தமிழ்த்தேனீ

 

சாணக்கியரின் வாக்கு :–

“நேர்மையான, அறிவாளியான  மக்கள்தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். மக்களின்றி நாடில்லை, நாடின்றி ராஜ்ஜியமில்லை. ஒரு இடத்தின் மதிப்பே அந்த இடத்தில் வசிக்கும் மக்களால் உருவாக்கப்படுவதே. நாட்டின் மேன்மையை விரும்பும் மன்னன் அந்த நாட்டு மக்களை  நல்ல முறையில் அறிவாளிகளாக உருவாக்கவேண்டும். பொருளாதாரத் தடைகள் ஏற்படாவண்ணம் தடுத்து  வருவாயைப் பெருக்க வேண்டும்”-   சாணக்கியர்

ஒரு மனிதனின் மரியாதை, ஒரு மனதின் வலி, ஒரு வார்த்தையின் கனம், ஒரு அன்பின் அருமை, ஒரு பாசத்தின் பெருமை, ஒரு தியாகத்தின் விலை, ஒரு மண்ணின் பெருமை, ஒரு தேசத்தின் உயர்வு, ஒரு குடும்பத்தின் பாரம்பரியம், மக்களின் அருமை புரியாதவனுக்கு மனசாட்சியின் குரல் கேட்காது. அப்படிப்பட்டவன் நாட்டையாளத் தகுதி இல்லாதவன். –  தமிழ்த்தேனீ

 **************************

யா, நான் உள்ளே வரலாங்களா  என்று கேட்டபடியே வந்த அவனை ஏறிட்டுப் பார்த்த  கிருஷ்ணன் வாப்பா  தாராளமா வரலாம் என்றார்.

தயங்கித் தயங்கி உள்ளே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி அவர் காலைப் பிடித்துக்கொண்டு  கொண்டு, “என்னை ஆசீர்வாதம் செய்யுங்க சார்” என்று கெஞ்சும் அவனை அவருக்கு அடையாளம் தெரியவில்லை.

சரி யாரென்று பிறகு பார்த்துக்கொள்ளலாம், “நல்லா இருப்பா” என்று  அவனை வாழ்த்திவிட்டு, “எழுந்திருப்பா” என்று வாஞ்சையோடு தோள் தொட்டுத் தூக்கி அவன் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார் கிருஷ்ணன். நேருக்கு நேர் அவனைப் பார்த்த போது அவருக்கு அவனைப் பிடித்துப் போயிற்று.

சில நேரங்களில் நம்மை விட நம் உள் மனதுக்கு  சக்தி அதிகம் என்று உணரும் தருணங்கள் வரும். நம்மைவிட நம் உள் மனது மிகச்சரியாக எடைபோடும் விந்தையை அனுபவித்திருக்கிறார் அவர்.

நல்ல தீர்க்கமான நாசி, ஆண்பிள்ளைக்கு அடையாளமாக வாளிப்பான உடல்வாகு, பரந்து விரிந்த மார்பகம், திண்ணென்ற தோள்கள், நேருக்கு நேர் கண்களைப் பார்த்துப் பேசும் திடம், தீர்க்கம், அறிவு விசாலத்துக்கு அடையாளமாக ஒளிரும் கண்கள். அவரையறியாமல் அவன் மேல் ஒரு மதிப்பு வந்தது   கிருஷ்ணனுக்கு.

“வாப்பா இங்கே உக்காரு” என்று எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டினார் கிருஷ்ணன். “இல்லே சார், பரவாயில்லை நான் நிக்கறேன்” என்றான் அவன்.

“அனாவசியமான மரியாதையை நான் எதிர்பார்க்கறதில்லே, எப்போ என் கால்லே விழுந்து நீ வணங்கினியோ நீயும் என்னோட பையன் மாதிரிதான். பரவாயில்லே உக்காரு” என்றார் கிருஷ்ணன். தயங்கியபடியே உட்கார்ந்தான் அவன்.

“அம்மா நல்லா இருக்காங்களா? அவங்க உள்ள இருக்காங்களா ?”.

அவன் கண்கள் ஆவலுடன் காமாக்ஷியைத் தேடின.

“இல்லேப்பா அவ கோயில் வரைக்கும் போயிருக்கா. இப்போ வர்ற நேரம்தான்”, சொல்லும்போதே வாயிலில் நிழலாடியது  காமாக்ஷி வந்துவிட்டாள்.

“சொல்லுப்பா உன் பேரென்ன? நீ யாரு ,எதுக்கு என் கால்லே விழுந்து வணங்கறே?” என்றார் கிருஷ்ணன்.

“சார்.. நான்..என்னை உங்களுக்கு ஞாபகம் இல்லையா? நான்தான் சார்  குமரன். என்னை என்னோட பத்து வயசிலே ஒரு ஹாஸ்டல்லே சேத்துட்டு, எனக்கு படிக்கறதுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செஞ்சு குடுத்து, நான் எவ்வளவு படிக்கணுமோ அவ்வளவு படிக்கலாம்ன்னு சொல்லி எல்லா ஏற்பாடும் செஞ்சு குடுத்தீங்க”. 

அங்கே வந்த காமாக்ஷி “ஏங்க இவன் நம்ம குமரனுங்க, இவனை அடையாளம் தெரியலையா?”  என்றாள்.

“அம்மா என்னை ஆசீர்வாதம் செய்யுங்க” என்றபடி அவள் காலிலும் விழுந்தான் குமரன். “நல்லா இருப்பா” என்று ஆசிகூறினாள் காமாக்ஷி. அதிர்ந்தார் கிருஷ்ணன். “நீ இவனை எப்பிடி நியாபகம் வெச்சிருக்கே ?” என்றார் ஆச்சரியத்துடன்.

புன்னகைத்தாள் காமாக்ஷி. எத்தனை வருடம் கழித்துப் பார்த்தாலும் தாய் மனம் கொண்டவர்களுக்கு  குழந்தையை அடையாளம் தெரியும் என்று நிரூபிப்பது போல  புன்னகை புரிந்தாள் காமாக்ஷி.

இன்னிக்கு நான் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனிலே  இஞ்சினீயரா இருக்கேன். உங்களைப் பாக்கணும்னு எவ்வளவோ நாள் நெனைச்சிருக்கேன். ஆனா படிப்பை முடிக்காமே உங்களை வந்து பாக்கக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க. அதுனாலே மனசைக் கட்டுப்படுத்திண்டு இவ்ளோ வருஷமா படிப்பே குறிக்கோளா இருந்து படிச்சிட்டேன் சார். என்னோட கனவு ஓரளவு நிறைவேறி இருக்குன்னா அதுக்கு நீங்கதான் சார் காரணம் என்றான் குமரன்.

அவன் கண்களிலிருந்து நன்றிக் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்துகொண்டிருந்தது. பரம திருப்தியுடன் அவனை உச்சி மோர்ந்தார் கிருஷ்ணன். இந்த மாதிரி உன்னைப் பாக்கணும்னு நானும் மனசைக் கல்லாக்கிகிட்டு  உன்னைப் பார்க்க வரல்லே, ஆனா எப்பவும் விசாரிச்சிகிட்டே இருந்தேன்  நீ நல்லாப் படிக்கிறியான்னு. ஒன்னோட வளர்ச்சியை அணு அணுவா ரசிச்சவன் நான். 

“காலம் என்னோட தோற்றத்திலே பெரிய மாறுதலைச் செய்யலை, அதுனாலே நீ என்னை கண்டு பிடிச்சிட்டே. ஆனா உங்கிட்ட எவ்ளோ மாற்றம்! என்னாலே  கண்டு பிடிக்க முடியலை.  இங்கே இல்லைப்பா வெளிநாடு போயிட்டேன், இப்போதான் திரும்பி வந்தேன் ஆனா ரொம்ப சந்தோஷமா இருக்கு, உன்னைப் பாக்க” என்ற  கிருஷ்ணன், அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு பல வருடங்களுக்கு முன் நடந்த அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

புதியதாக குடிபெயர்ந்திருந்த இடத்தில் என்னென்ன கடைகள் எங்கே இருக்கின்றன என்று பார்த்து வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம், அதன் காரணமாக ஒரு சின்ன நடைப்பயிற்சியும் மேற்கொண்டாற்போல் இருக்கும் என்று நினைத்து கடை வீதியில் வந்து கொண்டிருந்தார் கிருஷ்ணன்.

அவர் மனைவி ஏங்க இங்கே பச்சைஅம்மன் மளிகைக் கடைன்னு ஒண்ணு இருக்காம், நாம வேண்டிய பொருட்களோட பட்டியலைக் குடுத்துட்டா வீட்டிற்கே வந்து குடுத்துடறாங்களாம் என்று கூறியது நினைவுக்கு வந்தது. எதிரே அந்த பச்சைஅம்மன் மளிகைக் கடை தென்பட்டது. அதன் உள்ளே நுழையலாம் என்று எண்ணிக் காலை வைத்தார். சேறும் சகதியுமாக இருந்த அந்த இடம் அவரை வழுக்கிவிட்டு கீழே தள்ளியது தலைகீழாய். நல்லவேளை கையில் கிடைத்த எதையோ பற்றிக்கொண்டு ஒருவாறு கீழே விழாமல் தப்பித்து நிமிர்ந்தார்.         

பக்கத்தில் ஒரு பையன் அவரை பிடித்துக்கொண்டு  “என்னா பெரியவரே, பாத்து வரக் கூடாதா” என்றான். அவன் கண்களில் வெறுப்பு மண்டிக்கிடந்ததைக் கண்ட கிருஷ்ணன், “மன்னிச்சிக்கோப்பா பாக்காம காலை வெச்சிட்டேன், ரொம்ப நன்றிப்பா” என்றார்.

“நன்றியெல்லாம் இருக்கட்டும், என் தோளை விடுங்க நான் போவணும், எனக்கு வேலை இருக்கு” என்று கூறியபடியே அவர் கையை தள்ளிவிட்டுவிட்டு நகர்ந்தான் அந்தப் பையன்.

ஒருவாறு சமாளித்துக்கொண்டு கடைக்குச் சென்று  அங்கே இருந்தவரிடம், “நான் இந்த பகுதிக்கு புதுசா வந்திருக்கேன். மளிகை லிஸ்டைக் கொடுத்தா  வீட்டுக்கு பொருளை அனுப்புவீங்கன்னு கேள்விப்பட்டேன், அனுப்புவீங்களா?” என்றார்.

கடைக்காரர், “ஆமாம் சார் அப்பிடிதான் அனுப்பிகிட்டு இருந்தேன், வரவர வேலை செய்ய சரியான ஆட்களே கிடைக்க மாட்டேங்கறாங்க, அப்பிடியே கிடைச்சாலும் நாலு நாளைக்கு வேலை செய்யறாங்க, அதுக்குப் பிறகு ஓடிப் போயிர்றாங்க என்னா செய்யிறது. எதுக்கும் நீங்க லிஸ்டைக் குடுத்துட்டுப் போங்க முடிஞ்சா அனுப்பறேன்” என்றார்.

பேசிக்கொண்டே இருக்கும்போது கிருஷ்ணன் மேலே ஒரு கொத்துக் குப்பை வந்து விழுந்தது. கையால் அந்தக் குப்பையை தள்ளிவிட்டுவிட்டு  “என்னாப்பா கடையைப் பெருக்கும்போது யாராவது நிக்கிறாங்களான்னு கவனிச்சு பெருக்கக் கூடாதா” என்றார் ஆதங்கமான குரலில். ஒரு தலை நிமிர்ந்து “நான்தான் பெருக்கினேன், வேணும்னுட்டா உங்க மேலே போடுவாங்க? போவீங்களா! என்னாமோ பெரிசா குரல் விடுறீங்களே” என்று ஒரு குரலும்.

அந்தக் குரலுக்கு சொந்தமான வெறுப்பு நிறைந்த கண்களும் கோவமான முகமும் தென்பட்டன.  இவரைத் தாங்கிப் பிடித்த அதே பையன்தான்.

“என்னாங்க இது இப்பிடிப் பேசறான் இந்தப் பையன்” என்றார் கடைக்காரரிடம் கிருஷ்ணன்.

“டேய் ஏண்டா இப்பிடி வர கஸ்டமரையெல்லாம் வெரட்டறதிலேயே இருக்கே, அவர்கிட்டே மன்னிப்பு கேளுடா முதல்லே” என்றார் கடைக்காரர்.

“மன்னிப்பெல்லாம் கேக்க முடியாது. வேணும்னா வேலைக்கு வெச்சிக்கோங்க இல்லேன்னா நானு இப்பவே போறேன். எங்கூருக்கு, ரெயிலேத்தி அனுப்பிருங்க”  என்றான் பையன்.

“எப்பிடிப் பேசறான் பாத்தீங்களா சார், இவங்க அம்மா கஷ்டப் படறாங்களேன்னு அவங்ககிட்ட எடுத்துச் சொல்லி  இவனை கூட்டி கிட்டு வந்து பத்திரமா பாத்துப்பாத்து வெச்சிக்கறேன். தொழில் சொல்லிக் குடுக்கறேன். இவன் சம்பாரிச்சா அந்த அம்மாவோட மத்த  புள்ளைங்கல்லாம் ஒருவேளை கஞ்சி குடிக்கும் அப்பிடீன்னு அந்த அம்மாகிட்ட கெஞ்சி, பணம் செலவழிச்சு ரெயில் டிக்கட்டு எடுத்து கூட்டிவந்து,  இங்கே வெச்சு சாப்பாடு போட்டு தங்க இடம் குடுத்து,  வெச்சிருக்கேன். கொஞ்சமாவது நன்னி இருக்கா பாருங்க, இவன் இப்பிடி நடந்துக்கறான்” என்று சலித்துக்கொண்டார் கடைக்காரர்.

“இதோ பாருங்க முதலாளி,  நான் உங்களை ஒண்ணும் குறை சொல்லலையே! எனக்கு வேணாம், நான் போறேன்னு சொல்றேன். என்னைய அனுப்பிருங்கன்னு சொல்றேன், கேக்கமாட்டேங்கறீங்க. என்னைய விட்ருங்க, அனுப்பிருங்க” என்று தன் துணி மணிகளை எடுத்து வைத்துக்கொண்டு “நீங்க என்னா அனுப்பறது, நானே போயிக்கறேன்” என்றபடி வெளியே சென்று நடக்கத் தொடங்கினான்.

இந்தச் சிறு வயதில் இவனுக்கு எங்கே இருந்து இவ்வளவு வெறுப்பும் ஆத்திரமும் வருகிறது  என்று யோசித்தார் கிருஷ்ணன். “சரி மளிகை பொருட்களை நானே வாங்கிட்டு போயிடறேன் நீங்க குடுங்க” என்று சொல்லிவிட்டு  நின்று வாங்கிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினார்.  இரவு சப்பிட்டுவிட்டு படுத்தார். அவர் மனதில் ஏனோ மீண்டும் மீண்டும் அந்தப் பையனின் நியாபகமே வந்துகொண்டிருந்தது. நல்ல தூக்கத்தில் ஏதோ சப்தம் கேட்டு  எழுந்தார். 

வாசலில் அக்கம்பக்கத்து வீடுகளில் இருப்போர் கூடியிருந்தனர். “ஒரு திருடன் வகையா மாட்டிகிட்டான், கட்டி வெச்சிட்டு  போலீசுக்கு சொல்லி இருக்கோம்” என்று ஒரே குரலில் சொன்னார்கள். அந்தத் திருடனை எழுப்பி  ஓங்கி ஒரு அறைவிட்டார் கீழே போய் விழுந்தான் அவன். இன்னமும் அவருக்கு ஆத்திரம் தாங்கவில்லை. இந்தச் சின்னஞ்சிறு வயசிலே திருட்டா  நினைக்க நினைக்க ஆத்திரமாய் வந்தது.

மீண்டும் அவனை எழுப்பி அவர் பக்கமாகத் திருப்பி அவன் முகத்தைப் பார்த்து அதிர்ந்து போனார். ஆமாம் காலையில் சந்தித்த அதே கடைக்காரப் பையன். ஆத்திரமாக வந்தது அவருக்கு. “ஏண்டா நியாயமா வேலை செஞ்சு  சம்பாதிக்க முடியலே, இந்தச் சின்ன வயசிலே  திருட மட்டும் முடியுதா ?  உன்னையெல்லா கட்டி வெச்சு உதைக்கணும். தப்பே இல்லே”  என்றார் ஆக்ரோஷமான குரலில்.   

கண்களில் கண்ணீருடன்  இவரைப் பார்த்து  “என்னை அடிங்க சார், எவ்ளோவேணா அடிங்க சார் ஆனா திருடன்னு மட்டும் சொல்லாதீங்க, சார் நான் திருட வரல்லெ சார், ஊருக்கு போக டிக்கட் எடுக்கப் பணம் இல்லே. பசிவேற குடலைப் புடுங்குது அப்பிடியே மயக்கத்திலே  இங்க படுத்திருந்தேன். அதோ அந்தப் பெரிய நாயி என் பையை எடுத்துகிட்டு ஓடிடிச்சு, அதைத் துரத்திகிட்டு வந்தேன். அந்தப் பையிலேதான் சார் எங்க அம்மாவோட  படம் வெச்சிருக்கேன். அதைத் துரத்திகிட்டுவந்தேன் சார். அந்தப் பையை வாங்கிக் குடுங்க சார்  எங்கம்மா படம் இருக்குது அதிலே என்று கதறினான். எங்க அம்மாவை படத்திலேதான் சார் தினோம் பாக்கறேன். அவங்களோட சேந்து இருக்க எனக்கு குடுத்து வைக்கலே. அந்தப் பையை வாங்கிக் குடுத்திருங்க சார்.”

கிருஷ்ணனுக்கு  இவன் ஒரு புண்யாத்மா, திருடனில்லை என்று உள்மனம் சொல்லியது. அவர்களிடமிருந்து அந்தப்பையை வாங்கி இவனிடம் கொடுத்துவிட்டு, “சரி நீங்கள்ளாம் போங்க நான் இவனைப் பாத்துக்கறேன்” என்று  கூறிவிட்டு உடனடியாக காவல் நிலையத்துக்கு  போன் செய்து, “சார் தப்பா சொல்லிட்டாங்க. இங்கே திருட யாரும் வரலை, அந்தப் பையன் எங்க வீட்டுக்கு வந்திருக்கான். வழிதெரியாம தடுமாறும் போது திருடன்னு நெனைச்சிகிட்டாங்க. நீங்க கஷ்டப்படாதீங்க  அந்தப் பையனை நான் பாத்துக்கறேன்” என்று கூறிவிட்டு, “நீ வாப்பா போகலாம்”, என்று அவன் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

“வாப்பா நீ இங்கே உக்காரு, காமாக்ஷி  இவனுக்கு வயித்துக்கு  ஏதாவது குடு” என்றார். காமாக்ஷி ஒரு தட்டில் உணவு எடுத்துவந்து அவனிடம் வைத்தாள். “சாப்புடுப்பா”  என்றார்.  அள்ளி அள்ளி விழுங்கிவிட்டு, “தட்டை எஙக சார் கழுவணும்”  என்றான். “அதோ அங்கே போயி வாஷ் பேசின்லே சுத்தம் செஞ்சு கொண்டு வா”  என்றார் கிருஷ்ணன்.

அவனுக்கு துடைத்துக்கொள்ள ஒரு துண்டைக் கொடுத்துவிட்டு, கையை துடைத்துக்கொண்டு  வந்த அவனை தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, “ஆமாம், உனக்கு ஏன் இவ்ளோ சின்ன வயசிலே இவ்வளவு ஆத்திரமும், கோவமும் வருது ?” என்றார்.

“அந்த மளிகைக் கடைக்காரர்  உன்னை சரியா நடத்தலையா. கொடுமைப் படுத்தறாரா? என்கிட்ட சொல்லு  அவனை ஒரு வழி பண்றேன்”  என்றார்.

“அவரு பாவம் சார், நல்ல மனுஷன்  அவருமேலே தப்பில்லே, துட்டுக்கு ஆசைப்பட்டு எங்க ஊர்லேருந்து நிறையா பேரு  படிக்கணும்னு ஆசைப்படுற  சின்னப் புள்ளைங்களையெல்லாம்  மெட்ராசுக்கு அனுப்பறாங்க. இவரு கூட்டியாந்து கடையிலே வேலைகுடுத்து  நல்லாத்தான் வெச்சிக்கறாரு.

முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதை சார் என்னோடது.  என் அம்மா என்னைப் படிக்க வைக்க முடியாம ரொம்பக் கஷ்டப்படறாங்க. எங்க அப்பா தினோம் குடிச்சிட்டு வந்து அம்மாவைப் போட்டு அடிக்கறாரு, தம்பி தங்கையெல்லாம் கஷ்டப்படுது, ராத்திரி குடிச்சிட்டு வந்து எல்லாரையும் அடிக்கறாரு. காலையிலே  மன்னிப்பு கேக்கறாரு, மறுபடியும் ராவிக்கு  குடிச்சிட்டு வந்து நிக்கறாரு.

 சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம அம்மா கஷ்டப்படுது. எங்கம்மா என்னா செய்வாங்க? ஆனா  ஒரு நாளுகூட  எங்கப்பனை திட்டாது எங்கம்மா. இதமா அவரு வாயைத் துடைச்சு விட்டு படுக்க வெச்சு விசிறியாலே வீசறாங்க . அவரு தூங்கறாரு,  ஏம்மா ஒரு நாளைக்காவது  நீ கேள்வி கேட்டாதானே அவரு திருந்துவாரு அப்பிடீன்னு நான் கேட்டா, “அடப் போடா  அவரு நல்ல மனுஷன்டா. ஏதோ போறாத காலம் குடிக்க ஆரம்பிச்சிட்டாரு, நீ அவரு பெத்த மகன்டா  என் முன்னாலே அவரை எது சொன்னாலும் நான் ஒப்புக்க மாட்டேன்”னு எங்கிட்ட  சண்டை பிடிக்குது. இத்துப்போன கயிறாலே இறுக்கிக் கட்ட முடியாது, உறவு நல்லா இருக்கணும்னா  உண்மையான பாசமும் நேசமும், அன்பும், கருணையும், நடிப்பு கலக்காத நேர்மையும் அவங்கவங்களுக்கா  வரணும், சொல்லிக்குடுத்து வரவைக்க முடியாது,  அப்பிடீன்னு ஏதேதோ சொல்றாங்க.   எனக்கு புரியமாட்டேங்குது.

உனக்கென்னா நான் கூலி வேலை செய்தாவது உன்னைப் படிக்க வைக்கிறேன் அப்பிடீங்குது. எனக்குன்னு ஒரு மனசு இருக்குதில்லே.  எனக்கு மனசு வரலே. அதுனாலே எங்க அம்மாவை நல்லபடியா வெச்சிக்க, நான் சம்பாரிக்கணும், என் குடும்பம் என்னாலே முன்னுக்கு வரணும், அதுக்காகத்தாங்க இந்த வேலைக்கு வந்தேன்.

ஆனா இங்கே வேலைக்கு வந்தபெறகுதான் தெரியுது, எவ்ளோபேரு  படிக்க வழியில்லாமே எங்களை மாதிரி கஷ்டப்படறாங்கன்னு. நாங்கள்ளாம் குழந்தைங்க.  ஆனா விளையாடணும்னுகூடத் தோணலீங்க, பாடுபட்டு முன்னுக்கு வரணும்னு தோணுது. அது தப்பாங்க? ஆனா அதுக்குகூட வழியில்லையே ? காலம் காலமா  நாங்க இப்பிடி  கஷ்டப்பட்டுகிட்டேதான் இருக்கணுமா? எங்களோட எதிர்காலமே விணாகுதே நாங்க படிக்க முடியலையே. எங்களுக்கு விடிவுகாலமே இல்லையா ன்னு யோசிச்சேனுங்க, கோவம் கோவமா வருது.

குழந்தைங்களை வேலைக்கு வெச்சுக்க கூடாதூன்னு சட்டம் மட்டும் போட்டுட்டா போதுமா சார்?  அந்தக் குழந்தைங்களோட வயித்துப் பசியையும்   அதுங்க எதிர்காலத்தையும் யாரு சார் பாக்கறாங்க? எங்களை மாதிரி சின்னப் பசங்களைப் படம்பிடிச்சு வருங்காலத் தூண்கள்னு போஸ்டர் அடிச்சு ஒட்றாங்க சார், ஓட்டு வாங்கறதுக்காக. 

ஆனா என்னா சார் செய்யறாங்க எங்களுக்கு? எங்க அப்பனெல்லாம் குடிச்சு அழியறதுக்கு  நாட்டுலே நிறைய சாராயக் கடை திறக்கறாங்க, ஏன் சார் சாராயம் விக்காம நம்ம நாட்டை  முன்னுக்கு கொண்டு வரமுடியாதா  ?

ஏன் சார் இந்த அரசியல்வாதிங்க  இப்பிடி செய்யறாங்க? அந்தக் கோவம்தான் சார். இவ்ளோ வெறுப்பை வெச்சுகிட்டு எப்பிடி சார் நான் சிரிக்க முடியும்? எப்பிடி கோவப்படாம இருக்க முடியும்? நான் எப்பிடிங்க வேலை செய்வேன்.” மூச்சு வாங்கியது குமரனுக்கு…..

“தூங்க முடியலைங்க  பாடமெல்லாம் கனவா வருதுங்க திடுக்கிட்டு எழுந்துக்கறேன்.  மளிகைக் கடையிலே ஒவ்வொரு மூட்டையைப் பாக்கும்போதும்  ஒவ்வொரு பாடபுத்தகம் நினைவுக்கு வருதுங்க.

எங்க வாழ்க்கை இப்பிடி சிதறிப் போனக் கடுகு மூட்டை மாதிரி ஆயிப்போச்சுங்க”, என்றபடியே குமுறிக் குமுறி  அழ ஆரம்பித்த குமரன் உணர்ச்சியின் வேகம் தாங்காமல் அப்படியே மயங்கினான்.

காமாக்ஷி அவனை மடியில் கிடத்திக்கொண்டு  இதமாகத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.  கண்களைத் துடைத்துக்கொண்டு ஓடிப்போய்  ஒரு பாத்திரத்தில்  தண்ணீர் கொண்டு வந்தார் கிருஷ்ணன்.  அந்தத் தண்ணீரை வாங்கி குமரன் கண்களைத் துடைத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவன் வாயில் ஊற்றினாள் காமாக்ஷி.

உணர்வுக்கு வந்த குமரன் திடுக்கிட்டு எழுந்தான்.

“அம்மா அய்யா என்னை மன்னிச்சிருங்க. ஒழுங்கா படிக்கக் கூட வக்கில்லாத  ஏழைங்க நானு என்னைப் போயி  உங்க மடியிலே. என்னை மன்னிச்சிருங்க, தெரியாம நான் உங்க மடியிலே படுத்துகிட்டேன், என்று நடுங்கினான் குமரன். அவனை இழுத்து அணைத்து மீண்டும் தன் மடியில் கிடத்திக்கொண்டு   அவன் முதுகை இதமாகத் தடவிக் கொடுத்தபடியே,  நானும் உங்க அம்மா மாதிரிதான் படுத்துக்கோப்பா என்றாள். அவள் கைகள் அவனை தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தன.

எங்கும் இருப்பான் நாராயணன் என்று கூறிய ப்ரகலாதனின், தன் பக்தனின்,  வாக்கைக் காப்பாற்ற ஜகமெங்கும் நிறைந்து, அணுவைச் சதகூறிட்ட அணுவிலும் உளன் என்று ஆழ்வார்கள் பாடும்படியாக  சர்வ வியாபியாக நிறைந்து  தூணிலிருந்து வெளிப்போந்து நரசிம்மமாக வந்து ஹிரணியனின்  வயிற்றைக் கிழித்து குடலை மாலையாகப் போட்டுக்கொண்ட நாராயணன், அதன் பிறகு  ஹிரணியனுடைய மார்பில் கையை விட்டுத்  துழாவி அவனுடைய ஹிருதயத்தை தன்னுடைய கைகளால் தடவிக் கொடுத்தானாம்.

ஏனென்றால் அவன் சொன்னதைக் கேட்டுக் காவல் புரிந்து,  அதன் காரணமாக முனிவரால் சபிக்கப்பட்டு ஹிரணியனாகப் பிறந்து உள்ளே பக்தி இருந்தாலும் பிறப்பின் காரணமாக நாத்திகன் போல் நடித்து, மகனைக் கொடுமைப்படுத்தி எல்லோரிடமும் கெட்ட பெயரெடுத்து, அசுரன் என்று ஏசப்பட்டு, ஹிரணியன் தன்னை அடைய  எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தான் என்று உணர்ந்து மனம் இரங்கி அவனுடைய ஹிருதயத்தை இதமாகத் தடவிக் கொடுத்த நாராயணனைப் போல என்று பௌராணிகர்  சொன்னது நினைவுக்கு வந்தது. 

இந்தச் சின்னஞ்சிறு வயதில்  எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கிறான்  குழந்தை,  என்றுணர்ந்து இதமாக தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தாள்  காமாக்ஷி . இந்தக் குழந்தைகளைக் கூட முறையாகக் காப்பாற்றாமல் இருக்கும் ஹிரண்யர்களை சம்ஹாரம் செய்ய எப்போது நாராயணுனுக்கு மனம் வருமோ என்ற எண்ணம் வந்தது காமாக்ஷிக்கு.

சுதாரித்துக்கொண்டு எழுந்த குமரன், “அம்மா நான் போன ஜென்மத்திலே செஞ்ச புண்ணியம் உங்களை மாதிரி இன்னொரு அம்மா அப்பா கிடைச்சது.  ஐயா  உங்ககிட்டகூட மரியாதை இல்லாம நடந்துகிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. நான் கிளம்பறேன் எப்பிடியாவது கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவேன் சார்  ஆனா உங்க ரெண்டு பேரையும் மறக்க மாட்டேன்.  நான் வரேன்”, என்று கிளம்பினான்.

“கொஞ்சம் நில்லுப்பா.   நீ படிக்கறதுக்கு நான் உதவறேன், நல்லா படிச்சு முன்னுக்கு வருவியா ?” என்றார். கிருஷ்ணன். “சத்தியமா படிச்சு முன்னுக்கு வருவேனுங்க   இது எங்க அம்மா மேலே  சத்தியம்” என்றான் குமரன்.

அத்தனையும் மனக்கண்ணில் படமாக ஓடியது  கிருஷ்ணனுக்கு.

“ஐயா குப்பையை தூக்கி உங்க மேலே நான் போட்டேன், ஆனா நீங்க என்னைக் கோபுரத்தில் ஏத்தி வெக்கறீங்க. எத்தனை பிறவி எடுத்தாலும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன் நானு.”, என்ற குமரன் நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்தான் .  

சுதாரித்துக்கொண்டு  “குமரா நீ ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வளந்துட்ட”, என்றவர் அவனைத் அணைத்துக்கொண்டு, “உன்னைய மாதிரி பசங்க இந்த நாட்டுக்கே வழிகாட்டிப்பா. உங்க அம்மா நல்லா இருக்காங்களா என்றார். கூச்சப்பட்டுக்கிட்டு   வெளியிலே நிக்கறாங்க சார்” என்றான் குமரன். 

“அப்பா எங்கே இருக்காரு ?”  என்றார் கிருஷ்ணன்.

“அப்பா இல்லீங்க  அவரு குடல் வெந்து  எங்களையெல்லாம் தவிக்க விட்டுட்டு  இறந்து போயிட்டாரு” என்றான் குமரன்.

“வருத்தமா இருக்குப்பா  ஆனா எங்களை மாதிரி இருக்கறவங்க வருத்தப் படறதைத் தவிற வேறொண்ணும் செய்ய முடியலை.”

“நீங்க உள்ளே வாங்கம்மா. பிள்ளையைப் படிக்கவைக்கணும்னு நெனைக்கிற உங்களை மாதிரி  அம்மாக்கள்தான்  இந்த நாட்டுக்கு தேவை. நீங்க இந்த மாதிரி பிள்ளையைப் பெத்ததுக்கு  தலைநிமிர்ந்து நடக்கணும். நீங்க கூச்சப்படக் கூடாது.

இந்த நாட்டிலே  சுதந்திரம் வாங்கி 65 வருஷம் ஆகியும் உங்க நெலைமைய இதே மாதிரி வெச்சிட்டிருக்கோமே.  நாங்கதான் கூச்சப்படணும். கூவத்தையெல்லாம் கங்கையாக்கணும்னு நெனைக்காம கங்கையையுயும் கூவமாக்கிட்டு இருக்கோமே நாங்கதான் கூச்சப்படணும்”  என்றார் கிருஷ்ணன்.

குமரனின் அம்மா கையைக் கூப்பிக்கொண்டு, “நீங்களும் அம்மாவும் நல்லா இருக்கணுங்க”  என்றாள் கண்ணில் நீருடன்.  

எல்லாப் பெண்மணிகளிலும் உள்ளே அம்மா இருக்கிறாள். தாய்மை ப்ரபஞ்சத்தின் மூலைமுடுக்குகளில் கூட சர்வ வியாபியாய் இருக்கிறது என்று எண்ணம் ஓடியது கிருஷ்ணனுக்கு அவருடைய அம்மாவே அவரை  ஆசீர்வதித்தது போல் ஒரு உணர்வு வந்தது.  கிருஷ்ணனும் கையைக் கூப்பினார் தன் அம்மாவை நினைத்துக்கொண்டு.

                         சுபம்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கூவமும் கங்கைதான்

  1. மென்மையான சமாச்சாரம். இது நடக்காதது அல்ல. ஆனால் துர்லபம். 
    கற்பனையாயினும் நடப்பின் உண்மை வாசம் வீசுகிறது. ஒரு கருத்து வேறுபாடு.
    குழந்தைங்களை வேலைக்கு வெச்சுக்க கூடாதூன்னு சட்டம் அத்யாவசியம் 
    என்று கிருஷ்ணன் விளக்கியிருக்கவேண்டும். டாஸ்மாக் ஆக்ஷேபனை சரியே.
    குழந்தைங்களை வேலைக்கு வெச்சுக்க கூடாதூன்னு சட்டமும், சிறார் கட்டாய கல்வியும்
    இணைந்தவை. ஒன்று இல்லாமல் ஒன்று இல்லை. சமூகம் தான் குடிமகன்களை கட்டிப்போடவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *