தனித் தமிழ் அறிஞர் த.சரவணத் தமிழன் மறைந்தார்

 

அண்ணாகண்ணன்

இந்த நூற்றாண்டின் தலைசிறந்த இலக்கண நூல் ஆசிரியரும் தனித் தமிழ்அறிஞருமான த.சரவணத் தமிழன் அவர்கள், 2012 ஆகஸ்டு 26 அன்று இரவு 8 மணிஅளவில் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல்நலக் குறைவால்காலமானார். அவரது உடல், மருத்துவமனை வளாகத்திலேயே அஞ்சலிக்காகவைக்கப்பட்டுள்ளது. அவர் உடல்தானம் செய்திருப்பதால், ஆகஸ்டு 27 அன்றுமாலை 4 மணி அளவில் அவரது உடல் அதே மருத்துவ நிர்வாகத்திடம் வழங்கப்பட உள்ளது.

த.சரவணத் தமிழனாரை 1993ஆம் ஆண்டுவாக்கில் திருவாரூரில் அவரது இல்லத்தில்நான் ஒரு முறை சந்தித்தேன். அப்போது என் வெண்பாக்கள், கவிதை ஆக்கங்கள் சிலவற்றை அவரிடம் காட்டினேன். அவற்றைப் படித்துப் பாராட்டிய அவர், 10 வெண்பாக்களில் ஒரு சிறுகதை எழுத முயலுமாறு தூண்டினார். அவரது தூண்டுதலின் பேரில் 10 வெண்பாக்களில் ஒரு சிறுகதை என்ற அளவில் இரண்டு முறை வெண்பாச் சிறுகதைகள் எழுதினேன். அவை, என்னுடைய ‘பூபாளம்’ என்ற முதல் கவிதைத் தொகுப்பில் வெளியாயின.

த.ச.தமிழன் அவர்கள், ஆங்கிலம் கலவாமல் உரையாடுபவர். தமிழ் மொழியில் பிற மொழிகள் கலப்பதையும் பிற மொழிச் சொற்களை மக்கள் புழங்குவதையும் கண்டு, பெரிதும் மன வேதனை அடைந்தார். அதற்கு எதிர்வினையாகத் தனித் தமிழில் உரையாட முடியும், இயங்க முடியும் என எடுத்துக் காட்டும் விதமாக, தனித் தமிழில் பேசியும் எழுதியும் வந்தார். தமிழாசிரியராகப் பணியாற்றிய அவர், தமிழை தன் உயிரினும் மேலாக நேசித்தார்.

சரவணத் தமிழன், திருவாரூரில் இயற்றமிழ் பயிற்றகம் என்ற அமைப்பினைத்தொடங்கி, பல்வேறு புலவர்களையும் படைப்பாளிகளையும், உருவாக்கினார். இவரால் படைப்பாளிகளாக பரிணமித்தவர்கள் பலர். குறிப்பாக, பால்வளத் துறை முன்னாள்

அமைச்சர் மதிவாணன், ’இனிய உதயம்’ ஆரூர் தமிழ்நாடன், சென்னை பல்கலைக்கழகத்தமிழ்த் துறை தலைவர் முனைவர் ய.மணிகண்டன், கவிஞர் ’நக்கீரன்’ கோவி.லெனின், கவிஞர் ’ஆனந்த விகடன்’ மானா பாஸ்கரன், திருவாரூர் குணா, பேராசிரியர் வி.மருதவாணன், கவிஞர் நீதிதாசன், கவிஞர் கனகராஜ், புலவர் இளையநந்தி போன்றோர்.

ஐயாவின் மரணச் செய்தி அறிந்து, அவரின் மாணவர்களும் படைப்பாளர்களும் தமிழறிஞர்களும் குடும்பத்தினரும் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
த.ச.தமிழன் அவர்களின் மறைவு, தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் பேரிழப்பாகும். அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும். அவர் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.

நக்கீரன் செய்தி – http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=81480

About the Author

has written 120 stories on this site.

கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.

Write a Comment [மறுமொழி இடவும்]


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.