நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க நடந்த குடியரசுக் கட்சி வேட்பாளர்களின் முதல்நிலைத் தேர்தல் ஒரு வழியாக முடிவிற்கு வந்திருப்பது போல் தெரிகிறது.  ஜனவரியில் களத்தில் எட்டுப் பேர் இருந்தனர்.  அது படிப்படியாகக் குறைந்து மிட் ராம்னி (Mitt Romney) என்ற வேட்பாளர் மட்டும் களத்தில் இருக்கிறார்.  இவர்தான் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்தெடுக்கப்படுவார் போல் தெரிகிறது.  இவர் அறிவிலும் ஆற்றலிலும் இரக்கத்திலும் எந்த வகையிலும் ஜனாதிபதி ஒபாமாவிற்கு சமமானவர் இல்லை. 

குடியரசுக் கட்சி ஆதரவாளர்களில் பெரும்பாலோர் பழமைவாதக் கிறிஸ்தவர்கள்.  இவர்களைப் பொறுத்த வரை கிறிஸ்தவ மதம்தான் மக்களை உய்விக்கும் மதம்; இதைப் பின்பற்றுபவர்களைத்தான் கடவுள் இரட்சிப்பார்; இவர்களுக்குத்தான் மற்ற மனித இனங்களை நடத்திச் செல்லும் தகுதி உண்டு என்று நினைப்பவர்கள்.  மற்ற நாடுகளில் வாழும் மனித சமூகங்கள் நாகரீகமற்றவை; அவற்றைத் திருத்தி நாகரீக சமுதாயமாக்க அமெரிக்காவால்தான் முடியும்; அதனால் அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்ததோ, இப்போது ஈரானின் மீது தடைகள் விதிப்பதோ அவர்களுக்கு நன்மையான செயல் என்றும், அமெரிக்கா காட்டும் வழியில் எல்லா நாடுகளும் செல்ல வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.  அமெரிக்காவை இவர்களைப் போன்ற பழமைவாதக் கிறிஸ்தவர்கள்தான் ஆள வேண்டும் என்றும் இவர்கள் நினைப்பதால் ராம்னி ஜனாதிபதியாக வருவதற்குத் தங்கள் ஓட்டுக்களை அளிக்கத் தயாராக இருக்கிறார்கள்.

ராம்னி இவர்களைப் போன்ற கிறிஸ்தவர்களில் ஒருவர் அல்ல.  அவர் மார்மன் (Mormon) என்னும் கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்தவர்.  இவருடைய பிரிவிற்குப் பெயர் Church of Jesus Christ of Latter-day Saints என்பது.  இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்களைக் கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவினர் என்று சொல்லிக்கொண்டாலும் பல கிறிஸ்துவர்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. இவாஞ்சலிகல்ஸ் (Evangelicals) என்று தங்களைக் கூறிக்கொள்ளும் அடிப்படைவாதக் கிறிஸ்தவர்கள் மார்மன் பிரிவினரைத் தீவிரமாக எதிர்ப்பவர்கள்.  இவாஞ்சலிகல்ஸ் நடத்தும் ஒரு பல்கலைக்கழப் பட்டமளிப்பு விழாவில் பேசிய ராம்னி தான் ஒரு மார்மன் என்ற பேச்சையே எடுக்காமல்,   இவாஞ்சலிகல்களின் மத, அரசியல் கொள்கைகள்தான் தன்னுடைய கொள்கைகள் என்றும் தனக்கு வாக்களிக்கும்படியும் வேண்டிக்கொண்டிருக்கிறார்.  தேர்தல் களத்தில் இருந்த ரிக் சாண்டோரம் என்பவர் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர்.  அவரை மத அடிப்படைவாதிகள் ஜனாதிபதித் தேர்தலில் நிற்கத் தகுதியானவர் என்று ஒப்புக்கொண்டார்கள்.  ஆனால் ரிக் சாண்டோரத்திற்குத் தேவையான அளவு ஆதரவு இல்லாததால் அவர் போட்டியிலிருந்து விலகிவிட்டார்.  எல்லா வேட்பாளர்களையும் தோற்கடித்துவிட்டு வெற்றிபெற்றிருக்கும் ராம்னி தான்தான் பொதுத் தேர்தலில் ஒபாமாவைத் தோற்கடிக்கச் சரியானவர் என்று கூறிக்கொண்டிருக்கிறார். 

கடவுள், குடும்பம், போன்றவற்றில் இந்த இவாஞ்சலிகல் மதிப்பீடுகள்தான் இவருடைய மதிப்பீடுகளுமாம்.  இவர் பேசி முடித்ததும் சில பத்திரிகையாளர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களைப்  பேட்டி கண்ட போது சிலர் ராம்னி, ரிக் சாண்டோரம் கொள்கைகளை ஒத்த கொள்கைகள் உடையவராக இருப்பதாகவும் இவருக்கு ஒட்டளிக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார்கள்.  இந்த ராம்னி சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தன் சுயரூபத்தை மாற்றிக்கொள்வார்.  சரியான பச்சோந்தி. 

இவருக்கு ஏழைகள் மேல் எந்தக் கவலையும் இல்லை.  ஒரு முறை ‘ நடுத்தர வர்க்கத்தினரின் மேம்பாட்டிற்குப் பாடுபடுவதுதான் என்னுடைய குறிக்கோள்.  ஏழை மக்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை.  அவர்களை இருக்கும் அரசின் திட்டங்களே போதும்’ என்று கூறி வசமாக மாட்டிக்கொண்டார்.  இவர்தான் ஏழைகளுக்கான அரசின் சில திட்டங்களைக் குறைத்து அமெரிக்காவின் கடன் சுமையைக் குறைக்க வேண்டும் என்று கூறி வருபவர்.  ஒபாமா இவருக்கு நேர் எதிர்.  ஏழைகளின் நலன் இவருடைய முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று.  ‘இதற்கு மேல் எதுவும் கொடுக்க முடியாத ஏழைகளிடமிருந்து இன்னும் எதை எதிர்பார்க்கிறீர்கள்?’  என்று ஒரு முறை சொன்னவர்.  ஏழைகளுக்கு இன்னும் சலுகைகள் கொடுக்க வேண்டும் என்று வாதிடுபவர். 

ராம்னியுடைய ஒரு கூட்டத்தில் அவர் பேசிய பிறகு ஒரு மாணவன் ‘இப்போது பல்கலைக்கழக கட்டணங்கள் தாறுமாறாக ஏறியிருக்கின்றனவே.  நீங்கள் ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்டால் மாணவர்களுக்கு எந்த வகையில் உதவுவீர்கள்?’ என்று கேட்டபோது ‘அரசு உங்களுக்கு உதவும் என்று நான் உங்களுக்கு பொய் உத்தரவாதம் கொடுக்கப் போவதில்லை.  பல நல்ல பல்கலைக்கழகங்களைப் பற்றியும் அங்குள்ள கட்டணங்கள் பற்றியும் தெரிந்துகொண்டு எதில் குறைவான கட்டணம் இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுங்கள்’ என்று கூறியிருக்கிறார்.  இது என்ன யோசனை என்று தெரியவில்லை.  இப்போது பல்கலைக்கழகங்கள் வருடா வருடம் கட்டணங்களைக் கூட்டிக்கொண்டே போகின்றன.  அப்படிச் செய்தால் அவற்றிற்கு மானியம் வழங்குவதை அரசு குறைக்க வேண்டிவரும் என்று ஒபாமா எச்சரித்திருக்கிறார்.  மேலும் மாணவர்கள் படிப்புக் கட்டணத்திற்காக வாங்கும் கடனுக்குரிய வட்டியைக் குறைக்கவேண்டும் என்றும் கூறிவருகிறார். 

ஓரினச் சேர்க்கையில் நாட்டமுடையவர்களின் நிலைக்கு அவர்கள் பொறுப்பல்ல;  அவர்கள் விரும்பி அதை ஏற்றுக்கொள்ளவில்லை; அவர்களால் அதை மாற்றிக்கொள்ள முடியாது.  இதை கிறிஸ்தவப் பழமைவாதிகள் ஒப்புக்கொள்வதில்லை.  அவர்கள் வேண்டுமென்றே அப்படி நடந்துகொள்வதாக நினைப்பதோடு அப்படிப்பட்ட இருவர் சேர்ந்து வாழ்வதையோ, அவர்களுடையது திருமணம் என்ற பெயரில் திருமணம் செய்துகொண்டவர்களுக்கான சலுகைகள் வழங்குவதையோ ஏற்பதில்லை.  இதிலும் ஒபாமா பழமைவாதிகளுக்கு நேர் எதிர்.  இவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம், இவர்களுக்கு திருமணமானவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று நினைக்கிறார். 

ராம்னியைப் பற்றி இப்போது புதிதாக செய்தி ஒன்று வந்திருக்கிறது.  இவர் மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது உடன் படித்த மாணவனைக் கொடூரமாகக் கேலிசெய்து, நண்பர்கள் அந்தப் பையனைப் பலவந்தமாகப் பிடித்துக்கொள்ள அவனுடைய தலையின் முன்னாலுள்ள முடியை அந்த மாணவன் கதறக் கதற வெட்டியிருக்கிறார்.  அவனை எப்போதும் கேலிசெய்துகொண்டிருந்திருக்கிறார்.  மிட் ராம்னியின் தந்தை பெரும் செல்வந்தர் என்பதோடு மிச்சிகன் மாநில ஆளுநராகவும் இருந்ததால் பெரும் அகந்தையோடு ராம்னி நடந்துகொண்டதாகத் தெரிகிறது.  இன்னொரு அப்பாவி மாணவனையும் கேலிசெய்திருக்கிறார்.  மற்றவர்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாவராக இருந்திருக்கிறார்.

இந்தச் செய்திகள் வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கையில் வந்ததையடுத்து மிட் ராம்னியிடம் நிருபர்கள் கேட்ட போது அது பற்றித் தனக்கு ஞாபகம் இல்லையென்றும் அப்படியே நடந்திருந்து தான் யாரையாவது துன்புறுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்புக் கேட்பதாகவும் மிகவும் மேம்போக்காகப் பதில் கூறியிருக்கிறார்.  இது பலரின் கோபத்தைக் கிளறியிருக்கிறது.  மற்றவர்களின் உணர்ச்சிகளைக் கொஞ்சமும் புரிந்துகொள்ளாத இந்த ராம்னி கொடுமைக்காரர்; திமிர் பிடித்தவர் என்ற எண்ணம் வளரலாம்.

தான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஓரினச் சேர்க்கைத் திருமணங்களை ஆதரிக்க மாட்டேன் என்ற உள்நாட்டுக் கொள்கையோடு, ஈரானின் மீது படையெடுப்பேன் என்றும் கூறி வருகிறார்.  அமெரிக்கா செல்லும் திசை சரியில்லை என்பதை உணர்ந்து ஒபாமா அதைத் திசை திருப்ப முயன்று வருகிறார்.  அமெரிக்கா செய்த தவறுக்கு ஜனாதிபதி என்ற முறையில் ஒபாமா மன்னிப்பு கேட்டால், அமெரிக்கா எப்படி மற்ற நாடுகளிடம் மன்னிப்புக் கேட்பது என்று ராம்னி போன்ற குடியரசுக் கட்சியினர் ஒபாமா மீது பழி சுமத்துகிறார்கள்.  ராம்னியை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தால் பள்ளியில் படிக்கும்போது அவர் தன்னுடைய சக மாணவனைக் கொடூரமாகக் கேலி செய்தது போல் அமெரிக்காவும் மற்ற எளிய நாடுகளை நியாயமில்லாமல் நடத்தத் தவறாது.  ஈரானின் மீது படையெடுக்க வேண்டும் என்று கூறும் இவர் ஜனாதிபதியானால் கண்டிப்பாக ஈரானின் மீது படையெடுப்பார்.  பதினான்கு ட்ரில்லியன் டாலர் (ஒரு ட்ரில்லியனுக்கு ஒரு கோடியோடு இன்னும் ஐந்து பூஜ்யங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.) கடனில் இருக்கும் அமெரிக்காவிற்கு இன்னொரு யுத்தம் தேவைதானா?  இரண்டு பக்கங்களிலும் எத்தனை ஆடசேதம், பொருட்சேதம் ஏற்படும்.  ராம்னி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே தீமை ஏற்படும்.  இதை அமெரிக்க மக்கள் உணருவார்களா?

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இரக்கமற்ற ராம்னி

  1. நல்ல பயனுள்ள கட்டுரை. தொடரட்டும் தங்கள் சேவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *