பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 40

பேராசிரியர் இ.அண்ணாமலை

 

இதற்கு முந்தைய கேள்வியும் பதிலும்

 

பெண்வழிச்சேறல் என்பதன் சரியான பொருள் என்ன? இங்கு வல்லின “ற ” செய்யும் பணி என்ன? “ஏறு”, “அல்” ஆகிய சொற்கள் இங்கு மறை நிலையாய்ப் பொதிந்துள்ளனவா?

பொதுவாக, செய்யவேண்டியவற்றையும், விலக்கவேண்டியவற்றையும் தெளிவாக உரைப்பதில் வல்லவரான வள்ளுவர், இங்கு உண்மையில் என்ன சொல்லவருகிறார்?அவ்வை மகள்

 

பதில்:

திருக்குறளின் தொண்ணூற்றொன்றாம் அதிகாரம் பெண்வழிச்சேறல். இதற்கு முந்திய அதிகாரம் பெரியாரைப் பிழையாமை பற்றியது; அடுத்தது வரைவின் மகளிர் பற்றியது. பெண் வழி நடக்காதே என்று சொல்லும் இந்த அதிகாரம் ஆற்றலிலும் கல்வியிலும் பெரியவர்களாக இருப்பவர்களிடம் தவறு செய்யாதே என்ற அதிகாரத்திற்கும் பரத்தையரை நாடாதே என்ற அதிகாரத்திற்கும் இடையில் வருகிறது. அதிகார வரிசை வள்ளுவரே அமைத்ததா என்பது பற்றிக் கேள்விகள் இருந்தாலும், பரிமேலழகர் எடுத்துக்கொண்ட அதிகார வரிசை அவருக்குப் பின்னால் நிலைபெற்றது. நட்புக்கு அடுத்துப் பகையைப் பேசிய பிறகு வரும் அதிகாரங்கள் இவை மூன்றும். ஒருவனுக்கு யார், எப்படிப் பகையாகலாம் என்பதை விரிக்கும் வகையில் இந்த அதிகாரங்கள் அமைகின்றன என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இவை ஒழுக்கம் பற்றிப் பேசும் அறத்துப் பாலில் இல்லை; உலகியல் நடப்பு பற்றிப் பேசும் பொருட் பாலில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்வழிச் சேறல் என்னும் தொடருக்கு ‘பெண்ணின் வழி செல்லுதல்’ என்பது பொருள். பெண் இங்கு மனைவியைக் குறிக்கிறது. சேறல் என்றால் செல்லுதல் என்று பொருள்; சேறு (சேர் அல்ல) என்பது வினை; சேறல் வினைப் பெயர்; சேறு + அல் என்று விரியும். ‘அல்’ உருபை எதிர்மறை உருபாக (செல்லற்க என்ற வியங்கோளில் போல) கொண்டால்), சேறல் என்பது ‘செல்லாதே’ என்று பொருள்படும். ஆனால், திருக்குறளில் எந்த அதிகாரத்தின் தலைப்பும் ஏவலில் இல்லை; பெயரிலேயே உள்ளது என்பதால், சேறல் என்பதற்குச் ‘செல்லுதல்’ என்றே பொருள்கொள்ள வேண்டும்.

திருவள்ளுவர் இந்த அதிகாரத்தில் எதைச் செய்ய வேண்டாம் என்று தெளிவாகவே சொல்கிறார். சுஜாதா உரைப் பாணியில் சொல்வதென்றால், ‘பெண்டாட்டி சொல்லைக் கேட்காதே’ என்று சொல்கிறார். அது ஒருவனுக்குப் பகை -உட்பகை- இந்த அதிகாரம் வரும் இடத்தால் உணரும் பொருள். எப்படிப் பகை என்றால், அவனுக்குப் பொருள் சேராது; பொருள் கொடுத்தோ நற்செயலாலோ வரும் அறமும் சேராது என்று சொல்கிறார். மனவி தரும் இன்பத்தை விரும்பி, ஆண்மையை அடையாளப்படுத்துவதாகக் கருதப்படும் செயல்களை ஒருவன் செய்யாமல் போனால் அவன் பொருளும் அறமும் இழப்பான் என்று சொல்கிறார்.

அறநெறியில் இல்லறத்தை ஒரு அறமாகச் சேர்த்த திருவள்ளுவர், குடும்பத்தில் மனைவி கணவன் வழியேதான் போக வேண்டும்; கணவன் தடுமாறும்போது அவனுக்கு வழி காட்டக் கூடாது என்று சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. சங்க காலத்தில் அரசர்களுக்கு அறிவுரை கூறும் பெண்புலவர்களை வள்ளுவர் படித்திருப்பார். ஆணுக்குக் கற்பே ஆண்மை (பிறன் மனை நோக்காப் பேராண்மை என்பது அவர் வரி) என்று பெண்ணுக்குக் கற்பே பெண்மை என்பதற்கு இணையாக வலியுறுத்துகிறார். அதே சமயத்தில், பெண்களுக்கு முக்தி இல்லை என்று நம்பிய சமண சமயமும் பழக்கம். இப்படிப்பட்ட கருத்துச் சூழலில் பெண்வழிச் சேறலை எப்படி விளங்கிக்கொள்வது?

தேவநேயப் பாவணர், கெடுமதியுள்ள அமைச்சனின் சொல்லை அரசன் கேட்கக் கூடாது என்பதுபோல, புத்தியற்ற மனைவியின் சொல்லைக் கணவன் கேட்கக் கூடாது என்று சமாதான விளக்கம் கூறுகிறார். அப்படியென்றால், புத்தியற்ற கணவன் சொல்லை மனைவி கேட்கக் கூடாது என்றும் கூற வேண்டுமல்லவா? மடமை பெண்ணுக்கு மட்டும்தானா?

வழிவழியாகத் தமிழ் மக்கள், சமூகநிலையில் மனைவி கணவனுக்குத் துணையே தவிர இணை இல்லை என்ற கருத்திலேயே இயங்கிவருகின்றனர். இல்லறத்திலும் ஆண் தன் செயல்பாடுகளைச் சரிவரச் செய்து உய்வடையப் பெண் துணையாக நிற்க வேண்டும் என்பதே கருத்து. மனைவி சரியாக இருந்தால் குடும்பத்தில் எல்லாம் சரியாக இருக்கும் என்பதே வள்ளுவர் வாக்கும். கணவன் மோசமாக இருந்தால் குடும்பம் மோசமாக இருக்கும் என்ற சிந்தனைக்கு இடம் இல்லை. ஆன்மநிலையில் ஆணும் பெண்ணும் இணை என்ற கருத்தில் அமைந்த அர்த்தநாரீஸ்வரர் கோட்பாடு சமூக உறவில் இடம் பெறவில்லை. சமயநெறியில், பெண் தரும் இன்பம் ஆணின் ஆன்ம வேட்கைக்குத் தடை என்று பட்டினத்தார் போன்றவர்கள் பெண்ணை முற்றிலுமாக ஒதுக்கச் சொல்கிறார்கள். துணை இடமும் இல்லை என்பதுபோல்,  பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கையில் ஒரு இடமும் இல்லை என்னும் எண்ணம் இது. காரைக்கால் அம்மையார் போன்று சில புறனடைகள் இருந்தாலும், ‘ஆணைத் துற’ என்று பெண்ணை நோக்கி யாரும் பாடவில்லை.

தமிழ்ச் சமுதாயத்தில் இருந்த, இருக்கும் பெண்ணின் சமூக இடத்தைத்தான் பெண்வழிச் சேறல் பிரதிபலிக்கிறது. ‘பெண்டுக்கு மேய்ச்சடைப்பான்’ என்று மனைவியிடம் ஆலோசனை கேட்கும் கணவனை ஆண்மையற்றவன் என்று இழிவாகப் பேசுவது இன்றும் உண்டல்லவா! பெண் சமத்துவம் பற்றிப் புதிதாக வந்திருக்கும் கருத்தைத் திருக்குறளில் பார்ப்பது காலமுரண் (anachronism) ஆகும்.

திருக்குறள் முக்காலத்திற்கும், உலகில் அனைவருக்கும் பொருந்தும் கருத்துகளைக் கொண்ட நூல் என்பது தவறா என்ற கேள்வி.எழுகிறது. இல்லை. 1330 குறள்களில் 1300 அந்தத் தன்மையைக் கொண்டிருந்தாலே அது மகத்தான சாதனை. உலகில் அப்படிப்பட்ட நூல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

 

பதிவாசிரியரைப் பற்றி