சக்திசக்திதாசன்

அன்பினியவர்களே !

1976ம் ஆண்டுக்குப் பின்னர் கடுமையான வறட்சிக்குள்ளான இங்கிலாந்து மக்களின் மனங்களும் வறண்டு விட்டதோ என்று எண்ணிக் கொண்டிருந்த வேளை . . . .

தாழ்ந்த காலநிலை அழுத்தத்தை அட்லாண்டிக் சமுத்திரப் பகுதிகளில் இருந்து இங்கிலாந்தை நோக்கி இயற்கை தள்ளியதால், மேகமூட்டங்கள் திரண்டு இயற்கையன்னை கொஞ்சம் கொஞ்சமாய் தன் கண்ணீரைக் கொட்டிக் கொட்டி இம்மண்ணை நனைத்த நிகழ்வு நெஞ்சத்தை நிரப்பியது.

துடித்த விரல்களிலிருந்து சொட்டின எழுத்துக்கள்!

சில நேரங்களில், சில நிகழ்வுகள் ஏதோ ஒரு இனம் புரியாவகையில் எமது இதயத்தில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தி விடுகின்றன.

ஏதோ பிறந்து விட்டோம், எப்படியோ வாழ்ந்து விட்டு எமது காலம் வந்ததும் மறைந்து போகோம் என்று எண்ணும் வகையிலே பெரும்பான்மையான ம்னித இனம் ஓடிக்கொண்டிருப்பது போன்ற ஒரு நினைப்பு நெஞ்சின் ஓரத்தில் கீரலாக விழுகின்றது.

ஆனால்,

பாலைவனத்தின் மத்தியில் தோன்றும் ஒரு குட்டையைப் போல இருண்ட வானத்தின் ஓரத்தில் மின்னும் ஓர் நட்சத்திரம் போல ஆங்காங்கே எமது வறண்ட நினவுகளுக்கு நீர் வார்ப்பவர்கள் சிலர் வந்து போகத்தான் செய்கிறார்கள்.

வாசகர்களில் பலர் லண்டன் மாராதன் (London Marathon) என அழைக்கப்படும் ஒரு வருடாந்தர நீண்டதூர ஓட்டப்பந்தயத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள்.

முதல் நீண்டதூர ஓட்டப் பந்தயம் லண்டனில் 1909ம் ஆண்டு தொடக்கம் பாலிடெக்னிக் மரதன் ( Polytechnic Marathon) எனும் பெயரில் நடைபெற்று வந்தது.

1981ம் ஆண்டு முன்னைநாள் இங்கிலாந்து ஒலிம்பிக் சாம்பியனும், ஊடகவியலாளருமான கிறிஸ் பிரஷர் (Chris Brasher) உம் , வேல்ஸ் (Wales) நகர ஓட்டப்பந்தய வீரரான ஜான் டிஸ்லி (John Disley) யும் நியூயோர்க் நகரத்திலே நடைபெற்ற ஓட்டப்பந்தய போட்டியில் கலந்து கொ|ண்ட பின்னால் அதைப் போன்ற ஒரு போட்டி ஏன் லண்டனில் நடத்தப்படக் கூடாது என எண்ணி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இதைப் பற்றி ஊடகவியலாளரான கிறிஸ் ப்ரேஷர் ” த ஆப்சேவர் (The Observer) என்னும் லண்டன் பத்திரிக்கையில் எழுதும் போது,” இந்த சம்பவத்தை நீங்கள் நம்புவதற்கு மனித இனம் ஒரே மகிழ்ச்சியான குடும்பம், ஒன்றாக இணைந்து, ஒன்றாக மகிழ்ந்து சாதிக்கப்பட முடியாதவைகள் என எண்னிய காரியங்களைச் சாதிக்கும் வல்லமை படைத்தவர்கள் என்பதை நம்பவேண்டும். கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகின் பிரச்சனைகள் மிகுதியான ஒரு நகரத்தில் 40 நாடுகளைச் சேர்ந்த 11,532 ஆண்களும், பெண்களும் ஒரு கோடிக்கும் மேலான வெள்ளை, கறுப்பு, மஞ்சள் என பலவகை நிறத்து மனிதர்களின் உதவியுடன் உலகின் ஓட்டத் திருவிழாவில் ஒன்றாக இணைந்து ஓடி மகிழ்ச்சி, ஆரவாரம், குதூகலிப்பு, உடல் களைப்பு எனும் பலவகையான உணர்வுகளையும் சேர்ந்து அனுபவித்த அதிசயத்தைக் கண்டேன்” என்று எழுதினார்.

இவர்கள் இருவரின் விடாமுயற்சியினால் முதலாவது “லண்டன் மரதன்” என்று அழைக்கப்படும் ஓட்டப்போட்டி லண்டனில் முதன் முறையாக 1981ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதி நடைபெற்றது.

இவ்வோட்டப்பந்தயம் நடைபெறும் தூரம் ஏறத்தாழ 27 மைல்களாகும். என்ன திகைத்து விட்டீர்களா ? ஆம் உண்மைதான் 27 மைல்கள் ஓட வேண்டும் !

இது அதைத் தொடர்ந்து இப்போட்டி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் வரும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்று வருகிறது. .

இவ்வருடம் இப்போட்டி கடந்த 22ம் திகதி நடைபெற்றது.

வழமையாக இப்போட்டிகளில் பங்கு பெறுவோர் தமக்கென ஸ்பான்சர்களைத் திரட்டி தாம் ஆதரவளிக்கும் ஏதாவதொரு பொதுநல நிறுவனங்களுக்காக இப்போட்டியில் பங்கு பெறுவார்கள்.

கடந்த சில வருடங்களில் என்னுடன் பணிபுரிந்த பலர் இப்போட்டியில் பங்கு பெற்றுள்ளார்கள்.

இவ்வருடம் நடைபெற்ற போட்டியில் பங்கு பெற்ற முப்பதே வயதான இளம் மாது ஒருவர் போட்டியை முடிக்க இன்னும் இரண்டு மைல்களே இருந்த நிலையில் அம்மாது மண்ணிலே வீழ்ந்து விட்டார்.. ஆமாம் கிளாயர் ஸ்கொயர்ஸ் (Claire Squires) என்ற இந்த 30 வயதான நங்கையின் இருதயம் சட்டென அடங்கி விட்டது.

இந்தப் பெண் சிகையலங்காரத் (Hairdresser) தொழில் பார்த்து வந்தார். இவருடைய தாயார் கடந்த 24 வருடங்களாக சமரிட்டன்ஸ் (Samaritans) என்னும் பொதுநலத் தொண்டு நிறுவனத்தில் தனனார்வத் தொண்டு புரிந்து வந்துள்ளார்.

சமரிட்டன்ஸ் (Samaritans) எனும் இந்த அமைப்பு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் , தனிமையில் வாடுவோர்கள் போன்றவர்களுக்கு தொலைபேசியில் ஆறுதலளித்து அவர்களின் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் திருப்பத்திற்கு வழி வகுக்கும் அற்புதப் பணியைச் செய்து வருகிறது.

இங்கு பணிபுரிவோர் ஊதியமிலலாமல் பொதுநலத் தொண்டாகவே பணியாற்றுகிறார்கள். இவ்வமைப்பு பொதுமக்கள் மர்றும் தொழிலதிபர்கள், பிரபல நிறுவனங்கள் ஆகியவைகள் அளிக்கும் நன்கொடையினாலேயே இயங்கி வருகிறது.

இந்தப் பெண் கிளாயரும் தனது ஓய்வு நேரங்களில் இவ்வமைப்பில் தொண்டாற்றி வந்திருக்கிறார்.

இவருக்கு மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரனும் இருந்துள்ளார்கள். இவர் மிகவும் பாசம் கொண்டிருந்த இவரது அண்ணன், அவரது 25வது வயதில் பத்து வருடங்களுக்கு முன்னால் போதை வஸ்துவின் உச்சத்தினால் மரணமடைந்துள்ளார்.

இந்தப் பெண் இம்முறை “லண்டன் மாராதான்” ஓட்டப் போட்டியில் தனது அண்ணனின் நினைவாக தான் தொண்டாற்றும் நிறுவனத்திற்கு நிதியுதவி பெறுவதற்காக இப்போட்டியில் பங்கு பெற்றுள்ளார்.

மேலே நான் குறிப்பிட்டபடி போட்டியை முடிக்க இன்னும் இரண்டே மைல்கள் இருக்கும் நிலையில் ஓடிக் கொண்டிருக்கும் போது மூர்ச்சையாகி விழுந்து அந்த இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இவரது மரணத்துக்கான சரியான காரணத்தை கண்டறிவதற்கான பிரேத பரிசோதனைகள் நான் இம்மடலை வரைந்து கொண்டிருக்கும் போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இவ்விள மங்கையின் மரணம் லண்டன் நகர மக்களின் இதயத்தின் ஓரங்களில் ஒட்டிக் கொண்டிருந்த ஈரத்தைக் கிளறி விட்டிருக்கின்றது.

பலரும் இவரது நிதிச் சேகரிப்புக்குக் கொட்டிக் கொடுக்கின்றார்கள் இதுவரை சுமார் 73853 பேர் சுமார் 847,706.15 ஸ்ரேலிங் பவுண்ஸ் இவரது நிதிச்சேகரிப்பில் சேர்ந்துள்ளது.

தன்னுடைய குடும்பத்தில் நிகழ்ந்த துயரகரமான சம்பவம் வேறு யாருக்கும் வரக்கூடாது என்னும் உண்மையான மனிதநேயத்தினால் உந்தப்பட்டு நீண்டதூர ஓட்டப்பந்தயத்தில் பங்கு கொண்டு உயிர்நீத்த உத்தமப் பெண்ணை எண்ணுகையில் மனிதாபிமானம் மகத்தானது என்னும் உண்மை நெஞ்சில் தகித்துக் கொண்டிருக்கிறது.

அப்பெண்ணின் கனவுகள் வெகுவிமரிசையாக நனவாகிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளித்தாலும் மனிதனுக்கு மனிதன் உதவ வேண்டும் எனும் எண்ணத்திற்கு உந்து சக்தி கொடுப்பதற்கு ஒரு இளம் உயிர் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டி வந்த உண்மை நெஞ்சில் கனக்கத்தான் செய்கிறது..

“எங்கே வாழ்க்கை தொடங்கும் ? அது எங்கே எவ்விதம் முடியும் ? ” விடை தெரியாத வினாவாக இருந்தாலும் விழித்துக் கொண்ட உணர்வுகள் துடித்துக் கொண்டுதானிருக்கின்றன.

மீண்டும் அடுத்த மடலில்
சக்தி சக்திதாசன்
லண்டன்

படங்களுக்கு நன்றி : Guardian.co.uk

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *