ஹாஹோ 

“வேதங்கள் அதன் இலைகள்; யார் இந்த மரத்தை அறிகிறார்களோ அவர்கள் உண்மையை அறிந்தவர்கள்!, இங்கே ஒரு விஷயம் கவனித்தீர்களா?”, ஹாஹோ கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார்.

கூட்டத்தைப் பார்த்து, பேசுகிறவர் இப்படிக் கேள்வி கேட்கக்கூடாது. கூட்டம் எப்படி பதில் சொல்லும்? கூட்டத்திலுள்ள முந்திரிக் கொட்டை ஏதாவது ஒன்று எழுந்திருந்து சம்பந்தமே இல்லாமல் ஒரு பதிலைச் சொல்லும். அப்படி இப்போது எழும்பியது நம் எடக்கு மடக்கு. “ரெண்டு விஷயத்தைச் சொல்லிப்புட்டு ஒரு விஷயத்தை கவனிச்சீங்களான்னா என்ன அர்த்தம்? ஒன்னு எங்களுக்கு ஒரு காது செவுடு அல்லது உங்களுக்கு ஒன்னுக்கு மேல எண்ணத் தெரியாது! நான் சொல்லறது சரிதானே?”.

“எனக்கு ஒரு விஷயம் புரியுது, யாருக்கு மரமண்டையோ அவங்கதான் உண்மையான ஞானி!”, இப்படிக் குரல் கொடுத்தது தமாசு.

“தலைகீழ் மரத்தின் அடிப் பகுதியில் இருக்கக் கூடிய இலைகளே வேதங்கள், என்கிறார் கிருஷ்ணர்!”, இப்படிச் சொல்லி விட்டு நாத்திக்சாமியின் முகத்தை ஏறிட்டார் ஹாஹோ.

“பார்த்தீங்களா, நாங்க சொன்னாக் கேட்க மாட்டீங்க, அதையே நீங்களா சொன்னா நாங்க கேட்டுக்கணும். ஆரம்பத்துலேர்ந்து நாங்க இதைத்தான் சொல்லறோம், வேதங்கள் சொல்றதெல்லாம் கீழான விஷயங்கள், அதைப் படிக்கிறதையும், பரப்புவதையும் உட்டுடுங்கன்னு, இப்பவாவது நாங்க சொல்றத ஒத்துக்கறீங்களா?”, நாத்திக்சாமி அருவியெனப் பொழிந்தார்.

பக்திப்பழுத்தான் “சிவசிவா’, என்று சொல்லிக் கொண்டு காதுகளைப் பொத்திக்கொண்டார். இதற்கு ஹாஹோ என்ன பதில் சொல்லப் போகிறாரோ என்று காதைத் தீட்டிக் கொண்டு கூட்டம் காத்திருந்தது.

“கீழ்ப்பகுதியில் இருக்கும் இலைகள்தான் வேதங்கள் என்று கிருஷ்ணர் சொன்னாரே அன்றி, வேதங்கள் கீழானவை என்று சொல்லவில்லை. உலக அறிவின் எல்லை வேதங்கள். வேதங்களைக் கற்றுத் தேர்ந்த ஒருவன் இனி கற்க ஒன்றுமில்லை, அந்த அறிவு ஒருவனை முற்றிலுமாக உள்நோக்கித் திரும்பச் செய்யும். தலைகீழ் மரத்தைப் புரிந்துகொள்ள அது வழி வகுக்கும். கடவுளை அறியும் பயணத்தை நோக்கி அது உந்தித்தள்ளும், அப்போது அவன் உண்மை ஞானியாகிறான்!”, இப்படி பெரும் பிரசங்கம் செய்து முடித்தார் ஹாஹோ.

“சரியாச் சொன்னீங்க, சரியாச் சொன்னீங்க!”, என்று ஆர்ப்பரித்தார் ஆமாம்பிரபு. “என்னென்னவோ சொல்லுறீங்க, ஏதோ பெரிய விஷயம் சொல்றீங்கன்னு தெரியுது ஆனா எனக்கு ஒன்னும் புரியலை”, என்றாள் சாதாரணீ.

“எனக்கும் தான் புரியலை, ஆனா நான் புரிஞ்ச மாதிரி தலையாட்டலை, என்னை மாதிரியே நீயும் இருக்க வேண்டியதுதானே? ஏதோ மந்தித் தள்ளும்ன்னு சொன்னாரே அதுதான் கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருந்தது!”, என்றது தமாசு.

“அதாவது கடவுளோட வீழ்ச்சிதான் இந்த வாழ்வும், நாமும். கடவுளைச் சென்றடையனும்னா நாம மொதல்ல 180 டிகிரி திரும்பியாகனும், அதானப்பா சொல்லுற?”, என்று ஹாஹோவைப் பார்த்து பதில் சொல்வதைப் போல் கேள்வியைக் கேட்டார் பேரறிவு.

“ஓ, அப்ப அந்த மந்தித் தள்ளறப்ப விழுந்தது கடவுள்தானா?”, என்று ஏதுமறியாமல் வினவினான் மக்கான்.

“கொஞ்சம் எளிமையாவேச் சொல்றேனே, இந்த வாழ்க்கையை ஒரு மரமுன்னு வச்சுப்போம், அது நாம நினைக்கிற மாதிரி நேரான மரம் கிடையாது தலைகீழ் மரம். வேர் மேலே இருக்கு, கிளை இலைகளெல்லாம் கீழே இருக்கு, இதை யாரு சரியாப் புரிஞ்சுக்கிறாங்களோ அவங்க உண்மையைத் தெரிஞ்சுகிட்டவங்க, அவ்வளதுதான்!”

“ஆஹா எனக்குத் தெரிஞ்சு இந்த விஷயத்தை இவ்வளவு எளிமையாச் சொன்னது நீங்க ஒருத்தர்தான்!”, என்றார் ஆமாம்பிரபு. “ஆமாமாம், ஆமாம்பிரபுவுக்கு உலகத்துல ஹாஹோவைத் தவிர்த்து யாரையும் தெரியாதுன்னு நான் அடிக்கடி சொல்வேனே அது உண்மைன்னு புரிஞ்சுகிட்டீங்க இல்ல?!”, தமாசு ஆமாம்பிரபுவை கிண்டல் செய்தது.

“வேதங்கள் இலைகள்ன்னு சொன்னீங்க, அந்த மரத்துல நாமெல்லாம் எது?”, இப்படிக்கேட்டார் பழனியப்பன்.

“நீங்க சரியான விஷயத்தைக் கேட்டீங்க அடுத்தடுத்த ஸ்லோகங்களில அதைத்தான் நாம பார்க்கப் போறோம்! இன்னிக்கு இத்தோட முடிச்சுகிட்டு அடுத்த வாரம் அடுத்த ஸ்லோகத்தை பார்க்கலாமா?”, என்றார் ஹாஹோ.

“அதுசரி அந்த போஸ்டர் பற்றி யாரும் மூச்சுவிடவே இல்லையே ஏன்?”, என்றார் சமூகன். “அது என்ன போஸ்டர்?”, குழந்தை போல ஆர்வத்துடன் கேட்டார் ஹாஹோ.

“உங்களுக்குத் தெரியாதா சாமி, இன்னிக்கு இந்தக் கூட்டத்துல கலந்துக்கறவங்களிலிருந்து ஒருத்தரைத் தேர்ந்தெடுத்து 3 பவுன் மோதிரம் பரிசா வழங்கப்படும்ன்னு ஊரு முழுக்க போஸ்டர் ஒட்டியிருக்காங்க!”, என்றார் மருதமுத்து.

“ஓ அதான் இன்னிக்கு இவ்வளவு கூட்டமா? இது யாரு செஞ்ச சதி?”, என்று ஒவ்வொருவரின் முகமாக நோட்டம் விட்ட ஹாஹோ, சமூகனின் முகத்தருகே வந்து நிறுத்தினார்.

“அப்புடிப் பாக்காதீங்க, நான்தான் அதைச் செய்தது, நல்ல விஷயத்துக்கு கூட்டம் வரட்டுமேன்னுதான் அப்படிச் செஞ்சேன், ஆனா இதோ என் விரல்ல நான் போட்டுருக்கிற மோதிரம் நாலு பவுன், இதை யாருக்கு வேணுமானாலும் நீங்க கொடுக்கலாம்”, என்று விடுவிடுவென மோதிரத்தைக் கழட்டி ஹாஹோ கையில் கொடுத்தார் சமூகன். “கீதைக்காக கை மோதிரத்தை கழட்டிய தியாகி!”, என்று சாதாரணீ சொல்ல, எல்லாரும், “வாழ்க! வாழ்க!”, என்று கோஷமிட்டார்கள்.

“மோதிரம் கெடக்குது கழுதை, அதைவிட ஒரு பெரிய விஷயம் எங்களுக்காக நீங்க செய்ய வேண்டியிருக்கு!”, புதிர் போட்டு நிறுத்தினார் பெரியவர் நாராயணசாமி.

“மோதிரத்தோட பெரிசுன்னா அது வளையல், அதை சமூகன் போட்டுக்க மாட்டாரு, அதை விடவும் பெருசுன்னா ஒட்டியாணம்தான், அதை இப்பல்லாம் யாருமே போட்டுக்கிறதில்லை! பெருசுன்னு எதைச் சொல்றீங்க பெருசு?”, எப்போதும் போல தமாசு கலக்கியது.

“கீதை புரியாத விஷயம்ன்னு நாங்களெல்லாம் அது கிட்டயே போறதில்லை, நீங்க எங்களுக்குப் புரியற மாதிரி அழகாச் சொல்லுறீங்க, ஆனா இத்தனை நாளா இதைக் கேட்காம, தவற உட்டுப்புட்டோம், அதுனால நாளையிலேர்ந்து மறுபடியும் முதல் ஸ்லோகத்துலேர்ந்து ஆரம்பிச்சு எங்களுக்குச் சொல்லணும்! இது நம்ம கிராம மக்கள் சார்பா நான் விடுக்கிற வேண்டுகோள்!”, என நச்சென்று அழகாய் விஷயத்தை முடித்தார் நாராயணசாமி. “எங்க எல்லாரோட ஆசையும் அதுதான்”, கோரஸாகக் குரல் எழும்பியது.

“ஆமாம் ஆமாம் எனக்குக் கூடத்திரும்பக் கேட்கணுமுன்னு ஆசையா இருக்கு!”, என்றார் ஆமாம்பிரபு.

“இல்லை இல்லை, சாஸ்த்திரப் படி பாதியில இதை நிறுத்தக்கூடாது, இப்போ 551 ஸ்லோகம் பார்த்தாச்சு. இன்னும் ஒரு 149 ஸ்லோகம்தான் பாக்கியிருக்கு, அதை முழுக்கப் பார்த்துட்டு அப்புறம் வேணுமுன்னா திரும்ப ஆரம்பிக்கலாம்!”, பேரறிவு தீர்மானமாகப் பேசினார்.

என்ன செய்வதென்று தெரியாமல் எல்லாரும் விழித்து நிற்க, இதுவரை எதிரில் இருந்த கோவில் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த வெளிநாட்டுக் காரர் ஒருவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு திண்ணையை நோக்கி வந்தார்.

“அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் ஆம்பிராய்ஸ். நான் ஒரு சில வருடங்களாக உங்கள் ஊரில் தங்கி உங்களூர் கோவிலைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருவது உங்களில் பலருக்குத் தெரியும். இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு உதவலாம் என்று இருக்கிறேன். கடவுள் சஞ்சயனுக்குக் கொடுத்த விசேடக் கண்களைப் போல உங்கள் எல்லாருக்கும் நானும் ஒன்றைத் தர இருக்கிறேன். அதன்மூலம் யாரெல்லாம் முதலிலிருந்து இந்த கீதை கலந்துரையாடலை கேட்க விரும்புகிறீர்களோ அவர்களெல்லாம் அதை கேட்க வழிவகை செய்யப்படும். நாளைக் காலை 6 மணிக்கெல்லாம் இங்கு கூடினால் அதற்கான ஏற்பாட்டை நான் செய்வேன்”, என தூய அழகுத் தமிழில் அந்த வெளிநாட்டுக்காரர் செப்பியதை நம்ப முடியாமல் கேட்டு ஆர்ப்பரித்தது கூட்டம்.

“ஆஹா நமக்கெல்லாம் ஞானக்கண் கிடைக்கப் போகிறதாம்!”, என்று குதித்தார் மக்கான். “ஒரு சினிமாவில் கடவுளைக் காணலாம் நாளை வாருங்கள் என அழைத்து வந்து ஏமாற்றும் ஒரு நகைச்சுவை நடிகரைப் போல இவங்களை நல்லா ஏமாத்தப் போறாங்க, நாளைக்கு எல்லாரும் வந்து ஏமாறத்தான் போறாங்க!”, என்று முணுமுணுத்துக் கொண்டார் நாத்திக்சாமி.

நாளைக்காக ஹாஹோ உட்பட அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர்.

 

படத்திற்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/Bhagavad_Gita

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *