அவ்வை மகள்

நாம் மறுத்த நல் உணவும் நாம் திணித்த பொல்லா உணவும்
பசி எனும் உணர்வு உணவுக்கானது. இந்த உணர்வை, இயற்கை மிக அற்புதமாக வடிவமைத்துத் தந்திருக்கிறது. முதலில் கப கபவெனப் பசிக்கும், வயிற்றில் உணவுப்பையில் அமிலம் நறுவும் உணர்வு இது; அப்போது உணவு தேவைப்படும், மனமும் உடலும் உணவுக்காய்ப் பரிதவிக்கும். அப்போது அடக்க எண்ணினால் கொஞ்சத்தில் அடங்காது, எரிச்சல் உணர்ச்சியும், கோபமும், செய்து கொண்டிருக்கிற வேலையில் மனம் ஒன்றாத நிலைமையும் உண்டாகும். செய்து கொண்டிருக்கிற வேலையை அப்படியே நிறுத்தி விட்டு எழுந்து போகத் தூண்டும். உணவை ஆர்வமாய் உண்ணத் தூண்டும். சூழல் சரியில்லை என்று பல்லைக் கடித்துக் கொண்டு உபாதையைப் பொறுத்துக் கொண்டால் கொஞ்சம் தண்ணீராவது கிடைக்குமா எனக் கேட்கும். கொஞ்சம் ஊற்றி அணைத்தால் அடங்க எத்தனிக்கும், அப்புறம் அடங்கும். கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் எழும். உணவு தரவில்லை எனில் மீண்டும் அதே சுழற்சியில் ஏகும். இடும்பை கூர் என் வயிறே என அவ்வை கதறிய கதறலை நாம் புரிந்து கொள்ள முடியும். நல்ல பசியில் மட்டுமே பசித்துச் சாப்பிடுவது மட்டுமே உணவு. பசித்தும் புசிக்க இயலவில்லையெனில் அது ஒரு வகையில் சுய மறுப்பு!!

ஆனால் பசித்தும் புசிக்க இயலாமல் தாக்காட்டுவோமேயானால்- அவ்விதத் தாக்காட்டல்களில் உடலில் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கிற சக்தியைத் தற்காலிகமாக எடுத்துக் கொண்டு, உடல் தாக்குப் பிடிக்கும். ஆனால் இந்நிலைமையை வெகு நேரம் நீட்டித்துக் கொண்டே போக முடியாது. உணவு தரப்பட்டே ஆக வேண்டும்; அன்றேல் ஆங்கே ஆயிரம் உபத்திரவங்கள். நேரடியாக மறைமுகமாக!!

இரத்தத்தில் குளுகோஸ் அளவு வீழப் பசி உணர்வு உண்டாகும் போது எழும் மன நிலை மாறுதல்கள், உணவுக்கான தவிப்பு இவையிரண்டும – நாம் பசியைப் புரிந்து கொண்டு உணவை நாடும் செயல்பாட்டை மேற்கொள்ளச் செய்திடவேதான். இதனை விடுத்து “உனக்கு உணவு தரமாட்டேன்!” உடலில் உள்ள சேமிப்பு ஆற்றலை எடுத்துக்கொள் என ஏவினால் அது உடலைப் பல்வகையில் துன்புறுத்துவதாகும். உள்ளத்தின் நலத்தையும் கெடுப்பதாகும். இது தற்கொலைக்குச் சமானம்.

குழந்தைகள் இவ்வாறான நிலைகளில் தள்ளப்படும்போது, பல்வேறு விதமாக இயங்குகிறார்கள். “பசி வந்தால் பத்தும் பறந்து போம்!” என்கிற மாணிக்க வாசகத்தின் யதார்த்தத்தைப் பள்ளிக் கூடங்களில், தத்ரூபமாகக் காண முடியும்.
காலை ஏழரை மணி வாக்கில் உண்ணும் குழந்தைக்குப் பள்ளிக்கூட வாசலை அடையும்போதே பசி வந்து விடுகிறது. இந்நிலையில் தான் பெரும்பாலான குழந்தைகள் தமது பள்ளிவாழ்வைத் துவங்குகிறார்கள். இவர்களுக்குக் கொடுத்தனுப்பப்படும் காலை இடைவேளைத் திண்டி, மதிய உணவு ஆகியவை போதா!

போதா என்று நான் சொல்லும்போது அளவு ஊட்டச்சத்து உணவுத்தன்மை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதாகும்.
எல்லாக் குழந்தைகளுக்கும் உணவு கொடுத்தனுப்பப்பட்டாலும், குழந்தையின் வீட்டுச் சூழல்களைப் பொறுத்து இதில் பல்வேறு மாறுபட்ட சூழல்கள் காணப்படும். பெரும்பாலான குழந்தைகள் வெகு அதிகாலையிலே தயாரிக்கப்பட்ட டப்பாவில் அடைக்கப்பட்ட ஆறிப்போன உணவை மட்டுமே உண்ண வேண்டியிருக்கிறது. இவ்வாறான உணவை, குழந்தை வீட்டில் இருக்கும்போது தந்து பாருங்கள். அந்த உணவைக் கண்களால் கூட அந்தக் குழந்தை பார்க்க விருப்பப்படாது. ஆனால், அத்தகையதொரு உணவை மட்டுமே உண்ணும் நிலைக்குத் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் தேவைக்கு அக்குழந்தை தள்ளப்படுகிறது.

கொடுக்கப்படும் உணவின் வகை, அது தயாரிக்கப்பட்ட நேரம், விதம் ஆகிய விஷயங்களின் தராதரத்தைப் பொறுத்து உணவு சாப்பிடப்படும் தன்மை அமைகிறது. மிகக் குறிப்பாக தொட்டுக் கொள்ள ஒழுங்காய் இல்லாத பண்டம் அம்சமாய்த் தயாரிக்கப் பட்டிருந்தாலும் உள்ளே செல்லாது! அது போன்றே உப்பில்லாத உப்பு குறைவான பண்டமும். பல உணவுகள், காலையில் டப்பாவில் அடைக்கப்படும்போது சரியான பதத்தில் இருக்கும். நேரம் போகப் போக இறுகி விடும். இந்த நிலையில் அதனை உண்ண ஒட்டாது.

சில உணவு வகைகள் புளித்து விடும். முதல் வாயோடு சரி, டப்பாவின் வாய் மூடப்பட்டு பைக்குள் மீண்டும் திணிக்கப்படும். சில உணவு வகைகள் ஊசிப்போய் விடும். பிற மாணவர்கள் முன்னிலையில் அவமானமும் ஏற்படும். இவ்வாறு சங்கடங்கள் நிகழும் போது உடன் சாப்பிட உட்கார்ந்து இருக்கும் மாணவர்கள் நல்ல தன்மையினராய் இருக்கும் பட்சத்தில், தங்கள் டப்பாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் உணவு பகிர்ந்து உணவு உண்ண முடியாது போன குழந்தைக்குத் தருவார்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்ளப் பட்ட உணவு அக்குழந்தைக்குப் பரிச்சயமான உணவாக, அது தயாரிக்கப் பட்டிருக்கிற விதமும், ருசியும் அக்குழந்தைக்குப் பழக்கப்பட்டதானதாக இருக்குமேயானால், அது அக்குழந்தையின் தொண்டைக் குழிக்குள் இறங்கும். அன்றேல் உமட்டும்! 

அவ்வாறு உமட்டல் வந்ததென்றால் சாப்பாடு தந்த குழந்தைகளுக்குப் பெருத்த வருத்தம் உண்டாகும். “டேய்! இவுனுக்கெல்லாம் சாப்பாடு தந்தோமேடா! நம்ம புத்தியைச் செருப்பால அடிச்சுக்கனுண்டா!!” என்று ஒருத்தன் தொடங்க, அடுத்தவன் தொடருவான். “டேய்! அது சாதி புத்திடா” என்பான். இன்னொருவன், “டேய்! நாமல்லாம் சொத்தைச் சோறு சாப்பிடறோம்னு குத்திக் காட்றாண்டா!’ “டேய்! மச்சி! சூப்பர் சீன்டா! ஒன் லஞ்ச் ஊச வாசனையில வாந்தி எடுத்திருக்க வேண்டியவங்க நாங்க! நாங்க நல்ல சாப்பாடு தந்தா ஐயாவுக்கு ஒமட்டுதாக்கும்!- இது இன்னொருவன். இப்போது முதலாமவன் தொடருவான், “டேய்! ஒருக்கால் ப்ரெக்னன்ட் ஆய்டானோ என்னமோ! மாமுவுக்கு மசக்கடா!”

பசி எரிச்சலில் பசங்கள் தரும் குடைச்சலில், அந்த மாணவன் படும் வேதனையைச் சொல்லி மாளாது. வயிற்றில் பொங்கி எழும் அமிலத்தைத் தணிக்க அங்கே தண்ணீர் கூடக் கிடைக்காது!! “பேசாமல் பள்ளியை விட்டு ஓடிப்போய், காணாமல் போய் விடலாமா!” என்று கூட எண்ணத் தோன்றும்.

இங்கு நான் குறிப்பிட்டிருக்கிறவை ஒரு சாம்பிள் அவ்வளவே! இது போன்று ஓராயிரம் உணவுப் பிரச்சனைகள் குழந்தைகளுக்குப் பள்ளிகளில். சில கை ஓங்கிய மாணவர்கள், பிற குழந்தைகள் கொண்டு வரும் உணவை. அவர்களுக்குத் தெரியாமலேயே எடுத்து காலி பண்ணி விடுவார்கள். இவ்வாறு உணவு கொண்டு சென்றும் கூடப் பட்டினி இருக்க வேண்டிய ஒரு சாரார் மாணவர்கள்!! இதற்காகவே எந்த இடைவேளைத் தின்பண்டத்தையும் பள்ளிக்கு எடுத்துப் போக முடியாத குழந்தைகளும் உண்டு. இவர்கள் நிலைமையை எவ்வாறு வர்ணிப்பது.

டியூஷன் போகும் குழந்தைகள் தண்ணீர்ப் பாக்கெட், தின் பண்டம் வாங்கவெனக் கொஞ்சம் காசு வைத்திருப்பார்கள். இதுவும் பல சமயங்களில் கை ஓங்கிய மாணவர்களால் கோரப்படும், அல்லது மிரட்டி எடுத்துக் கொள்ளப்படும். இன்ன பிற சமயங்களில், தொலைக்கப்படும் அல்லது திருடு போய்விடும்.

சில சமயங்களில் பெரிய வகுப்புகளில் என்ன நடக்கிறது என்றால், உணவு இடைவேளைக்கு முந்தின வகுப்பை, பல ஆசிரியர்கள் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் நீட்டித்துக் கொண்டு விடுகின்றனர். பொதுப் பரிட்சைக்குப் படிக்கும் குழந்தையாயிற்றே என நல்ல பதமான சுவையான உணவைப் பள்ளிக்கே சென்று, சாப்பாட்டு நேரத்துக்கு முன்பு, சாப்பாடு வைக்கும் இடத்தில் வைத்து விட்டு வந்திருப்பார்கள் பெற்றோர்கள். ஆனால், நேரம் போதாமையால் அவ்வுணவை அக்குழந்தை திறந்து மூடிய கதையாய் கொஞ்சம் போல் சாப்பிட்டு விட்டு மூடி வைத்து விடும்.

இவ்வகையில், பள்ளிக்குக் கொடுத்தனுப்பப்படும் உணவு பல்வகையானும் உண்ணாமலேயே திரும்பவும் கொண்டு வரப்படும். இந்த உணவுகளைக் வெளியில் கொட்டி அந்த டப்பாக்களைக் கழுவி சுத்தப்படுத்தும் சிரமம் இன்னொரு காதை!

ஆக மொத்தத்தில் உணவு எனும் ஒன்று பள்ளிக் குழந்தைகளை வாட்டி எடுக்கும் வேதனையை விவரிக்க வார்த்தைகள் போதா! அப்படியே குழநதைகள் கொஞ்சம் ஏதோ ஏதோ சில நாட்களில் சாப்பிடுகின்றனர். என்றாலும் அவை நீர்ச் சத்தற்ற, உறுதியற்ற உணவுகளாகவே இருக்கின்றன. செரிமானம் அடைந்து தான் சர்க்கரையை உண்டு பண்ண வேண்டும் என்கிற தேவையில்லாமல், உண்ட சற்று நேரத்திற்கெல்லாம், நேரடியாய் இரத்தத்தில் சர்க்கரையைச் சேர்க்கும் துரித உணவுகள், குழந்தைகளுக்குப் பசியைக் கொஞ்சம் அடக்குவது போல் தெரிந்தாலும் அவை உண்மையில் பசியை முறையான வகையில் அடக்குவதில்லை. மாறாக அவை பசி எனும் உணர்வை மாற்றியமைத்து, கல்லீரலின் இயக்கத்தில் தடை ஏற்படுத்தி உணவுப்பையின் அமிலச்சுரப்புத் தன்மையில் தாறுமாறான தன்மையை உண்டாக்கி, சுருங்கி விரியும் குடல்களுக்கும் குடல் உறிஞ்சிகளுக்கும் ஏமாற்றம் தந்து, இரத்தத்தில் “glucose load” எனப்படும் சர்க்கரைப் பாரத்தைத் தடாலென ஏற்றிக் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தடாலெனக் குறைத்து, இரத்த ஓட்டத்தில் ஒரு வித நடுக்கச் சுழலை உண்டாக்கி, உடலைத் திக்குமுக்காட வைக்கின்றன.

குழந்தைகள் என்பதால் இந்த நடுக்கம் வெளியில் தெரிவதில்லை என்றாலும் குழந்தைகள் மெல்ல மெல்லத் தின்பண்டங்களின் சர்க்கரை ஆதிக்கத்தால் ஆரோக்ய நிலையில் தளர்வு அடைகிறார்கள். இரத்த ஓட்டத்தில் சர்க்கரை அளவு கன்னாபின்னாவென்று ஏறி இறங்குமேயானால், அங்கு நேரிடையான பாதிப்புகளைச் சந்திக்கும் முக்கியமான உறுப்புக்கள்: மூளை மற்றும் கண்கள். முன்னெப்போதும் இருந்திராத அளவுக்குக் குழந்தைகளுக்குக் கண் கோளாறுகள் ஏற்பட்டிருக்கின்றன. புட்டி போடாத குழந்தைகளே இல்லையெனும் அளவுக்குக் கண் நோய்கள்!

இதற்கு ஒரு முக்கிய காரணம், இரத்தத்தில் சேரும் மாறும் சர்க்கரைப் பாரம். அது போன்றே குழந்தைகளில் பலரும் பின் மண்டையில் அழுத்தம் ஏற்பட்டு அவதிப் படுகிறார்கள். கண்களுக்கான மூளை மையம் பின் மண்டையில் இருப்பது குறிப்பிடத் தக்கது என்பதோடு, உடலின் நீர்ம ஓட்டத்தையும், உடலின் வெப்பத்தையும் (இதனை homeostasis என்பர்) சமன நிலையில் இயக்க வேண்டிய மையமாகிய ஹைபோதலமஸ் அதிக அழுத்தத்திற்கு உள்ளாவதாலும், இந்த மண்டை அழுத்தம் ஏற்படுகிறது. அதே நேரம் மூளை–இரத்த மதகு (blood-brain barrier) நிலை திரிந்து, முறையற்ற வகையில் திறந்து, மூடி மூடித் திறந்து என ஊசலாடுவதாலும், குழந்தைகளுக்குச் சொல்லொணா அசதி ஏற்படுகிறது.

ஏற்கனவே பாடங்களின் பாரத்தாலும், ஆசிரியர்களின் –நிர்ப்பந்தத்தாலும் அசதி கண்டு போயிருக்கிற குழந்தைகள், உணவு தரும் சர்க்கரைப் பாரத்தால் தள்ளாடித் தடுமாறிப் போகிறார்கள். இந்தச் சர்க்கரைப் பாரம் ஏற்படுத்தும் இன்னுமொரு வினை நா வறட்சி.

பள்ளிகளில் குடிநீர் இல்லை. கடைகளில் பாதுகாப்பான நீர் கிடைக்காததாலும், கவர்ச்சிகரமான சாஷேக்களில் கவர்ச்சியான பானங்கள் பள்ளியைச் சுற்றியுள்ள கடைகளில் தொங்குவதாலும் (இவை நீரை விட விலை குறைவு!) வறட்சி தணிக்க, கடைகளுக்கு ஓடி இப்பானங்களைக் குழந்தைகள் உறிஞ்சுவர். இப்பானங்கள் கொஞ்சம் சர்க்கரையும் மிச்சம் சாக்கரினுமாக, புரோமினடேட் வெஜிடபிள் ஆயில் (BVO) எனப்படும் விறுவிறுப்பு தரும் இரசாயனப் பொருள் மற்றும் வண்ணம் ஏற்றும் கலர்ப்பொடிக் கரைசல் கொண்டு தயாரிக்கப் படுபவை. இந்தச் சுரா பானங்கள் குழந்தைகளின் உடல்நலத்தைப் பலவகைகளில் சூறையாடுகின்றன. சாக்கரின் மற்றும் BVO இரண்டுமே புற்று நோயை உருவாக்கும் தன்மையன என்பது குறிப்பிடத் தக்கது. கலர்ப் பொடிகள் பானங்களில் மட்டுமின்றித் துரித உணவு வகைகள் யாவற்றிலும், அள்ளி வீசப்படுகின்றன. இவையும் பாதுகாப்புத் தன்மை அற்றவை என்பதோடு ஒவ்வாமையையும், தொடர்ந்து உட்கொள்ளும்போது புற்று நோய்க்கு வாய்ப்பையும் தரவல்லன என்பது குறிப்பிடத் தக்கது.

செவிக்குணவில்லாதபோது வயிற்றுக்கு ஈயப்படும் என்றார் வள்ளுவர். ஆனால் வயிற்றுக்கு ஈயாமலேயே உடலுக்கும், செவிக்கும் மூளைக்கும் பாரம் ஏற்றிக் குழந்தைகளை ஹைப்போ கிளைசீமியா, ஹைப்பர் கிளைசீமியா என்கிற இரு வேறு மோசமான இரத்தச் சர்க்கரை அளவீடுகளுக்குள்ளே முட்டி மோதி அலையுமாறு அவர்களை ஆட்டிப் படைக்கும் இந்த மூடத்தனம் நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் கொள்ளியல்லவா?

குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக் கூடாது அவர்களுக்குக் கல்வி கிடைக்காது என்று மார் தட்டிப் பேசும் நாம், நம் குழந்தைகளைக் கல்வி எனும் பெயரால் வாட்டி, வருத்தி, வதைத்து, நசிப்பது ஏன்? இது குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் கொடுமையை விடவும் மோசமான கொடுமை அல்லவா?

“ஒளி படைத்தக் கண்ணினாய் வா வா வா!
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!
கனி படைத்த மொழியினாய் வா வா வா!
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா!
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா!”

பாரதி கற்பனையில், எதிர் கொண்டழைத்த இளைய பாரதம் உடல் நலம் இளைத்த, இளித்த பாரதமாய், இடிந்து போனதற்கு இழிந்து போவதற்குக் காரணம், நம் குழந்தைகளுக்குக் கல்வி எனும் பெயரால் நாம் மறுத்த நல் உணவும், நாம் திணித்த பொல்லா உணவும் தான் என்றால் அது சத்தியமே!

மேலும் பேசுவோம்..

படங்களுக்கு நன்றி: http://www.life360.com/blog/parents-dont-influence-kids-eating-much

http://hypoglycemiatreatment.net/hypoglycemia-treatment-diet-2

http://research.fuseink.com/pf1vuaah6wlibi/difference-between-high-blood-sugar-and-high-blood-pressure

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *