சரிங்க…நீங்க சொல்றபடியே செஞ்சிடலாம்ங்க!

0

முகில் தினகரன்

வழக்கமாக மனைவி என்பவளின் வாயிலிருந்து அந்தத் தகவல் வரும் போது கேட்கும் அனைத்துக் கணவன்மார்களும் உற்சாகத்தின் உச்சிக்குப் போய்…உவகைக் கொந்தளிப்பில் உல்லாச ஊஞ்சலாடி…மகிழ்வர். ஆனால் திவாகர் மட்டும் அதற்கு நேர்மாறாயிருந்தான்.

‘என்ன…என்ன பாக்யம் சொல்றே?..நீ சொல்றது நெஜமா?’

பாக்யலட்சுமி தலையை மேலும் கீழுமாய் ஆட்ட,

‘பச்…ச்சே…’ என்று சலித்தவாறே தலையில் கையை வைத்துக் கொண்டு நாற்காலியில் சென்றமர்ந்தான் திவாகர்.

அவனின் அந்தச் செயலுக்கான காரணம் புரியாத பாக்யலட்சுமி ‘ஏங்க..நான் எவ்வளவு சந்தோஷமான வியத்தைச் சொன்னேன்..அதைக் கேட்டு…சந்தோஷப்படா விட்டாலும் அட்லீஸ்ட்…சங்கடப் படாமலாவது இருக்கலாமல்ல?…ஏன்?…என்னாச்சு உங்களுக்கு?’

அவளை நேருக்கு நேர் பார்த்த திவாகர் ‘பாக்யம்…நான் ஒரு சின்னக் கம்பெனில…சாதாரண கிளார்க்கா வேலை பார்க்கறேன்…இன்னமும் அந்த வேலை கூட நிரந்தரமாகலை..அத்தோட எனக்கு இப்ப வர்ற வருமானம்…நம்ம ரெண்டு பேரோட செலவுக்கே சரியாப் போய்டுது..இதுல குழந்தையும் வந்திட்டா….ம்ஹூம் என்னால சமாளிக்க முடியாது சாமி……துணிமணி…பால் பவுடர்…மருந்து மாத்திரை…டாக்டர் செலவு…ன்னு என்னோட மென்னியைத் திருகிடும் செலவு…அதனால…அதனால…’

‘அதனால?’

‘நீ…இந்தக்….கருவைக் கலைச்சிடு….பின்னாடி எனக்கு வேலை நிரந்தரமாகி….நான் கை நெறையச் சம்பாதிக்கும் போது பெத்துக்கலாம்’

‘விருட்’டென்று தலையைத் தூக்கி அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள் பாக்யலட்சுமி. அவளுள் கோபம்…ஆவேசம்…எரிச்சல்..எல்லாம் கலவையாய்ப் பொங்கியது. தொண்டை வரை வந்துவிட்ட சொற்களைக் கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டு யோசித்தாள். ‘இவர் சொல்வது…இவரோட கோணத்திலிருந்து பார்க்கும் போது சரிதான்…ஆனா…இப்படி எல்லோரும் நெனச்சிருந்தா இந்த நாட்டுல எப்பவுமே…யாருமே..குழந்தை பெத்துக்கவே முடியாதே..ஏழ்மையும்..கஷ்டங்களும் எப்போதும் இருந்திட்டுத்தான் இருக்கும். அதற்காக நடக்க வேண்டியவற்றை நாம் நிறுத்தி வைக்க முடியுமா?…இல்லை தள்ளித்தான் போட முடியுமா?….அதும் பாட்டுக்கு அது இருந்திட்டே இருக்கட்டும்……இதும் பாட்டுக்கு இது நடந்திட்டே இருக்க வேண்டாமா?…அதுதானே வாழ்க்கை?…இதை எப்படி இந்த மனுசூனுக்குப் புரிய வைக்கறது?’

அப்போதைக்கு அப்பிரச்சினையை ஆறப் போட நினைத்தவள் ‘சரிங்க…நீங்க சொல்றபடியே செஞ்சிடலாம்ங்க’ என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு காலை பதினோரு மணியிருக்கும். பவர்கட் காரணமாக அன்று திவாகரின் கம்பெனிக்கு லீவு விட்டிருந்தார்கள்.

பொழுது போகாமல் படுக்கையில் படுத்துக் கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தை அசுவாரஸியமாய் வாசித்துக் கொண்டிருந்தான். வெளியே பாக்யலட்சுமி யாருடனோ பேசிக் கொண்டிருக்கும் குரல் கேட்க மெல்ல எழுந்து ஜன்னலருகே சென்று பார்த்தான்.

ஒடிசலான உடல்வாகுடன் நைந்து போன சேலையில் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணின் மேடான வயிற்றுப் பகுதி அவள் ஒரு நிறைமாத கர்ப்பிணி என்பதை அறிவித்துக் கொண்டிருந்தது.

‘யாரிவள்?…இவளோட எதுக்கு பாக்யம் பேசிட்டிருக்கா?’

‘த பாரு விஜயா…என் வீட்டுல…நான்…எங்க வீட்டுக்காரர்…ரெண்டு பேர்தான் இருக்கோம்…அதனால இப்போதைக்கு என் வீட்டு வேலைகளை என்னாலேயே செஞ்சுக்க முடியும்…பின்னாடி…எப்பவாது தேவைப் படும் போது உன்னைக் கூப்பிட்டுக்கறேன்…இப்ப வேண்டாம்…சரியா?’

‘பரவாயில்லைம்மா…இங்க…பக்கத்துல ரெண்டு வீட்டுல வேலை பார்த்திட்டிருக்கேன்…உங்க வீடும் கிடைச்சதுன்னா…மூணு வீடாய்டும்…கொஞ்சம் காசும் கூட வரும்…ஏன்னா…இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கு அடுத்த குழந்தையும் பொறந்திடும்…அப்புறம் இப்ப வர்ற வருமானம் பத்தாது…அதான்…கேட்டேன்’ அவள் படு யதார்த்தமாய்ச் சொல்ல,

‘ஏன்? உன் வீட்டுக்காரர் சம்பாதிக்கிறார்தானே?’ பாக்யலட்சுமியும் விடாமல் கேட்டாள்.

‘ம்ம்…சம்பாதிக்கிறார்…ஆனா…தள்ளு வண்டில பலகார வியாபாரம் பண்ணி…எவ்வளவு சம்பாதிச்சுட முடியும்?…இப்பவே அவரு சம்பாதிக்கறதையும்…நான் சம்பாதிக்கறதையும் சேர்த்துப் போட்டு செலவு பண்ணியுமே ‘அடிச்சுக்கோ…புடிச்சுக்கோ’ன்னுதான் இருக்கு…’

‘சரி…இப்ப உனக்கு எத்தனை குழந்தைக?’

‘ரெண்டு…ரெண்டும் பொட்டைப் புள்ளைக’

‘அப்படியிருக்கும் போது….இந்தக் கரு உண்டானப்பவே கலைச்சிருக்கணுமல்ல?…இப்பத்தான் அதையெல்லாம் வெகு ஈஸியாப் பண்ணிடறாங்களே’

‘எதுக்கு?….எதுக்கு கலைக்கணும்?’ அந்த விஜயாவின் குரலில் கோபம் தெறித்தது.

‘இதென்ன கேள்வி?….நமக்கே பற்றாக்குறை வருமானம்… அப்புறம் எதுக்கு அடுத்த குழந்தை?’ பாக்யலட்சுமி குறுஞ்சிரிப்படன் கேட்க,

‘என்னம்மா நீ?….பாத்தா படிச்சவளாட்டம் இருக்கே…இப்படிப் புரியாமப் பேசறே…ஏம்மா வருமானத்துக்கும் கொழந்தை பெத்துக்கறதுக்கும் என்னம்மா சம்மந்தம்?…வருமானத்தைக் கணக்கு வெச்சுத்தான் கொழந்தை பெத்துக்கணும்னா…டாட்டாவும்…பிர்லாவும்…ஆளுக்கு அம்பதாயிரம் கொழந்தைகளைப் பெத்துப் போட்டிருக்கணும்…அதேமாதிரி…ரோட்டோரத்துல…பிளாட்பாரத்துல வாழுறவங்க யாருமே கொழந்தையே பெத்துக்க கூடாது…அப்படியா இருக்கு?…ம்ஹூம்…அங்க போய்ப் பாருங்க…பணக்காரங்கெல்லாம்…அளவா…ஒண்ணும்…ரெண்டும்…இங்க பிளாட்பாரத்துக்காரங்க…கணக்கு வழக்கே இல்லாம ஏழெட்டு பெத்துக்கறாங்க’

அவளது பேச்சில் வாயடைத்துப் போய் சிலையாய்ச் சமைந்தாள் பாக்யலட்சுமி.

‘த பாரும்மா…எங்களுக்கு ஒடம்பிலேயும் …மனசிலேயும் தெம்பிருக்கு…அதை வெச்சு கொழந்தைகளைப் பெத்துக்கறோம்…கையிலேயும்…காலிலேயும் தெம்பிருக்கு…அதை வெச்சு அதுகளை வளர்த்தறோம்…..அடுத்ததா ஒரு கொழந்தை பொறக்கப் போகுதுன்னா அதை வளர்க்கறதுக்காக இனி நாம எவ்வளவு அதிகம் சம்பாதிக்கறது?…அதை எப்பிடிச் சம்பாதிக்கறது? ன்னுதான் யோசிக்கணும்…அதை விட்டுட்டு அதைக் கலைக்கறதைப் பத்தி யோசிக்கக் கூடாது..ஏம்மா…ஒண்ணை யோசிச்சுப் பாரு…அதுவும் ஒரு உசுருதானே?…அது தானாவா உருவாச்சு?…நாமதானே உருவாக்கினோம்…ஆக செய்யுற தப்பையெல்லாம் நாம செஞ்சிட்டு அதைப் பலி குடுக்கறது எந்த விதத்திலேம்மா நியாயம்?’

‘ஆக…பொறக்கப் போற கொழந்தைக்காக வருமானத்தை அதிகப் படுத்தற முயற்சில நீ இறங்கியிருக்கே….அப்படித்தானே?’

‘ஆமாம்…அதுக்காகத்தானே உன் கிட்ட வேலையே கேட்டேன்?…நான் மட்டுமல்ல என் வீட்டுக்காரரும் அவரோட வருமானத்தை அதிகப்படுத்தறதுக்காக வேற ஏதோ ஒரு புது யாவாரம் பண்ண யோசிச்சிட்டிருக்கார்’

ஜன்னலருகே நின்று கேட்டுக் கொண்டிருந்த திவாகருக்கு அந்த விஜயாவின் பேச்சு ஒவ்வொன்றும் தன்னைக் குறித்தே பேசப்படுவது போலிருந்தது.

அவள் அங்கிருந்து நீங்கிச் சென்ற பின்னும் நீண்ட நேரம் அவள் குரல் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

‘பாக்யம்…பாக்யம்’ திடீரென்று மனைவியை அழைத்தான்.

‘ஏங்க?’ கேட்டபடியே வந்தவளிடம,;

‘வந்து…நீ…கருவைக் கலைக்க வேண்டாம் பாக்யம்…நாம நம்ம குழந்தைய நல்ல முறைல பெத்து…நல்ல முறைல வளர்ப்போம் பாக்யம்’

அமைதியாய் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள் ‘சரிங்க…நீங்க சொல்றபடியே செஞ்சிடலாம்ங்க’ என்றாள்.

மறுநாள் காலை.

திவாகர் அலுவலகத்திற்குச் சென்ற பின் வந்திருந்தாள் அந்த விஜயா.

‘ரொம்ப நன்றி விஜயா….நான் சொன்ன மாதிரியே பேசி…என் வீட்டுக்காரர் மனசை மாத்திட்டே….இல்லேன்னா இன்னேரம் என்னைக் கருவைக் கலைக்க வெச்சிருப்பார் அந்த மனுஷன்’

‘இதுக்கெதுக்கும்மா நன்றி?…இது ஒரு பொண்ணு…இன்னொரு பொண்ணுக்கு செய்யற கடமைம்மா.’

அவள் வயிற்றிலிருக்கும் அந்தச் சிசுவும் பிறக்கும் முன்பே இன்னொரு சிசுவைக் காப்பாற்றிய புண்ணியத்தைக் கட்டிக் கொண்டது. 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *