கோதை வெங்கடேஷ் 

 

மிக மிருதுவாக ஒலித்தது காலிங்பெல். இப்படி காலிங் பெல்லுக்கு வலிக்காமல் தொடுவது என்றால் நித்யாவாகத் தான் இருக்க வேண்டும். இந்த வேளையில் அவள் எங்கே? கதவைத் திறந்தால், அவளேதான்..அழுது அழுது வீங்கிய கண்கள், கலைந்த தலைமுடியுடன் நின்றிருந்தாள்.

“என்னடி கோலம் இது?என்னாச்சு?” 

நான் பதைபதைப்புடன் கேட்டதற்கு,பதில் சொல்லாமல், என்னைத் தள்ளிக் கொண்டு, உள்ளே நுழைந்தாள். அவள் எப்போது வந்தாலும், உட்காரும் ஆஸ்தான மோடாவைத் தேடுவதைக் கண்டு, அதை அவளருகே தள்ளினேன். உட்கார்ந்து கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். சூடாக காபியை கொண்டு வந்து நீட்டினேன். வேண்டாம் என்றவளை வற்புறுத்தினேன். ஒரே மடக்கில் விழுங்கினாள்.

“எனக்கு எங்கப்பாவை பிடிககலைடி”என்றாள் திடீரென்று. எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அவள் அப்பா, என் அப்பாவின் சிநேகிதர். ஒரு ஜென்டில்மேன். மேலும் நித்யாவும் எடுத்தேன்,கவிழ்த்தேன் ரகமில்லை. தரையில் அவளருகே அமர்ந்தேன். “என்னடி பிரச்சனை ?”என்றது தான் தாமதம்,மீண்டும் அழத் தொடங்கினாள். அழுது ஓயட்டும் என்று காத்திருந்தேன். விசும்பல்களுக்கிடையில் சொன்னாள்.

“எங்கப்பா இன்னிக்கு காரை எடுக்கும் போது கீழே படுத்துண்டு இருந்த பூனைக்குட்டி மேல ஏத்திட்டார்”

இதுக்கா இவ்வளவு பில்ட்-அப் என்று உங்களுக்கு வரும் கோபம் தான் எனக்கும் வந்தது. கேட்டேன். கோபம் அவளைத் தொற்றிக் கொண்டது.

“வைட்டும் பிரௌனுமா எவ்வளவு க்யூட்டா இருந்தது தெரியுமா? இதுவே நாய்க்குட்டியா இருந்தா இப்படி சொல்லுவியா?

அது என்னவோ தெரியவில்லை, பெரும்பாலான விலங்குகளை நேசிக்கும் எனக்கு, பூனைகள் என்றால் ஒரு அலர்ஜி.

“நாய் எல்லாம் கார் கீழ வந்து முட்டாள்தனமா படுத்துக்காது ” என்றேன்.

“ஆமாம்.ரோட்ல குறுக்கேதான் ஓடி வரும். வண்டியை எடுத்துண்டு வர்றச்சே, எதிர்லே ஒண்ணு போலீஸ்காரன் வருவான், இல்லை நாய் வரும். எங்கேர்ந்து தான் வருவாங்களோ தெரியாது” என்றாள் காட்டமாக.

சிரிப்புதான் வந்தது எனக்கு. அவளை.மெல்ல சமாதானப்படுத்தி, அவள் வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

 

நித்யா!” —பார்த்து பார்த்து அலங்காரம் செய்து கொள்ளும் வயதில், அவள் அலட்சியத்தாலேயே தனித்து நின்றவள். “நீ போட்டுக்கறதுக்குள்ள அந்த புது டிரஸ் அவுட் ஆஃப் ஃபேஷன் ஆய்டும்” என்பேன். ஒரு புன்னகை தான் பதில். ஒரு முறை, தெருவில் நடக்கும் போது சாக்லேட் கவரை நான் கீழே போட்டேன். ஒன்றும் சொல்லாமல், குனிந்து எடுத்து தன கையில் வைத்து கொண்டு, குப்பை தொட்டி வந்ததும் ,அதில் போட்டாள். ஜேசுதாஸ், எஸ்.பி.பி., ரஜினி, கமல், ஹிந்து, எக்ஸ்பிரஸ், வாலி, வைரமுத்து, சயின்ஸ், ஆன்மீகம், ஏன் டாம் அண்ட் ஜெர்ரி! என்று பல விஷயங்களில் அவளுடன் சண்டைகள் போடுவதுண்டு. கல்கியின் கதாநாயகன் பொன்னியின் செல்வரை போல் நான். என்னுடன் நட்பு பாராட்ட விரும்புபவர்கள் எல்லாம், என்னுடன் துவந்த யுத்தத்திற்கு தயாராக இருக்க வேண்டும்.

ஆனால், விதி பொல்லாதது என்பார்கள். எல்லா சண்டைகளையும் ஜெயிக்கும் தருவாயில் விட்டுக்கொடுத்து விடுவது அவள் வழக்கம். அந்த பாழாய்ப்போன பழக்கத்தாலோ என்னவோ, எமனுடனான சண்டையிலும்,அந்த பாதகத்தி விட்டுக் கொடுத்து விடடாள். இதயத்தில் கோளாறு என்று காரணம் சொன்னார்கள்.

“இதையெல்லாம் பார்த்தும் ஏம்மா என் இதயம் மட்டும் நல்லா வேலை செய்யறது?”என்று அரற்றிய அவள் அம்மாவை ,அணைத்து கொண்டு அழத்தான் முடிந்தது என்னால்.

அப்படிப் போனவள், தன் நினைவுகளையும் எடுத்து சென்றிருக்கலாம். என்னை நடைப்பிணமாக்கி விட்டுப் போய்விட்டாள். மற்ற தோழிகளை ஒதுக்கினேன். ஆமையாய் ஓட்டுக்குள் ஒடுங்கினேன்.

ஒரு இலக்கு இல்லாது ,தெருவை வெறித்து பார்த்தபடி நின்றவளை, நிதர்சனத்துக்கு கொண்டு வந்தது, என் காலில் பட்ட ஒரு உரசல். பார்வையை மறைத்த கண்ணீர் படலத்தை, துடைத்து விட்டுப் பார்த்தால்,ஒரு பூனை,வெள்ளையும்,பழுப்புமாய்!

சட்டென்று உள்ளே சென்று,கொஞ்சம் பால் சாதம் கொண்டு வந்து வைத்தேன். மறு நாள்,அதற்கும் மறுநாள் என்று மெல்ல சாதம் வைப்பது வாடிக்கையானது, வீட்டில் முணுமுணுப்புகள் தொடங்கின.

“கிளம்பறச்சே பூனை குறுக்கா வந்தா அபசகுனம்”

“அது வழியிலேயே படுத்துண்டு கிடக்கு.யாரவது தடுக்கி விழப் போறா”

எல்லாரும் தூங்கும் வரை காத்திருந்து,ரகசியமாய் சாதம் போடும் திருட்டுத்தனம் தொடங்கியது. ஒருமுறை கையும் களவுமாய் பிடிபட்டு விட, பிறகு தயக்கம் விலகியது.

“அது பாவம், வெயிட் பண்ணிண்டிருக்கு..சீக்ரம் சாப்பிட்டு முடியுங்கோ “என்று எல்லாரையும் விரட்டினேன்.

“ஹோட்டலுக்கா ?சரி, பூனைக்கு மட்டும் ஒரு சாதம் வச்சுடறேன்.”

அம்மா வீட்டில் இருப்பு கொள்ளாமல் தவித்து ஓடி வந்து விட்டேன். பார்த்தால் என் மாமியார் சாதம் போட்டிருந்தார்கள்.

“என்ன பண்றது?பழக்கப்படுத்திட்டியே.கதவுகிட்ட கத்திண்டு பிராணனை வாங்கறது “

பால் போதாத நாளில் பூனைக்கு பாலைக் கொடுத்து விட்டு,பிள்ளைக்கு வெந்நீரில் ஹார்லிக்ஸ் கரைக்கும் அளவுக்கு பூனையிடம் பிரேமை வளர்ந்தது.

“உன் பூனை வந்துடுத்து,அதை தள்ளிக்க சொல்லு, நீ சொனனால் தான் கேட்கும்” என்று அக்கம்பக்கத்து வீடுகள் எல்லாம், அதை மெல்ல என் பூனையாக்கியது.

காலம் ஓடியது. ஒரு நாள் பூனையை காணவில்லை.

“பாய் வீட்டில் மீன் போட்டிருப்பா, அது உன் பாலையும் தயிரையும் எவ்வளவு நாள் தான் சாப்பிடும்?” அப்படியும் இருக்குமோ?

அடுத்தடுத்த நாட்கள், வழி மீது விழி வைத்தது வீணானது. எங்காவது சுகமாக இருக்குமா? தெரியவில்லை.உறவுகள் சிறுகதை,உணர்வுகள் தொடர்கதை.

இதோ ஒரு சின்ன கருப்பு பூனை, வாசலில் என்னை ஏக்கமாக பார்க்கிறது. இன்று ஒரே நாள் கொஞ்சம் சாதம் போட்டால்தான் என்ன? ……

 

புகைப்படத்துக்கு நன்றி:

http://cache.daylife.com/imageserve/07n17Sb47s2eh/x350.jpg

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அன்பின் பாரம்

  1. //உறவுகள் சிறுகதை,உணர்வுகள் தொடர்கதை.//

    இந்த வரி பிடித்திருந்தது 🙂 அழகாகக் கதை சொல்ல வருகிறது உங்களுக்கு. நிறைய எழுதுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *