விசாலம்

நாம் எந்தப் பூஜை ஆரம்பித்தாலும் முதலில் வந்து பூஜையைப்பெற்றுக்கொள்பவர் நம் பிள்ளையார் தான். ஆம் கணபதி பூஜை இல்லாமல் எந்தப் பூஜையும் தொடங்காது. அவரை அழைப்பதும் மிக எளிது. மஞ்சளைப் பிடித்து வைத்து அழைத்தாலே வந்துவிடுவார்.

பிள்ளையாரில் நாம் இரட்டைப் பிள்ளையார்,பொய்யாப் பிள்ளையார்,வலம்புரிப் பிள்ளையார் என்று பல வகைகளைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால் ஒரே இடத்தில் பதினோரு பிள்ளையார்களைப் பார்த்திருக்கிறோமா? இது போன்ற அமைப்பை வேலூர் அருகில் இருக்கும் சேண்பாக்கம் என்ற இடத்தில் பார்க்கலாம். இவை வேண்டுமென்று உளியால் செதுக்கி வைத்த சிலைகள் அல்ல. இவைகள் தானாகவே தோன்றியவை.

இந்தக் கோயிலில் மூலவர் “செல்வவினாயகர்”. இவரும் சுயம்புவாகத் தோன்றியவர்தான். தன்னை நாடி வரும் பக்தர்கள் எல்லோருக்கும் அருள்பாலித்து வருகிறார்.

ஆதியில் இந்த இடம் முழுவதும் செண்பக வனமாக இருந்ததால் செண்பகவனம் என்று அழைக்கப்பட்டு வந்தது நாளடைவில் சேண்பாக்கம் என்று மருவிவிட்டது.

இந்த பதினொன்று சுயம்பு பிள்ளையார்களை முதலில் பார்த்தவர் ஸ்ரீ ஆதிசங்கரர். ஒரு தடவை ஸ்ரீஆதிசங்கரர் விரிஞ்சிபுரத்தை நோக்கி, ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்திற்கு வந்துக்கொண்டிருந்தார். சேண்பாக்கத்திற்கு அருகில் தான் விரிஞ்சிபுரம் உள்ளது. 

அவர் வரும்பொழுது தன் ஞான திருஷ்டியால் பதினோரு சுயம்பு பிள்ளையார்களைக் கண்டார். எல்லாமே ஓம் என்ற அமைப்பு கொண்டவைகளாக இருந்தன .இந்தச் சுவரூபங்களைக் கண்டு பரவசமாகி அவற்றை வழிபட்டார்.

பின் அனைத்தையும் எடுத்து செல்வ வினாயகர் கோயிலினுள் இருந்த நவகிரஹ சன்னதியின்முன் சகல அனுஷ்டானங்களுடன் சக்கர ஸ்தாபனமும் செய்து பிரதிஷ்டை செய்துள்ளார். இதில் விசேஷம் என்னவென்றால் இங்கு கோயிலில் எழுந்தருளியிருக்கும் மூலவரும் சுயம்புதான்.

இங்கு உள்ள எல்லா வினாயகர் உருவங்களும், லிங்க உருவில் ஓம் என்ற அமைப்புடன் அமைந்திருப்பது வேறு எங்குமே காணமுடியாத ஒன்று. இங்கு இருக்கும் மூலவரான செல்வ வினாயகர் முதுகில் ஒரு வடு உள்ளது. இந்த வடு வண்டிச்சக்கரம் ஏறியது போலிருக்கிறது. இதற்கும் ஒரு நடந்த சம்பவம் உண்டு. இந்த செல்வ வினாயகர் முன்பு பூமியில் அமிழ்ந்து கிடந்த போது அந்தப்பக்கமாக துக்கோஜி என்ற மஹராஷ்ட்ர மந்திரி தேரோட்டியபடி வந்தார்.

இரவு வேளை ..திடீரென்று ஒரு இடம் வந்ததும் அச்சு முறிந்து வண்டி சாய்ந்தது மனம் பதைபதைத்த மந்திரி கீழே இறங்கி பார்த்தார். அங்கு பூமியெல்லாம் இரத்தக்கறை. சுற்றிச்சுற்றி பார்க்க ஒருவரும் அங்கு தென்படவில்லை. இரவு நேரமானதால் அங்கேயே இரவைக்கழித்தபடி ஒரு இடத்தில் சாய்ந்தபடி கண்களை மூடிக்கொண்டார். நித்திரை அவரைத் தழுவியது.

அப்போது அவர் கனவில் பிள்ளையார் வந்தார்.  “நீ ரதம் ஓட்டியபடி வந்த அந்த இடத்தில் தான் என்னுடைய மூர்த்திகள் இருந்தன. உன்னுடைய ரதத்தின் சக்கரம் அவற்றின் மேல் ஏறியதால்தான் இரத்தம் வந்தது” என்று சொல்லி மறைந்தார். துக்கோஜி மிகவும் வருந்தி அங்கு கணபதிக்கென்று ஒரு கோயிலையும் எழுப்பி கும்பாபிஷேகம் செய்தார்.

செல்வ கணபதி கோயில் போக சென்னையிலிருந்து வேலூர் சென்று வேலூர் பஸ்நிலையத்திலிருந்து சுமார் 3 கிமீ தூரம் போகவேண்டும்.

இந்த கோயிலில் சங்கட சதுர்த்தி அன்று விரதம் இருந்து நெய் விளக்கேற்றி தன் விருப்பங்களை வேண்டிக்கொள்ள அது நடந்து விடுகிறது. முக்கியமாக திருமணபிராப்தி கிட்டுகிறதாம்.

காரில் போனால் சுமார் மூன்று மணி நேரத்தில் இந்தக் கோயில் சென்றுவிடலாம்.

சென்று தரிசியுங்கள். கணபதி எல்லாம் தருவான். 

புகைப்படங்களுக்கு நன்றி:

http://www.panoramio.com/photo_explorer#view=photo&position=282&with_photo_id=63121452&order=date_desc&user=2541119

http://aalayamkanden.blogspot.in/2010/09/sree-varasiddhi-selva-vinayakar-temple.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *