ஜனாதிபதி தேர்தல் – பிரணாப் தேர்வு சரியா?

2

மோகன் குமார்

 

இந்தியா இன்னொரு தேர்தலுக்கு தயாராகி விட்டது. இம்முறை ஜனாதிபதி தேர்தல் !

காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளராய் அறிவித்த பின், அனைத்து நடவடிக்கைகளும் சூடு பிடித்து விட்டன.

ஜனாதிபதி எப்படி தேர்ந்தெடுக்கப் படுகிறார் தெரியுமா?

லோக்சபா, ராஜ்ய சபா என இரு அவைகளின் உறுப்பினர்களும், கூடவே அனைத்து மாநில சட்டசபை உறுப்பினர்களும் வாக்களித்து தான் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த 776 எம்.பி.க்களும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 4,120 எம்.எல்.ஏ.க்களும் என மொத்தம் 4,896 பேர் இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள்.

சரி இவர்களது ஓட்டு மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா? மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில், எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு வேறுபடுகிறது. ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையை, அதன் சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கையால் வகுத்து, வரும் விடையை ஆயிரத்தால் வகுத்தால் கிடைப்பதுதான் அந்த மாநிலத்து எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு.

**

இப்போதுள்ள நிலையில் காங்கிரசின் கூட்டணியில் மம்தா தவிர மற்ற அனைவரும் பிரணாபை ஆதரிக்கிறார்கள். கூட்டணியில் இல்லாத மாயாவதி போன்றோரும் கூட மகிழ்ச்சியும் ஆதரவும் தெரிவிக்கிறார்கள். எப்போதும் பீ. ஜே.பி க்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கும் கம்யூனிஸ்டுகள் பிரணாபை ஆதரிக்க கூடும். பிரணாப் கொல்கட்டாகாரர் என்பதும் அங்கு கம்யூனிஸ்டுகள் அதிகம் என்பதும் கூட இடது சாரி கட்சிகள் இவரை ஆதரிக்க காரணமாகலாம்.

இடது சாரிகள் ஆதரவு இல்லாமலே கூட, காங்கிரஸ் மற்றும் மாயாவதி ஆதரவுடன் பிரணாப் வெல்வதற்கு வாய்ப்புகள் மிக மிகப் பிரகாசமாக உள்ளன. அடுத்த ஜனாதிபதி பிரணாப் தான் என்பதில் அநேகமாய் சந்தேகம் இல்லை.

இவரது தேர்வு சரிதானா? சற்று சிந்திப்போம் :

பிரணாப் ஒரு மிக சிறந்த அறிவாளி, உழைப்பாளி என்பதில் சந்தேகம் இல்லை. இந்திரா, ராஜீவ், நரசிம்ம ராவ், மன்மோகன் என அனைத்து பிரதமர்களின் கீழ் நிதி, வெளிநாட்டு துறை போன்ற முக்கிய பொறுப்புகளை நிர்வகித்தவர். காங்கிரசின் தற்போதைய பொது செயலாளர், நாடாளு மன்ற அவை முன்னவர். இப்படி அவரது அரசியல் சாதனைகள் நீள்கிறது.

காங்கிரஸ் கட்சி உட்கட்சி பிரச்னைகளை சந்திக்கும் போது, அவற்றை சிக்கலின்றித் தீர்த்து வைக்கவும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி செய்து சபை நடவடிக்கைகளை முடக்கும் போது எதிக்கட்சியினருடன் சுமுகமாகப் பேசி, அதிகம் விட்டுக் கொடுக்காமல் அமைதி கொணரவும் இவரைத்தான் காங்கிரஸ் கட்சி சமீப காலங்களில் நம்பி வந்திருக்கிறது. இவரை வேட்பாளராக்கியதே எதிர்க் கட்சியினரின் ஒட்டுமொத்த எதிர்ப்பு இவருக்கு இருக்காது என்பதாலேயே கூட இருக்கலாம். இவரை ஜனாதிபதியாக்கிவிட்டு, நிதித்துறையைக் கையாள்வதிலும், மற்ற உட்கட்சி, எதிர்க்கட்சி பிரச்னைகளையும் காங்கிரஸ் எப்படி சமாளிக்கப் போகிறது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் எம் கேள்வி இது தான்:

ஜனாதிபதி என்பவர் நடு நிலையுடன் இருக்க வேண்டாமா? ஆளும் கட்சி, தனது கட்சியின் பொது செயலாளரை ஜனாதிபதி ஆக்குவது என்ன விதமான அணுகு முறை?

கடந்த 2009 ல் வந்தது போல் ஒரு கட்சி பெரிய அளவில் வென்றால் குழப்பமில்லை. தேர்தலுக்கு பின் இரண்டு கட்சிகளுக்கு இடையே யார் ஆட்சி அமைப்பது என இழுபறி எனில், ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என முடிவெடுப்பது ஜனாதிபதி தான். அவர் அப்போது காங்கிரசுக்கு எதிராய் முடிவெடுப்பார் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

சோனியா விரும்புவதும் இதைத் தான் எனத் தெரிகிறது. எந்நிலையிலும் தான் சொல்வதைக் கேட்கும் ஒரு பிரதமர் இருக்கிறார். அதே போன்றே அடுத்து ஜனாதிபதியும் தயார் ஆகிறார்.

இதற்கு முன் கூட அந்தந்த கட்சி சார்ந்தோரே ஜனாதிபதி ஆயினர் எனினும், இப்படி ஒரு ஆளும் கட்சி மந்திரி, அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜனாதிபதி ஆவது இது முதன் முறை என நினைக்கிறேன்.

இது நிச்சயம் நல்ல முன் மாதிரி கிடையாது.

முகநூலில் தமிழ் நண்பர்கள் பலர் பிரணாபுக்கு எதிராய் எழுதுகின்றனர். அவர்கள் சொல்லும் காரணம்: பிரணாப் இலங்கைத் தமிழர் விவகாரத்தில், தமிழர்களுக்கு எதிராய் நடந்தார் என்பது. மேலும் பிரணாப் நாடாளுமன்றத்தில் தூங்கும் படம் போட்டு இப்படி பட்டவரா நம் ஜனாதிபதி என்று வேறு கேள்வி எழுப்புகிறார்கள்.

பத்திரிக்கைகள் பிரணாப் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்பவர் என்றும் கொல்கத்தாவில் துர்கா பூஜை நடக்கும் நேரம் மட்டுமே தன் குடும்பத்துடன் விடுமுறையில் இருப்பார் என்றும் பாராட்டி சொல்கின்றன !

On a lighter vein, பிரணாப் நிறைய உழைத்து விட்டார்.. இனியாவது ஓய்வு எடுக்கட்டும். அப்படியே பல நாடுகள் சுற்றிப் பார்க்கட்டும் என காங்கிரஸ் நினைத்திருக்கலாம்.

பிரணாப் ஜனாதிபதி ஆவது உறுதி. ஜனாதிபதியாக அவர் காங்கிரசுக்கு உண்மையாக இல்லாமல், நாட்டு நலனை மனதில் கொண்டு நடுநிலையான முடிவுகளை எடுக்க வேண்டும், இதுவே ஒரு சராசரி இந்தியனாக நம் எதிர்பார்ப்பு !

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஜனாதிபதி தேர்தல் – பிரணாப் தேர்வு சரியா?

  1. ஆனானப்பட்ட ஜனாப் அப்துல் கலாம் அவர்களே இருமுறை நடுநிலையிலிருந்து பிறழ்ந்து விட்டார். பிரனாப் முகர்ஜி அவர்களின் சார்பு, சாயல் பற்றி பல முத்திரைகள் உண்டு. காங்கிரஸ் தலைமை அவரை தள்ளி வைத்துத் தான் அழகு பார்த்தது. அவருடைய ‘கறுப்புப்பணம்’ வெள்ளை பேப்பர் புஸ்வாணம். நிதிநிலை அறிக்கைகளில் திறன் தென்படவில்லை. அவரை தேர்ந்தெடுக்கும் பிரிதிநிதிகளில் பெரும்பாலோர், அப்பணியை துறந்து, காசுக்கு அடிமையாயினர் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால், இவர் தான் கெலிப்பார். எதற்கும் கடவுளை நம்புவோம்

  2. ஜனாதிபதி தேர்தலில் திரு.பிரணாப் முகர்ஜியின் தேர்வு சரியானது அல்ல. காங்கிரஸ் கட்சியின் அனுதாபியான… இந்த காங்கிரஸ் கட்சியின் உதவியால் பல பயன்களை பதவிகளை அனுபவித்த இன்றைய ஜனாதிபதி… கண்டிப்பாக எந்த ஒரு கட்டத்திலும்… இக்கட்டடிலும்…. இவரின் செயல்கள் கண்டிப்பாக யாருக்கு சாதமாக செயல்படுவார் என்பது சிறு பிள்ளையை கேட்டால்கூட சட்டென சொல்லிவிடும். எனைகேட்டால் ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற…. ஒருவரை இந்திய மக்கள் அனைவரும் சேர்ந்து தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் நல்லது. அப்படி தேர்ந்தெடுக்கும் நபர் எந்த கட்சிக்கும் சாதகமாக செயல்பட மாட்டேன் என்ற உறுதிமொழியுடன் பதவியை ஏற்று கொள்ளவேண்டும். இது நடக்குமா… என்பது ?தான் இருந்தாலும் நடந்தால் நாட்டுக்கு நல்லது…! இல்லைஎன்றால் அரசியல்வாதிகளுக்கு நல்லது…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *