இந்தியாவின் 14 வது குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி மாபெரும் வெற்றி!

0

 

 

பவள சங்கரி

தலையங்கம்

பரந்த ஞானமும், ஆழ்ந்த அறிவும் கொண்டிருப்பவரும், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் இருப்பவர், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பொறுத்தவரை பிரணாப் முகர்ஜி 527 வாக்குகளையும், சங்மா 206 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.


பிரணாபுக்கு 3,73,116 வாக்குகளும், சங்மாவுக்கு 1,45,848 வாக்குகளும் கிடைத்திருந்தன.. மொத்தமுள்ள 10.5 இல‌ட்ச‌ம் வா‌க்குக‌ளி‌ல் பிரணா‌ப் முக‌ர்‌ஜி மொத்த மதிப்பில் 7,13,763 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், எதிரணி வேட்பாளரான பி.ஏ.சங்மாவுக்கு சுமார் 3,15,987 மதிப்பு வாக்குகள் மட்டுமே கிடைத்ததால்  பிரணாப் முகர்ஜி அமோக வெற்றி பெற்றுள்ளதாகவும் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாநிலங்களவைச் செயலர் அக்னிஹோத்ரி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

மே‌ற்கு வ‌ங்க‌த்தைச் சே‌ர்‌‌ந்த பிரணா‌ப் முக‌ர்‌ஜி, வரு‌ம் 25ஆ‌ம் தே‌தி (ஜூலை 25, 2012) நம் இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக பத‌வியே‌ற்று‌க் கொ‌ள்‌கிறா‌ர். அவரு‌க்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற தலைமை ‌நீ‌திப‌தி பத‌வி‌ப் ‌பிரமாண‌ம் செ‌ய்து வை‌க்‌கிறா‌ர். மேற்கு வங்கத்தில் பிரணாப் முகர்ஜியின் சொந்த ஊரான பிர்பும் கிராமமே விழாக்கோலம் பூண்டு, மக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடுகிறார்கள். 40 ஆண்டுகாலமாக தீவிர ஆரசியலில் ஈடுபட்டுவரும் பிரணாப் முகர்ஜி அவர்கள் தாம் கூறியது போன்று தற்போது இந்தியாவின் குடியரசுத் தலைவராக புதிய பாதையில் பயணிக்கிறார். 69 விழுக்காடு ஆதரவுடன், நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவியேற்கிறார்.

1935ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிறந்த, மேற்குவங்க மாநிலம், பிர்பும் கிராமத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி, சட்டக்கல்வி பயின்று, ஆசிரியராக, பத்திரிக்கையாளராக, வழக்கறிஞராக தம் வாழ்க்கையைத் துவங்கியவர். அரசியல் கடந்து தனிமனித வாழ்வில் மிகச்சிறப்பு வாய்ந்தவர் என்றும் கட்சிகளைக் கடந்த, அரசியல் தலைவர்கள் அனைவருடனும் நல்ல நட்பும், நல்லுறவும் கொண்டவர் என்றும் அனைவராலும் போற்றப்படுகின்றவர். இவருடைய நாடாளுமன்ற வாழ்க்கை 1969ம் ஆண்டில் , காங்கிரசு கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் ஆரம்பித்தது. அதன் பிறகு 1975, 1981, 1993 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 1980ம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு அதில் வெற்றி பெறவில்லை. அதற்குப் பிறகு 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்

1982ம் ஆண்டு இந்திராகாந்தி அவர்களின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். தம்முடைய 47வது வயதில், இந்தியாவின், சிறந்த இளம் நிதி அமைச்சர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். அன்னை இந்திராவின் மறைவிற்குப் பிறகு காங்கிரசை விட்டு வெளியேறி, ராஷ்ட்ரிய சமாஜ்வாதி காங்கிரசு என்ற தனிக்கட்சியைத் துவங்கினார். பி.வி. நரசிம்மராவ் அவர்கள் ஆட்சிக்காலத்தில், திட்டக்குழு துணைத்தலைவராக பதவி வகித்தார். 1995ம் ஆண்டில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், சார்க் அமைப்பின் அமைச்சர்கள் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.

2004ம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பாதுகாப்பு அமைச்சராகவும், பிறகு வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2009ம் ஆண்டில், மீண்டும் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார்.

தற்போது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டப் பேரவை உறுப்பினர்களும் அமோக ஆதரவு அளித்து என்னை வெற்றிபெறச் செய்துள்ளனர். புதிய பாதையில் அடியெடுத்து வைக்க உள்ள நான், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் வகையிலும், அதன் கண்ணியத்தைக் கட்டிக்காக்கும் வகையிலும் உண்மைக் குடிமகனாகச் செயல்படுவேன் என்று பேசியது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரசு தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்களும் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

குடியரசுத் தலைவராக பெரும்பான்மையான வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரணாப் முகர்ஜி அவர்கள் முன்பு, தீவிரவாதி அப்சல் குரு , பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியர்ந்த்சிங் கொலையில் தொடர்புடைய பல்வந்த்சிங் ரஜோனா உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கருணை மனுக்களும், மற்றும் வருகிற 2014ம் ஆண்டின் பொதுத்தேர்தல் போன்ற பல சவால்கள் காத்திருக்கிறது. 2014ம் ஆண்டின் பொதுத்தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால், ஆட்சி அமைக்க வேண்டிய கட்சி பற்றிய முடிவெடுக்க வேண்டிய குடியரசுத் தலைவருக்கு இது ஒரு சவாலாக அமையக்கூடும்.

கட்சி எல்லைகளையும் மீறி அமோக வெற்றி பெற்றுள்ள, மனித நேயமும், நல்ல நட்புறவுகளும் பெற்றுள்ள பிரணாப் முகர்ஜி அவர்கள் இது போன்ற சவால்களை எளிதாக சமாளிப்பார் என்றும் நம்பலாம்.

படத்திற்கு நன்றி:
http://www.images99.com/politicians/pranab-mukherjee-during-speech/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *