மோகன் குமார்

தொல்லை காட்சி : 7 C –யும்ஹவுஸ்புல்லும் 

ஜெயா தொலை காட்சியில் புதிய நிகழ்ச்சி ஹவுஸ்புல்   

ஒரு கோடி ரூபாய் பரிசு என அறிவிப்புடன் பரபரப்பாய் வருகிறது ஜெயா டிவியில் ஹவுஸ்புல் என்கிற புது நிகழ்ச்சி. அலுவலகம் மற்றும் கல்லூரியில் ” தம்போலா ” என்கிற பெயரில் விளையாடுவோமே அதே விளையாட்டு தான் இது ! தம்போலா ஒரே அறையில் அமர்ந்து ஆடுவோம். இங்கு நடத்துவோர் டிவியிலும், கலந்து கொள்வோர் வீட்டிலும் இருக்கிறோம் அவ்வளவு தான் வித்யாசம் !

அவர்கள் சொல்கிற தொலைபேசி எண்ணுக்கு நாம் போன் செய்ய வேண்டும். அவர்கள் ” விஸ்வநாதன் ஆனந்த் எந்த விளையாட்டில் புகழ் பெற்றவர் ” போன்ற மிக கடின கேள்விகள் கேட்கிறார்கள். போன் செய்யும் அனைவருமே அவர்கள்  கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி விடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஆயிரக்கணக்கில் பரிசு தருகிறார்கள். 

பார்க்கிற என் பெண்ணே “என்னப்பா இது கால் பண்ற எல்லாருக்கும், ஒவ்வொரு நிமிஷத்துக்கும் பல ஆயிரம் ரூபாய் தர்றாங்க. இது டூப்பு” என்கிறாள். பார்க்கலாம் நிகழ்ச்சி மக்களிடம் எடுபடுகிறதா என !

டிவியில் பார்த்த படம் – சேது 

கே டிவியில் சேது படம் பார்த்தோம். பொதுவாய் கே டிவி பக்கம் போவதே இல்லை. ஒரு படம் பார்க்க ஆரம்பித்தால் விளம்பரத்துடன் சேர்த்து மூன்று மணி நேரம் வீணாகி விடும் என்பதால். அதுவும் பெரும்பாலும் பார்த்த படங்களாக வேறு இருக்கும் ! வார இறுதியில் வேறு நல்ல படம் இல்லாததால் கே டிவி பக்கம் செல்ல வேண்டியதாயிற்று. 

சேது – இரண்டாம் பகுதி -ஒவ்வொரு முறை பார்க்கிற போதும் மனதை பிசைந்து விடும். விக்ரமுக்கு இந்த படத்துக்கு சிறந்த நடிகர் விருது மத்திய அரசு எப்படி தராமல் போனது என்று புரிய வில்லை !

பி. ஆர். பந்துலு குறித்த நிகழ்ச்சி

பி. ஆர். பந்துலு ! மாபெரும் இயக்குனர். சிவாஜி மற்றும் எம். ஜி . ஆரை வைத்து பல ஹிட் படங்கள் தந்தவர். இவரைப்பற்றி இவரது மகள் ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமி மற்றும் மகன் ஜெயா டிவியின் “திரும்பி பார்க்கிறேன்” நிகழ்ச்சியில் பேசினர்.

சுதந்திர போராட்டம் குறித்த நல்ல படங்கள் என இந்தியாவில் பத்து படங்கள் தான் உண்டு என்றும் அதில் மூன்றை இயக்கியவர் தங்கள் தந்தை என்றும் கூறியவர்கள், கப்பலோட்டிய தமிழன் பெரும் தோல்வி என்றும் அதில் தங்கள் தந்தைக்கு பெரும் நஷ்டம் என்றும் கூறினர். மேலும் இன்று 125 நாளுக்கு மேல் ஓடும் கர்ணன் படம் வெளிவந்த காலத்தில் பெரும் தோல்வி படமாய் இருந்ததை சற்று வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் சிவாஜியோடு தொடர்ந்து பணியாற்றிய பந்துலு ஏனோ தனது கடைசி பத்து வருடங்களில் எந்த சிவாஜி படமும் இயக்க வில்லை. 1964 – ல் பந்துலு -சிவாஜி காம்பினேஷனில் வெளியான கர்ணன் மற்றும் முரடன் முத்து தான் இந்த ஹிட் காம்பினேஷன் இணைந்து பணியாற்றிய கடைசி படங்கள் !

சீரியல் பக்கம்:  7 C

சமீபத்தில் வந்த சாட்டை படத்தின் கதையும் இந்த தொடரின் அவுட்லைனும் ஏறக்குறைய ஒன்று தான் என நினைக்கிறேன். அவ்வப்போது விஜய் டிவி யில் காட்டும் டிரைலரிலேயே இந்த சீரியலின் கதை மற்றும் போக்கை  ஊகிக்க முடிகிறது. வழக்கமாய் சீரியல் பார்க்கும் குடும்ப தலைவிகள் மற்றும் வயதானவர்களை தவிர்த்து விட்டு பள்ளி செல்லும் சிறு வயது மக்கள் பார்த்தால் மற்றவர்களும் பார்ப்பார்கள் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சீரியல் பற்றி விரிவாக நண்பர் முரளிதரன் எழுதிய பதிவை இங்கு வாசியுங்கள் !

ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சிகள்

பல டிவிக்களும்  ஆயுத பூஜைக்கு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் காத்திருக்கின்றன. சண் டிவியில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் திரையிட உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படம் என்பதால் கலைஞர் டிவியில் தானே வரும்? எப்படி சண் டிவி போனது என தெரியவில்லை. மற்றபடி ஏற்கனவே போட்ட பல படங்கள் தான் போடுகிறார்கள். விஷால் மற்றும் சமீரா ரெட்டி என்கிற இரு ஹீரோக்கள் நடித்த வெடி படம் போடும்போது அந்த படம் போடும் சானல் பக்கமே போகாமல் இருக்கவும் என எச்சரிக்கை தருகிறேன். அப்புறம் உங்கள் இஷ்டம் !

சூப்பர் சிங்கர் அப்டேட் 

அதென்னவோ தெரியலை .. ஜுனியரோ , சீனியரோ எந்த சீசன் நடந்தாலும் சூப்பர் சிங்கரில் இறுதி போட்டிக்கு முன் சென்னை சிட்டி செண்டர் சென்று மாடியில் நின்று கொண்டு பாடி தீத்துடுவாங்க. இம்முறையும் அதும் தொடர்ந்தது. 

இறுதி போட்டியில் பிரகதி அல்லது சுகன்யா வெல்ல வாய்ப்புகள் மிக மிக அதிகம் என தோன்றுகிறது. பார்க்கலாம் .. என்ன நடக்கிறது என !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *