தனிமை – சென்னையில் நிகழும் அமெரிக்க நாடகம்

1

“தனிமை —  தனிமையில் வாடும் ஒரு வயோதிகரைப் பற்றியது தனிமை.  விரக்தியின் விளிம்பிலிருந்து மீண்டு வாழ்க்கையை உற்சாகமாய் அவர்  எதிர்கொள்ளும் மாற்றத்தை விவரிக்கிறது தனிமை. ஆனந்த்   ராகவ் எழுதி , தீபா ராமானுஜம் இயக்கத்தில் நடக்கவிருக்கும் நாடகம்.

“கதையை பார்த்தவுடன் நாடகம் அழுதுவடியும் போலிருக்கிறதே  என்று  நினைக்காதீர்கள். தனித்து விடப்பட்ட நிலையில் அவர்கள் மகிழ்ச்சிகரமாய் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதையே நாடகத்தில் நாங்கள் வலியிறுத்துவதால் முழுக்க முழுக்க நகைச்சுவையும், உற்சாகமும் ததும்பும் வகையில் எழுதப்பட்ட  நாடகம் இது” என்கிறார் நாடக ஆசிரியர் ஆனந்த் ராகவ்.

அமெரிக்காவில் மூன்று முறை மேடையேறிய பிறகு அங்கே கிடைத்த ஏகோபித்த வரவேற்பின் உந்துதலில் கிரியா இந்த நாடகத்தை சென்னையில் ஏழு முறை நடத்தவிருக்கிறது. “பொருளாதார சுபிட்சத்துக்காக இளைஞர்கள் வெளிநாடு சென்று தங்கி வேலை செய்வது என்பது  மத்திய தர வர்க்கத்தினரின்  ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறுவது இயல்பாகிவிட்ட தற்போதய சூழலில் இந்த நாடகக் கதையில் பெற்றோர்கள் பலரும் தங்களை இனங்காண முடியும்.

“அறுபதுகளின் சூழலையும் தற்போதயச் சூழலையும் மாற்றி மாற்றி காண்பிக்கும் மேடை அமைப்பு, ஒரே பாத்திரத்தை இருவர் எடுத்து நடிப்பது, என்று சுவையான அம்சங்களை மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்று சொல்லும் தீபா ராமானுஜம், இந்த நாடகத்தினை சென்னையில் மேடையேற்ற உறுதுணையாக இருந்த டி.வி. வரதராஜன் அவர்களுக்கும், வாய்ப்பளித்த சென்னை சபாக்களுக்கும் நன்றி சொல்கிறார்.

ஆனந்த் ராகவ், தீபா ராமானுஜம் இருவரும் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள். ஆனந்த் ராகவ், விகடன், கல்கி, அமுதசுரபி, கலைமகள், வடக்கு வாசல், குமுதம் இதழ்களில் தொடர்ந்து எழுதி வருபவர். ஐம்பது சிறுகதைகள், இரண்டு புத்தகங்கள், மூன்று மேடை நாடகங்கள் என்று பத்து வருடங்களாய் எழுத்துப் பணியில் இருப்பவர். மூன்று முறை இலக்கியச்சிந்தனை பரிசு, நான்கு முறை விகடன் முத்திரை கதை பரிசு, பல பத்திரிகளின் சிறுகதைப் போட்டிகளில் பரிசு என்று எழுத்துத் துறையில் கொஞ்சம் அங்கீகாரம் பெற்றவர்.

தொலைக்காட்சி நிகழ்சிகளின் தொகுப்பாளராகத் தொடங்கிய தீபா ராமானுஜம், இயக்குநர் கே பாலசந்தர் பாசறையில் வளர்ந்தவர். கே பாலசந்தர் அவர்கள் இயக்கிய தொலைக்காட்சித் தொடர்கள் உட்பட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர். அச்சமுண்டு அச்சமுண்டு, கதை போன்ற தமிழ்ப் படங்களில் ஸ்கிரிப்ட் சூப்பர்வைசராக பணியாற்றியவர். சமீபகாலமாய்க் குறும்படங்களை எடுத்து வருபவர். அவரின்  Sunset என்னும் குறும்படம் அமெரிகாவில் நடந்த குறும்பட விழாவில் பரிசு பெற்ற ஒன்று.

ஆனந்த் ராகவ், தீபா ராமானுஜம் கூட்டணியில் நாடகம் வெற்றிப்பெறப் போவதில் “கிரியா”வுக்குச் சந்தேகமில்லை. இந்தக் கூட்டணி ஏற்கனவே சென்னையில் “சுருதி பேதம்” என்கிற கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடகத்தை நடத்திப் பெரும் வரவேற்பைப் பெற்றது ” நலிந்து கொண்டிருக்கும் தமிழ் நாடகச் சூழலில் உற்சாக புதுத் தென்றலாய் நுழைந்திருக்கிறது கிரியாவின் சுருதிபேதம்” என்று எழுதியது ஹிந்து பத்திரிகை.

சென்னை குழுக்கள் அமெரிக்கா சென்று நாடகங்கள் நடத்துவதே வழக்கமாக இருக்கும் நிலையில் அமெரிக்காவில் இயங்கும் ஒரு நாடகக் குழு  இந்தியாவுக்கு வந்து நாடகங்கள் போடுவது தமிழ் நாடகச் சூழலுக்குப் புதிது. கிரியா மட்டுமே 2005 இலிருந்து இதைத் தொடர்ந்து செய்து வருகிறது. தமிழ் நாடகங்களுக்குப் பெரிய  ஆதரவு இல்லாத நிலையில் பத்துப் பேருக்கு மேல் அடங்கிய நாடகக் குழு தாங்களே மனமுவந்து செலவுசெய்து அமெரிக்காவிலிருந்து பயணித்து, இங்கே மிகுந்த பொருட்செலவில் நாடகங்கள் போடுவது என்பது பாராட்டுதலுக்கு உரியது. இந்த முயற்சியில் அவர்களுக்குத் துணையாக இருப்பது Antara, Reachout, Aambara, Yelelo போன்ற விளம்பரதார நிறுவனங்கள். நல்ல அரங்க அமைப்பு, உயர்தர லைட்டிங், இயல்பான நடிப்பு என்று நுணுக்கமாகக் கவனத்துடன் நடத்துவதால் ஒவ்வொரு மேடையேற்றத்துக்கும் நிறைய செலவாகிறது. இதை ஈடுகட்ட விளம்பர நிறுவனங்கள் எங்களைப் போன்ற தன்னார்வ குழுக்களை ஆதரிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுக்கிறார் கிரியாவின் நிர்வாக இயக்குநர் தீபா ராமானுஜம்.

இந்தியாவில் நடத்தப்பட்ட 20 மேடையேற்றங்கள் தவிர கிரியா இதுவரை 30க்கும் மேற்பட்ட ஷோக்களை வட அமெரிக்கா, மற்றும் எட்மண்டன், கனடாவில் நடத்தியுள்ளது. சென்னையில் மட்டுமல்லாமல் பெங்களூர் மற்றும் மும்பாயில் தங்களது நாடகங்களை மேடையேற்றியிருக்கும் கிரியா, சுருதி பேதம், கடவுளின் கண்கள், Seeds and Flowers போன்ற நாடகங்களுக்குப் பிறகு தனிமை என்கிற இந்த நாடகத்தை சென்னையில் அரங்கேற்ற வந்துள்ளது.

நாடகத்தின் தரம் ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு, எங்கள் பொருட்செலவிலேயே  நாடகத்தை நடத்த முன்வரும் எங்களைப் போன்ற குழுக்கள், மக்களின் ஆதரவை நம்பியே இயங்குகின்றன. ரசிகர்கள் பெருமளவில் வந்து எங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள் கிரியா குழுவினர்.

நாடகம் நடக்கவிருக்கும் இடங்கள்:

ஜூலை 16 — மாலை 6.45 — கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் – மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், மயிலாப்பூர்

ஜூலை 17 — மாலை  6.45  — நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை

ஜூலை 18 — காலை 10.30  — கிருஷ்ண கான சபா, தி. நகர்

ஜூலை 18 — மாலை 6.45   — ஹம்சத்வனி, யூத் ஹாஸ்டல், இந்திரா நகர்

ஜூலை 23 — மாலை 6.45   — பிரம்ம கான சபா, தக்ஷிணாமூர்த்தி ஆடிட்டோரியம், பி எஸ் சீனியர் செகண்டரி பள்ளி

ஜூலை 24 —  மாலை 6.45   — South Zone Cultural Center மற்றும் ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால் — தி.நகர்

ஜூலை 25 –  மாலை 6.30  — வேல் பில்லபாங் பள்ளி அரங்கம், ஈஞ்சம்பாக்கம்

——————————–X——————————–

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தனிமை – சென்னையில் நிகழும் அமெரிக்க நாடகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *