பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43)

 

பேரா. இ. அண்ணாமலையின் பதில்கள் (42)

கேள்வி:

தற்காலத்தில் ர  , ல சொற்களின் முதலில் வருவது சகஜமாகி விட்டது. ஆனால், சிலர் இன்னும் ரகர சொற்களின் முன் அ, இ போடுவதும், லகர சொற்களின் முன் இ போடுவதும் பழமையைத் தொற்றிக்- கொண்டிருப்பதாகவும், வேண்டாததாகவும் உள்ளது. வழக்குதான் இலக்கணத்தை நிர்ணயிக்கின்றது என்றால், இதைப் போல் காலத்திற்கு ஒவ்வாத நியதிகளைத் தள்ளிவிடுவது நியாயம்தானே?  
— விஜயராகவன்

பதில்

தமிழின் ஒரு சிறப்பு ஒரு சொல்லை எழுதுவது போலவே வாசிப்பது. (பேசுவது வேறுபடும்). ககரத்தை உயிர்களுக்கிடையே ஹகரமாகவும், மெல்லெழுத்தை அடுத்து ஒலிப்புடனும் (g போல) உச்சரிப்பது வருமிடத்தைப் பொறுத்து ஊகிக்கக் கூடியது. ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டலும் வாசிப்பும் ஒன்றாகப் போகாது. but, put என்ற சொற்களில் உள்ள உயிரின் உச்சரிப்பை வருமிடத்தை வைத்து ஊகிக்க முடியாது. knight, night என்னும் சொற்கள் வேறாக எழுதப்பட்டாலும் ஒன்றாக உச்சரிக்கப்படுகின்றன. முதல் சொல்லில் உள்ள k உச்சரிக்கப்படுவதில்லை; இரண்டு சொற்களிலும் உள்ள gh உச்சரிக்கப் படுவதில்லை.

தமிழின் இந்தச் சிறப்பை  இரயில், உரோமம் போன்ற சொற்கள் முறியடிக்கின்றன. இந்தச் சொற்களின் முதலில் உள்ள உயிர் வாசிக்கும்போது உச்சரிக்கப்படுவதில்லை. இந்த உயிர்கள் பேச்சிலும் இடம் பெறுவதில்லை. ஒரு மொழியில் பேச்சே எழுத்தில் வடிக்கப்படுகிறது என்னும் பொது விதிக்கு இது ஒரு விலக்கு. சில சொற்களில் சொல்லோடு இணைந்த் நிலையில் இந்த உயிர்கள் உச்சரிக்கப்படும். எடுத்துக்காட்டு: அரங்கம், உலோகம். இவை வரலாற்றுநோக்கில் பிற மொழிச் சொற்கள் என்றாலும் வழக்கில் தமிழ்ச் சொற்கள் ஆகிவிட்டன் என்பதை இது காட்டுகிறது.

தமிழில் சொற்களின்  முதல் மெய் எதுவாக இருக்கும்  என்பதற்கு விதி இருக்கிறது. ங, ண, ன, ழ ள ஆகிய மெய்கள் சொற்களின் முதலில் வராது. பழைய தமிழில் ல, ர ஆகிய மெய்களும் இதில் அடங்கும். இக்காலத் தமிழில் இவை சொற்களின் முதலில் வரும். லட்டு, ரவை போனற பிற மொழிச் சொற்களிலும், லேசு, ரொம்ப போன்ற எழுத்திற்கு வந்துவிட்ட பேச்சு வழக்குச் சொற்களிலும் இந்த இரணடு மெய்களும் சொல்லின் முதலில் வரும். தமிழின் புதிய சொல் வரவை ஏற்றுக்கொண்டு இந்த மாதிரியான சொற்களைச் சொல்லோடு ஒட்டாத முன்னுயிர் இல்லாமலே எழுதலாம். அதுவே முதலில் சொன்ன தமிழின் சிறப்பைப் பாதுகாக்கும். தமிழின் சொற்களின் இயல்பு மாறும்போது அதை எழுதும் முறையும் மாற வேண்டுமல்லவா?

 

 

 

About the Author

has written 51 stories on this site.

பேராசிரியர் இ.அண்ணாமலை, இலக்கியத்திலும் மொழியியலிலும் பயிற்சி பெற்றவர். உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் இவற்றைப் படிக்கும் வாய்ப்புப் பெற்றவர். இலக்கியத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தெ.பொ.மீ.யிடமிருந்தும், மொழியியலைச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நோம் சாம்ஸ்கியின் மாணவரும், பின்னாளில் மாற்றுக் கொள்கை உருவாக்கியவருமான ஜிம் மெக்காலேயிடமிருந்தும் கற்றார். இவர் உலகின் பல நிறுவனங்களில் ஆய்வுப் பணி ஆற்றியுள்ளார். இவற்றில் அண்ணாமலை நகர், சிகாகோ, டோக்கியோ, லெய்டன், மெல்போர்ன், லெய்ப்சிக், நியு ஹேவன் முதலிய இடங்களில் உள்ள நிறுவனங்கள் சேரும். இவர் அதிக காலம் பணியாற்றியது, மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மைய நிறுவனம் ஆகும். ஓய்வு பெறும் போது இவர் இதன் இயக்குநர். இவருடைய அண்மைப் பணி, யேல் பல்கலைக்கழகத்தில். மனிதரின் கலாச்சாரம், சமூகம், அரசியல் ஆகியவற்றைக் காட்டும் கண்ணாடியாக இவர் மொழியை அணுகுகிறார். மனித மனத்தின் சிந்தனைத் திறனை விளக்கும் கருவியாகவும் பார்க்கிறார். தமிழ் மொழி ஆய்விலும் இந்த அணுகுமுறையைப் பின்பற்றுகிறார். தமிழில் ஈடுபாட்டைக் காட்டும் இவருடைய ஆய்வு, அதே நேரத்தில் அறிவு நெறியோடு பிணைந்தது. தமிழைத் தனித்து நிற்கும் பொருளாகப் பார்க்காமல் வரலாற்றோடும் சமூகத்தோடும் இணைத்தே பார்ப்பது இவருடைய சிறப்பு. ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் தவிர, தமிழ்க் கல்விக்கு இவருடைய பங்களிப்பில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியும், வழக்குத் தமிழ் என்ற பயிற்று நூலும் அடங்கும்.