Featuredஇலக்கியம்பத்திகள்

இங்கிலாந்திலிருந்து ஒருமடல் ……. ( 19)

சக்தி சக்திதாசன்
 
 

அன்பினியவர்களே !

ஒரு வார காலம் ஒலிம்பிக் வாழக்கைக்குள் இங்கிலாந்து தேசமே தன்னை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பத்தின் முன்பு மக்கள் மனதில் ஒருவகை சந்தேகம் குடிகொண்டிருந்தது. அதாவது இந்த பொருளாதார நெருக்கடி நேரத்திலே இத்தனை செலவில் ஒரு ஆடம்பரமான ஒலிம்பிக் போட்டிகள் எம் நாட்டில் அவசியம் தானா? இப்போட்டிகளின் எதிர்பார்ப்புகள் வெற்றியடையுமா? என்றெல்லாம் ஒரு 50 வீதமான மக்கள் சிந்தித்தார்கள்.

இத்தகைய ஒரு கருத்து மக்களிடையே ஓங்குவதற்கு இவ்வொலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதை எதிர்மறையாக விமர்சித்த பல அரசியல் அவதானிகள், அரசியல்வாதிகள் துணை போனார்கள் என்பதுவும் உண்மையே.

பல தடங்கல்களையும் சமாளித்து இங்கிலாந்து நாட்டில் இதுவரை நடைபெற்ற இந்த ஒருவார கால போட்டிகளும் மிகப்பெரிய அளவில் தனது எதிர்பார்ப்புகளுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்திருக்கின்றது என்பதுவே உண்மை.

பெரிய பிரித்தானிய ஒலிம்பிக் வீரர்கள் ஒரு நூறாண்டு கால சாதனைகளைத் திரும்பவும் நிலைநாட்டியுள்ளார்கள் என்பதும் உண்மை. மக்களின் மனதினிலே தினமும் அல்லாடிக் கொண்டிருந்த நாட்டுன் பொருளாதாரச் சிக்கல்களை இவ்வொருவாரகாலம் மற‌க்கடித்து மக்களை ஒருவித வெற்றி மயக்கத்தில் ஆழத்தியது என்பதுவே உண்மை.

சரி,  மிகவும் விரைவாக இவ்வொலிம்பிக் போட்டிகள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. மக்களின் மனதில் “பொருளாதாரச் சிக்கல்” எனும் மந்தகால கருமேகங்கள் சிறிது சிறிதாகக் கவ்வ ஆரம்பித்துள்ளன.

நேற்றைய “இங்கிலாந்து வங்கியின்” தலைவரின் மூன்றுமாத கால பொருளாதாரக் கணிப்புகளின் படி இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சி 2012ல் 0.8 வீதம் என்பதிலிருந்து 0 எனும் நிலைக்கு தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தான் என் மனதில் எழும் கேள்வியை வாசகர்களாகிய உங்கள் மத்தியில் தூக்கிப் போடுகின்றேன்.

“அரசியல் நாகரீகம் ” என்றால் என்ன?

இந்த அரசியல் நாகரீகம் எந்த அளவிற்கு மேற்குலக நாடுகளிலும், எமது தாயக நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது ? உலகத்தில் இரண்டு மனிதர்கள் அனைத்துக் கருத்துக்களிலும் ஒத்துப் போவது என்பது ஒரு நடைபெறமுடியாத விடயம். இது தனிப்பட்ட வாழ்க்கையிலாகட்டும், பொதுவாழ்க்கையிலாகட்டும் உண்மையான ஒரு விடயம்.

காலமாற்றம் என்பது இன்றைய காலகட்டத்தில் கனவேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகத்தின் எல்லைகள் மிகவும் சுருங்கிக் கொண்டே செல்கிறது. நவீனயுகத்தின் நடைமுறைகள் “உலக கிராமம்” அதாவது Global Village என்று குறிப்பிடும் வகையிலான செயல்பாடுகளுக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றன வியாபார முறைகள் “உலகமயமாக்கல்” எனும் வகையிலான Globalisation எனும் மாற்றத்திற்குள்ளாகிக் கொண்டே செல்கின்றன.

அரசியல்வாதிகளினதும், நாட்டின் அரசாங்கங்களின் செயல்பாடுகளும் 24 மணிநேர தொலைக்காட்சிக் கலாச்சாரத்திலும், ஊடகங்களின் தொடர்ந்த அவதானிப்புகளுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கின்றன.

முகநூல், ட்வீட்டர் எனப்படும் சமூக இணையத்தளங்களில் அரசியல்வாதிகள் தமது கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அரசியல் தன்னை உட்படுத்திக் கொண்டிருக்கிறது.

இத்தகைய ஒரு பின்னனியில் தான் எனது “அரசியல் நாகரீகம்” என்றால் என்ன? அது இக்காலகட்டத்தில் எந்த அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது எனும் கேள்வி எழுகிறது.

கருத்துக்களை எதிர்ப்பதில் ஒரு நாகரீகம், எதிர்க்கட்சியிலிருந்தாலும் நாட்டின் நலனுக்கு நன்மை பயக்கும் நல் திட்டங்களை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் எந்த அளவில் காலமாற்றத்தை உளவாங்கியிருக்கிறது என்பது கேள்விக்குறியே !

அதுவும் தாயக நாடுகளில் இவைகளின் முன்னேற்றம் மிகவும் குறைந்த அளவில் காணப்படுகிறது என்பது எனது அபிப்பிராயம்.

இன்றைய இளைஞர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி விடும் அளவிற்கு அளவில் அரசியல் அநாகரீகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

ஒருநாட்டின் வளர்ச்சியின் முதுகெலும்பு அதன் இளைய தலைமுறையே. இளைய தலைமுறையினர் காலமாற்றத்திற்குள்ளாவது தவிர்க்கப்படமுடியாதது.  இக்காலமாற்றத்தை எமது சமகால அரசியல்வாதிகள் சரியான முறையில் உள்வாங்கிக் கொண்டுள்ளார்களா என்பது கேள்விக்குறியே !

இதற்குக் காரணம் எமது தாயக நாடுகளில் அரசியல்வாதிகள் மிகவும் பழுத்தவர்களாக, வயதில் முதிர்ந்தவர்களாக இருப்பது ஒரு காரணமோ? என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

எந்த அடிப்படையில் இந்தக் கருத்தை முன்வைக்கத் தலைப்படுகிறாய் என நீங்கள் வினவுவது புரிகிறது.

எனது சொந்த மனதின் தாக்கங்களின் அடிப்படையை வைத்தே சொல்கிறேன். குறிப்பாக நான் ஒரு நாட்டின் பிரதமராக இருந்தால் என் மனதின் உணர்ச்சிகள் நான் வாழ்ந்த காலத்தில் , நான் கண்ட சமுதாயத்தின் அடிப்படையில் எழுவது இயற்கை. இவ்வெண்ணங்களின் அடிப்படையில் நான் தற்போது வாழும் சமுதாய அங்கத்தினரின் குறிப்பாக நாட்டின் முதுகெலும்பான இளையதலைமுறையினரின் உணர்வுகளை புரிந்து கொள்வேனா? அப்படிச் சரியாகப் புரிந்து கொள்ளாத நிலையில் எப்படி அவர்களைச் சரியான திசையில் வழிநடத்த முடியும்?

சரி அதற்கும் என் கேள்வியான “அரசியல் நாகரீகம்” என்றால் என்ன? எனும் கேள்விக்கும் என்ன சம்பந்தம் ?

இன்றைய இங்கிலாந்துத் தலைவர்கள் அதுவும் பொதுவாக இங்கிலாந்து அர்சாங்கத்திலிருக்கும் கூட்டரசாங்கத்தின் தலைவர்களின் போக்கு என் மனதில் பலவிதமான சிந்தைகளைக் கிளறி விட்டது.

கூட்டரசாங்கத் தலைவர்களில் ஒருவரான “நிக் கிளேக்” (Nick Cleg) , அவரது கட்சியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒன்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மைக் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்ற அங்கத்தினர்களால் தூக்கியெறிப்பட்டதன் பின்னணியில், இக்கூட்டரசாங்கத்தின் உடன்படிக்கை கிழிக்கப்பட்டது என பகிரங்கமாக தெரிவித்தார்.

ஆனால் அதேசமயம் தானோ தனது கட்ச்சியோ கூட்டரசாங்கத்திலிருந்து விலகி அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவதில்லையென்றும் மனக்கசப்புக்கள் இருந்தாலும் நாட்டின் பொருளாதார இக்கட்டுகளை நிவர்த்தி செய்யும் பணியில் கன்சர்வேடிவ் கட்சியினருடன் தொடர்ந்தும் இணைந்து இப்பாராளுமன்றத்தின் எஞ்சிய காலப்பகுதியில் பிரச்சனைகளைத் தீர்க்கும் க்ள்கைகளுக்கு அதரவளிப்பேன் என்று கூறினார்.

அதே போல நேற்றுக் காலை வானொலி ஒன்றில் நேரடியாகப் பேட்டியில் கலந்து கொண்ட பிரதமர் டேவிட் கமரன் கேல்விக்குப் பதிலளிக்கும் போது எமது இரு கட்ச்சிகளும் அரசாங்கத்தில் இணைந்து இருந்தாலும் நாம் இருவேறு கட்சிகள் நாட்டின் நன்மை கருதி பொது வேலைத்திட்டத்தில் இயங்கினாலும் எமக்குள்ளே கொள்கை வேறுபாடுகளை விவாதிப்பது ஒரு ஆரொக்யமான் செய்கையே என்று கூறினார்.

அது மட்டுமின்றி தனிப்பட்டரீதியில் உதவிப்பிரதமரான நிக் கிளெக் வேறு கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் தனக்கு அவரிடம் மரியாதை உண்டு அவரது கொளகையின் மீது அவர் கொண்டிருக்கும் தீவிர நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டியது தமது கடமை என்றும் கூறினார்.

இவர்கள் இருவரையும் எடுத்துப் பார்க்கும் போது இவர்கள் என்னை விட மிகவும் வயதில் இளையவர்கள். எனது 37 வருட இங்கிலாந்து வாழ்க்கைக் காலத்தில் இப்போதுதான் முதன்முறையாக என்னைவிட வயதில் குறைந்த ஒருவர் பிரதமராக இருக்கும் ஒரு சூழலைக் காண்கிறேன், அதவாது அத்தகைய ஒரு முதிர்ந்த காலப்பகுதியில் நான் நுழைகிறேன்.

பலகாலமாய் இங்கிலாந்திலும் பிரதமர்கள் அனேகமாக 60 வதுகளின் நடுப்பகுதியில் இருந்தார்கள் .இப்போதுதான் அரசியல் தலைமைத்துவம் ஒரு இளைய தலைமுறையினரிடம் மாறிக் கொண்டிருக்கிறது.

பிரதமர் டேவிட் கமரனின் நேற்றைய பேட்டியில் மற்றொரு விடயத்தை அவதானித்தேன். அவர் மிகவும் இயல்பாக தனது குழந்தைகள எவ்வாரு இந்த ஒலிம்பிக் போட்டியை உள்வாங்கிக் கொண்டுள்ளார்கள் ஏனோ அதை நகைச்சுவை ததும்பும் வகையில் பேட்டி கண்ட நிக் வெராரியுடன் (Nick Ferrari) உடன் பகிர்ந்து கொண்டார்.

அரசாங்கத்திலிருக்கும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் செய்யும் அனைத்துக் காரியங்களையும் தாக்கிக் கொண்டிருப்பது அரசியல் நாகரீகமா?

இத்தகைய ஒரு செயற்பாடு இளையதலைமுறையினர் மத்தியில் அரசியலைப் பற்றிய ஒரு வெறுப்புக் கலந்த விரக்தியைத் தோற்றுவித்து அவர்களைப் புறந்தள்ளி விடாதா?

அதேசமயம் அனுபவம் முதிர்ந்த பழுத்த அரசியல்வாதிகள் இல்லாத அரசியல் ஒரு நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்லுமா?

இவையனைத்தும் ஒருமனதில் எழும் நியாயமான கேள்விகளே !

இளைஞர்கள் ஈடுபடாவிடில் ஒரு நாட்டின் எதிர்காலம் சுபீட்சமடைவது சந்தேகமா? இன்றைய காலகட்டத்தின் அவசரத் தேவை இளைஞர்களை தம் நாட்டின் முன்னேற்ற‌த்தில் ஈடுபடச் செய்வதே ! 

ஊடகங்களின், கண்காணிப்பு, 24 மணிநேர தொலைக்காட்சி அவதானிப்பு இவைகளின் மத்தியில் சமூக வலைத்தளங்களின் மத்தியில் இன்றைய அரசியல்வாதிகள் நாகரீகமான அரசியலில் ஈடுபடுவதின் மூலமே இளைஞர்களை நாட்டின் முன்னேற்றத்தை வலுப்படுத்தும் அரசியலில் ஈடுபடச் செய்யலாம். 

இது அத்தியாவசியத் தேவை என்பதோடு காலத்தின் கட்டாயம் கூட ……

சரி அரசியல் நாகரீகம் என்னால் என்ன என்பதன் விடை என்ன ?

“எனது கருத்தை எதிர்க்கும் உனது உரிமையைக் காப்பதற்கு எனது உயிரைப் பயணம் வைத்துப் போராடுவேன்” என்றான் ஒரு புரட்சிவாதி.

சிந்திக்க‌ வைக்கிறது இல்லையா

மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும் வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்
லண்டன்

 

Comments (1)

  1. நண்பர் சக்தி தாசன்,
    நான் சில வருடங்கள் முன்னால், ஹிந்து இதழுக்கு ‘In Defence of the British Tinge’ என்ற கட்டுரை ஒன்று அனுப்பினேன். மறு நாளே பிரசுரித்தார்கள். அதை நினைவூட்டுகிறது, உங்கள் கட்டுரை. அது எனக்கு பூரண சம்மதம். ‘அரசியல் நாகரீகம்’ பற்றி இந்தியாவில் பேசப்படவேண்டும். அந்த விழிப்புணர்ச்சி அவசரத்தேவை. வல்லமை இதழும், நீங்களும், வாசகர்களும் சம்மதித்து ஆக்கப்பூர்வமாக பங்கேற்றால் நலம். இனி உங்கள் பாடு, வல்லமை பாடு. முதல் திரியை பற்ற வைக்கிறேன். 
    யால்டா கான்ஃபெரன்ஸுக்கு, சர்ச்சில் ஆட்லியை அழைத்துச்சென்றார். எதிர்க்கட்சித்தலைவர் எதற்கு’ என்று அங்கு ஒரு நிருபர் வினவினார். அடுத்த தேர்தலில் நான் தோற்றுப்போனால்! என்றார், சர்ச்சில். ஏன்? இந்தியாவில் நேரு? ஹூம்! கேட்டால் தான் சொல்லுவேன்!
    இன்னம்பூரான்

Comment here