பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (41)

1

 

பேரா. இ. அண்ணாமலை

வினா

‘மயில் போல் அழகு / மயில்போல் அழகு’ என்று ’போல்’, ’போன்ற’ ஆகிய உவமையுருபுகளைப் பிரித்தும் தனித்தும் எழுதுகிறோம். இவற்றைத் தனித்து எழுதலாம? வேற்றுமையுருபுகளை, ராமனை, ராமனால், ராமனுக்கு எனப் பிரித்தெழுதாமல் எவ்வாறு பெயர்ச்சொற்களோடு சேர்த்தெழுதுகிறோமோ அதுபோல, உவமையுருபுகளையும் சேர்த்துத்தானே எழுதவேண்டும்?.

சிவகுமார்

பதில்

சொற்களுக்கிடையே இடம் விட்டு எழுதுவது தமிழ் அச்சுக்கு வந்தபோது துவங்கிய மரபு. ஓலைச் சுவடிகளில் சொற்கள் இடைவெளி இல்லாமல் இருக்கும். செய்யுளில் யாப்புத் தெரிந்தவர்களுக்குச் சீர் பிரிக்கத் தெரியும். அது சொல் பிரிப்பு அல்ல. புள்ளி, காற்புள்ளி முதலான நிறுத்தக் குறிகளோடு புதிதாக வந்த மரபு சொல் பிரிப்பு. இது சொற்களை இனம்காண உதவும்; அதன்மூலம் வாசிப்பை விரைவுபடுத்தும். புதிதாக எழுதப் படிக்கக் கறற்வர்களுக்குச் சொல் பிரிப்பு பெரிய உதவி.

சொல்லைப் பிரித்து எழுதுவது புதிய மரபாதலால் அதற்கு

மரபிலக்கணத்தில் விதிகள் இல்லை. புதிய வழ்க்குக்கு இலக்கணம் எழுதப் புலவர்களுக்குத் தயக்கம். எனவே, பலர் பலவாறு எழுதுகிறார்கள். இந்திய மொழிகளின் மைய நிறுவனமும் மொழி அறக்கட்டளையும் சேர்ந்து வெளியிட்ட தமிழ் நடைக் கையேடு என்னும் நூல் இன்றைய வழக்கைச் செம்மைப்படுத்தும் முதல் முயற்சி.

சொல்லைப் பிரித்து எழுத எது சொல் என்பது பற்றி ஒரு தெளிவு வேண்டும். தனித்து வருவது சொல்; ஒரு சொல்லோடு ஒட்டி வருவது உருபு. உருபு எப்போதும் தனித்து இயங்காது. சொல்லைப் பிரித்து எழுதலாம்; உருபைப் பிரித்து எழுத முடியாது. பேச்சிலும் அது பிரிந்து நிற்காது. வேற்றுமை உருபுகள் அப்படிப்பட்டவை. எனவே பிரித்து எழுதுவ்தில்லை. ‘-ஓடு வந்தான்’ என்று பேசுவதில்லை; எழுதுவதில்லை. ‘அப்பாவோடு வந்தான்’ என்பது போன்றே வரும். ஆனால் ‘கூட வந்தான்’ என்று பேசலாம்; எழுதலாம். இது சொல்லுருபு எனப்படும். சொல்லின் குணமும் உருபின் குணமும் இதற்கு உணடு. ‘கூட, ஓடு’ ஆகிய இரண்டின் பொருளும் வேற்றுமைப் பொருளே. ஆனால் சொல்லின் தன்மையில் வேறுபாடு. சொல்லுருபைச் சொல்லைப் போல் பிரித்து எழுத வேண்டுமா, உருபைப் போலச் சேர்த்து எழுத வேண்டுமா என்னும் கேள்வி எழுகிறது. இத்ற்கு இலக்கணம் சார்ந்த விடை இல்லை.

இன்றைய வழக்கில் எழுதுபவர்கள் சொல்லுருபின் நீளத்தையும் அதன் முன் வரும் சொல்லின் நீளத்தையும் கணக்கில் எடுத்துக்- கொள்கிறார்கள். ‘வந்தபின்’ என்று சேர்த்தும் ‘வந்த பிறகு’ என்று பிரித்தும் எழுதும் வழக்கைப் பார்க்கிறோம். ‘வந்ததற்குப் பின், வந்ததற்குப் பிறகு’ என்று பிரித்து எழுதுவதே பெருவழக்கு. இதைப் போலவே ‘ஆசிரியரே, ஆசிரியர்கூட, ஆசிரியர் மட்டும்’ என்று எழுதும் வழக்கு. ‘பூப்போல்’ என்று சேர்த்தும், ‘செம்பருத்தி போல, பூவைப் போல’ என்று பிரித்தும் எழுதும் வழக்கு.

ஒரு வ்டிவத்தின் இலக்கண வகையை எடுத்துக்கொள்ளாமல், சொல்லின் அளவை எடுத்துக்கொண்டு வழக்கு அமைகிறது. இதைத் தொகைகளை எழுதுவதிலும் பார்க்கலாம். தீப்பெட்டி, தலைவலை’ என்று சேர்த்தும் ‘நெருப்புப் பெட்டி, முழங்கால் வலி’ என்று பிரித்தும் எழுதுவது இன்றைய வழக்கு.

பிரித்து எழுதுவது சொல்லின் வடிவத்தைத் தனித்துக் காட்டுகிறது. அது வாசிப்பை எளிமையாக்குகிறது; வாசிப்பின் வேகத்தைக் கூட்டுகிறது இலக்கண்த்தில் அடிப்படையில் பார்க்கும்போது முரண் இருப்பதாகத் தோன்றினாலும், இன்றைய வழக்கு மொழியின் பயனை –வாசிப்பின் எளிமையைக- கூட்டுகிறது அல்லவா?

முந்தைய வினாவும் – விடையும்

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (41)

  1. பொருத்தமான விளக்கம்
    பேராசிரியருக்குப் பாராட்டுகள்.
    அன்புடன்
    பெஞ்சமின் லெபோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *