முகில் தினகரன்

‘என்னோட தலைவர் எனக்காக எப்பத் தேதி ஒதுக்கி…நேர்ல வந்து…தாலிய எடுத்துக் குடுக்கறாரோ…அப்பத்தான் என் கல்யாணம்…அது எத்தனை மாசமானாலும் சரி…எத்தனை வருஷமானாலும் சரி’

முப்பத்தைந்து வயதைத் தொட்டுவிட்ட ஹரி தான் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவருடைய தேதிக்காகத் தன் திருமணத்தை வருடக் கணக்காகத் தள்ளிப் போட்டுக் கொண்டிருப்பது அவன் குடும்பத்தாருக்கு மாபெரும் வருத்தத்தை உண்டாக்கியிருக்க சொந்தக்காரர்களுக்கும் ஊரக்காரர்களுக்கும் அது கேலிக்குரிய விஷயமாகிப் போயிருந்தது.

தாயின் கெஞ்சலும் தந்தையின் அதட்டலும் தங்கைகளின் வேண்டுகொள்களுமே அவனை அசைக்க முடியாத நிலையில், ஊர்க்காரர்களின் கேலியா அவனை அசைத்து விடும்?. தன் பிடிவாதத்தில் உறுதியாக இருந்தான் அவன்.

யார் செய்த பிரார்த்தனையின் பயனோ…அவனுடைய கட்சித் தலைவர் அவனுக்காகத் தேதியை ஒதுக்கி மணவிழாவிற்கு வருகை தர சம்மதமும் கொடுத்து விட அவசர அவசரமாகப் பெண் பார்க்கப்பட்டு, அதே அவசரத்துடன் நாளும் குறிக்கப்பட்டது.

‘ஹூம்…ஒரு காலத்துல பெரிய பெரிய எடங்கள்ல இருந்து ..நல்ல நல்ல பொண்ணுங்கெல்லாம் வரிசையா வந்தாங்க…பாழாப் போன அந்தக் கட்சித் தலைவனுக்காக அதையெல்லாம் விட்டுட்டு இப்ப அள்ளித் தெளிச்ச அவசரக் கோலமா அந்த நெய்க்கார்பட்டி பொண்ணைப் பேசி முடிச்சிருக்கான்…எல்லாம் விதி’

உள்ளுர்க்காரர்கள் அங்கலாய்த்தார்கள். உறவுக்காரர்கள் சிலர் நேரிடையாகவே அவனிடம் கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்டனர். ‘த பாருங்க…இப்பவும் எனக்கு சந்தோஷம் தர்றது நடக்கப் போற என்னோட கல்யாணமல்ல….அந்தக் கல்யாணத்தை நடத்தி வைக்க வர்றாரே என் தலைவர்….அவரோட வருகைதான்….சொல்லப் போனா நான் இந்தக் கல்யாணத்தையே அவர் வரணும் என்பதற்காகத்தான் பண்ணிக்கறேன்…..அதனால எந்தப் பொண்ணாயிருந்தா என்ன?…அதுவா முக்கியம்…விடுங்க’

திருமண தினத்தன்று ஊரே விழாக் கோலம் பூண்டு கட்சிக் கொடிகள், தோரணங்கள், வரவேற்பு வளையங்கள் என அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது.

காவல் துறை பந்தோபஸ்துடன் காரில் தலைவர் வந்திறங்கிய போது மணவறையிலிருந்த ஹரி மற்றவர்கள் தடுத்தும் கேளாமல் மாலையும் கழுத்துமாய் ஓடிச் சென்று தன் தலைவரை வரவேற்ற போது,

கட்சிக்காரர்கள் மகிழ்ச்சியில் கூக்குரலிட்டனர்.

ஊர்க்காரர்களும் உறவினர்களும் முகம் சுளித்தனர்.

‘தலைவர் தன் பொற்கரங்களால் தாலியை எடுத்துக் கொடுக்கும் முன் மணமக்களை வாழ்த்திப் பேசுவார்’ யாரோ ஒரு கைத்தடி மைக்கில் அறிவிக்க,

எழுந்து மைக்கின் முன் சென்று நின்றார் தலைவர்.

அவர் வாயிலிருந்து முதல் வார்த்தை வரும் முன்பே கூட்டத்தினர் கை தட்டி ஆரப்பரிக்க தலைவர் உற்சாகமானார். அந்த உற்சாகம் ஒரு ஆவேச உத்வேகத்தைத் தர எதிர்க்கட்சிக்காரர்களை நாசூக்காக வசை பாடினார்.

கூட்டத்தினர் முன்னை விட அதிகமாகக் கை தட்டி அவரை உசுப்பேற்றி விட,

நாசூக்காக வசை பாடியவர் நேரிடையாகவே திட்டத் துவங்கினார்.

கை தட்டலும் விஸிலும் அரங்கையே அதிர வைக்க,

வசை மொழி ஆபாசமாக நிறம் மாற கெட்ட வார்த்தைகளைக் கட்டுப்பாடின்றிக் கொட்ட ஆரம்பித்தார் தலைவர்.

கட்சிக்காரர்களின் ஆரவாரம் அரங்கின் மேல் கூரையில் மோதி எதிரொலிக்க,

கட்சித் தலைவரானவர் திருமண வீட்டில் ஒலிக்கக் கூடாத அமங்கல வார்த்தைகளை…ஆக்ரோஷ முலாம் பூசி வன்முறையைத் தூண்டும் விதத்தில் கத்திப் பேசி பெண்கள் கூட்டம் மொத்தமாய் காதைப் பொத்திக் கொள்ளும்படியான அசிங்கப் பேச்சை அநாகரீகமான…அருவருக்கத்தக்க….ஆபாச அபிநயங்களுடன் விளாசித் தள்ளினார்.

கட்சிக்காரர்கள் குதியாட்டம் போட்டனர்.

ஊர்க்காரர்களும் உறவினர்களும் காறித் துப்பினர்.

இறுதியில் மணமக்களை வாழ்த்தியோ….பாராட்டியோ ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மேடையிலிருந்து இறங்கி அவசரகதியில் எந்திரத்தனமாய் தாலியை எடுத்து ‘எனக்கு இன்னொரு மீட்டிங் இருக்கு அவசரமாக் கௌம்பணும்’ சம்பிரதாயமாகச் சொல்லி விட்டு காரில் ஏறிப் பறந்தார் வாராது வந்த மாமணியான கட்சித்தலைவர்.

‘அடக் கண்ராவியே….எழவு வீட்டுல கூடப் பேசக் கூடாத பேச்சை இப்படி கல்யாண வீட்டுல வெச்சுப் பேசிட்டுப் போறானெ…இவனெல்லாம் ஒரு தலைவனா?…இந்தக் கருமாந்திரத்தக் கேட்கத்தானா ஹரி முப்பத்தஞ்சு வயசு வரை காத்திட்டிருந்தான்?…த்தூ….’ ஒரு பெருசு காறித் துப்பியபடியே வெளியேற,

அவரைத் தொடர்ந்து ஊர்க்காரர்களும் உறவினர்களும் ஒவ்வொருவராய் முணுமுணுத்தவாறே நடையைக் கட்டினர்.

……..

ரு வருட ஓட்டத்திற்குப் பின் ஒரு சாவு வீட்டில் ஹரியைச் சந்தித்த உறவுக்காரப் ;பெருசொன்று யதார்த்தமாய்க் டீகட்டது

‘ஏண்டா ஹரி…ஆம்பளைப் பையன் பொறந்திருக்காம்…என்ன பேரு வெச்சிருக்கே?…பாட்டன் பேரா?…பூட்டன் பேரா?’

‘அதெப்படி நான் வெப்பேன்?…தலைவர்கிட்ட தேதி கேட்டிருக்கேனில்ல?…அவரு எப்ப தேதி ஒதுக்கிக் கொடுத்து நேருல வர்றாரோ அப்பத்தான் பையனுக்கு பேரே வெப்பேன்…’

‘அது செரி…அவரு எப்ப வர்றது…எப்ப பையனுக்குப் பேரு வெக்கறது?’

‘காத்திட்டிருப்போம்ல?….எத்தனை மாசமானாலும் சரி…வருஷமானாலும் சரி…அவருதான் வந்து வைக்கணும்’

சாவு வீட்டில் சவம் நடு ஹாலில் கிடத்தப்பட்டிருந்தது.

அந்தப் பெரியவர் ஏனோ ஹரியையும் அந்தச் சவத்தையும் மாறி மாறிப் பார்த்தார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *