அவ்வை மகள்

ஜப்பானியர்கள்: நம்மைபோன்றவர்கள் தாம் ஆனால் முன்னணி என்றும்!

தயாரிக்க எளிமையானதும், அதிகச் செலவு பிடிக்காததும், உயர் தரமானதுமான உணவைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்கிற அமெரிக்க ஆணையைப் பார்த்தோம். இதே போன்றதான ஆணைகள் ஏறக்குறைய உலக நாடுகள் அனைத்திலும் உள்ளன.

பல்வேறு சமூகப் பொருளாதார, அரசியல் பிரச்சினைகளையும், போர் போன்ற இடர்பாடுகளையும் கொண்ட நாடுகள் கூடப் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையிலும், தமது குழந்தைகளுக்குப் பள்ளியில் உணவு வழங்கும் முறைமையை விடாமல் காத்து வருகின்றன. சில நாடுகளில், குழந்தைகளுக்கெனப் பள்ளியல்லாத காலத்திற்கான சமைக்காத மூல உணவைப் பெற்றோரிடம் வழங்கும் ஏற்பாடும் உள்ளது. மிக ஏழ்மையான சில நாடுகளில், பள்ளியில் கிடைக்கும் ஒரு வேளை உணவு மட்டுமே, குழந்தைக்குக் கிடைக்கும் ஒரே உணவு என்கிற நிலை இருக்கிறது; இந்நிலையில் அந்த நாடுகள் வேறு எதில் வெட்டு வீழ்ந்தாலும், பற்றாக்குறை ஏற்பட்டாலும் பரவாயில்லை, ஆனால் பள்ளியில் குழந்தைகளுக்கான உணவில் எக்காரணம் கொண்டும் வெட்டு விழக் கூடாது எனக் கட்டுப்பாட்டுடனும் பொறுப்புடனும் செயல்படுகின்றனர் (எடுத்துக் காட்டாகக் காண்க: http://www.youtube.com/watch?v=P2Q8-Fnhfss

பள்ளி உணவு விஷயத்தில், சில நாடுகள் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. இவற்றுள் குறிப்பிடத் தகுந்த ஒரு நாடு ஜப்பான். பள்ளிக் குழந்தைகளுக்கான உணவில், பாரம்பரிய உணவு வகைகளுக்கே இங்கு முதலிடம்! நவநாகரீகமான துரிதவகை உணவு வகைகள் குழந்தைகளுக்குக் கூடாது என்பதிலே இவர்கள் உறுதியாய் நிற்கிறார்கள்.

இந்த ஏற்பாடு ஏன் எனக் கேட்கலாம். முதலில் நாட்டுப் பற்று நாட்டின் புராதனப் பயிர் வகையில் செய்த புராதனப் பண்டங்கள் நாட்டுக் கலாச்சாரத்தின் அடையாளம் , நாட்டுப் பற்றின் இலக்கணம்.

அது மட்டுமா? மக்களின் இரத்தத்தில் தொன்று தொட்டு ஊறிய உணவு வகைகள் உடலுக்கு ஏற்புடையவை , தொந்தரவு செய்யாதவை,ஒவ்வாமை மற்றும் வியாதிகளை உண்டு பண்ணாதவை. எனவே அவை பாதுகாப்புடையவை!

ஒரு நாட்டுக்கு மக்கட் செல்வங்கள் தானே ஆதாரம். அந்த மக்கட்செல்வங்கள் பலசாலிகளாக இருந்தால் தானே நாடு பலமாக இருக்க முடியும் , பகையைத் தொலைவில் நிறுத்த முடியும் , வெல்ல முடியும்?

சிந்தித்துப் பாருங்கள்-

ஜப்பான் வேறு எந்த ஒரு நாட்டுக்கும் அடிமையாகாத நாடு , வேறு எந்த ஒரு நாட்டுக்கும் வளைந்து கொடுக்காத நாடு. மூர்த்தி சிறியதென்றாலும் கீர்த்தி பெரியது என்பதாக, இரண்டாம் உலகப் போரில், உலகத் தலைமைகளை உரசிப் பார்த்த அசாத்தியத் துணிச்சல் கொண்ட நாடு! (சொல்லப் போனால் முதலில் அமெரிக்கா ஜப்பானுடன் அமைதிச் சுரத்தையே நாடியது)!

ஆனால், இந்த நாட்டுக்கு இருப்பதோ நாலாப் பக்கமும் நீர் மட்டுமே!

கடல் குதிரையை ஒத்த வடிவில், கடலில் தெறித்த நிலத் துண்டங்கள் விட்டு விட்டுத் தொடரும் ஒரு சின்னச் சங்கிலித் துண்டு , இதுதான் ஜப்பான்.

மொத்தத்தில் ஜப்பான் என்பது அமானுஷ்யத் தனிமையில் உள்ள சிறு நிலப் பிரதேசம் , அதிலும், நடுங்கும் பூமியும், குமுறும் எரிமலையும் மட்டுமே பாக்கியம் என்பதாய் ஆங்கே நிலைத்த இயற்கைப் பிறழ்வு!!

ஆனால் ஜப்பானியர்கள் – மிகக் கடுமையாய் உழைக்கிறார்கள். பொங்கும் கடலுடனும், சீறும் எரிமலையுடனும், அடிக்கடி அதிரும் பூமியுடனும் கணந்தோறும் போராட்டம்தான் எனினும் இவர்கள் உலகின் முன்னணித் தொழில் நுட்பம் படிக்கிறார்கள், படைக்கிறார்கள். இவர்களுக்கு ஆங்கில மொழி டக்கென்று வராத பிரச்சனை வேறு! இருப்பினும் அறிவியல் தொழில்நுட்பத் திறனில் இவர்களே முன்னணி!

எத்தனை எத்தனை இடைஞ்சல்கள் உண்டோ அத்தனை அத்தனை இடைஞ்சல்கள், இதுதான் அந்நாட்டின் தலைவிதி ஆனால், இத்தனை இடைஞ்சல்களுக்கு இடையிலும், அந்த ஒரு நாடு தொடர்ந்து தொய்வின்றி முன்னேற்றம் காண்கிறது, கல்வி, கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், வாணிகம், தொலைத்தொடர்பு, பாதுகாப்பு என இதனை உலகே வியந்து பார்க்கிறது!

காரணம் இங்கு குழந்தைகள் அசதி காணாது – படிக்கிறார்கள்!

இது எவ்வாறு அங்கு சாத்தியமாகிறது என்றால் அவர்கள் பலம் தரும் உறுதியான உணவு உண்ணுகிறார்கள்.

மாறி வரும் உலகச் சூழலில், அதிக அலைச்சலும், அதிக அழுத்தமும் நிறைந்த நவயுகப் பணிகளில், தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உலகச் சவால்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் தங்கள் குழந்தைகளுக்கு இருப்பதால், தங்கள் நாட்டுக் குழந்தைகள் நல்ல உடல் பலத்துடன் வளர வேண்டும் என்பதிலே ஜப்பானியர்கள் தீவிரக் கவனம் செலுத்துகிறார்கள்.

அங்கு பள்ளிகளில், குழந்தைகளுக்குத் தரப்படும் (அல்லது கொண்டு வரப்படும்) உணவு அத்தனைப் பாரம்பரியம் மிக்கதாக, அத்தனைச் சுத்தமானதாக, அத்தனை ஊட்டச் சத்து நிறைந்ததாக உள்ளது என அறிகிறோம்.

நாட்டின் புராதனமான பதார்த்தங்கள் குழந்தைகள் உணவில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று ஜப்பானியர்கள் விரும்புவதன் காரணம், அந்தப் புராதனப் பதார்த்தங்கள் ஊட்டச்சத்தில் உண்மையிலேயே மிகவும் உயர்ந்தவை என்பதாலும் நாட்டின் அடையாளம் , கலாச்சாரம் ஆகியன வருங்கால சந்ததியினரால் காப்பாற்றப்பட வேண்டும் என்பதாலும்தான்.

நம்மைப் போலவே ஜப்பானில் தொன்று தொட்டு அரிசிதான் பிரதான உணவு. அதுவும் அவர்கள் மண்ணில் விளைந்த அரிசியை மட்டுமே அவர்கள் உண்ணுகிறார்கள்.

பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் ஜப்பான், வேண்டும் அளவுக்கு அரிசியை இறக்குமதி செய்து கொள்ள முடியும்தான்!!

ஆனால், ஜப்பான் அதனை விரும்பவில்லை. சில காலம் இதனை முயன்று பார்த்தது என்பது உண்மைதான். ஆனால் பிற நாட்டு அரிசி வகைகள் ஜப்பான் அரிசியைப் போல் ருசியாக இல்லை என்று மக்கள் பிற நாட்டு அரிசி வகைகளை ஒட்டு மொத்தமாய்ப் புறக்கணித்ததோடு, அத்தகையதொரு அரிசி இறக்குமதிப் பழக்கம் மண்ணில் நிலைத்தால் குழந்தைகளுக்குப் பாரம்பரியப் பெருமையும் ருசியும் கிடைக்காது போகும் என்றே எண்ணினர்.

அது மட்டுமல்ல- எந்த ஒரு சூழலிலும், பிற நாட்டை, பிரதான உணவுக்காகச் சார்ந்து வாழ்வது ஆபத்தானது என்றும் ஜப்பானியர்கள் எண்ணினர். அரிசியை இறக்குமதி செய்வதில்லை என்ற முடிவு உலக வர்த்தகப் பின்னலில் சில சிக்கல்களைத் தவிர்க்கவும் ஜப்பானுக்கு உதவியது என்பது ஒரு கூடுதல் நன்மை.

பரந்த நம் நிலப் பரப்புகளைக் கரம்பாய்ப் போட்டும், குடியிருப்புப் பகுதிகள் கட்டியும் நாம் வீணடிக்கும் வேளையில், உலகின் பொருளாதாரத்தையே ஆட்டிப் படைக்கும் ஒரு குட்டி நாடு , “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்ற பொய்யா மொழிக்கு முன்னுதாரணமாய் இருப்பது சிறப்புக்குச் சிறப்பு.

அங்கு மாடி கட்டி நெல் விளைவிக்கிறார்கள். நெல்லில் சுய தேவையைப் பூர்த்தி செய்து கொண்டதோடு அல்லாது, 9% உபரியாகவும் விளைவிக்கிறார்கள். 2016 தொடங்கி உலகில் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் ஏற்பாடாகி வருகிறது. (இத்தனைக்கும் நம் நாட்டில் இருப்பதை ஒத்த சில அரசியல் மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் இங்கும் உண்டுதான்.)

ஹிரோஷிமா-நாகசாகி தந்த அடிக்குப் பிறகு, உலகத்தில் அதள பாதாளத்திலிருந்து தலை தூக்கிய நாடு என்பதால், தம் கவுரவத்தை நிலை நாட்டிக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு நாட்டின் வருங்காலப் பிரஜைகளின் உடல் பலமும், உள நலமுமே என்பதில் ஜப்பானியர்கள் ஒருமித்த கருத்து வைத்துள்ளார்கள்.

நான் ஏற்கனவே சொன்னது போல, எந்த ஒரு ஜப்பானியப் பிரஜைக்கும் உழைப்பு என்பது கடப்பாடு. பள்ளி மாணவனாகட்டும், பணி புரியும் வேலையாளாகட்டும், உழைப்புதான் அங்கு அடிப்படை தர்மம்.

கடினமாக உழைக்க வேண்டுமென்றால் உடலினை உறுதி செய்வது தானே முதல் தேவை!

எனவே தான் கல்வியோடு குழந்தைகளின் உணவிலும் அங்கு கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.

அரிசிச் சோறு ஜப்பானில் தலைமை உணவு; வெறும் சாதம் மட்டுமல்ல. டாம்பூரி எனப்படும் தளிகை சாதம் (காய்கறிகள், பயறு வகைகள் சேர்ந்த கலந்த சாத வகைகள்), கரி ரைஸ் எனப்படும் குழம்பு சாதம், சுஷி ரைஸ் எனப்படும் புளிப்பு சாதம், காயு எனப்படும் அரிசி நொய்க் கஞ்சி ஆகியன முக்கியமானவை (நீரில் அல்லது வடித்த கஞ்சியில் போட்ட பழைய சாதத்தை சாஷூக்கே அன்று அழைக்கிறார்கள். நம்மைப் போலவே பழைய சாதத்தை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்!)

சிற்றுண்டிகளில் அரிசியால் செய்த இரு உணவுகள் அதி முக்கியமானவை: மோச்சி (நமது இட்டிலி!) ஒனிகிரி எனப்படும் தாளிதம் செய்த சோற்றுருண்டைகள் அல்லது சதுரக சோற்றுக் கட்டிகள் (நாமும் உப்புருண்டைகள் செய்வோமே அது போன்றதே).

பள்ளிகளில், நீராவியில் சமைத்ததான அரிசி, அதாவது சோறு -அரிசி வகை உணவுகளே அங்கு குழந்தைகளுக்கானப் பிரதான உணவுகள், இவற்றுடன் போதுமான அளவு பருப்பு, காய்கறிகள், புத்தம் புதிய பழங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். கட்டாயம் கொஞ்சம் ஊறுகாய். மற்றவை யாவும் கூடுதல் விஷயங்களே!

நொறுக்குத் தீனியாக, ஜப்பானியக் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுவது சென்பை எனப்படும் அரிசிமாவால் செய்த தட்டைகள்:

அரிசி சார் பாரம்பரிய உணவு வகைகளால், தங்களது உழவுசார் பாரம்பரியம் நிலை பெறுவதோடு, விவசாயத்தில் இன்றைய குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்பட்டால்தான் அவர்கள் எதிர்காலத்தில் விவசாயத்தில் ஈடுபாடு கொள்ளுமாறு உறுதி செய்ய முடியும் என்கிறார் ஒரு ஜப்பானிய ஆசிரியர். 

“அரிசி என்பது பாரம்பரிய உணவு மட்டுமல்ல, தோஷம் இல்லாத உணவு, எவ்வித உடல் நலக் கோளாறும் தராத உணவு. சர்க்கரை வியாதியோ அல்லது இரத்த அழுத்தமோ எங்களுக்கு வருவதில்லை. காரணம் அரிசி உணவு. இப்படி ஒரு உன்னத உணவு உலகில் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நம்பர் ஒன் பொருளாதாரப் பயிராகப் போகிறது. இன்று எண்ணெய்க்குப் போர் என்றால் நாளை நெல்லுக்குப் போர்! இன்று நெல்லைக் காக்கத் தவறுபவர்கள் மிகப் பெரிய பாவம் செய்கிறார்கள். அரிசியின் பெருமையை எங்கள் குழந்தைகள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். இது எங்கள் கடமை!” என்றார் அவர்.

ஜப்பானில் வீட்டில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த அரிசி வகை உணவுகளைத் தயாரித்து வழங்குவது எவ்வாறு என்று இளம் பெற்றோர்களுக்குப் பள்ளிகளில் சிறப்புப் பயிலரங்குகளும் நடத்தப் படுகின்றனவாம்.

குடும்ப அமைப்பு, உணவு முறை, கலாச்சாரப் பாரம்பரியம், எனப் பல வகைகளில், நம்மைப் போன்றவர்களே ஜப்பானியர்கள். நமது குழந்தைகளும் ஜப்பானியக் குழந்தைகளைப் போன்று உலக சவால்களை ஏற்று, பல கடுமையான, சிக்கலான, பணிகளை மேற்கொள்ள வேண்டியவர்களே!

ஆனால், நம் அவர்களது அணுகுமுறையிலிருந்து மிகவும் விலகி நிற்கிறோம்.

தமது பள்ளிகளில், தங்கள் குழந்தைகளின் கல்வியின் மீது, அவர்கள் உண்ணும் உணவின் மீது ஜப்பானியர்கள் காட்டும் கூடுதல் கவனம் அவர்களை முன்னணியில் வைக்கிறது.

நாம் என்ன செய்யலாம்?

மேலும் பேசுவோம்..

மோச்சி படத்திற்கு நன்றி: http://www.pjvoice.com/v51/51903food.aspx

சென்பை படத்திற்கு நன்றி: http://www.city.soka.saitama.jp/english/city_profile/03.html

ஒனிகிரி படத்திற்கு நன்றி: http://momofukufor2.com/2010/01/yaki-onigiri-recipe

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “செரியாத கல்வியின் சுமை-23

  1. அவ்வை மகள் அவர்களே ,

    வணக்கம் , 
    கட்டுரைக்கு  நன்றி .ஜப்பான் பற்றி பல தகவல்கள் தந்து உள்ளீர்கள் ..
    நான் கடந்த  இரண்டு வருடங்களா ஜப்பானில்  தான்  வசித்து வருகிறேன் ..
    நீங்கள் கூறிய அனைத்தையும்  நேரில் பார்த்துகொண்டு தான் இருகின்றேன்..

    ஆனால் பிற நாட்டு அரிசி வகைகள் ஜப்பான் அரிசியைப் போல் ருசியாக இல்லை
      >> இது  உண்மை. ஜப்பான் அரிசி, மற்ற அரிசிகளை  விட விலை ரொம்பவும் அதிகம், இருபினும்  இவர்கள் அதையேதான் வாங்குகிறார்கள் 
       அரிசி  மட்டும் அல்ல, இந்த நாட்டில் விளையும்  பழ  வகைகளும் சுவையும் , விலையும்  அதிகம். 
      எ.கா . இரண்டு கிலோ  தர்பூசணி  700 ரூ . 🙂

    கல்வியோடு குழந்தைகளின் உணவிலும் அங்கு கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.
    >> ஜப்பான்  நாட்டின் பாரம்பரிய  கலைகளையும்  பள்ளிகள் சொல்லி  தருகிறாக்கள் ..
      ஒவ்வொரு கோடையிலும்  மாணவர்கள் , குறிப்பிட்ட  நாளில் , ரோட்டில்  அணிவகுப்பு  (parade ) நடத்துவார்கள் ..
     அதில் குழந்தைகள்  முதல்  பெரியவர்கள் வரை பாரம்பரிய  நடனம் ஆடுவதையும் , பாட்டு பாடுவதையும்  , மத்தளம் , புல்லாங்குழல்  வாசிப்பதை  பார்க்க /கேட்க  முடியும் ..
     
    உண்மையிலே இந்த நாடும்  , மக்களும்  எப்போதும் என்னை ஆச்சர்யபடுத்த  தவறுவதில்லை ..
    இவர்களின்  உழைப்பை  பற்றி  அறிய  இதை வாசித்து  பாருங்களேன் ..
    http://www.japantoday.com/category/kuchikomi/view/shinkansen-cleanup-crews-perform-7-minute-miracles-120-times-a-day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *