மலர் சபா

புகார்க்காண்டம் – 05 இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

மருவூர்ப்பாக்கம் – பகுதி – 2

இது இது இன்ன இன்னது
என்று பிரித்தறியச் சுலபமாக,
குவித்து வைக்கப்பட்ட பொருட்களுடன்
கூலவீதிகளில்
எண்வகைத் தானியங்கள்
குவிந்தேதான் இருந்தன.

பிட்டு வணிகர்
அப்ப வணிகர்
கள் வணிகராம் வலைச்சியர்
மீன் வணிகராம் பரதவர்
வெள்ளை உப்பு வணிகராம்
உமணர் உமட்டியர்

கயிறு திரித்து விற்கும் பாசவர்
வெற்றிலை வணிகர்
வாசனைப் பொருள் வணிகர்
பல வகை மாமிச வணிகர்
எண்ணெய் வணிகர்
நிறைந்து காணப்படும்
ஊன்மிக்க வாழிடங்கள் இருந்தன.

வெண்கலத்தில் பாத்திரம் செய்யும் கன்னார்
செப்பு வேலை செய்யும் கொட்டிகள்
மரவேலை செய்யும் தச்சர்
வலிமை மிக்க கைகளுடைய கொல்லர்
ஓவிய வினைஞர்
மண்பாண்டம் செய்யும் குயவர்
பொன் வேலை செய்யும் கொல்லர்
இரத்தின வேலை செய்பவர்

துணிவேலை செய்யும் தையற்காரர்
தோல்பொருள் செய்யும் செம்மார்
துணிகள் கொண்டு
படம் முதலியன செய்வோர்
நெட்டிக் கோரைகள் கொண்டு
விலங்கு பறவை பூங்கொத்து முதலிய
கலைப்பொருள் செய்வோர்
என்று பலவாகக்
குற்றமற்ற கைத்தொழில்
செய்திடுவோர் பலரும்
வாழும் இடங்கள் இருந்தன.

குழல் கொண்டு யாழ் கொண்டு
குரல் முதலான ஏழிசைகளைக்
குற்றமற இசைத்து
அவ்விசைவழி தோன்றும்
திறங்களையும்
திறமையுடன் பாடவல்ல
பெரும்பாணர் வாழிடங்கள் இருந்தன.

சிறு சிறு கைத்தொழில் செய்வார்
பிறர் கட்டளைக்குப் பணிந்து
குற்றேவல் புரிந்து நிற்பவர்
வாழும் இடங்களும் இருந்தன.

கடலதன் பரப்பில்
யவனர் இருக்கை தொடங்கி
நகரதன் வீதிகளில்
பல்பொருள் அங்காடிகள் கொண்டு
பலதரப்பட்ட குடிமக்கள்
வாழும் இடங்களைக் கொண்டு
குற்றமறச் செழித்து நின்றது
மருவூர்ப்பாக்கம்.

அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் 21 – 30 இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram10.html

அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் 31 – 39 இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram11.html

படத்துக்கு நன்றி: http://www.hindu.com/2008/05/27/stories/2008052759110500.htm

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *