ வில்லங்கமோ இருந்தால் அவற்றுக்கு விற்பவர் பொறுப்பு எடுத்து சரி செய்து தருவார் என்றும் ஷரத்துகள் போடுவது அவசியமாகிறது. 

    சொத்து வாங்கும் முன் :

    1) வில்லங்கம் ஏதும் இல்லையென வில்லங்க பத்திரம் பார்ப்பதும்,

    2) வழக்கு இல்லை என்பதற்கு அருகில் உள்ளோரிடம் விசாரிப்பதும்,

    3) சரியான முறையில் கிரைய பத்திரம் எழுதுவதும்

    மிக மிக அவசியம் !

  3. தங்கள் விளக்கத்துக்கு நன்றி. தகவல் தொழில் நுட்பம் இவ்வளவு முன்னேறி விட்டதால் இப்படிப்பட்ட தடைகளை நீதி மன்றம், ” வில்லங்க சான்றிதழில்” வருமாறு, பதிவுத்துறைக்கு தகவல் தந்து அறிவுறுத்தும் நாள் வெகு விரைவில் வரும் என்று நம்புவோம்.

Leave a Reply to இளங்கோ

Your email address will not be published. Required fields are marked *