சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்னவாகும்?

2

 

பவள சங்கரி 

தலையங்கம்

மத்திய அரசும் மாநில அரசும் போட்டி போட்டுக்கொண்டு மத்திய தர மக்களின் வாழ்வாதாரத்தில் குறி வைத்துத் தாக்குவது நீடித்துக் கொண்டிருக்கிறது. முதலில் மாநில அரசு பால் விலை ஏற்றம், போக்குவரத்து வாகன கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு என்று வாழ்வாதாரத்திற்கு  இன்றியமையா அனைத்திலும் விலை உயர்வை ஏற்படுத்தி வேதனைக்குள்ளாக்கிய இதே நேரத்தில் மத்திய அரசும் தம் பங்கிற்கு டீசல் விலையோடு, சமையல் எரிவாயு சிலிண்டரையும் அதிகப்படியான விலை கொடுத்து வாங்கும்படியான திட்டத்தை வெகு நேர்த்தியாக செயல்படுத்தியிருக்கின்றது.. இதற்கான பல காரணங்களை அரசு சொல்லிக்கொண்டிருந்தாலும், நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை மறுக்க இயலாது. கட்டுப்பாடற்ற விலைவாசி உயர்வு உள்ள இந்த நேரத்தில், மீண்டும் ஒரு சுமை என்றால் அதனைச் சுமக்கத் திணறாமல் என்ன செய்ய முடியும். கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் என உள்ள சாதாரண ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒரு சிலிண்டர் அவசியத் தேவையாக இருக்கும். வருடத்திற்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர் மட்டும் மானிய விலையில் கொடுக்கப்படுவதாக இருந்தால் மீதமுள்ள ஆறு சிலிண்டர்கள், 14.2 கிலோ எடை உள்ள சிலிண்டருக்கு ரூ 386.50க்குப் பதிலாக ரூ 733.50 செலுத்திப் பெற வேண்டியதாகும். அதாவது அடுத்த ஆறு மாதத்திற்கு  இரட்டிப்பாக  சுமை கூடுகிறது. நல்ல வேளையாக அதை 8 முதல் 10 சிலிண்டராக அதிகப்படுத்தலாம என்ற செய்தி ஓரளவிற்கு வயிற்றில் பாலை வார்த்தாலும், பற்றாக்குறை என்பதை முற்றிலும் தவிர்க்க முடியாது. மைக்ரோவேவ் அடுப்போ, இண்டக்‌ஷன் அடுப்போ, மின்சார குக்கரோ, இப்படி எதையும் பயன்படுத்துவதற்கும் மின் கட்டணமும், மின்வெட்டும் இடம் கொடுக்காது. இந்நிலையில் இதுவே நிரந்தரமானால் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுபவர்கள் நடுத்தர வருமானம் உள்ள மக்களே.. பெரும்பாலான மக்கள் எரிவாயு சிக்கனம் என்பதை கடைபிடிக்க ஆரம்பித்து பலகாலம் ஆனாலும், அதையும் மீறி மேலும், மேலும் சுமை அதிகமாகும் போது குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு மன உளைச்சலும் அதிகமாவதுதான் மீதமாகும்.

மத்திய அரசு அறிவித்த டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு மற்றும் 51 சதவிகிதம் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றை வாபஸ் பெற மாட்டோம் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிறு முதலீட்டாளர்களும், உள்ளூர் வணிகர்களும் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவர் என்று தெரிந்திருந்தும்  அந்த எதிர்ப்பையும் மீறி அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது வேதனையான விசயம்.

டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வால் லாரி வாடகை ஏற்றம் போன்ற காரணங்களால் உணவுப் பொருட்களின் விலையும் கூடும் அபாயமும் உள்ளது. எரிகிற நெருப்பில் பிடுங்கியவரை இலாபம் என்பது போல சரக்கு லாரிகள் இதையே சாக்காக வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட 20% தங்கள் கட்டணங்களை உயர்த்தியுள்ளது, இந்த கட்டண உயர்வு சிறு வியாபாரிகளையும், விவசாயிகளையும் பெருமளவில் பாதிக்கக்கூடும். ஷேர் ஆட்டோவில் பயணம் செய்வதைக்கூட சிரமமாக்கும் இந்த டீசல் விலை உயர்வு என்பதில் ஐயமில்லை. சில துறைகள் இலாப நோக்கம் கருதாமல், மக்களின் தேவையை முன்னிறுத்தி செயல்படுத்த வேண்டியது அவசியம். எல்லாவற்றையும் வியாபார நோக்கோடு இலாப, நட்டக கணக்கு பார்க்க ஆரம்பித்தால் அதன் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதற்கு சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் டீசல் விலையேற்றம் போன்றவை சிறந்த முன்னுதாரணம். நடுத்தர வருமானம் உள்ளவர்களே திணறும் நேரத்தில் வறுமைக் கோட்டில் வாழும் ஏழை மக்களின் நிலை இதைவிட மோசமாகும் என்று சொல்லவே தேவையில்லை. மக்களின் சுமைகளை மேலும்,மேலும் ஏற்றிக்கொண்டு போகும் அரசின் மீது மக்களின் வெறுப்பு அதிகமாவது தவிர்க்க முடியாததாகிறது.  😥

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்னவாகும்?

  1. அருமையான கட்டுரை. அனைத்து மக்களின் சார்பாக உங்கள் குரல் ஒலித்திருக்கிறது. ஒரு குடும்பத் தலைவனாக நான் படும் பாடுகளை
    அப்படியே சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

  2. மேற்கொள்ளும் அனைத்து முடிவுகளும் கசப்பானதாயினும், நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடன் தான் எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமரும், நிதியமச்சரும் கிளிப்பிள்ளை போல் சொல்லிவருகிறார்கள். நாட்டின் முக்கால்வாசி மக்களின் வயிற்றில் அடித்து விட்டு, அப்படி இந்த ஆளும் மத்திய அரசு பாரதத்தில் யாருடைய வளர்ச்சிக்காக பாடிபடுகின்றனர் என்பது விடை தெரிந்த புதிராகவே உள்ளது. இன்னும் அடுத்த ஐந்தாண்டுத் திட்டம் என்ன அதிர்ச்சிகளை மிச்சம் வைத்துள்ளதோ தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *